போர் நின்றது - தலையங்கம்

இரண்டு வாரங்களாக நடந்து வந்த இந்தியா - பாகிஸ்தான் போர் நேற்றிரவு நின்றுவிட்டது.

போர் நின்றது

இரண்டு வாரங்களாக நடந்து வந்த இந்தியா - பாகிஸ்தான் போர் நேற்றிரவு நின்றுவிட்டது. இது மிக நல்ல செய்தி. வெள்ளி இரவு 8 மணிக்கு மேற்கு முனையெங்கும் போரை நிறுத்தப்போவதாக நமது அரசு தன்னிச்சையாகவே முடிவு எடுத்தது. இதை வியாழக்கிழமை இரவு நமது பிரதமர் அறிவித்தார். பாகிஸ்தானுக்குத் தகவல் போயிற்று. போரை நிறுத்த பாக். அரசு இசைவு கூறும் என்ற நம்பிக்கையை பிரதமர் வெளியிட்டார். யாஹியாகான் ஆலோசித்து, தாமும் அதே நேரத்தில் போரை நிறுத்திவிடுவதாக வெள்ளிக்கிழமை பிற்பகல் அறிவித்தார். போர் நின்றதையடுத்து நல்லுறவு வளரக்கூடிய வகையில் ஐ.நா. உள்பட சம்பந்தப்பட்ட எல்லோரும் செயல்படுவர் என்று எதிர்பார்க்கிறோம். இந்தியாவின் முடிவு வியாழக்கிழமை இரவே பந்தோபஸ்து சபையில் அறிவிக்கப்பட்டது. அதையடுத்து சோவியத் பிரதிநிதியும், யு.எஸ். பிரதிநிதியும் இரண்டு பிரேரணைகளை தாக்கல் செய்தார்கள். அவற்றைப் பரிசீலித்து கருத்தொற்றுமையை உருவாக்குவதற்காக மேல் விவாதம் ஒத்திவைக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு கவுன்சில் கூட வேண்டும் என்பது ஏற்பாடு. இந்தத் தலையங்கத்தை வாசகர்கள் படிப்பதற்கு முன் ஐ.நா. சபையில் விவாதம் தொடங்கியிருக்கக்கூடும்.

வங்கதேசத்தில் போர் ஓய்ந்து பகைப் படைகள் சரணடைந்துவிட்ட நிலையில் மேற்கே போர் நீடிப்பதை இந்தியா விரும்பவில்லை. மேலும், உயிர்ச்சேதமும், பொருட் சேதமும் நடைபெறாமல் தவிர்ப்பது மனிதாபிமான கடமை என்று கருதி, வலுவில் முன்வந்து போர் நிறுத்த ஏற்பாட்டை இந்தியா அறிவித்தது. பாகிஸ்தானும் இதற்கு இசைவு கூறி போரை தானும் நிறுத்தும் என்று நம்புவதாக நமது பிரதமர் தமது அறிக்கையில் கூறினார். அது வீண் போகவில்லை.

மேற்கு முனையில் வெள்ளி இரவு போர் நிற்கும் என்று நமது பிரதம மந்திரி அறிவித்த சமயத்திலேயே ஏறக்குறைய யாஹியாகானும் பாகிஸ்தானி ரேடியோவில் பேசினார். இந்தியாவின் இந்த முடிவை அப்பொழுது அவர் அறியமாட்டார் என்பது அவரது உரையிலிருந்து தெரிகிறது. வங்க சரணாகதியால் சோர்வுற்றிருந்த பாகிஸ்தானிகளுக்கு தெம்பூட்டும் வகையில், இறுதி வெற்றி வரை போர் நீடித்து நடைபெறும் என்று அவர் வாய்ப்பந்தல் போட்டுக் கொண்டிருந்தார். அவரது இந்த உரையைப் பற்றி ஏதும் அறியாத நிலையில்தான் நமது பிரதமர் தமது போர் நிறுத்த அறிக்கையை வெளியிட்டார். எனவே, நமது பிரதமரின் அறிவிப்பை அடுத்து மறு பரிசீலனை செய்து போர் நிறுத்தத்துக்கு யாஹியாவும் உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தானிய படைகள் நமது நாட்டில் "சாம்ப்' பகுதியில் சுமார் 60 சதுர மைல் பகுதியை தம் வசப்படுத்திக் கொண்ட நிலைமை இருந்து வருகிறது. வேறு எங்கும் நமது மண்மீது பாகிஸ்தானிய படைகள் கிடையாது. நமது துருப்புகள் கட்ச் முனையில் சில இடங்களைக் கைப்பற்றியுள்ளனர். சிந்துவில் கணிசமான பரப்பு நமது படைகள் வசம் இருக்கிறது. ராஜஸ்தானிலும் ஒரு விரிவான படை நிலையை நமது துருப்புகள் அமைத்துக் கொண்டுள்ளன. பாகிஸ்தானி பஞ்சாபிலுள்ள சியால்கோட் பகுதியில் ஒரு முக்கியமான நிலப்பரப்பு நமது படைகள் வசமிருக்கிறது. காஷ்மீரில் 1947-48 போரில் பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துக் கொண்டிருக்கும் பகுதியில் போர் நிறுத்த எல்லைக்கு அப்பாலுள்ளது கார்கில் பிரதேசம். இப் பகுதி நமது துருப்புகள் வசமாகிவிட்டது. பூஞ்ச் மீது தாக்குதல்கள் உருவாகாதபடி தடை செய்ய பயன்படும் ஒரு மலைப்பகுதியும் நம் வசமாகிவிட்டது.

போர் நிறுத்தம் உறுதியாகின்ற நிலவரத்தில் படை வாபசுக்கான பேச்சுகள் நடைபெறும். அப்போது பழைய எல்லைகளுக்குத் திரும்பினால் போதும் என்ற நிலைமை சரியானதாயிராது என்று கருதுவோர் பலர் இருக்கிறார்கள். எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய வகையில் இயற்கை வசதிகளைக் கருத்தில் கொண்டு படை வாபஸ் திட்டம் உருப்பெறுவது அவசியம் என்று கருத இடமுண்டு. முக்கியமாக பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் பகுதி விஷயத்தில் இத்தகைய எல்லை வரையறைகள் அவசியமாகலாம் என்பது நிபுணர்களின் கருத்து. பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் பகுதி அனைத்தும் வாபசாக வேண்டும் என்பது இந் நாட்டில் பலரது விருப்பமாக இருக்கலாம். ஆனால் அது இப்போது எழுப்பக்கூடிய பிரச்சினையல்ல.

வங்கதேசத்தை கிழக்குப் பாகிஸ்தான் என்று யாஹியாகான் தமது உரையில் இன்னமும் குறிப்பிடுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை. அப் பகுதிக்கு அதிகமான சுயாட்சி தரக்கூடிய அரசியல் சாசனம் 20-ம் தேதி பிரகடனம் ஆகும் என்று வியாழக்கிழமை அவர் பேசியிருக்கிறார். பாகிஸ்தானிய மக்கள் தம்மீது திரும்பாமல் இருப்பதற்காக இம் மாதிரி அவர் பேசியிருக்கிறார் என்பது தெளிவாகப் புலனாகிறது. வங்கதேச விடுதலை உறுதியாகிவிட்ட விஷயம். அது இனி எக்காலத்திலும் பாகிஸ்தானின் பகுதியாக முடியாது.

வங்கதேசம் உருவாக காரணமாக இருந்த இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறைவுபெற்றது குறித்து எழுதப்பட்ட தலையங்கம். (18.12.1971)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com