‘தினமணி’ ஆசிரியர்களும் நானும்!

'தினமணியில் அரைகுறை பாமரன், குமாஸ்தா, கணக்கன் என ஏ.என்.சிவராமன் அவர்கள் எழுதிய கட்டுரைகளை அப்போதே ஆர்வமாக படித்ததுண்டு. 
கே.எஸ். ராதாகிருஷ்ணன்
கே.எஸ். ராதாகிருஷ்ணன்

'தினமணியில் அரைகுறை பாமரன், குமாஸ்தா, கணக்கன் என ஏ.என்.சிவராமன் அவர்கள் எழுதிய கட்டுரைகளை அப்போதே ஆர்வமாக படித்ததுண்டு. 

பொருளாதாரம், சர்வதேச அரசியல் எனப் பல தலைப்புகளில் கட்டுரைகளை அவர் எழுதியதுண்டு. இதனுடைய தாக்கம்தான் தினமணியில் கிட்டத்தட்ட 40 ஆண்டு காலம் நான் கட்டுரைகள் எழுத எனக்கு தூண்டுகோலாக இருந்தது.

நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்" என்ற முண்டாசுக்கவி பாரதியின் வரிகளை சூத்திரமாகக் கொண்டு தினமணி நாளிதழ் அந்த கவிஞரின் 13-வது நினைவு நாளன்று 1934-இல் தொடங்கப்பட்டது. அரை அணா விலையில் 8 பக்கங்களில் துவங்கப்பட்ட இந்த ஏட்டின் வயது 85. 

என்னுடைய குருஞ்சாக்குளம் கிராமத்திற்கு ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு தினமணியும், அப்போது நெல்லையில் மட்டும் பதிப்பித்த தினமலரும் வரும். எங்களுடைய இல்லத்திற்கு தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமலர், மதியம் 2 மணிக்கு கோவில்பட்டியில் இருந்து வரும் சந்திரா பஸ்ஸில் சென்னையிலிருந்து ஆங்கில இந்து ஏடு வரும்.

தினமணியை எழுத்துக் கூட்டி 1950-களில் தினமும் படிப்பது வாடிக்கை. மாலை வேளையில் விவசாய வேலைகளை முடித்துவிட்டு கிராமத்திலுள்ள உறவினர்கள் வீட்டிற்கு வருவார்கள். அப்போது அவர்கள் தினமணியை வாசித்து காட்ட சொல்லி என்னிடம் சொல்வார்கள். அப்போதெல்லாம், ரேடியோவின் செய்திகள், பஞ்சாயத்து அலுவலகத்திலும், எங்கள் வீட்டிலுள்ள ரேடியோவில் மட்டுமே இரவு 7.30 மணிக்கு தான் கேட்க முடியும். எனவே தினமணி செய்திகள் நம்பிக்கையாக இருக்கும் என்று பலர் விரும்பிப் படித்தனர். 

என்னுடைய பெரியப்பா வி. இராமகிருஷ்ணன், பிரதேச காங்கிரஸ் உறுப்பினராக இருந்தார். அவருடைய கிராமத்திற்கு அப்போது பஸ் வசதி, மின்சார வசதி கிடையாது. எங்களுடைய தந்தையாரும் அந்த வட்டாரத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். எனவே அந்த பகுதி காங்கிரஸ் கட்சிக்காரர்கள் எல்லாம் எங்கள் வீட்டில் கூடும்போது தினமணி படிப்பதை பார்த்துள்ளேன். அப்படி கவனித்ததில் முன்னாள் அமைச்சர் கடையநல்லூர் மஜீத், ஏ.பி.சி. வீரபாகு போன்றவர்கள் தினமணியை ஆர்வத்தோடு படித்ததை பார்த்துள்ளேன்.

தினமணியில் அரைகுறை பாமரன், குமாஸ்தா, கணக்கன் என ஏ.என்.சிவராமன் அவர்கள் எழுதிய கட்டுரைகளை அப்போதே ஆர்வமாக படித்ததுண்டு. பொருளாதாரம், விகிதாச்சார பிரதிநிதித்துவம், அரசியல் சட்டம், சர்வதேச அரசியல் எனப் பல தலைப்புகளில் கட்டுரைகளை அவர் எழுதியதுண்டு. இதனுடைய தாக்கம்தான் தினமணியில் கிட்டத்தட்ட 40 ஆண்டு காலம் ஏ.என்.சிவராமன் காலத்திலிருந்து என் கட்டுரைகள் வெளிவருகிற நிலையில் எனக்கு முனைப்பை தந்தது.

