தேச பக்தியை ஏற்படுத்திய நாளிதழ் தினமணி

1944-1945- ஆம் ஆண்டு காலத்தில் திருச்சியிலிருந்து மன்னார்குடிக்குக் குடிப்பெயர்ந்தோம். தஞ்சை மாவட்டத்தின் நில உடமையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் மற்றும் செயலராக இருந்த
மன்னார்குடி எஸ். ரெங்கநாதன்
மன்னார்குடி எஸ். ரெங்கநாதன்

1944-1945-ஆம் ஆண்டு காலத்தில் திருச்சியிலிருந்து மன்னார்குடிக்குக் குடிப்பெயர்ந்தோம். தஞ்சை மாவட்டத்தின் நில உடமையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் மற்றும் செயலராக இருந்த எனது தந்தை எஸ். சீனிவாச ஐயங்கார், எங்கள் வீட்டுக்கு தினமணி, சுதேசமித்ரன் உள்பட 3 நாளிதழ்களையும், இரு வார இதழ்களையும் வாங்குவார். இதில் மற்ற பத்திரிகைகளை விட எந்த விதத்திலோ எனக்கு தினமணி மீதுதான் அதிகம் ஈர்ப்பு. முதலில் தினமணியையே படிக்கத் தொடங்கினேன்; படிக்கத் தொடங்கினேன் என்பதை விட படங்களை பார்க்கத் தொடங்கினேன் என்பதுதான் சரியாக இருக்கும்.

மகாத்மா காந்தியின் மறைவுக்குப் பிறகு சுதந்திரப் போராட்ட வரலாற்றை தொகுத்து தினமணியில் படத்துடன் கட்டுரை வெளிவந்தது. அதில் சில படங்கள், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள், மக்கள் மீது ஆங்கிலேய ஆட்சியாளர்கள் நடத்திய கொடூரத் தாக்குதல்களை வெளிப்படுத்தும் படங்கள். இந்தப் படங்கள் என்னை விம்மி, விம்மி அழவைத்தன. மேலும், தேசத் தலைவர்கள் மீதும், தியாகிகள் மீதும் மரியாதையை ஏற்படுத்தியது. தேசிய உணர்வையும், தேசப் பக்தியையும் எனக்கு ஏற்படுத்தியது.

தினமணியின் முன்னாள் ஆசிரியர் மறைந்த ஏ.என். சிவராமன், கணக்கன் என்ற புனைப் பெயரில் நாட்டின் பொருளாதாரம், தொழில்வளம், விவசாயம் குறித்த எழுதிய கட்டுரைகள் ஆழமாகப் படிக்கத் தூண்டின. அந்தக் கட்டுரைகளை கத்தரித்து ஆவலுடன் சேகரித்தேன். அவற்றை இப்போதும் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

ஏ.என். சிவராமன் சீனாவுக்குப் பயணம் சென்று வந்த பின்பு தினமணியில் எழுதிய தொடர் கட்டுரையின் மூலம், கம்யூனிஸ்ட்கள் மீது நான் வைத்திருந்த பார்வையும், கருத்தையும் மாற்றிக்கொண்டேன். கம்யூனிஸ்ட்கள் மனித சக்திகளுக்கு பயன்படக் கூடிய வகையில், நாட்டின் முன்னேற்றத்துக்கு வழிகோலக்கூடிய அரசியல் கட்சி என்பதை அவரது கட்டுரைகள் உணர்த்தின.

இதில், முக்கியமான விஷயம் சீனாவில் தட்ஷய்யி என்னும் மலையை சமவெளியாக்கி அதை விளைநிலமாக மாற்றியமைத்து, நல்ல விளைச்சல் பெற்று, மனித சக்தி மூலம் உணவு உற்பத்தியில் சீன நாட்டினர் சாதனைப் படைத்துள்ளனர் என்ற செய்தி என்னுள் ஆழப்பதிந்தது. இதனால், வாழ்க்கையில் ஒருமுறையாவது சீனாவுக்கு சென்று தட்ஷய்யி பகுதியைப் பார்க்க வேண்டும் என உறுதியையும், ஆசையையும் ஏற்படுத்தியது.

