"மனிதருள் மாணிக்கம்'' - தலையங்கம்

மனிதருள் மாணிக்கம் நேருவின் மறைவையொட்டி எழுதப்பட்ட தலையங்கம். 

‘‘மனிதருள் மாணிக்கம்’’

"மனிதருள் மாணிக்கம்'' என்று ஜவாஹர்லாலை வாயாரப் புகழ்ந்தார் மகாத்மா. இருவரும் ஒருவருக்கொருவர் துணை நின்று, உறக்க முற்றிருந்த சமுதாயத்தைத் தட்டி எழுப்பி, செயலில் ஈடுபடுத்தி, விடுதலை ஆர்த்த மாவீரர்கள். இவர்களைப் போன்ற வேறு சரித்திர புருஷர்களை உலகம் கண்டதில்லை. இயம் முதல் குமரி வரை இருவரையும் வாழ்த்தாத இந்தியன் இல்லை. ராமனை அயோத்தி மக்கள் எப்பொழுதும் போற்றி வந்தது போன்றது இவர்களுடைய கீர்த்தி. காந்திஜியும் நேருஜியும் பலவகைகளில் வேறுபட்ட தன்மையினர். ஆனால், ஒருவருக்கொருவர் உறுதுணையாக நின்று செயலில் ஒற்றுமை கண்டு தேசத்தை விடுவித்தவர்கள்.

காந்திஜி தேசப்பிதா, விடுதலை தவறிக் கெட்டு பாழ்பட்ட பாரதத்தை சுதந்திர நாடாக்கியவர். விடுதலைப் பணி நிறைவு கண்டவுடன் அவரது வாழ்க்கையும் முடிவுற்றது. விடுபட்ட இந்தியாவை ஆள்கின்ற பொறுப்பு நேருஜியை வந்தடைந்தது. அவரை அதற்கு முழுத் தகுதியுள்ளவர் என்று காந்திஜி கூறியபோது ஒருமுகமாக தேசம் மகிழ்ச்சியடைந்தது. மகாத்மாவின் தலைமையில் கால் நூற்றாண்டுக்கு மேலாக உழைத்து எல்லாத் தகுதிகளையும் ஒரு சேரப் பெற்றிருந்தார் நேருஜி. கல்வி-கேள்விகள், குண நலன்கள், தன்னைத் துறவு, தியாகபுத்தி, அறவழிப்பற்று, நெஞ்சுறுதி, பரந்த மனிதாபிமானம், மக்களைத் திரளாக ஈர்த்து நல்வழிப் படுத்திப் பெரும் பணிகளில் ஈடுபடுத்தும் தலைமைக் குணங்கள் முதலியவற்றால் தனிச் சிறப்பெய்தியவர் நேருஜி.

17 ஆண்டு ஆட்சி

பதினேழு ஆண்டுகளுக்கு மேலாக நேருஜி இந்நாட்டின் பிரதமராக இருந்து வந்துள்ளார். அவரது வெற்றி தோல்விகளை சரிவர மதிப்பிட நம் காலத்தவரால் இயலாது. வரலாறுதான் காலக் கிரமத்தில் சிலவற்றின் மீது தீர்ப்புக் கூறவல்லது. ஆனால், அலைஅலையாகத் திரண்டெழுந்து தாக்கிய பிரச்னைகள், அவற்றை அவர் சமாளித்த விதம் ஆகியவை இத்தருணத்தில் நினைத்து பார்க்க வேண்டியவை.

மிகப் பயங்கரமான வகுப்புத் துவேஷப் படுகொலைகள் மலிந்த சூழ்நிலையில் அவர் பதவி ஏற்க நேரிட்டது. உடனடியாக பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு வந்தது. அதை சமாளிக்க முற்பட்டபோது, அதன்எதிரொலியாகக் கிளர்ந்தெழுந்த வகுப்புவாத விஷம் தேசப்பிதாவின் உயிரைக் குடித்துவிட்டது. அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்ட சமுதாயத்துக்குப் புதுநம்பிக்கையை ஊட்டுகையிலேயே, தேசத்தின் ராஜீய ஒருமைப்பாட்டை விரைவில் பூர்த்தி செய்தாக வேண்டிய அவசர அவசியம் ஏற்பட்டது. அறுநூறுக்கு மேற்பட்ட சமஸ்தானாதிபதிகள், சட்டப்படி சுதந்திர அந்தஸ்துள்ளவர்களாக இருந்து வந்தனர். அவர்களது தேசபக்த உணர்வை ஊக்குவித்து, இந்திய யூனியனில் இணைய வைத்து, பாரத நாட்டின் ஒற்றுமையைப் பூர்த்தி செய்தது இணையற்ற சாதனை. தகராறு செய்த நிஜாமை பணிய வைக்க வேண்டி நேரிட்டது. இவற்றை யெல்லாம் சுலபமாகச் செய்து முடித்த மேதை சர்தார் வல்லபபாய் பட்டேல், நேருஜியின் லட்சியவாதமும் சர்தாரின் பிரத்யட்ச உணர்வும் இணைந்து சயல்படுகையில் எதிர்ப்புக்கு இடமில்லை என்பது உறுதியாயிற்று.

