முகவர்(ரி)கள்..!

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் என் தந்தை வி. நாராயணசாமி 70 ஆண்டுகளுக்கு முன்பு தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்களின் விற்பனை முகவராக இருந்தார்.

தயக்கம் விலகியது...

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் என் தந்தை வி. நாராயணசாமி 70 ஆண்டுகளுக்கு முன்பு தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்களின் விற்பனை முகவராக இருந்தார். 1972-ஆம் ஆண்டு அவர் காலமானதையடுத்து தாய் லட்சுமி அம்மாள் நடத்தி வந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, 1986-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நான் முகவர் பணியைச் செய்து வருகிறேன்.

தொடக்கத்தில் என்னால் தனியாகச் செய்ய முடியுமா என்ற தயக்கம் இருந்தது. அப்போது அலுவலகம் கொடுத்த ஒத்துழைப்பும், வாசகர்களின் அனுசரிப்பும் முகவர் பணியைத் தொடர்ந்து செய்வதற்கு ஊக்கமளித்தது. தற்போது 70 வயதாகும் நிலையில் மூன்றாவது தலைமுறையாக இந்த முகவர் பணியைத் தொய்வின்றி செய்து வருகிறேன்.

அக்காலத்தில் சென்னையிலிருந்து செய்தித்தாள்கள் போட் மெயில் ரயிலில் கும்பகோணத்துக்கு வந்து சேரும். இவற்றை நான்கு அல்லது ஐந்து பேர் மூலம் பாபநாசத்திலிருந்து சைக்கிளில் கும்பகோணத்துக்குச் சென்று எடுத்து வருவோம். பாபநாசத்துக்கு கொண்டுவந்த பிறகு பகுதிவாரியாகப் பிரித்து விநியோகம் செய்வோம்.

பின்னர், மதுரை பதிப்பு, அதைத் தொடர்ந்து திருச்சி பதிப்பு தொடங்கியவுடன் செய்தித்தாள் கட்டுகள் வேன் மூலம் வீட்டுக்கே வந்தன. சில நேரங்களில் பாபநாசம் நகரப் பகுதிக்குச் விநியோகம் செய்பவர்கள் வரவில்லை என்றால், செய்தித்தாள்களை எடுத்துக் கொண்டு நடந்து சென்று வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவிடுவேன்.

- சரோஜா, பாபநாசம், தஞ்சாவூர்.

**


 எங்களுக்கும் கெளரவம்...

நாங்கள் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக இரண்டு தலைமுறையாக தினமணி நாளிதழின் முகவராக தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் தொடர்ந்து இயங்கி வருகிறோம். தினமணியில் வெளியாகும் செய்திகள் உண்மையானவை, உண்மைக்குப் புறம்பான தகவல்கள் இருக்காது என்பது மக்களின் நம்பிக்கை. அந்தப் பெருமிதம் தினமணிக்கு மட்டுமன்றி, எங்களுக்கும் சேர்த்தே கிடைக்கிற கெளரவமாக நினைத்துப் பார்க்கிறோம். இரண்டு தலைமுறைகளாக எங்கள் குடும்பத்துக்கான அடையாளமே தினமணி முகவர் என்கிற உன்னதமான வார்த்தைகள்தான்.

எங்கள் வீட்டின் முகப்பில் தினமணி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் என்று எழுதப்பட்ட வாசகத்துடன் கூடிய பெயர்ப் பலகை கால் நூற்றாண்டுக்கும் மேலாக வைத்துள்ளோம். ஒரு முறை அதனைப் பார்த்துவிட்டு அவ்வழியாக காரில் பயணித்த தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் எங்கள் இல்லத்துக்கு நேரில் வந்து எங்களையெல்லாம் சந்தித்து தினமணி உடனான பங்களிப்பு குறித்து கேட்டறிந்து பாராட்டி சென்றிருக்கிறார். நூறு ஆண்டுகளுக்கு மேலே கடந்தும் தினமணிக்கும் எங்களுக்கும் இடையேயான இந்த பொறுப்பும் தொடர்பும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தொடரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

 - எஸ்.பிரேமா, எட்டயபுரம்.

**


 நீண்டகால பந்தம்...

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையைச் சேர்ந்த என் கணவர் கே.பி. கணபதி 1958 முதல் 1988 ஜனவரி 3ஆம் தேதி வரை தொடர்ந்து தினமணி நாளிதழின் முகவராக இருந்து வந்தார். அவர் காலமானதையடுத்து நான் 1988 ஜனவரி 4 முதல் தொடர்ந்து தற்போது வரை தினமணி முகவராக இருந்து வருகிறேன். தினமணி நாளிதழ் மக்கள் மத்தியில் தனிச்சிறப்புடன் இருந்து வருகிறது. சமூக மேம்பாட்டுக்கும், இலக்கியத்துக்கும் முன்னுரிமை அளித்து தினமணி செய்திகளை வெளியிட்டு வருகிறது.

85 ஆண்டு காலமாக பத்திரிகைத் துறையில் தனி முத்திரை பதித்து வரும் தினமணி நாளிதழ் வாசகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது. எனது மகன் சங்கர் தினமணி நாளிதழில் சுமார் 6 ஆண்டுகளாக கோவில்பட்டி செய்தியாளராகப் பணியாற்றினார். எனவே, எங்கள் குடும்பத்துக்கும், தினமணிக்கும் நீண்டகால பந்தம் இருந்து வருகிறது. இந்த பந்தம் அடுத்தடுத்த தலைமுறைக்கும் தொடரும்.

- க.மல்லிகா, கழுகுமலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com