ஆரம்பப் பள்ளிப்பருவத்தில் மதுரைக்கு பள்ளியிலிருந்து சுற்றுலா செல்வதுண்டு. அப்போது காந்தி மண்டபம், வண்டியூர் தெப்பக்குளம், திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சியம்மன் கோவில், இராமநாதபுரம் சாலையில் உள்ள தினமணி அலுவலகத்திற்கு சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்வார்கள். 

அப்போது சுற்றிப் பார்க்க வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட பள்ளியிலிருந்து முன்கூட்டி கடிதம் மூலம் அனுமதி வாங்க வேண்டும். இந்த அனுமதி பெறுவதில் எந்த பிரச்சனையும் இருக்காது. ஏன் முன்கூட்டி தெரிவிக்க வேண்டுமென்றால், எத்தனை பேர் வருகிறார்கள் என்று அறிந்து வருகின்ற பள்ளி மாணவர்களுக்கு மோர் அல்லது புளியோதரை சாதம் வழங்குவார்கள். அப்போது ஏ.என்.சிவராமனுடைய பரிந்துரையில் எக்ஸ்பிரஸ் நிறுவனம் இந்த ஏற்பாட்டை செய்தது. 

தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ், மதுரையில் இருந்து கோவில்பட்டிக்கு வந்து, அருகாமையில் உள்ள திருவேங்கடத்தில் பிரித்து எங்களின் கிராமத்திற்கு வர காலையில் 08.30 மணி ஆகிவிடும். அப்போது தினமணி இன்றைக்கு போல வெள்ளை நிற தாளில் அச்சிடாமல் பழுப்பு நிறத் தாளில் மூவர்ண தேசியக் கொடி ஜோடியாக குறுக்கே கட்டப்பட்ட இலச்சினையோடு அகண்ட தாளாக வெளிவரும். அதைவிட இன்றைக்கு வெளிவரும் தினமணியின் அகலம் குறைவானது. 

அதனுடன் ஞாயிற்றுக்கிழமை டேப்ளாய்டு வடிவில் வெளிவரும் தினமணி சுடரில் பல்விதமான செய்திக் கட்டுரைகள் அடங்கியிருக்கும். பின்னாட்களில் தினமணி கதிர், குமுதம் இதழின் அளவில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வரும். அதில் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியன வெளிவரும். ரகமியின் வாஞ்சிநாதன், செண்பகராமன் போன்ற விடுதலை போராளிகளைக் குறித்தான வரலாற்று தொடர்கள் வெளிவந்தன.

அன்றைக்கு நூல்களை வெளியிட தனியாக தினமணி பிரசுராலயம் இயங்கியது. முதன்முதலாக ஏ.என்.எஸ். தமிழில் மாநில சுயாட்சி குறித்து மாகாண சுயராஜ்யம் என்ற நூலை வெளியிட்டார். அரிஸ்டாடில், பிளாட்டோ போன்ற சிந்தனையாளர்களை குறித்தான நூல்களையும் தினமணி வெளியிட்டது. 

சென்னைக்கு வந்தபின் 1970-களில் தினமணியில் கட்டுரைகள் எழுதினால் என்ன என்று முயற்சிகளை மேற்கொண்டேன். தேர்தல் முறைகளைக் குறித்து ஒரு கட்டுரையை எழுதி இரண்டு, மூன்று நாட்கள் கவனமாக தட்டச்சுக் பொறியில் தட்டச்சு செய்து அதில் பல திருத்தங்கள் செய்து இறுதிப்படுத்தினேன். இருப்பினும் இதுவொரு முயற்சிதான் என்று மனதில் வைத்துக்கொண்டு தினமணி அலுவலகத்தில் "ஆசிரியர், தினமணி' என்று முகவரியிட்டு உறையினுள் வைத்து நேரடியாக கொடுத்துவிட்டு வந்தேன். அப்போது சென்னை அண்ணாசாலை அருகேயுள்ள கிளப் ஹவுஸ் ரோட்டில் இருந்த எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் தினமணி அலுவலகம் அமைந்திருந்தது. 

சரி. ஒரு திருப்தி. தினமணிக்கு ஒரு கட்டுரை கொடுத்துவிட்டோம். வந்தாலும் வரலாம் என்று என்னுடைய பணிகளை கவனித்துக் கொண்டு வந்தேன். அதில் எனது தொடர்பு தொலைபேசி எண்ணையும், முகவரியும் கட்டுரையின் முகப்புக் கடிதத்தில் இருந்தது.

