தினமணி, தேசம், தேசியம்..

இன்று இந்திய அரசியல் சாசனம் பத்திரிகை சுதந்திரத்துக்கு உத்தரவாதமளிக்கிறது. உச்சநீதிமன்றம் அந்த சுதந்திரத்தை ஆட்சியாளர்கள் பறிக்காமலும், பாதிக்காமலும் பாதுகாக்கிறது.
ஆடிட்டர் - பத்திரிகையாளர் குருமூர்த்தி
ஆடிட்டர் - பத்திரிகையாளர் குருமூர்த்தி

இன்று இந்திய அரசியல் சாசனம் பத்திரிகை சுதந்திரத்துக்கு உத்தரவாதமளிக்கிறது. உச்சநீதிமன்றம் அந்த சுதந்திரத்தை ஆட்சியாளர்கள் பறிக்காமலும், பாதிக்காமலும் பாதுகாக்கிறது. பத்திரிகை சுதந்திரம் என்பது அரசாங்கத்தை எதிர்த்து கருத்து கூறுவதற்கான அடிப்படை உரிமை என்பதால் நாடாளுமன்றம், அரசு, நீதித்துறை ஆகிய மூன்று தூண்கள் தவிர ஜனநாயகத்தின் நான்காம் தூண் என்கிற விசேஷ அந்தஸ்தும் பத்திரிகைத் துறைக்கு இருக்கிறது.

இன்று ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் ஏராளமான பத்திரிகைகள் வெளிவருகின்றன. அதன் விற்பனை பிரும்மாண்டமாக உயர்ந்திருக்கிறது. 1950-ஆம் ஆண்டு நம் நாட்டில் 44 ஆங்கிலப் பத்திரிகைகள் உள்பட மொத்தம் 214 பத்திரிகைகள் மட்டுமே இருந்தன. இன்று 70 ஆயிரம் பத்திரிகைகளும், 400 செய்தி ஊடகங்கள் உள்பட 1600 காட்சி ஊடகங்களும் நம் நாட்டில் இருக்கின்றன.

தினமும் 10 கோடி பத்திரிகைகள் விற்கிற நம் பத்திரிகைத்துறை தான் உலகிலேயே மிகப்பெரியது. பல பத்திரிகைகள் ஏராளமாக லாபமும் ஈட்டுகின்றன. இன்றைய இந்திய பத்திரிகை உலகம் இப்படி சுதந்திரமாக ரத, கஜ, துரக, பதாதிகளுடன் பவனி வரக் காரணம் முந்தைய தலைமுறையினர் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் நம்மை ஆண்ட அந்நியர்களை எதிர்த்துப் போராடி, கடைசி நூறு ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து ரத்தம் சிந்தித் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்து நாம் பெற்ற சுதந்திரம் தான் காரணம். அந்த சுதந்திரத்தின் விளைவாகத்தான் இன்று எல்லாவிதமான உரிமைகளையும் நாம் அனுபவித்து வருகிறோம். 

இந்த நிகழ்காலப் பின்னணியில், சுதந்திர வேள்வியில் நேரிடையாகப் பங்கேற்ற இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி குழுமத்தின் பாரம்பரியத்தைப் பற்றி அதன் 85-ஆம் ஆண்டு நிறையும் இந்த நேரத்தில் நினைவுகூறாமல் இருக்க முடியாது.

தினமணியும், சுதந்திரப் போராட்டமும்

இன்றைய பத்திரிகைத் துறையில் இருப்பவர்கள், அவர்கள் பத்திரிகை நடத்துபவர்களாகவோ பத்திரிகையாளர்களாகவோ அல்லது ஆசிரியர்களாகவோ இருக்கலாம், அவர்களுக்கு, நாடு விடுதலை அடைவதற்கு முன் எப்படி நம் பல பத்திரிகைகள் சுதந்திர வேள்விக்கு உதவுவதற்காகத் துவக்கப்பட்டன, அவைகள் எந்த நிலையில் இருந்தன, எப்படிப்பட்ட கடினமான தடைகளையும் சிரமங்களையும் தாங்கி நடத்தப்பட்டன என்பதெல்லாம் தெரிய வாய்ப்பே இல்லை. 

