தினமணியும் அறிவியலும்

மகாகவி பாரதியின் 13-ஆம் நினைவுநாளில் உதயமான தினமணி நாளிதழ் இன்றுவரை அதன் கொள்கையில் வலுவாகச் செயல்பட்டு வருகின்றது
நெல்லை சு. முத்து
நெல்லை சு. முத்து

மகாகவி பாரதியின் 13-ஆம் நினைவுநாளில் உதயமான தினமணி நாளிதழ் இன்றுவரை அதன் கொள்கையில் வலுவாகச் செயல்பட்டு வருகின்றது. "தமிழ் மக்களின் மனதில் உள்ள எல்லாவிதமான அடிமை எண்ணங்களையும் போக்குவது" என்பதில் - தமிழ்மக்கள் மேனாட்டு அறிவியல் மேதைமைக்கு அடிமைகளாக வாழ வேண்டியது இல்லை என்ற உணர்வையும் தொடர்ந்து பிரதிபலித்துவருகின்றது.

அதனாலேயே பல்வேறு காலகட்டங்களில் அறிவியல்பூர்வச் சிந்தனைகளை வளப்படுத்துவதில் தினமணியின் பங்களிப்பு கணிசமானது. அதன் ஏனைய இணைப்புகளிலும் கூட அறிவியல் செய்திகளும், அறிவார்ந்த கட்டுரைகளும் இடம்பெற்று வருகின்றன. அறிவியல் தகவல்களையும், அறிவியல் கருத்தரங்கப் பதிவுகளையும் துல்லியமாகப் பதிவு செய்துவரும் பாரம்பரியம் மிக்க ஒரே இதழ் தினமணி தான் என்று குறிப்பிடலாம்.

அறிவியலை வெவ்வேறு வடிவங்களில் கொண்டு சேர்க்கும் முனைப்பில் தினமணியின் வார இணைப்பான 'அறிவியல் சுடர்' பல்வேறு பகுதிகளைத் தாங்கி வெளிவந்தது. தமிழ் நாளிதழ்கள் வரலாற்றில் அறிவார்ந்த மக்களிடையே கூடுதல் கவனத்தை ஈர்த்தது.

தொல்லாய்வியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் ஆசிரியரானபோது, தொடங்கப்பட்ட அறிவியல் சுடர்' இதழில் விஞ்ஞானிகள் - பேராசிரியர்கள் - இதழாளர்கள் எனப் பல்துறை நிபுணர்களின் கட்டுரைகள் இடம்பெற்றன.

'விண்வெளி பற்றிய கல்வி' (அறிவியல் சுடர், 27-11-90) என்ற கட்டுரையில் நெல்லை சு. முத்து "வான நூல் பயிற்சி கொள்" என்று புதிய ஆத்திசூடி'யில் குழந்தைகளுக்கு அறிவியல் ஓதினான் மகாகவி பாரதி. சிறுபிராயம் முதற்கொண்டே அவர்தம் அடிமனதில் அறிவியல் சிந்தனைகள் துளிர்விடவேண்டும்" என்றும் குறிப்பிட்டார்.

அறிவியல் சுடரில் நான் (நெல்லை சு.முத்து) எழுதிய "விண்வெளியில் மருத்துவ ஆராய்ச்சி' (29-04-1989), "விண்வெளித் தகவல் தொடர்பிற்கு லேசர்' (6-05-1989), "செவ்வாய்க் கிரக நிலையை மாற்ற இயலுமா?' (27-1-1990), 'காலம் என்பது என்ன ? (29 - 02-1992) உள்ளிட்ட பல கட்டுரைகள் "விண்வெளித் துறை சார்ந்தவை.

அறிவியல் சுடரில், டாக்டர் எஸ். சுந்தரம் எழுதிய "வானவியல்' என்ற தனிப் பகுதியே வெளிவந்தது. 

'கதிர்வீச்சு , புற்று நோயூக்கி (ஐ.சிவசுப்பிரமணிய ஜயசேகர், 6-05-89) போன்ற மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரைகளுடன், 'எய்ட்ஸ் நோய்: உலக நோய் எச்சரிக்கை' (29-07-1990), 'கதிர்வீச்சு காரணமா? (29-07-1990) போன்ற பொதுவான கட்டுரைகளும் மருத்துவம் மற்றும் சுகாதாரம் சார்ந்த கட்டுரைகளும் வெளியாயின.

அன்றியும், ஆண்டுதோறும் தேர்ந்த மருத்துவர்களின் கட்டுரைகள் இடம்பெறும் மருத்துவ மலர்த் தொகுதிகள் தினமணி வரலாற்றில் முக்கிய ஆவணங்கள் ஆகும்.

