"பிற்பட்ட'' வகுப்பினர் மகாநாடு - தலையங்கம்

நேற்றுச் சென்னையில் நடைபெற்ற "பிற்பட்ட வகுப்பினர்'' மகாநாட்டில் மத்ய சர்க்கார் மந்திரி ஸ்ரீ தேஷ்முக், ஸ்ரீ மாணிக்கவேலு நாய்க்கர்; ஸ்ரீ சுயம்பிரகாசம் ஆகியோர் பிற்பட்ட வகுப்புகளுக்காக சர்க்கார் என்ன செய

‘‘பிற்பட்ட’’ வகுப்பினர் மகாநாடு

நேற்றுச் சென்னையில் நடைபெற்ற "பிற்பட்ட வகுப்பினர்'' மகாநாட்டில் மத்ய சர்க்கார் மந்திரி ஸ்ரீ தேஷ்முக், ஸ்ரீ மாணிக்கவேலு நாய்க்கர்; ஸ்ரீ சுயம்பிரகாசம் ஆகியோர் பிற்பட்ட வகுப்புகளுக்காக சர்க்கார் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி சில கருத்துகள் வெளியிட்டுள்ளார்கள். இது போன்ற மகாநாடுகளுக்கு "வகுப்புவாதம்'' என்ற பெயர் சூட்டுவது சரியல்ல என்று ஸ்ரீ தேஷ்முக் கூறியிருக்கிறார். ஜாதி வகுப்புகளின் பெயரைச் சொல்லி அரசியலில் பிரவேசிப்பது இறுதியில் பயனற்றதேயாகும் என்றும் ஸ்ரீ தேஷ்முக் கூறியிருக்கிறார். ஆயினும் முன்னேற்ற முயற்சிகள் பெரும்பாலும் சர்க்காரை அணுகி, சர்க்கார் மூலமே நடைபெற வேண்டியிருப்பதால், ஓரளவு அரசியல் தொடர்பு அத்தியாவசியமாகிறது. அதைப் பற்றிப் பிறர் குறை கூறுவதில் பயனில்லை.

ஆனால், பிரச்னையின் தன்மையென்ன என்பதைப் புரிந்து கொள்வது அவசியம். ஜனத்தொகையில் ஒரு சிறு பகுதியினர் பிற்பட்டு நிற்கிறார்கள் என்றால் அவர்களுக்குத் தனியாக விசேஷ சலுகைகள் அளிப்பதன் மூலம் ஏதாவது செய்ய முடியும். ஆனால் அவர்களது தொகை 100க்கு 65 அல்லது 75க்கும் மேல் என்றிருக்கும்போது "விசேஷச் சலுகை'' என்ற சொல்லின் பொருளே சிறிது மாறிவிடுகிறது. 100-ல் 75 பேருக்கு "சலுகை'' யளிக்க வேண்டும் என்று சொல்வதைவிட, "மக்கள் சமூகம்'' முழுதுக்கும் சர்க்கார் செலவில் பல வசதிகள் அமைத்து, வசதியுள்ள நிலையிலிருக்கும் சமூகத்தார் அந்த வசதிகளை சொந்தத்தில் (சர்க்காருக்குச் செலவு ஏற்படாமல்) அமைத்துக் கொள்ளவண்டும்'' என்று சொல்லிவிடலாம். இது உண்மையில் சர்க்கார் அளிக்கும் கல்வி வசதிகள் முதலியன பெருக வேண்டும் என்றே பொருள்படும். உதாரணமாக, பிற்பட்ட வகுப்பினருக்கு "சம்பளம் இல்லாமல் கல்வி போதிக்க வேண்டும்'' என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். அதன் பொருல் என்ன? "எல்லோருக்கும் கல்வி இலவசமாக இருக்க வேண்டும்; சிலருக்கு மட்டும் சம்பளம் வாங்க வேண்டும்'' என்றுதான் அர்த்தம். இவ்வாறு சொல்லுவதைவிட "இலவசக் கல்வியே பொது விதி. பணமுள்ளவர்களிடமிருந்து மட்டும் சம்பளம் வாங்கலாம்,'' என்று சொல்லி விடலாம். ஜாதி வகுப்பு பற்றிய பிரச்னையுடன் இணைக்காமலும் இந்தக் கோரிக்கை நியாயமானது என்று யாவரும் ஒப்புக்கொள்ள முடியும். இந்த லக்ஷியத்தை நோக்கி சர்க்கார்கள் காரியம் செய்வது அவசியம் என்பதில் சந்தேகமோ அபிப்ராயபேதமோ இருக்கக் காரணமில்லை. ஆனால் அது சர்க்காரிடமுள்ள பண வசதியைப் பற்றிய பிரச்னையாக, அதாவது "வரி உயர்வு'' "செலவு அதிகரிப்பு'' பற்றிய பிரச்னையாக ஆகிறது.

அதுபோலவே "பிற்பட்ட வகுப்பினரின்'' பொருளாதார நிலை பற்றி ஒரு ஆராய்ச்சி நடைபெற வேண்டும் என்று மகாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேறியிருக்கிறது. 100-க்கு 75 பேரான சமூகங்களின் பொருளாதார நிலை பற்றிய ஆராய்ச்சி அனேகமாக நாடு முழுவதையும் பற்றிய பொருளாதார ஆராய்ச்சியாகவே அமையும். உண்மையில் இது நாட்டிலுள்ள ஏழைகள் பற்றிய புள்ளிவிவரமாகவே ஆகிவிடுகிறது.