மகாத்மா காந்தி சுதந்திரப் போராட்டத்துக்கு உதவ பத்திரிகை துவக்கச் சொன்ன காரணத்தால் 1930-களில் சென்னையில் ராம்நாத் கோயங்கா தொடங்கிய பத்திரிகைகள் தான் தினமணி-இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய தமிழ்-ஆங்கில இரட்டையர்கள். தமிழகத்தில் சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் ஒருவராக சேலம் வரதராஜுலு நாயுடுவால் தொடங்கப்பட்டு, சதானந்த் என்பவரால் நடத்தப்பட்டு வந்த இந்தியன் எக்ஸ்பிரஸை, ராம்நாத் கோயங்கா வாங்கியது வியாபாரத்துக்காக அல்ல, சுதந்திரப் போராட்டத்தில் உதவுவதற்காக! 

சுதந்திர வேள்வியில் பங்கேற்பதற்காகவே துவக்கப்பட்ட அந்த பத்திரிகைகளின் சரித்திரம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்துடன் பின்னிப்பிணைந்தது. கோயங்கா ஏராளமான கஷ்ட-நஷ்டங்களை ஏற்று, கடன்பட்டு, மற்ற தொழில்களில் ஈட்டிய நிதியை அந்தப் பத்திரிகைகளுக்குத் திருப்பி லாப, வியாபார நோக்கு எதுவும் இல்லாமல், நாடு சுதந்திரம் பெறவேண்டும் என்கிற ஒரே நோக்கத்துக்காகத்தான் நடத்திவந்தார். 

இரட்டையர்களான இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி பத்திரிகைகள் சுதந்திர உணர்வை வளர்க்க, போராட்டத்தை ஊக்குவிக்க, அந்நிய ஆதிக்கத்தை எதிர்க்க துவக்கப்பட்ட பத்திரிகைகள் மட்டுமல்ல. அதன் ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், மற்றவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அல்லது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்தியன் எக்ஸ்பிரஸ்-தினமணி குழுமமே அப்போது சுதந்திரப் போராட்டத்தின் பாசறையாக இருந்தது. 

"தினமணி'யில் முதல் ஆசிரியர் டி.எஸ். சொக்கலிங்கமும், துணை ஆசிரியராக இருந்த ஏ.என். சிவராமனும் காங்கிரஸ்காரர்கள். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர்கள். காந்திஜியின் சீடர்கள். ஏறக்குறைய 44 ஆண்டுகள் தினமணியின் ஆசிரியராக இருந்த தமிழ் பத்திரிகை உலகின் ஜாம்பவான் ஏ.என் சிவராமன், ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று 18 மாதம் சிறையில் இருந்தார். உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு 20 மாதம் சிறையில் இருந்தார். 1934-ல் தினமணி துவக்கப்பட்ட போது அதன் உதவி ஆசிரியரானார். இப்படித்தான் தேசிய-சுதந்திர உணர்வு மிக்கவர்களால் உருவாக்கப்பட்டு பக்குவப்படுத்தப்பட்டது இந்தியன் எக்ஸ்பிரஸ்-தினமணி குழும பத்திரிகைகள். 