உயர் நீதிமன்றத்தில் பிற்பகலில் ஒருநாள் என்னை அழைத்து ஒரு தொலைபேசி வந்தது. அதை எடுத்து "யாருங்க?'' என்று வினவியபோது, "தினமணி அலுவலகத்திலிருந்து ஏ.என்.சிவராமன் பேசுகிறேன்'' என்றார்.

ஏற்கெனவே நெடுமாறனோடு இவரை சந்தித்ததுண்டு. நெடுமாறன் அவர்களின் "செய்தி'' ஏடு தினமணி அலுவலகத்தில் தான் அச்சிடப்பட்டது. பெரும் நஷ்டம் ஏற்பட்டு அதைகுறித்து பேச தினமணி அலுவலகத்திற்கு நெடுமாறன் செல்லும்போதெல்லாம் உடன் செல்வதும் உண்டு.

தொலைபேசியில் அழைத்த ஏ.என்.எஸ்ஸிடம் "வணக்கம் ஐயா'' என்றேன்.

"எங்கே இருக்கீங்க?'' என்றார். 

"ஹைகோர்டில் இருக்கிறேன்'' என்றேன்.

"மாலை தினமணி ஆபிசுக்கு வந்து என்னை பார்க்க முடியுமா'' என்றார்.

"வருகிறேன்'' என்றேன். சொன்னவாறு தினமணி அலுவலகத்திற்கு மாலை 5 மணிக்கு சென்றேன். அப்போது தினமணி எஸ்டேட் மூன்று மாடி மஞ்சள் வர்ணம் அடித்த தெற்கு பார்த்த கட்டடமாக இருந்தது. நுழைந்தவுடன் டைம் ஆபிசில் என்னுடைய பெயரை சொல்லியிருந்ததால் நேரடியாக ஏ.என்.எஸ் அறைக்கு அழைத்து சென்றார்கள். 

ஏ.என்.எஸ்-ஐ சந்தித்தபோது "எந்த ஊர்'' என்றார்? "நான் கோவில்பட்டி பக்கம் குருஞ்சாக்குளம் கிராமம்'' என்றேன். உடனே அவர் "என்னுடைய மனைவியின் ஊர் கோவில்பட்டி தான் தெரியுமா?'' என்றார். உடனே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இரா. கிருஷ்ணசாமி நாயுடு, எஸ்.ஆர்.நாயுடு போன்றவர்களைப் பற்றியெல்லாம் விசாரித்தார். காபி வரவழைத்து அவருடன் அரை மணி நேரம் பேசியது இன்றைக்கும் நினைவில் உள்ளது. 

"கட்டுரை நல்லாயிருக்கு. தினமணியில் வெளியாகும்'' என்றார். நான் உடனே "சின்ன வயசிலிருந்து வீட்டுக்கு தினமணி வரும்போதெல்லாம் உங்களின் கட்டுரைகளை அரைகுறைப் புரிதலோடு வாசிப்பதின் விளைவாக தான் இந்தளவு எழுதியுள்ளேன்'' என்று அவரிடம் குறிப்பிட்டேன்.

அதுபோல, சுதந்திரப் போராட்டக் காலத்தில் ரயிலில் கல்லிடைக்குறிச்சி வழியாக அம்பாசமுத்திரத்தில் இருந்து திருநெல்வேவி செல்லும் புகைவண்டியில் ஏ.என்.எஸ். வெடிமருந்து வைத்த பழைய வரலாற்று செய்திகளை எல்லாம் நான் சொன்னபோது அதனை ஆர்வமாக கேட்டுக்கொண்டார். இப்படியான சந்திப்பு ஏ.என்.எஸ் உடன் அப்போது நிகழ்ந்தது. 

அதன்பின், ஆசிரியர்களாக இருந்த ஐராவதம் மகாதேவனும், கி. கஸ்தூரிரங்கனும் என்னுடைய கட்டுரைகளுக்கு முன்னுரிமை கொடுத்து வெளியிட்டனர். இவர்களுடன் தொடர்பு நீடித்தது. ஒரு முறை தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் என்ற தலைப்பில் ஒரு பெரிய கட்டுரையை எழுதி அனுப்பியிருந்தேன். அது வெளியிடுவார்களா என்ற சந்தேகத்தில் தான் அனுப்பிவைத்திருந்தேன். ஆனால், ஐராவதம் மகாதேவன் அவர்கள் நடுப்பக்கத்தில் வேறொரு கட்டுரையை வெளியிட்டுவிட்டு தலையங்க நடுப்பக்கத்தின் எதிர் பக்கத்தில் முழு பக்கத்திற்கு என்னுடைய அந்த கட்டுரையை வெளியிட்டார்.