இந்த ஆசை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மூலம் 2016-ஆம் ஆண்டில் நிறைவேறியது. ஆத்மா திட்டம் மூலம் விவசாய மேம்பாடு குறித்து வெளிநாட்டுக்குச் சென்று புதிய தொழில்நுட்பம் குறித்து அறிந்து வருவதற்காக தமிழக அரசு சார்பில் சீனாவுக்கு சென்ற குழுவில் நானும் இடம்பெற்றேன்.

முதல்வர் தலைமையில் பயணத் திட்டம் தயாரிக்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றபோது, பல பேர் இஸ்ரேல், தாய்லாந்து, பிலிப்பின்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்ல வேண்டும் என தெரிவித்தனர். ஆனால், நான் மட்டும்தான் சீனாவுக்கு செல்ல வேண்டும் எனவும், வேறு நாடுகளுக்கு என்றால் பயணக்குழுவில் நான் இடம்பெற மாட்டேன் என்பதையும் தெரிவித்தேன்.

அப்போது, ஏன் சீனாவுக்குப் போக வேண்டும் எனக் கூறுகிறீர்கள் என ஜெயலலிதா கேட்டார். அதற்கு, சீனா மட்டும் தான் நமது நாட்டுடன் பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் சம அளவில் உள்ள நாடு. அதுமட்டுமல்லாது விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளித்து அதனை நவீனமாக்கி இந்தியாவை விட இரண்டு மடங்கு அதிகமாக உணவு உற்பத்தி செய்து வரும் நாடு. எனவே, அந்த நாட்டின் தொழில்நுட்பம் மற்றும் நடைமுறைகளைத் தெரிந்து கொள்ள முடிவதுடன் விவசாயிகள் நவீன முறைக்கு மாறியதால் ஏற்பட்ட சாதக மற்றும் பாதகங்களை அறிந்துகொள்ள முடியும் என்ற கருத்தை முன்வைத்தேன்.

என் கருத்தை முதல்வர் மட்டுமின்றி குழுவில் உள்ள மற்றவர்களும் ஏற்றுக்கொண்டதையடுத்து, சீனாவுக்கு சென்றோம். தட்ஷய்யி சமவெளி விளைநிலப் பகுதிக்கு சென்றோம். தினமணியில் கட்டுரை படித்தபோது, பார்க்க வேண்டும் எனத் தாக்கத்தை ஏற்படுத்திய இடத்தைப் பல ஆண்டுக்குப் பிறகு நேரில் பார்த்தது பிரமிப்பாக இருந்தது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நான் படித்த காலம், தமிழ் மொழி உணர்வுகள் அதிகரித்து இருந்த காலம். அப்போது, திராவிட சிந்தனையில் உள்ள முதுகலை மாணவர்கள் பலரது கையில் தினமணி இருப்பதைப் பார்த்திருக்கிறேன். ரேங்கோல்டர்கள் என அழைக்கப்படும் மாணவர்கள் பெரும்பாலும் நூலகத்தில் தினமணியை வாசிப்பதிலேயே அதிக நேரத்தை செலவிடுவார்கள். இவற்றின் மூலம், அனைத்து தரப்பினருக்கும் அடித்தளமாக இருந்தது தினமணிதான் என்பதை என்னால் உணர முடிந்தது.

மகாகவி பாரதியார் குறித்து வேறு எந்த பத்திரிகையும் வெளியிடாத அளவில், அதிக அளவில் தினமணியில் செய்தி வெளியிட்டதும், தேசிய உணர்வை வளர்த்து எடுத்து வருவதும், அதிர்ச்சி செய்திகளுக்கு முக்கியத்துவம் தராமல், ஆச்சர்ய செய்திகளை தினமணி அளித்து வருவதும், தினமணியை நான் அதிகம் நேசிக்க முக்கிய காரணம் ஆகும்.