1942-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு பத்திரிகை செய்தி தணிக்கையை அமல்படுத்திய போது அதை எதிர்த்து பத்திரிகைகளை வெளியிடுவதை நிறுத்தச் சொன்னார் மகாத்மா காந்தி. அவரிட்ட கட்டளையை சிரமேற் கொண்டு ராம்நாத் கோயங்கா இந்தியன் எக்ஸ்பிரஸ் தினமணி இரண்டையும் வெளியிடுவதை நிறுத்த முடிவெடுத்தார். அகில இந்திய பதிப்புகளை நிறுத்திய பத்திரிகை ஆசிரியர்கள் கூட்டமைப்பின் (All India Suspended Newspaper Editors Conference) தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியன் எக்ஸ்பிரஸ் தினமணி பத்திரிகைகள் தங்களது பதிப்புகளை, காந்தியடிகளின் அறைகூவலைத் தொடர்ந்து நிறுத்தும் முடிவை அறிவித்தபோது 'ஏங்ஹழ்ற் ள்ற்ழ்ண்ய்ஞ்ள் ஹய்க் டன்ழ்ள்ங் ள்ற்ழ்ண்ய்ஞ்ள்' என்கிற தலையங்கத்தை ராம்நாத் கோயங்கா எழுதினார். நிதியில்லாததாலும், பத்திரிகையை தொடர தினசரி கடன் வாங்கவேண்டி வந்ததாலும் என்னவெல்லாம் சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது என்று உருக்கமாக கோயங்காவால் எழுதப்பட்ட அந்தத் தலையங்கம் நாட்டையே உலுக்கியது. 

தினமணி - இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளிவராத மூன்று மாத காலம் கோயங்கா தன்னுடைய பத்திரிகையாளர்கள் வீட்டுக்குத் தானே சென்று, அவரால் கொடுக்க முடிந்த அரைகுறை சம்பளத்தைக் கொடுத்து, "கவலைப்படாதீர்கள், எல்லாம் விரைவிலேயே சரியாகிவிடும்' என்று ஆறுதல் கூறுவார் என்று கண்ணீர்மல்க தினமணி ஆசிரியர் ஏ.என் சிவராமன் என்னிடம் கூறினார். 

இன்று எல்லாவிதமான பெயரும் புகழும் அதிகாரமும் அனுபவித்துக்கொண்டு, கைநிறைய சம்பளமும் வாங்கும் பத்திரிகையாளர்கள், விடுதலைக்கு முன் பணியாற்றிய பத்திரிகையாளர்களும், பத்திரிகை உரிமையாளர்களும் என்னென்ன துயரத்தை ஏற்று நாட்டின் நலனை மட்டுமே மனதில் வைத்து பத்திரிகைகளை நடத்தினார்கள் என்பதை நினைத்துப்பார்க்கவேண்டும். அப்போதுதான் நாட்டைப் பற்றிய உணர்வு மட்டுமல்லாமல், அவர்களது சுதந்திரம் எப்படி விலை மதிக்கமுடியாதது என்பதும் அவர்களுக்குப் புரியும்.

பத்திரிகை சுதந்திரம், அவசரகால போராட்டம், ஊழலை எதிர்த்துப் போர்

கோயங்கா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், தினமணி-இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைகள் சுதந்திரமாகவே இயங்கிவந்தன. "சுதந்திரம் என்பதற்கும் நடுநிலை என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது' என்பார் கோயங்கா. "சுதந்திரம் என்பது தவறுகளை எதிர்க்கும் தைரியத்தைக் குறிக்கும். நடுநிலை என்பது எந்த தவறையும் எதிர்காமல் காலம் ஓட்டுவதைக் குறிக்கும்' என்று கூறுவார் அவர். 

தன்னுடைய பத்திரிகைகளை அவர் நடுநிலை பத்திரிகைகள் என்று கூறியதே கிடையாது. சுதந்திரமான பத்திரிகை என்றுதான் அவர் பெருமையுடன் கூறுவார். 

காங்கிரஸில் இருந்தததால் அவரது பத்திரிகை நடுநிலை பத்திரிகை இல்லை என்று கூட சிலர் கருதினார்கள். ஆனால் அது சுதந்திரமானது என்பதை யாரும் மறுத்ததில்லை. எந்த அளவுக்கு அவர் பத்திரிகைகளை சுதந்திரமாக நடத்தினார் என்பதற்கு ஒரு உதாரணம் முந்திரா ஊழலை அம்பலப்படுத்தியது. 

அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு, மற்றும் நிதி அமைச்சர் டி.டி. கிருஷ்ணமாச்சாரி இருவருக்குமே மிக நெருங்கிய நண்பர் ராம்நாத் கோயங்கா. நேருவின் பரிந்துரையில் இந்திரா காந்தியின் கணவர் ஃபெரோஸ் காந்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்துக்கு மேனேஜிங் டைரக்டர் ஆக அவர் நியமித்திருந்தார் என்றால், பிரதமர் நேருவுக்கும் அவருக்கும் இருந்த நெருக்கத்தைப் புரிந்து கொள்ளலாம். 

அவ்வளவு நெருங்கிய உறவு இருந்தும், அப்போது பெரும் சர்ச்சை ஏற்படுத்திய முந்திரா ஊழலை அம்பலப்படுத்தி, அரசையும், நேருவையும் எதிர்த்து சாடி எழுதி அதன் முடிவில், கோயங்காவின் நெருங்கிய நண்பரானான நிதியமைச்சர் டி.டி. கிருஷ்ணமாச்சாரி, தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிவந்தது. 

தொடர்ந்து தன் சுதந்திர மனப்பான்மையை நிலைநாட்டியது மட்டுமல்லாமல், வலிமையான அரசையும் எதிர்த்து தன் கருத்தைக் கூறும் மனோதைரியத்தை இந்திய பத்திரிகைத்துறைக்குக் கொடுத்த பெருமை கோயங்காவையே சாரும். பசுவதையை காங்கிரஸ் தடை செய்ய மறுத்ததால், காங்கிரஸைவிட்டு விலகிய ராம்நாத் கோயங்கா, 1969-இல் காங்கிரஸில் பிளவை ஏற்படுத்திய இந்திரா காந்தியின் சர்வாதிகாரத்தை எதிர்த்துத் தன் பத்திரிகையில் பெரும் இயக்கமே நடத்தினார். அதைத்தொடர்ந்து இந்திரா அரசுக்கும் தினமணி-இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்துக்கும் 7 ஆண்டுகள் ஒரு மஹாபாரத யுத்தமே நடந்தது. 

1975-77 அவசரகாலத்தில் கோயங்காவையும், அவரது குடும்பத்தையும், அவர் நடத்தும் பத்திரிகைகளையும் அன்றைய இந்திரா காந்தி அரசு படுத்திய கொடுமைகள் வரலாற்றுப் பதிவுகள். நிதி நெருக்கடி, வரித்தொல்லைகள், எண்ணற்ற கிரிமினல் வழக்குகள், கைதுகள், அச்சு இயந்திரத்தை ஏலம் போடுவது, மின்சாரத்தைத் துண்டிப்பது போன்ற அடாவடி நடவடிக்கைகள் என்று அனைத்துக் கொடுமைகளையும் சந்தித்தது தினமணி-இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம். 

"1977-இல் இந்திரா அரசை மக்கள் தூக்கி எறிந்தபோது சர்வாதிகாரத்தை எதிர்த்து நடந்த அந்த போரில் முக்கியமான பங்கு ராம்நாத் கோயங்காவையும், அவருடைய பத்திரிகைகளையும் சாரும்' என்று அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய் வெளிப்படையாகவே கூறினார். 