அன்றைக்கு நான் மதுரையில் இருந்தேன். இரா.செழியனும் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தார். காலையில் அவரை சந்தித்தபோது தான் இந்த கட்டுரை வந்தது தெரிந்தது. நல்ல கட்டுரை. தினமணியும் தன் வழக்கத்தை மாற்றி முழுப்பக்கமாக வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

சென்னை திரும்பியவுடன் தொலைபேசியில் ஐராவதம் மகாதேவனிடம் "தங்களை சந்திக்க வேண்டும்'' என்றேன். "தினமணி அலுவலகத்திற்கு வாருங்கள்'' என்றார். சென்று பார்த்தேன். "இப்படி முக்கியத்துவம் கொடுத்து கட்டுரையை வெளியிட்டதற்கு மிக்க நன்றி'' என்றேன். "கட்டுரை நல்லா இருந்தது. அவசியமாக இருந்தது. வெளியிட்டேன். உங்களைப் போல அரசியலில் இருந்துகொண்டு புரிதலோடு எழுதுவது சில பேர்தான்'' என்கிற அவரது பதில் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. ஏனெனில் அந்த காலகட்டத்தில் நான் கோவில்பட்டி சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில் இருந்தேன். 

பின் ஆசிரியராக வந்த கி. கஸ்தூரிரங்கன் அவர்களுடன் அதிகமாக தொடர்பு கிடையாது. அவரும் என்னுடைய கட்டுரைகளை வெளியிட்டு வந்தார். அவருடைய இல்லம் ஆழ்வார்ப்பேட்டையில் இருந்தது. ஒரு முறை அவர் அழைத்து அவரை சந்தித்துண்டு. மாலன் அவர்களும் என் மீது அளப்பரிய பாசம் கொண்டவர். தொடர்ந்து எழுதுங்கள் என்பார். நான் அனுப்பிய கட்டுரைகளை அவரும் தொடர்ந்து வெளியிட்டார். திரு. மாலன் அவர்கள் அமெரிக்காவிற்கு இதழியல் படிக்க சென்றபோது, சுதாங்கன் பொறுப்பில் இருந்தார். அவரும் எனது கட்டுரைகளை மகிழ்ச்சியோடு வெளியிட்டார். 

பின் ஆசிரியர் பொறுப்புக்கு வந்த இராம. சம்பந்தம் அணுகுமுறை வித்தியாசமானது. எளிமையாக இருப்பார். சென்னை பெசன்ட் நகரில் அவர் வசித்துவந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் அவரை சந்தித்ததுண்டு. எக்ஸ்பிரஸ் குழுமம் தொடர்பான வழக்குகள் குறித்து உயர் நீதிமன்றத்திற்கு வருவார். நான் இருந்த 22 லா சேம்பர்ஸ்க்கு வந்து அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார். மதிய உணவு நேரத்தில் கீழே இருக்கின்ற ஆவின் பூத்தில் பால் மட்டும் வாங்கிவரச் சொல்லி அருந்துவார்.

அரசியல் பிரச்னைகளை எல்லாம் பேசிக்கொண்டிருப்பார். பெரியாரியத்தில் நம்பிக்கை கொண்டவர். இப்படியாக கடந்த கால தினமணி ஆசிரியர்களோடு தொடர்பும், நெருக்கமும் இருந்தது. 

தற்போது ஆசிரியராக இருக்கின்ற கே. வைத்தியநாதன் அவர்களோடு நீண்டகாலம் அறிமுகம். அவரும் என்னுடைய வளர்ச்சியில் அக்கறையும், ஆர்வமும் கொண்டவர். அவரோடு தினமணி நிகழ்ச்சிகள் சென்னை, டெல்லி, தமிழகத்தில் எங்கு நடந்தாலும் பங்கேற்கக்கூடிய பாசமிகு பிணைப்பு கிடைத்துள்ளது. திரு. வைத்தியநாதன் அவர்கள் பங்கேற்றபின் தினமணியில் பல்வேறு சிறப்பு மலர்கள், இசை நிகழ்ச்சிகள், பொது நிகழ்வுகள், பாரதிக்கு எட்டையபுரத்தில் விழா என பல களங்களில் மக்களோடு ஒருங்கிணைந்து தினமணி தனது விசாலப் பணியை ஆற்றி வருகிறது. 

ஆல விருட்சமான தினமணி நிரந்தரமானது. இந்த 85 இல்லாமல் என்றைக்கும் சிரஞ்சீவியாக தன்னுடைய பத்திரிகை தருமத்தினை கடைப்பிடித்து தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு தன் சேவையை ஆற்றும். 

வாழ்க தினமணி!!!

கட்டுரையாளர்: வழக்குரைஞர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com