எஸ். நாராயணன்
எஸ். நாராயணன்

தினமணியில் எனது பயணம்

நான் தினமணியில் பணியாற்றியது 32 ஆண்டுகள். இண்டர்மீடியட் வரை படித்துள்ள எனக்கு சிறு வயது முதலே ரேடியோவில் செய்திகள் கேட்பதும், பத்திரிகைகள் படிப்பதும் மிகவும் பிடித்தமான விஷயம்.

நான் தினமணியில் பணியாற்றியது 32 ஆண்டுகள். இண்டர்மீடியட் வரை படித்துள்ள எனக்கு சிறு வயது முதலே ரேடியோவில் செய்திகள் கேட்பதும், பத்திரிகைகள் படிப்பதும் மிகவும் பிடித்தமான விஷயம். தந்தையார் ஏ.என்.சிவராமன் ஆசிரியராக இருந்த தினமணியில் 1957-ஜனவரியில் நானாக விரும்பிச் சேர்ந்தேன்.

மதுரை பதிப்பில் சேர்ந்த எனக்கு குருவாக இருந்து பத்திரிகை தொடர்பான அனைத்து விஷயங்களையும் சொல்லிக் கொடுத்தது பொறுப்பாசிரியராக இருந்த வி.சந்தானம். ஆங்கிலத்தில் வரும் செய்திகளை எப்படி தமிழில் மொழிபெயர்ப்பது, எப்படி எடிட் செய்வது என்பது உள்பட பல விஷயங்களைக் கற்றுக்கொடுத்தார்.

1959 ஏப்ரல் 29-ஆம் தேதி தினமணி சென்னை பதிப்பு சில காரணங்களால் மூடப்பட்டு, சித்துôரிலிருந்து தினமணி வெளிவரத் தொடங்கிய சமயத்தில் நான் அங்கு சில காலம் பணியாற்றினேன். பின்னர் மீண்டும் 1963-இல் சென்னை பதிப்பு தொடங்கியபோது அதில் பணியாற்றினேன்.

அப்போது ஏ.ஜி. வெங்கடாச்சாரி துணை ஆசிரியராக இருந்தார். சுதந்திரப் போராட்டத் தியாகி. செய்திகளைத் தேர்ந்தெடுப்பதிலும், மொழிபெயர்ப்பதிலும், தலையங்கம் எழுதுவதிலும் வல்லவர். ஜெர்மனி, மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளார். ஏ.ஜி.வெங்கடாச்சாரி, என்.ராமரத்தினம், டி.வி.கணேசன், வி.எஸ்.நாராயணன், ப.சீனிவாசன் போன்ற ஜாம்பவான்களுடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

சாவி, கி.கஸ்தூரி ரங்கன், ஐராவதம் மகாதேவன், கே.வி.ராமச்சந்திரன், நா.பார்த்தசாரதி போன்றவர்களும் அப்போது பணியாற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். அந்தக் காலங்களில் ஆசிரியர் குழுவில் இருந்தவர்கள் செய்திகளை போட்டி போட்டுக்கொண்டு எழுதுவார்கள். கையில் செய்தி ஏதும் இல்லையெனில் டெலி பிரின்டர் பார்த்து முக்கியச் செய்திகள் இருந்தால் அன்றைய ஷிப்டில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களிடம் தெரிவித்து உஷார்படுத்துவார்கள்.

ஐராவதம் மகாதேவன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் சிறந்த நிர்வாகியாக பணியாற்றியதுடன் தினமணியில் நல்லாசிரியராகவும் திகழ்ந்தார். கி.கஸ்தூரிரங்கன், செய்திக்கட்டுரைகள் எழுதுவதிலும், விமர்சனங்கள் எழுதுவதிலும் வல்லவர். ஆர்.எம்.திருஞானசம்பந்தம் எக்ஸ்பிரஸில் பணியாற்றிவிட்டு பின் தினமணிக்கு ஆசிரியராக வந்தார். செய்திகளைச் சேகரிப்பதில் திறமையானவர். வேலையில் மிகவும் கண்டிப்பானவர். யாருக்கு என்ன வேலை கொடுப்பது என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தார்.

ஏ.ஜி.வெங்கடாச்சாரி, என்.ராமரத்தினம் போன்றவர்கள் பொறுப்பில் இருந்தபோது பெரும்பாலும் தேசிய செய்திகளுக்குத்தான் முதல் பக்கத்தில் முக்கியத்துவம் தருவார்கள். மாநிலச் செய்திகள், பிராந்தியச் செய்திகள் எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும் அவை உள்ளேதான், அதுவும் சின்னதாகத்தான் போடுவார்கள். அந்த நிலையை மாற்றி மாநிலச் செய்திகள் முதல் பக்கம் இடம்பெற காரணமாக இருந்தது நான்தான்.

தினமணிக்கு என்று தனியாக தமிழ் நிருபர்கள் கிடையாது. ஆங்கிலப் பத்திரிகையான எக்ஸ்பிரஸ் நிருபர்கள் கொடுக்கும் செய்திகளைத்தான் தமிழில் மொழிபெயர்த்து கொடுக்க வேண்டியிருக்கும். 1967-இல் இதற்கு ஒரு முடிவுகட்டி தினமணிக்காக தனியாக தமிழில் செய்தியளிக்க நிருபர்களை போட்டது எனது முயற்சியால்தான்.

1980ம் ஆண்டு வரை ஏ.என்.எஸ்., ஏ.ஜி.வெங்கடாச்சாரி, என்.ராமரத்தினம் மூவரும் தலையங்கம் எழுதிவந்தனர். அதன்பின்னர் ஆசிரியர் ஏ.என்.சிவராமன் கட்டுரைகள் எழுதுவதில் முழுக்கவனத்தையும் செலுத்தியதால் தலையங்கம் எழுதும் பொறுப்பை நான் ஏற்றேன். எனக்குத் துணையாக செய்தியாசிரியராக இருந்த கே.வி.ராமச்சந்திரனும் தலையங்கம் எழுதுவதில் வல்லவர். பல சமயங்களில் அவர் எழுத நினைக்கும் விஷயமும், ஏ.என்.எஸ். சிந்தனையில் இருக்கும் விஷயமும் ஒன்றாகவே இருக்கும்.

தினமணியில் தமிழ்மணியைத் தொடங்கியவர் ஐராவதம் மகாதேவன். அவர் விட்டுச் சென்ற பணியை இப்போதைய ஆசிரியர் கி.வைத்தியநாதன் தொடர்கிறார். தமிழ்மணி மீதும் பாரதி இலக்கியம் மற்றும் திருக்குறள் மீதும் அவர் காட்டி வரும் ஆர்வம் பாராட்டுக்குரியது.

ஞாயிற்றுக்கிழமை தமிழ்மணியில் வெளிவரும் கலாரசிகனை படிக்கும்போது ஆசிரியர் கி.வைத்தியநாதன் அவர்களின் விசாலமான அறிவும், தொடர்பும் வெளிப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com