இன்றளவும் அரசியல் தலைவர்கள் தங்கள் மேடைப் பேச்சுகளிலும், ஊடக விவாதங்களில் பங்குபெறுவோரும் பெரும்பாலும் தினமணி செய்தியை மேற்கோள்காட்டி பேசுவது, விவாதிப்பது தினமணியின் தனித்தன்மைக்கும், நடுநிலைக்கும் எடுத்துக்காட்டாகும்.

என் வீட்டில் நிறைய நாளிதழ்கள் வாங்கினாலும், முதலில் படிப்பது தினமணியைத் தான். பணி காரணமாக வெளியூர்களுக்குச் சென்றுவிட்டாலும், வீட்டுக்குத் திரும்பிய பிறகு விடுப்பட்ட தினமணி நாளிதழ்களைப் படித்துவிடுவேன்.

தினமணியை எடுத்தவுடன் நான் முதலில் படிப்பது அன்புள்ள ஆசிரியருக்கு பகுதியில் வெளியாகும் வாசகர் கடிதம் பகுதியைத்தான். பிறகு தலையங்கம், நடுப்பக்க கட்டுரை, மற்ற செய்திகள்.

தினமணி அன்புள்ள ஆசிரியர் பகுதியில் ஒருதலைப்பட்சம் இல்லாமல் அனைத்துக் கடிதங்களும் பிரசுரமாகியிருக்கும். அதனால்தான் போட்டி நிறைந்த உலகில், வர்த்தக நோக்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல், வாசகர்களின் மன ஓட்டத்துக்கு முன்னுரிமை அளித்து, அவர்களின் எண்ணத்தை வெளிக்கொண்டு வந்து, 85 ஆண்டுகளை நிறைவு செய்து, 86- ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது தினமணி.

மேலும், வாரம் ஒரு வாசகரிடமிருந்து உலக அளவிலான, தேசிய, மாநில அளவிலான மிக முக்கியமான பிரச்னை குறித்து மற்ற வாசகர்களின் கருத்தை அறியும் வகையில் விவாதமேடை என்ற ஒரு பகுதியைத் தொடங்கி, அதிலும் எந்த சமரசமும் இல்லாமல் அனைத்துத் தரப்புக் கருத்தையும் பதிவு செய்து வரும் பாங்கு தினமணியின் மணிமகுடத்துக்கு மேலும் ஒரு சிறப்பு.

தமிழுக்கும், தமிழ் இலக்கியத்துக்குமான சேவையாக தமிழ்மணி என ஞாயிறுதோறும் ஒரு பக்கம் ஒதுக்கீடு செய்து, அரிய பல பொக்கிஷங்களை அதில் வெளிக்கொண்டு வருவதும், கலாரசிகன் பகுதியில் விமர்சனத்துக்கு வந்த கவிதை நூல்களில் முக்கியப் பகுதியை எடுத்து வெளியிட்டு, படைப்பாளரைப் பரவசப்படுத்துவதும் வாசகர்களின் வாங்கும் ஆர்வத்தையும் தூண்டுவதாக உள்ளது.

காலங்கள் பல கடந்து ஓடினாலும் 11.9.1934-ஆம் ஆண்டு வந்த முதல் தினமணியின் முகப்பும் மற்றும் பக்க வடிவமைப்பும் மாறாமல் அப்படியே இருப்பது தினமணிக்கு என்று உள்ள மிகச் சிறப்பான அமைப்பாகும். இதே நிலை என்றும் தொடர வேண்டும். இன்னும் பல நூற்றாண்டு தினமணி பீடுநடை போட்டு, தேசப் பக்திக்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் துணையாக இருந்து பத்திரிகை தர்மத்தை நிலை நாட்ட வேண்டும்.

தினமணியின் முன்னாள் ஆசிரியர் ஏ.என். சிவராமனின் கட்டுரைகளையும், சுதந்திரப் போராட்ட வரலாற்றுச் செய்திகளையும் அடுத்த சந்ததியினரும் அறிந்து கொள்ளும் வகையில் தினமணியில் தினமும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com