பயங்கர விபத்து - தலையங்கம்

இந்திய வரலாற்றில் இதுவரை ஏற்பட்டிராத விஷவாயு கசிவு விபத்து மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் திங்கள்கிழமையன்று அதிகாலையில் நடந்துள்ளது. அதில் 500 பேர் மாண்டதாகவும்,

பயங்கர விபத்து

இந்திய வரலாற்றில் இதுவரை ஏற்பட்டிராத விஷவாயு கசிவு விபத்து மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் திங்கள்கிழமையன்று அதிகாலையில் நடந்துள்ளது. அதில் 500 பேர் மாண்டதாகவும், இரண்டு லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டதாகவும், ஆஸ்பத்திரியில் 2000 பேர் சிகிச்சை பெறுவதாகவும், அவர்களில் சிலர் நிலைமை மோசமாக இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. விஷவாயுவை சுவாசித்த பலர் தூங்கும் நிலையிலேயே மாண்டனர். கணக்கிலடங்கா ஆடு, மாடுகளும், பறவைகளும் மாண்டன. விஷவாயு காற்று மண்டலத்தில் பரவுவதை அறிந்ததும் மக்கள் பலர் பீதியடைந்து நகரை விட்டுத் தப்பியோட முயற்சித்தார்கள். அப்படி ஓடியவர்களில் சிலரையும் விதி விடவில்லை. இந்தச் செய்திகள் அனைவரையும் திடுக்கிட வைக்கும். இப்படியும் ஒரு பயங்கரம் நடக்குமா என்ற பீதி கலந்த வியப்பு மக்கள் மனதில் ஏற்படுகிறது. இதற்கு முன்பு 1980ல் இத்தாலியில் உள்ள ஒரு ரசாயன ஆலையில் இத்தகைய விபத்து நேர்ந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். போபால் பயங்கரம் குறித்து ராஷ்டிரபதி, பிரதமர் முதலியோர் அனுதாபச் செய்திகளை வெளியிட்டது எதிர்பார்க்கப்பட்டதே. அதைவிட முக்கியமானது இது போன்ற விபத்துகள் இனி நடைபெறாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும்.

போபால் நகரின் சுற்றுப்புறத்தில் உள்ளது பன்னாட்டு கம்பெனியின் ரசாயனத் தொழிற்சாலை. இதைப் போன்ற தொழிற்சாலை உலகில் அமெரிக்காவில் மட்டுமே உள்ளது. போபால் தொழிற்சாலை 1977ல் அமைக்கப்பட்டது. அது ரசாயனப் பூச்சிக் கொல்லி மருந்தை உற்பத்தி செய்கிறது. பூச்சிக் கொல்லி மருந்து என்றால் விஷப்பொருள் என்பது அனைவரும் அறிந்ததே. விஷப் பொருள்களை கையாளும்போது போதுமான முன்ஜாக்கிரதை நடவடிக்கைகள் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அதுதான் வழக்கமான நடைமுறை. இந்த ஆலையில் பயன்படுத்தப்பட்ட ட "மெதில் ஐசோஸயனேட்' என்ற விஷப் பொருள் பூமிக்கு அடியில் ஒரு கிடங்கில் திரவ வடிவில் வைக்கப்பட்டிருந்தது. அது எளிதில் வாயுவாக மாறக்கூடியது. கிடங்கி வால்வு உடைந்து இந்த விஷப் பொருள் வாயுவாக மாறி காற்றில் கலந்து பலர் உயிரை பலி வாங்கியதாகத் தெரியவருகிறது. இந்த விபத்து எப்படி ஏற்பட்டது. போதிய முன்ஜாக்கிரதை நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்படவில்லையா, கசிவு ஏற்பட்டதும் உடனே கண்டுபிடிக்கப்படாதது ஏன், காலதாமதத்துக்கு யார் காரணம் போன்றவை புலன் விசாரணை செய்யப்பட வேண்டும். இதற்காக டில்லியிலிருந்து போபாலுக்கு மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) அதிகாரிகள் சென்றிருக்கிறார்கள். இச் சம்பவம் பற்றி நீதி விசாரணை நடத்த மாநில முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். இந்த விசாரணைகளிலிருந்து பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரசாயன தொழிற்சாலை மூடப்பட்டு, அதன் முக்கிய அதிகாரிகள் ஐந்து பேர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவையெல்லாம் அவசியமான நடவடிக்கைகள் என்று கருதப்படும்.

ஆவியாகும் மெதில் ஐசோஸயனேட்டால் மட்டும் இத்தகைய பலத்த சேதம் உண்டாகி இருக்காது என்றும் சில நிபுணர்கள் கருதுகிறார்கள். லைசென்ஸ் பெறப்படாத சில வகை ரசாயனப் பொருட்களையும் இந்த ஆலை தயாரிப்பதாகக் கூறப்படும் புகார்கள் பற்றியும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிப்பார்கள். போபால் ரசாயன ஆலை சம்பவம் பற்றி இ.காங்கிரஸ் தலைமை கவலைப்படுவதாகவும், நாசவேலை நடந்திருக்கக்கூடும் என்ற கருத்தை நிராகரிக்க முடியாது என்றும் கட்சிப் பொதுச் செயலாளர் கூறியுள்ளார். இதுபற்றியும் சி.பி.ஐ. அதிகாரிகளும், நீதி விசாரணை நடத்தும் நீதிபதியும் தீவிரமாக விசாரிக்க வேண்டியது அவசியம்.

அபாயகரமான ரசாயனப் பொருட்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், நகரங்களுக்கு அருகில் இல்லாமல் வெகுதொலைவில் ஜனநடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளில் அமைக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை அரசு ஏற்றிருந்தால் அது சரிவர அமல் செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்தால்தான் போபால் ரசாயன ஆலை விபத்து போன்ற பயங்கர நிகழ்ச்சிகளைத் தவிர்க்க முடியும். வேறு பகுதிகளில் இவ்வாறு ஜனநெருக்கம் உள்ள இடங்களில் அபாயகரமான பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இருந்தால் தக்க பரிகார நடவடிக்கைகளை எடுப்பது பற்றி அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

போபால் விஷவாயு விபத்து சம்பவத்தையும் தொழிற்சாலைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தும் தலையங்கம். (5.12.1984)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com