சர்க்கார் உத்தியோகங்கள் பற்றியும் மகாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. சரித்திர நோக்குடன் கவனிக்குமிடத்து, "பிராமணரல்லாதாரின் முன்னேற்றத்துக்கு'' என்று செய்த ஏற்பாடு பிற்பட்ட வகுப்பினருக்கு பயன்படவில்லை என்ற மனக்குறையினடியாகவே இந்தக் கோரிக்கை தோன்றியிருக்கிறது.

மகாநாட்டில் வெளியிட்ட வேறு பல கருத்துக்களை ஆராயும்போது யாரெல்லாம் பிற்போக்கு வகுப்பினர் என்ற கேள்வியைப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரு சில வகுப்பாரைத் தவிர மற்றெல்லோரும் தம்மைப் பிற்பட்ட வகுப்பினர் என்றே சொல்லிக்கொள்கிறார்கள். சிறிது "பச்சையாக'' பேசினால் பிராமணர். சில முதலியார்கள், சில பிள்ளைமார்கள், ரெட்டியார்கள், நாயுடுக்கள் போன்ற சிறிய சமூகத்தினர் தவிர மற்றுமுள்ளோரில் பலர் தம்மை பிற்பட்ட வகுப்பினர் என்றே சொல்லிக்கொள்ளத் தலைப்படுகிறார்கள். "ஹரிஜனங்களுக்குக் கொடுப்பது போன்ற சலுகைகள் தங்களுக்கும் வேண்டும் என்று இவர்கள் கோருகிறார்கள். சில வகுப்பினர், உதாரணமாக "குறவர்கள்'' "வள்ளுவர்கள்'' என்று சொல்லப்படும் சிலர், தாங்களும் "ஷெட்யூல்'' வகுப்பினரே யென்றும் ஹரிஜனங்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் தம் வகுப்புக்கு கிடைக்கவில்லை யென்றும் புகார் செய்கிறார்கள். இவர்கள் கூறுவதில் தவறு இருப்பதாக யாரும் சொல்ல முடியாது. இது போன்ற பிரச்னை "பிற்பட்ட வகுப்பினர்'' என்ற சொல்லிலும் இருக்கிறது. நாம் இன்றிருக்கும் நிலைமையில் அவை தவிர்க்க முடியாத பிரச்னைகள். ஆனால் பூர்ணமான பரிகாரம் காணுவது சுலபமல்ல. மொத்தத்தில் தேசத்தின் (1) பொருளாதாரம் உயர்வது (2) வரிகள் உயருவது (3) சர்க்கார் அளிக்கும் கல்வி முதலிய வசதிகள் பெருகுவது (4) தொழிற் வளர்ச்சி ஏற்பட்டு பலருக்கு வேலையும் பிழையும் கிடைக்க ஏற்பாடு செய்வது முதலியவற்றின் மூலம்தான் பிரச்னைகளுக்குப் பூர்ணமான பரிகாரம் ஏற்பட முடியும். ஆகவே இதுபோன்ற கிளர்ச்சிகளில், சிறிது பொறுமையைக் கடைபிடிப்பது அவசியம். மற்றவர்கள் இந்த சமூகங்களின் கஷ்ட நிலையை உணர்ந்து அனுதாபத்துடன் கவனிக்க வேண்டும். இது போன்ற கோரிக்கைகளை "வகுப்புவாதம்'' என்று நிராகரிப்பது கூடாது. அதுபோலவே பொது நலத்துக்கு பாதகம் விளையக்கூடிய அளவுக்கு வகுப்புக் கோரிக்கைகளை வற்புறுத்தினால் அதுவும் தவறாகும். வகுப்புகளின் பேரால் கோரிக்கை போடுவோரிடமும் நல்ல நிலையில் இருப்போரிடமும் இந்தப் "பொதுநோக்கு'' இருப்பது மிகவும் அவசியம்.

சர்க்கார் என்ன செய்ய வேண்டும் என்று கோரிக்கை போடுவதோடு மட்டுமல்லாமல் "பிற்பட்ட வகுப்பினர்'' தம் தம் வகுப்பிலுள்ள பணக்காரர் படித்தவர்களின் வசதிகளைத் திரட்டி சமூக முன்னேற்றத்துக்கான கல்வி முதலிய வசதிகளைப் பெருக்க முயல வேண்டும். இவ்வாறு சமூகத்தின் "சுய முயற்சியும்'' மிகவும் அவசியம் என்பதை இந்த சமயத்தில் வலியுறுத்த விரும்புகிறோம்.

பிற்பட்ட வகுப்பினர் அரசுக்கு கோரிக்கை வைப்பதுடன், தங்கள் சமூகத்தில் உள்ள வசதி படைத்தவர்களின் உதவியுடன் முன்னேற முயல வேண்டும் என்று வலியுறுத்துகிறது இந்தத் தலையங்கம். (23.1.1955)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com