அரசியலில் தேசப் பணி

ஒரு பக்கம் சுதந்திரமான பத்திரிகைகளை நடத்தினாலும், மறுபக்கம் ராம்நாத் கோயங்கா, ஏ.என். சிவராமன் இருவரும் நாட்டு நலனுக்காக எப்படியெல்லாம் இணைந்து செயல்பட்டனர் என்பதற்கு எடுத்துக்காட்டு ராஜாஜி தலைமையில் 1952-இல் அமைச்சரவை அமைந்தது. 1952 பொதுத்தேர்தலில் ஆந்திரா, கேரளா இணைந்திருந்த மதராஸ் சட்டசபைத் தேர்தலில் 375 இடங்க ளில் 152 இடங்களை மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றிருந்தது. காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்காததால், கம்யூனிஸ்டுகள் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சிகள் நடந்து வந்தன. மவுண்ட் ரோட்டில் இருந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்திலிருந்து "தினமணி' ஆசிரியர் ஏ.என்.சிவராமனை வழக்கம் போல அவருடைய வீட்டில் கொண்டுவிட, கோயங்கா தானே காரை ஓட்டிச் சென்றுகொண்டிருந்தார். காங்கிரஸ்காரர்களுக்கு, தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள் ஆட்சி அமைத்துவிடுவார்களோ என்கிற அச்சம் நிலவியது. சுதந்திர இந்தியாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி அமையும் ஒரே மாநிலமாகிடும் சென்னை ராஜதானி என்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

கம்யூனிஸ்டுகளிடமிருந்து தமிழகத்தைக் காப்பாற்ற ,வேண்டும் என்று கவலையுடன் இருவரும் பேசிக்கொண்டே போனார்கள். ஜெமினி சந்திப்பை கார் நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது, "ஒரே ஒருவர் தான் தமிழகத்தை இன்று காப்பாற்ற முடியும், அவர் தான் ராஜாஜி' என்று ஏ.என். சிவராமன் சொன்னவுடன் சட்டென்று பிரேக்கை அழுத்திக் காரை நிறுத்தினார் கோயங்கா. 

இருவரும் ராஜாஜியுடன் தங்களுடய கடந்த கால கடும் விரோதத்தை நினைவு கூர்ந்தனர். தமிழக காங்கிரஸில் ராஜாஜிக்கு எதிரணியில் செயல்பட்டவர்கள் கோயங்காவும், ஏ.என். சிவராமனும். அவர்கள் காமராஜருக்கு நெருக்கமானவர்கள். 

1940-இல் நாட்டைப் பிரிக்க பாகிஸ்தான் கோரிக்கையை ஜின்னா வைத்தார். ராஜாஜி அதை காங்கிரஸ் விவாதிக்க வேண்டும், ஒதுக்கக் கூடாது என்கிற ஆச்சரியமான நிலையை எடுத்தார். அதனால் ராஜாஜியை கடுமையாக எதிர்த்த இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, இரண்டும் பிளவுபடாத பாரதத்தை ஒரு பசு போலவும் அதை கோடரியால் இரண்டாக வெட்டும் ராஜாஜியை முஸ்லீமாகவும் சித்தரித்து கோபமூட்டும் கார்ட்டூன் ஒன்று போட்டன. 

அதிலிருந்து 12 ஆண்டுகள், கோயங்கா-சிவராமனுக்கும், ராஜாஜிக்கும் முகம் பார்த்துப் பேசக்கூட முடியாத அளவுக்கு உறவு துண்டித்து விட்டிருந்த நிலை. இருந்தும் நாட்டின் நலன் கருதி, ராஜாஜி தங்களை எப்படிவேண்டுமானாலும் நடத்தட்டும் என்று முடிவு செய்து, இருவரும் பசுலுல்லா சாலையில் இருக்கும் ராஜாஜி வீட்டுக்கு போக காரைத் திருப்பினர். 

வீட்டுக்குள் சென்று ராஜாஜியைப் பார்த்த இருவரும் நெடுஞ்சாண்கடையாக அவர் காலில் விழுந்து "நீங்கள் தமிழ் நாட்டைக் காக்க வேண்டும், எங்களை மன்னித்துவிடுங்கள்' என்று கூற ராஜாஜி ஒரு நிமிடம் ஆச்சரியப்பட்டுப்போனார். எதற்காக வந்தோம் என்பதை இருவரும் கூற, "ஜவாஹர்லால் உங்களை அனுப்பினரா, என்னை ஒரு முனிசிபல் தலைவராக்க விரும்புகிறாரா?' என்று கேட்டார் ராஜாஜி. இருவரும் ராஜாஜியுடன் பேசாமல் யாரிடமும் பேச முடியாது என்பதால் முதலில் இங்கு தான் வந்தோம் என்று கூறினர். 

