நான் ஏன் தினமணியை விரும்புகிறேன்?

இந்திய திருநாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த தினமணி நாளிதழுக்கும் எனக்கும் அரை நூற்றாண்டு கால தொடர்பு உண்டு.
தமிழ் பெரியசாமி
தமிழ் பெரியசாமி

இந்திய திருநாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த தினமணி நாளிதழுக்கும் எனக்கும் அரை நூற்றாண்டு கால தொடர்பு உண்டு. கல்லூரி படிக்கும் காலம் தொட்டு இன்று வரையிலும், தினமணி நாளிதழுடனேயே ஒவ்வொரு நாள் விடியலையும் எதிர்நோக்குகிறேன்.

தினமணியுடன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளையும் ஒன்றாக வைத்து, ஆங்கிலம் கற்றுக் கொண்ட தலைமுறை பட்டியலில் நானும் இடம் பெறுகிறேன். நாட்டு நடுப்புகளை தெளிவாகவும், மிகைப்படுத்தாமலும், உள்ளதை உள்ளபடியே வெளியிடும் நாளிதழ்களில் முதன்மையாக உள்ளது தினமணி. செய்தியில் நம்பகத் தன்மை மற்றும் உறுதிபாடு என்பதே தினமணியின் தனித் தன்மை.

இதுபோன்ற சிறப்புக்குரிய தினமணியை ஆசிரியர்கள் டி.எஸ்.சொக்கலிங்கம், ஏ.என்.சிவராமன், ஐராவதம் மகாதேவன் போன்றவர்கள் மிக சிறப்பாக வழிநடத்தினார்கள். அந்த வரிசையில் தற்போதைய ஆசிரியரான கி.வைத்திநாதன் தினமணிக்கு மேலும் மெருகு சேர்த்து வருகிறார்.

தமிழ் அறிந்த அனைத்து தரப்பு மக்களிடையும் கவரும் வகையில் தினமணி இன்றைக்கு சாதனை நிகழ்த்தி வருகிறது. இளைஞர்களுக்கு வழிகாட்டவும், மகளிர் முன்னேற்றத்திற்கும், ஆன்மிகம் தொடர்பான தேடலுக்கும், சிறுவர்களை சிந்திக்க வைக்கவும், தமிழ் இலக்கியத்திற்கும், புதிய படைப்பாளிகளை உருவாக்குவதற்கும் பல்வேறு விதமான இணைப்பிதழ்களை வெளியிட்டு வருகிறது தினமணி.

அந்த வகையில், ஞாயிறுதோறும் வெளியாகும் தமிழ்மணி, இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.அதே நேரத்தில், தினமணி கதிர் தமிழ் படைப்பாளிகளின் களமாக விளங்கி வருகிறது. சிறுகதை போட்டிகள் நடத்தி, இலக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதிலும் தினமணி நாளிதழ் உயர்ந்து நிற்கிறது.

நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது, "காவிரியில் ஜலம் திறந்துவிடப்பட்டது' என்றே தினமணியில் செய்தி வெளியாகும். ஆனால், இன்றைக்கு பிற மொழிச் சொற்களுக்கு இணையான மிகச் சரியான தமிழ் சொற்களோடு தினமணி வெளி வந்து கொண்டிருக்கிறது.

என் வீட்டிற்கு நாள்தோறும் நான்கு காலை நாளிதழ்கள் வாங்குகிறேன். நான்கு இதழ்களில் முதன்மையாக நான் வாசிப்பது தினமணி. பிற நாளிதழில் வெளியான தகவல் குறித்து எனக்கு ஐயப்பாடு எழும்பட்சத்தில், அத்தகவலை உறுதிப் படுத்துவதற்கு நான் தினமணியை மட்டுமே தேர்வு செய்வேன். அந்த அளவுக்கு தினமணியில் வரும் தகவல்கள் அனைத்தும், எனக்கு மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணியின் இன்றைய ஆசிரியர் கி.வைத்தியநாதன் முயற்சியால், டிவிட்டர், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட பல்வேறு ஆங்கிலச் சொற்களுக்கு, இனிமையான தமிழ் சொற்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. குறிப்பாக அனைத்து தமிழ் நாளிதழ்களும் நீதிமன்றத்தில் வழக்காடும் வழக்குரைஞர்களை, வழக்கறிஞர் என தவறாக குறிப்பிட்டு வருகின்றன. ஆனால், தினமணியில் மட்டுமே வழக்குரைஞர் என்ற மிகச் சரியான சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

"கணக்கன்' என்ற பெயரில் தினமணியின் முன்னாள் ஆசிரியர் ஏ.என்.சிவராமன் எழுதிய பொருளாதார கட்டுரைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. அதேபோல் மறைந்த முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் எழுதிய தொல்லியல் தொடர்பான கட்டுரைகளும் என்னை மிகவும் ஈர்த்தன.

தமிழ் மொழிக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் சிறந்த சேவை புரிவதில் முன் நிற்கும் காரணத்தாலேயே, நான் தினமணியை மிகவும் விரும்புகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com