தினமணி 85: சிறப்பு தலையங்கம்

உங்கள் "தினமணி' தனது இதழியல் சேவையில் 85 ஆண்டுகளை பெருமிதத்துடன் நிறைவு செய்து 86-ஆம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது

தினமணி 86 ஆம் ஆண்டில்..

உங்கள் "தினமணி' தனது இதழியல் சேவையில் 85 ஆண்டுகளை பெருமிதத்துடன் நிறைவு செய்து 86-ஆம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது. மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 13-ஆவது நினைவு நாளன்று, உயரிய பல லட்சியக் கோட்பாடுகளுடன் 1934-ஆம் ஆண்டு உதயமான இந்த நாளிதழ், இன்றுவரை நிமிர்ந்த நன்னடையுடனும், நேர்கொண்ட பார்வையுடனும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளுடனும் தனது இதழியல் பயணத்தைத் தளராமல் தொடர்வதற்கு வாசகர்களின் பேராதரவும், அவர்கள் "தினமணி'யின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையும்தான் காரணம்.

"தினமணி' வெளிவரத் தொடங்கிய நாள் முதல், இப்போது நூற்றாண்டை நோக்கிப் பீடுநடைபோடும் இந்தத் தருணம் வரை, இந்திய சுதந்திர வேள்வியின் லட்சியக் கனவுகளையும், தமிழ் மொழிப்பற்றையும் தனது மரபணுவில் தாங்கி வெளிவந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தமிழனின் உணர்வையும், உள்ளக் குமுறலையும், ஒவ்வோர் இந்தியனின் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் பிரதிபலிக்கும் நாளிதழாக வெளிவருகிறது. மனித நேயம், மக்களாட்சித் தத்துவம், உலக சகோதரத்துவம் போன்ற லட்சியங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் இதழியல் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

"தினமணி'யின் வரலாறு சுவாரஸ்யமானது. தொடங்கும் இதழுக்கு மக்கள் மன்றத்தில் போட்டியை அறிவித்து பெயர் சூட்டிய வரலாறு "தினமணி'க்கு மட்டுமே உண்டு. இன்ன காரணத்துக்காக நாளிதழ் தொடங்குகிறோம் என்று காரணங்களைப் பட்டியலிட்டுத் தொடங்கிய வரலாறும் "தினமணி'க்கு மட்டுமே சொந்தம்.

"தினமணி' என்றால் அது கதிரவனைக் குறிக்கும். "தினமணி' நாளிதழின் விளம்பரத்தில் ""பாரதியார் நீடுழி வாழ்க, "தினமணி' நீடுழி வாழ்க'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. "இந்த தேசிய நாளிதழ் எந்தக் கட்சியையும் சார்ந்ததல்ல என்பதையும், சுயநல நோக்கமில்லாமல் மக்களுக்குச் சொந்தமான ஒரே பத்திரிகை' என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது.

1934-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி அரையணா விலையில் 8 பக்கங்களுடன் வெளிவந்த இதழின் முதல் பக்கத்திலேயே, "ஏழை துயர் தீர்க்க, எல்லோரும் களித்திருக்க, எவருக்கும் அஞ்சாத தினமணி' என்கிற வாசகம் காணப்பட்டது.

"இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு தமிழரும் தன்னைத் தமிழர் என்று பெருமையுடன் கூறிக்கொள்ள வேண்டும். நாட்டுக்கு வெளியே செல்லும்போது தன்னை இந்தியன் என்று பெருமை கொள்ளஅழைத்துக் கொள்ள வேண்டும். தமிழர்கள் என்றால் தமிழ்நாட்டில் பிறந்த, தமிழ்நாட்டை தங்கள் வசிப்பிடமாகக் கொண்டு வாழும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் மற்றும் தமிழ் பேசும் அனைவரும்தான்' என்று தனது கருத்தை ஆணித்தரமாகப் பதிவு செய்திருந்தது "தினமணி'யின் முதல் நாள் தலையங்கம்.

ஓர் அபூர்வ சுதந்திரப் போர் நடந்து வருகிறது. அதன் நடுவில் ஏற்படும் அற்ப வெற்றிகளால் மயங்காமலும், சிறிய தோல்விகளால் தளராமலும் பாரத தேசம் விடுதலை அடையும் வரையில் தமிழ் மக்களைப் போற்றியும் தேற்றியும் "தினமணி' துணை புரியும்.

எல்லா வியாதிகளிலும் மனோ வியாதியே மிகக் கொடியது. நமது மக்களின் மனத்தில் அடிமைத்தனம் குடிகொண்டிருக்கிறது. அதை அடியோடு அழித்து தமிழ் மக்களை மானிகளாகச் செய்வதற்கு "தினமணி' ஓயாது பாடுபடும்.

இந்திய ஜனங்களில் பெரும்பாலோர் அழியாப் பஞ்சத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். இதற்குப் பல காரணங்கள் உண்டு. முதன்மையானது முதலாளிகளும், ஜமீன்தார்களும், நமது தொழிலாளர்களின் உழைப்பினால் உண்டாகும் செல்வத்தை எல்லாம் பிடுங்கிக் கொண்டு தங்கள் ஆடம்பரங்களுக்காக அழிப்பதுதான். இம்முறை மாறி நாட்டின் செல்வத்தில் பெரும் பகுதி தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய புதியதொரு சமூகம் உருவாக்கப்பட வேண்டும்.