எஸ்.எஸ் ராமசாமி படையாச்சியின் உழைப்பாளர்கள் கட்சியும் காங்கிரஸும் சேர்ந்தால் ஆட்சி அமைக்கலாம், ராமசாமி படையாச்சி ராஜாஜியை முதலமைச்சராக ஏற்பார் என்றும் அவர்கள் கூறி, "ஜவாஹர்லால் நேரு உங்களை தனிப்பட்ட முறையில் வேண்டிக்கொண்டால் நீங்கள் முதல்வராக சம்மதிக்கவேண்டும்' என்று இருவரும் கேட்டுக்கொண்டனர். 

"கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க என்னால் முடிந்ததை செய்ய நான் தயார்' என்று ராஜாஜியிடம் உத்தரவாதம் பெற்று, பிறகு நேருவிடம் எல்லாவற்றையும் விளக்கிக்கூறி, நேரு ராஜாஜியுடன் பேசி, ராமசாமி படையாச்சியும் ராஜாஜியை முதல்வராகக் கேட்டுக்கொள்ள, ராஜாஜி மதராஸ் ராஜதானியின் முதல்வரானார். சட்டசபையில் முதல்வர் ராஜாஜியின் முதல் அறிவிப்பே "கம்யூனிஸ்டுகள் தான் என் முதல் எதிரி' என்பதே.

தமிழகத்தையும், நாட்டையும் கம்யூனிஸ்டுகளிடமிருந்து கோயங்கா தான் காப்பாற்றினார் என்று ஏ.என். சிவராமன் பின்னாளில் அந்தச் சம்பவத்தை நினைவு கூர்ந்து என்னிடம் கூறினார். இப்போது அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்துக்காக தலைவர்கள் காலில் விழுவதைதான் நாம் பார்க்கிறோம். நாட்டைக் காப்பாற்ற தன்னுடைய தன்மானத்தையும் துறந்து இருவரும் ராஜாஜி காலில் விழுந்த நிகழ்ச்சி இன்றய அரசியல் தலைவர்கள் நாட்டைக் காக்க எவ்வளவு பணிவு தேவை என்பதை உணர்த்தும்.

ஊழல்களை எதிர்த்துப் போர் 

நேரு காலத்தில் முந்திரா ஊழல் தொடங்கி இந்தியன் எக்ஸ்பிரஸ்-தினமணி குழுமம் பல மத்திய மாநில அரசுகளின் லஞ்ச லாவண்யத்தை அம்பலப்படுத்தி, கடந்த 30-40 ஆண்டுகளில் பல முதல்வர்களை பதவியைத் துறக்க வைத்திருக்கின்றன. இந்திரா காந்தி காலத்து மாருதி, நகர்வாலா ஊழல்கள், ராஜிவ் காந்தி காலத்து அம்பானி, போஃபர்ஸ், பேர்ஃபாக்ஸ், மற்றும் பல ஊழலைகளை அம்பலப்படுத்தி அவர்கள் அரசுகளின் பெயர் மாசடைந்து அவர்கள் தேர்தல்களில் தோற்க முக்கிய காரணமாக இருந்தது இந்தியன் எக்ஸ்பிரஸ்-தினமணி குழுமம். 