இரண்டு அடிப்படைகள்

தேச ஒற்றுமை முழுமை கண்ட நிலவரத்தில் ஸர்தார் பட்டேல் காலமானது தேசத்துக்கு மாபெரும் நஷ்டம். அதற்கப்புறம், சமநிலையில் இருந்து கொண்டு, கசப்பான ஆனால் இதமான நல்லுரை பகர்வோர் நேருஜியுடன் கூட அதிகார பீடத்தில் இல்லாமல் போய்விட்டனர். ஆகையால்தான் ராஜ்யங்களின் சீரமைப்பு, ஆட்சிமொழி பிரச்னை, ஐந்தாண்டுத் திட்டப் பணிகள் முதலியவை விசேஷ சர்ச்சைக்கிடமாகி பல சிரமங்களை விளைவித்துள்ளன. ஆனால் இரண்டு அடிப்படைகளை மறக்கலாகாது. லட்சியங்களைப் போல வழிமுறைகளும் சரியாக அமைய வேண்டும் என்ற காந்திய நியதியை நேருஜி மறக்கவில்லை. கூடியவரை அதற்கு இசைவாகவே உழைத்து வந்தார். மற்றொன்று, இந்நாட்டில் மிடிமையும் வறுமையும் நீங்கி, மனிதவுரிமைகள் சிறப்புற்றோங்கி, எல்லோரும் நல்வாழ்வு நடத்த வேண்டும் என்று பரந்த மனிதாபிமானத்துடன் தான் அவர் தம்மை எதிர்நோக்கிய பிரச்னைகள் அனைத்தையும் அணுகினார் என்பதை மறக்கலாகாது.

உலக சுதந்திரம்: சமாதானம்

இந்தியா விடுதலை பெறுவது பிற அடிமை நாடுகளின் விமோசனத்துக்குத் துணை புரிவதுடன் உலகெங்கும் மனிதனுக்கு மனிதன் இழைக்கும் கொடுமைகள் அகலவும் பயன்படும் என்று "குவிட் இந்தியா' தீர்மானம் கூறியது. அதை சாஸனமாக மதித்து, ஆசிய, ஆபிரிக்க நாடுகள் அனைத்தின் விடுதலை கைகூடுவதற்கு வழிசெய்த உலக சுதந்திர புருஷர் நேருஜி. மனிதவுரிமைகள் எங்கும் ஏற்றம் காணச் செய்வதற்கும் அவரது தலைமையின் கீழ் நமது அரசாங்கம் உழைத்து வந்துள்ளது.

சமாதானமும் சுதந்திரமும் சுபிட்சமும் பிரிக்க இயலாதவை என்பது வரலாற்று உண்மை. ஆகையால்தான் சுதந்திர விஸ்தரிப்புடன் கூடவே. அணு ஆயுத யுத்த பயம் நீங்குவதற்கும், பெரிய வல்லரசுகள் நெருங்கி வந்து உடன்பாடு காணச் செய்வதற்கும் நேருஜி இடையறாது உழைத்தார். சித்தாந்தக் கண்ணோட்டத்தைத் தவிர்த்து, தொழில் வலிமையும் செழுமையுமுள்ள எல்லா நாடுகளும் பிற நாடுகளுக்கு உதவி அளித்து அவை ஏற்றம் காணச் செய்ய வேண்டும் என்பதற்காக நேருஜி அரும்பாடுபட்டார். இத்துறையில் அவரது முயற்சிக்கு கணிசமான வெற்றி கிடைத்தது என்றே சொல்ல வேண்டும்.

கண்ணீரை துடைத்துக் கொள்வோம்

"இந்தியா'' என்பது "நேருவே'' என்று சொல்லும் அளவுக்கு அவர் தேசத்தின் உறுதிக்கும், பண்பாட்டுக்கும் பிரதிநிதியாக வாழ்ந்தார். தளர்ச்சியைச் சிதைப்பதே அவரது வாழ்க்கையின் முயற்சியாக இருந்தது எனலாம். ஆகையால்,அவரது மரணத்தால் நாம் மனம் தளரவில்லையென்று உலகம் உணரும் முறையில் நமது சோகக் கண்ணீரைத் துடைத்துக்கொள்ள முயல்வோமாக.

"நாம் துக்கப்பட்டு அழுது கொண்டிருப்போமாயின் அது அவருக்குப் பிடிக்காது. அது அவருக்கு மரியாதை செலுத்துவதாகாது. அவர் எடுத்துக் கொண்ட பெரும் பணிக்கு நம்மை அர்ப்பணம் செய்து கொள்வதே அவருக்கு மரியாதை செலுத்துவதாகும்'' என்று காந்திஜியின் மரணத்தின்போது நேருஜி கூறினார். இந்தக் கருத்தையே நேருஜியின் மறைவு பற்றி நாம் மனதில் கொள்ளுவோமாக.

இந்த சந்தர்ப்பத்தில் தேசத்துக்கு மிகவும் அத்தியாவசியமான நிதான புத்தியை ஆண்டவன் அருள்வானாக என்ற பிரார்த்தனையுடன் நிறுத்திக் கொள்கிறோம்.

மனிதருள் மாணிக்கம் நேருவின் மறைவையொட்டி எழுதப்பட்ட தலையங்கம். (29.5.1964)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com