தேச சேவையும், மனித சேவையும் தமிழ்நாட்டிற்கு இன்றியமையாததென்று கருதியே "தினமணி' இன்று உதயமாகின்றது. மேற்கூறிய கொள்கைகளை சிறிதும் நழுவவிடாமல் பாதுகாப்பதற்கு தேச சேவையில் தேர்ந்த ஓர் இளைஞர் கூட்டம் அதிக ஊதியத்தை எதிர்பாராமல் இவ்வேலையை ஏற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழ் மொழியின் மறுமலர்ச்சியின் அடையாளம் பாரதியார்தான். பாரத நாட்டின் இதர மாகாணங்களில் எல்லாம் தேசிய எண்ணம் பொங்கி எழுந்துகொண்டிருந்த காலத்தில் தமிழகம் மட்டும் உணர்வு குன்றி இருந்ததைக் காண சகியாது, தமிழர்களைத் தட்டியெழுப்பிய முன்னணி வீரர்கள் சிலரே. அவர்களுள் மகாகவி பாரதியாரே முக்கியமானவர்.

நவயுகத்தின் தூதராகத் தோன்றிய கவிஞரை அவரது காலத்தில் தமிழகம் முற்றிலும் உணர்ந்துகொள்ளவில்லை. "செல்வம் எத்தனை உண்டு புவிமீதே - அவையாவும் படைத்த தமிழ்நாடு' என்று கம்பீரமாகப் பாடிய அந்தக் கவிஞனை வறுமையில் வாடுமாறு விட்டுவிட்டது. இனியாவது கவிஞனின் திருநாமம் என்றென்றும் பசுமையாக தமிழர் சந்ததியிடை வாழ்வதாக!

சுதந்திர சூரியனைக் காண விரும்பிய தெய்வீகப் பித்தராகிய சுப்பிரமணிய பாரதியாரின் வருடாந்திர தினத்தன்று அவருடைய சுதந்திர தாகத்தையும், சமத்துவக் கொள்கைகளையும் தமிழ்நாட்டில் பரப்பும் நோக்கத்துடன் வெளிவந்திருக்கும் "தினமணி'யை தமிழ் மக்கள் மனமுவந்து வரவேற்பார்கள் என்பது எமது பூரண நம்பிக்கை'' - முதல் நாள் தலையங்கத்தில் தினமணி நாளிதழை தொடங்குவதற்கான காரணங்களின் பட்டியல்தான் இவை.

இவையெல்லாம்தான் "தினமணி'யின் லட்சியங்களாக கடந்த 85 ஆண்டுகளாகத் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் ஆசிரியர்களான டி.எஸ். சொக்கலிங்கம், ஏ.என். சிவராமன், ஐராவதம் மகாதேவன், கஸ்தூரிரங்கன், இராம.திரு. சம்பந்தம் உள்ளிட்டோர், "தினமணி' தொடங்கும்போது தனக்குத்தானே விதித்துக் கொண்ட அந்த லட்சியங்களிலிருந்து தடம் புரண்டுவிடாமலும், அடிப்படை இலக்கிலிருந்து விலகி விடாமலும் காப்பாற்றி வந்திருக்கிறார்கள்.

இன்றைய தமிழ்ச் சமுதாயம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால், தமிழில் தவறில்லாமல் எழுதவும் பேசவும் தெரியாத புதியதொரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான். இயன்ற வரை தமிழில் பேசுவது, எழுதுவது என்பதையும், தமிழுக்குப் புதிய பல வார்த்தைகளை அறிமுகப்படுத்தி செறிவூட்டுவது என்பதையும் "தினமணி' தனது இலக்காகக் கொண்டிருக்கிறது.

மற்ற மொழிகளின் மீதான வெறுப்புணர்ச்சியைத் தூண்டாமல், தாய்மொழியாம் தமிழைப் போற்றி வளர்க்கும் பெரும் பணியை "தினமணி' தனது சிரமேற்கொண்டு செயல்படுகிறது.

இன, மொழி, மத, ஜாதி அடிப்படையில் அமையும் எல்லாவிதமான துவேஷங்களையும் எதிர்த்துப் போராடுவதை "தினமணி' தனது கடமையாகக் கருதுகிறது.

நாட்டுப்பற்று, சமுதாய ஒருமைப்பாடு, ஜனநாயக மரபுகளைக் காப்பது, தமிழ்த்தொண்டு, ஆன்மிக அடிப்படையிலான சமரச சன்மார்க்கம் என்ற இவ்வைந்தும்தான் "தினமணி' தனக்கு வகுத்துக் கொண்டிருக்கும் பஞ்சசீலக் கொள்கைகள். இந்தப் பணிகளுக்காக அகவை 86-இல் அடியெடுத்து வைக்கும் இந்தத் தருணத்தில், வாசகர்களின் ஆதரவுடன் "தினமணி' தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறது!

- ஆசிரியர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com