நேருவுக்குப் பிறகு 1970-களிலிருந்து சர்வாதிகார மனப்பான்மை கொண்ட இந்திரா-ராஜிவ் காந்தி அரசுகள் கோயங்கா குழுமத்தின் மேல் பலமுறை வருமானவரி, சுங்கவரி, அமலாக்கத்துறை சோதனைகள் நடத்தின. போர்ஜெரி செய்து பத்திரிகையாளர்களை சிறையில் அடைத்து, நூற்றுக்கணக்கான கிரிமினல், வரி, மற்ற வழக்குகளை போட்டன. அதை பணியவைக்க செய்த முயற்சிகளையெல்லாம் முறியடித்து வெற்றிகொண்டது கோயங்கா தலைமையிலான பத்திரிகையாளர் குழு. 

இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி குழுமம் அரசியலில் சக்திவாய்ந்த பெரிய புள்ளிகளின் ஊழல்களை எதிர்த்து போரிட்டது. இந்திய பத்திரிகைத்துறை மட்டுமல்லாமல் உலக அளவிலும் பத்திரிகைத்துறையின் பொன்னேட்டில் பொறிக்கத்தக்கது. லஞ்ச ஊழலை அம்பலப்படுத்தும் துணிவும், அதிகாரத்தில் இருப்பவர்களைத் தட்டிக்கேட்கும் தைரியமும் இந்திய பத்திரிகைத்துறையில் இன்று சகஜமாக இருப்பதற்கு இந்தியன் எக்ஸ்பிரஸ்-தினமணி குழுமம்தான் வழிகாட்டியாக இருந்தது . 

பாரம்பரிய பத்திரிகை உள்சுதந்திரம்

இந்தியன் எக்ஸ்பிரஸ்-தினமணி குழுமத்தில் மட்டுமே இன்றுவரை பத்திரிகை ஆசிரியர்களுக்கு மதிப்பும் கெளரவமும் கொடுக்கப்படும் பாரம்பரியம் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. பெரும்பாலான பத்திரிகைகளில் உரிமையாளர்கள் தான் ஆசிரியராகவும் இருப்பார்கள். இந்தியன் எக்ஸ்பிரஸ்-தினமணி குழுமத்தில் மட்டுமே பத்திரிகை உரிமையாளர் ஆசிரியராக இருப்பதில்லை. தனது பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கென்று ஒரு உரிய அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்து, அவர்களை மதித்து, தன்னுடைய கருத்துக்கு மாறுபட்ட கருத்தை அவர்கள் எழுதினால் கூட அதை சகித்து பத்திரிகையின் உள்சுதந்திரத்தை பாதுகாத்தார் கோயங்கா. 

1989-இல் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை ராஜீவ் காந்தி அரசுடன் "வாழ்வா சாவா' என்கின்ற போரில் இருந்தது. அப்போது ராஜீவ் காந்தி தலைமையிலான அரசையும் காங்கிரஸையும் எதிர்த்த விபி சிங்கை முழுமையாக ஆதரித்தது இந்தியன் எக்ஸ்பிரஸ்-தினமணி குழுமம். தமிழகத்தில் 1989 சட்டசபைத் தேர்தலில் வி.பி. சிங்குடன் திமுக அணி சேர்ந்து ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸை எதிர்கொண்டது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதும், அகில இந்திய அளவில் காங்கிரஸ் தோற்க வேண்டும் என்பதும், இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தேர்ந்த முடிவு. எனவே இந்தியன் எக்ஸ்பிரஸ்-தினமணி குழுமம் திமுகவை ஆதரிக்கவேண்டும் என்பது கோயங்காவின் விருப்பம். ஆனால் கோயங்காவுடன் அன்றய தினமணி ஆசிரியர் ஐராவதம் மஹாதேவன் பேசுகையில், திமுகவின் மேல் ஏராளமான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதால், திமுகவை தினமணி ஆதரிப்பதை வாசகர்கள் ஏற்கமாட்டார்கள். எனவே இந்தியன் எக்ஸ்பிரஸ் திமுகவை ஆதரித்தாலும், தினமணி அப்படி செய்ய முடியாது என்று தன் கருத்தை அழுத்தம் திருத்தமாக முன்வைத்தார். 