பேராசிரியர் கே.என்.ராமச்சந்திரனின் "நல்ல தூக்கத்திற்கு சில உபாயங்கள்' (16-06-1990), 'ஓசோன் அடுக்கில் ஓட்டை : ரஷிய நிபுணர்கள் கருத்து' (29-07-1990), 'புதுப்புது ஆய்வுகளுக்கு வழிவகுத்த ராமன் விளைவு ( 14-01-1989), 'புலால் உணவும் உடல்நலமும்' (6-05-1989) போன்ற கட்டுரைகள் சிறப்பானவை.

அறிவியல் சுடர் இதழின் துணை ஆசிரியர் ந.ராமதுரை எழுதிய பல அறிவியல் கட்டுரைகள் தனித்தனித் தொகுப்புகளாகவும் வெளிவந்தன. அவரே "குருஜி' என்ற புனைப்பெயரில் அறிவியல் நூல்களுக்கு மதிப்புரைகளும் எழுதினார்.

"1991-ம் ஆண்டு அறிவியல் எழுத்தாளர் பெ.நா.அப்புஸ்வாமியின் நூற்றாண்டையொட்டி தம்பி சீனிவாசன் எழுதிய 'அற்புதங்களை அறிமுகம் செய்தவர்' என்ற கட்டுரை 'அறிவியல் சுடர்' (14-01-91) இதழில் அரங்கேறிற்று.

கணிதம் பி.கே.ஸ்ரீனிவாசன்' எண் கணிதக் கோலம்' (16-06-90) என்று தொடராக எழுதிவந்தார். 

அடிப்படை அறிவியல் துறைகளைப் போலவே, சூழலியல் கட்டுரைகளும் தினமணியில் கூடுதலாக வெளிவந்தன.

அறிவியல் சுடரில் வெளியான கட்டுரைகளில் அறிஞர்கள் எடுத்தாண்ட கலைச்சொற்களை எல்லாம் அடுத்த இதழிலேயே தொகுத்து, "அறிவியல் அகராதி' என பகுதி வெளியிடப்பட்டது. எடுத்துக்காட்டாக, long-term automated lander- நெடுங்காலத் தானிறங்கி, radiation belts - கதிர்வீச்சு வளையங்கள்.

ஆயினும் இத்தகைய கலைச்சொற்கள் தொடர்பாக வாசகர்களின் அறிவார்ந்த விவாதங்களும் "சொல்லாக்க மேடை' என்ற பகுதியில் இடம்பெற்றது. 

சிறுவர்களுக்கு மட்டும் அன்றி, பள்ளி மாணவர்களுக்கும் பயன்தரும் வகையில் 'அறிவியல் குறுக்கெழுத்துப் புதிர்' என்ற தனிப்பகுதி வெளியானது. 

தினமணி கதிர் இதழ்களில் மொழியியல், கணிப்பொறி இயல் சார்ந்த பல கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.

தினமணி வார இணைப்புகளில் தொடர்ந்து அறிவியல்-தொழில்நுட்பத் தொடர்களும் வெளிவந்தன. 

அறிவியல் சுடர் இணைப்பில் தமிழ்மணி என்ற புதுப்பகுதியும் இடம்பெறலாயிற்று. 'தமிழ்மணி'யில் கூட, வெறுமனே புதினம், சிறுகதை, கவிதை, ஹைக்கூ போன்ற வழக்கமான இலக்கிய வகைப்பாடுகள் குறித்து மட்டுமன்றி, மொழியியல் சார்ந்த சிந்தனைகளை வெளிப்படுத்தும் கட்டுரைகளும் பல அரங்கேறி உள்ளன.

தமிழும் அறிவியலும் இணைந்த காலகட்டத்தில் இன்று தினமணியின் நடுப்பக்கத்தில் இராம.தி.சம்பந்தம் தொடங்கிவைத்த "வாரம் ஒரு அறிவியல் கட்டுரை' என்ற மரபு, 'கபிலவாணர்' கே.வைத்தியநாதன் ஆசிரியரான காலகட்டத்திலும் செவ்வனே தொடர்ந்து வருகிறது.

அறிஞர் - மாணவர் - சராசரி வாசகர் ஆகிய மூன்று தளங்களுக்கும் ஏற்ற வகையிலான அறிவியல் மொழிநடையும், கருத்து வடிவமும் தினமணி அறிவியல் கட்டுரைகளின் தனித்தன்மைகள்.

- கட்டுரையாளர்: விஞ்ஞானி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com