நாளிதழ் வரலாற்றில் வழிகாட்டும் ஒளி! 

எங்கள் பள்ளிக்கூடத்தில் தினமும் காலையில் பிரேயர் முடிந்தவுடன் ஐந்து நிமிஷம் இன்றைய செய்திகள் என்று பத்திரிகையில் வரும் செய்திகளை வாசிக்கும் வழக்கமிருந்தது
எஸ். ராமகிருஷ்ணன்
எஸ். ராமகிருஷ்ணன்

எங்கள் பள்ளிக்கூடத்தில் தினமும் காலையில் பிரேயர் முடிந்தவுடன் ஐந்து நிமிஷம் இன்றைய செய்திகள் என்று பத்திரிகையில் வரும் செய்திகளை வாசிக்கும் வழக்கமிருந்தது. பெரும்பான்மையான நாள்கள் நான் செய்திகளை தொகுத்து வழங்குவேன்.

இதற்காகப் பள்ளிக்குப் போனவுடன் அன்றைய செய்திப் பத்திரிகைகளை வாசித்து முக்கியமான விஷயங்களைத் தேர்வு செய்து தலைமை ஆசிரியரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைப்பேன். அவர் தினமணியில் அந்தச் செய்தி வந்துள்ளதா என்று பார்ப்பார். தினமணியில் வந்தால்தான் அது நடுநிலையான, உண்மையான செய்தி என்பது அவரது எண்ணம். அது பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரது பொதுக் கருத்தாகவும் இருந்தது. ஆகவே தினமணியிலிருந்தே நிறைய செய்திகளைத் தேர்வு செய்து தருவேன்.

தினமணி படிப்பது என்பது அந்த நாள்களில் நல்லதொரு தமிழ் பயிற்சியாகவே இருந்தது. புதுப்புது வார்த்தைகள், அறிவியல் சொற்கள், நடுப்பக்க கட்டுரைகள், காத்திரமான தலையங்கம் எனத் தினமணி மாணவர்களின் அறிவு வழிகாட்டியாகவே விளங்கியது.

நடுப்பக்க கட்டுரைகள் தினமணியின் தனித்துவம். பரபரப்புக்காக எந்தச் செய்தியையும் தினமணி வெளியிடாது என்பது அதன் தனிச்சிறப்பு. ஓவியம, இசை, சிற்பம் என நுண்கலைகளுக்கான பொதுவெளியை தினமணியே உருவாக்கியது.

தினமணியின் எழுத்து நடை தனித்துவமானது. குறைவான சொற்களில் முழுமையாகச் செய்தியைச் சொல்லிவிடும் முறையது. பெரும்பான்மை நாளிதழ்கள் திரைத்துறையை முக்கியப்படுத்திக் கிசுகிசுக்கள், திரைச் செய்திகள், வண்ண வண்ண விளம்பரங்கள் எனச் சினிமாவே தமிழர்களின் அடையாளம் என்ற பிம்பத்தை உருவாக்கியபோது தினமணி உறுதியாக சினிமாவுக்கு எவ்வளவு இடம் தர வேண்டுமோ அதை மட்டுமே இன்றுவரை தந்து வருகிறது.

அது தமிழ்ப் பண்பாட்டிற்கு தினமணி செய்த நற்காரியம் என்றே சொல்வேன். தினமணி கதிரில் மிகச்சிறந்த சிறுகதைகளைத் தேர்வு செய்து வெளியிடுவார்கள். ஜெயகாந்தன், அசோகமித்ரன், லாசரா, பிரபஞ்சன் போன்றவர்களின் சிறுகதைகளை அதில் வாசித்திருக்கிறேன். குறிப்பாக, பிரபஞ்சன் தினமணி கதிரில் "வானம் வசப்படும்' என்ற தொடரை எழுதினார். அதை விரும்பி வாசித்தேன்.

தினமணி சிறுகதைப் போட்டிகள், கவிதைப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கியது முக்கியமானது. தினமணி கதிரில் ரகமி எழுதிய இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றிய தொடர், கிரிக்கெட்டை மையமாக வைத்து சுஜாதா எழுதிய "நிலா நிழல்' தொடர் முக்கியமானது. தினமணி கதிர் வெளியிட்ட இசைமலர் இன்று நான் பாதுகாத்து வரும் அபூர்வ ஆவணம்.

நல்ல சிறுகதைகளை தினமணி கதிரில் வெளியிடுவார்கள் என்பதால் என் கல்லூரி நாள்களில் நானும் தினமணிக்கு சிறுகதைகள் அனுப்பிவைத்தேன். சின்னஞ்சிறிய கிராமத்தில் வசித்த இளம் எழுத்தாளரான என்னை தினமணி அங்கீகரித்து எனது நான்கு சிறுகதைகள் தினமணி கதிரில் வெளியாகியுள்ளன.

கடந்த சில ஆண்டுகளில் அதன் பொங்கல் மலரிலும் நாளிதழிலும் கட்டுரைகள் கதைகள் எழுதியிருக்கிறேன். இலக்கியப் பாரம்பரியம் மிக்க தினமணி என்னையும் அரவணைத்துக் கொண்டது எனது பாக்கியமே.

தமிழ் நாளிதழ் வரலாற்றில் தினமணி வழிகாட்டும் ஒளியாகவே விளங்குகிறது. தினமணி கடைப்பிடித்துவரும் மரபும் புதுமையும் இதழியல் நேர்மையும் இன்றும் அப்படியே தொடர்கிறது என்பது அதன் தனிச்சிறப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com