ராஜீவ் காந்தி தோற்க வேண்டும் என்கிற நிலைப்பாடு கோயங்காவுக்கு. அதனால் தினமணி திமுகவை ஆதரிக்க வேண்டும் என்கிற கட்டாயம் அவருக்கு இருந்தது. அந்த நிலையிலும் கோயங்கா தினமணி ஆசிரியரின் உணர்வுக்கும், கருத்துக்கும் மரியாதை கொடுத்து தினமணி திமுகவை ஆதரிக்க வேண்டாம், ஆனால் தயவு செய்து காங்கிரஸையும் ஆதரிக்க வேண்டாம் என்று பெருந்தன்மையுடன் கேட்டுக் கொண்டார். 

தன் கருத்துக்கு விரோதமானது மட்டுமல்லாமல், பத்திரிகையின் நலனுக்கும் பாதகமான தினமணி ஆசிரியரின் நிலைப்பாட்டை கோயங்கா ஏற்றது, பத்திரிகை ஆசிரியர்களுக்கு எந்த அளவுக்கு உரிமையாளர் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதற்கு இலக்கணமான எடுத்துக்காட்டு. இது நடந்தபோது நானும் உடனிருந்தேன். 

தினமணி-வாசகர்கள் உறவு 

ஆசிரியர்-மாணவர் உறவு 

பத்திரிகையான தினமணியை பள்ளிக்கூடமாகவும், அதில் தான் பாடம் நடத்தும் ஆசிரியராக மாறி, வாசகர்களை மாணவர்களாக மாற்றி காலத்துக்குத் தகுந்த, வேண்டிய நுண்ணிய விஷயஞானத்தைக் கொடுக்கும் பாரம்பரியத்தை தினமணிக்கு கொடுத்தது அதன் இரண்டாவது ஆசிரியரான ஏ.என் சிவராமன் தான். 

"கணக்கன்', "ஒண்ணேகால் ஏக்கர் பேர்வழி', "குமாஸ்தா', "அரைகுறை வேதியன்', "அரைகுறை பாமரன் (அகுபா) போன்ற புனைப்பெயர்களில் அவர் எழுதிய கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஆசிரியர் வாசகர்களான மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பது போல அமைந்திருக்கும். அணுசக்தி சம்பந்தப்பட்டதாக இருந்தாலும், பெட்ரோல் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதாக இருந்தாலும், விண்கலத்தைப் பற்றிய விஞ்ஞானமாக இருந்தாலும், விவசாயமாக இருந்தாலும் சட்டமாக இருந்தாலும் அவர் அந்த சிக்கலான விஷயங்களை சாதாரணமானவர்களுக்கு புரியும் படி எழுதி பத்திரிகையான தினமணியை, சிந்தனையாளர்களையும், அறிவு ஜீவிகளை உருவாக்கும் ஒரு பயிற்சி நிலையமாக மாற்றினார். அந்த பாரம்பரியத்தின் நீட்சியை இன்றளவும் தினமணியில் காணலாம். 

இப்படி நூற்றாண்டை நோக்கி நடைபோடும் தினமணி குறித்து எழுதிக்கொண்டே போகலாம். ஜனரஞ்சக விஷயங்களையே மையமாக வைத்து, வியாபாரத்தையும், லாபத்தையுமே உயிர்மூச்சாக கருதும் பத்திரிகைகள், ஊடகங்கள் ஆக்கிரமித்துள்ள தமிழக பத்திரிகைத்துறைக்கு இன்றளவும் உயர்ந்த பாரம்பரியத்துக்கு எடுத்துக்காட்டாக தினமணி திகழ்கிறது. 

அது தொடர்ந்து தேசத்துக்கும், தேசியத்துக்கு தன் பணியைத் தொடரவேண்டும் என்று "தினமணி' 86-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வேளையில் எல்லாம் வல்ல இறைவனை அனைவரும் வேண்டிக்கொள்வோம்!.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com