விடுதலைத் திருநாள் - தலையங்கம்

சுதந்திர தினத்துக்கு முந்தைய தினமான 1947, ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியான தலையங்கம். 

விடுதலைத் திருநாள்

ஆகஸ்ட் 15 - இந்நாட்டின் சரித்திரத்தில் ஒரு தூய்மையான திருநாள். நம் "அன்னை கை விலங்குகள்'' இன்றோடு அறுபட்டன. நாடு பூரண சுதந்திரம் அடைந்துவிட்டது. "ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று ஆடுவோமே பள்ளு பாடுவோமே'' என்ற பாரதியாரின் கனவு உண்மையாயிற்று.

இப்போது வந்துள்ளது "டொமினியன் அந்தஸ்துதானே; பூரண சுதந்திரமல்லவே'' என்று சிலர் முணுமுணுக்கிறார்கள். அது அர்த்தமில்லாத முணுமுணுப்பு. இப்போது ஏற்பட்டிருப்பது "சுதந்திர டொமினியன்!'' பிரிட்டிஷ் பார்லிமெண்டின் சட்டத்தில் "டொமினியன்'' என்ற வார்த்தைதான் இதுவரை இருந்து வந்திருக்கிறது. "சுதந்திர டொமினியன்'' என்ற வார்த்தையே இப்போது இந்தியா நிமித்தமாகத்தான் பிரிட்டிஷ் பார்லிமெண்டரி அகராதியில் ஏறியிருக்கிறது. ஆகையால் இந்தியாவில் இன்று ஏற்படுவது சாதாரண டொமினியன் அந்தஸ்தல்ல; சுதந்திர டொமினியன். சம்பிரதாயங்கள் பற்றிய சில வசதிகளுக்காக "டொமினியன்'' என்ற வார்த்தை இருந்து வருகிறது. இந்த வார்த்தையை எந்த நிமிஷத்திலும் நீக்குவதற்கு நாளை ஏற்படும் புதிய இந்திய சர்க்காருக்கு பூரண உரிமை உண்டு. ஆகையால் இன்று முதல் நாம் பூரண சுதந்திரமுள்ளவர்களே.

இந்த புனிதமான நாளில் மகாத்மா காந்தியே நம் மனக் கண்முன் பிரகாசிக்கிறார். அவர் சந்தோஷமாக இல்லையே என்று நாம் நினைக்கக் கூடாது. பூரணமானஅரசியல் சுதந்திரம் வரவில்லையென்பது அவர் கருத்தல்ல. ஏராளமான சொத்து சுகம் உள்ளவர்கள், பரம ஏழையைப் போல வாழ்ந்து கொண்டு மீதமுள்ள வருமானத்தை ஏழைகளுக்குச் செலவிடும் தர்மராஜ்யம் ஏற்படாதவரையில் அவர் மகிழ்ச்சியடைய மாட்டார். அது அவரது பெருமை.

நமது சுதந்திரம் நமக்கு மட்டுமல்ல. ஆசியா கண்டம் முழுமைக்கும் ஆனந்தமளிப்பதாகும். கிழக்காசியாவிலுள்ள பல இடங்களில் நமது நாகரிகம் பரவியிருக்கிறது. அந்த நாடுகளின் விடுதலை கைகூடுவதற்கு நம் சுதந்திரம் பெரிதும் பயன்படும். ஏற்கெனவே இதற்கு அறிகுறிகள் காணப்படுகின்றன. இந்த பெரிய தொண்டு நமக்கு ஏற்பட்டிருப்பதற்கு நாம் பெருமை கொள்ள வேண்டும்.

இதுவரை நமது சக்தி முழுவதையும் மாற்றானை வெளியேற்றுவதில் செலவிட்டோம். அந்த வேலை முடிந்துவிட்டது. இனிமேல் நமது சக்தி முழுவதையும் வறுமையை விரட்டுவதில் செலவிடவேண்டும். வறுமையை பங்கிடுவதை லக்ஷியமாகக் கொள்ளாமல், வறுமை நிமித்தமான துவேஷத்தை வளர்ப்பதில் செலவிடாமல், நாட்டின் செல்வம் பெருகி, ஏழைகளின் வறுமை நீங்குவதில் செலவிட வேண்டும். இது ஏழைகள் நிறைந்த நாடு; ஆனால் ஏழ்மையான நாடல்ல. இயற்கை வளம் ஏராளமாக இருக்கிறது. உழைப்பின் மூலம் இங்கு செல்வத்தைப் பெருக்கி வறுமையை ஒழிக்க முடியும். இதுவே முக்கியமான வேலை. எல்லோருக்கும் கல்வியும் நோயற்ற வாழ்வும் ஏற்பட வேண்டும். இதற்கான முயற்சியில் ஒரு மனப்பட்டு உழைத்தால் பிளவில்லாத பாரத சமுதாயம் ஏற்படும். பிறப்பு சம்பந்தமான ஏற்றத் தாழ்வுகள் நீங்க வேண்டும். அவை நீங்கி வருகின்றன. இன்னும் துரிதமாக அவை மறைய வேண்டும். அறிவை மறைக்கும்படியான உணர்ச்சியும் துவேஷத்தைப் பெருக்கும் ஆவேசமும் சமுதாய வளர்ச்சிக்கு துணையாக மாட்டா! வறுமையை நீக்கி தேசத்தின் செல்வத்தையும், பலத்தையும் வளர்ப்பதாகிய பொதுத் தொண்டில் மனம் செலுத்தினால், சகிப்புத் தன்மையுடன் நாம் ஒரே சமுதாயமாக ஆகமுடியும். இதற்கு உழைப்போமாக.

எளிதில் பெற முடியாத பெரும் பாக்கியத்தை பலரது தியாகத்தால் நாம் பெற்றிருக்கிறோம். இந்தப் பெரும் பாக்கியத்தையும், இந்த சுதந்திரத்தையும் போற்றி வளர்ப்போமாக.

இன்று ஏற்றப்படும் தேசியக் கொடியே இந்த சுதந்திரத்தின் சின்னமாகும். அந்தக் கொடியையும், அந்தக் கொடியின் கீழ் இப்போது தயாரிக்கப்பட்டு வரும் ஜனநாயக அமைப்பையும் நாம் போற்றி வணங்கிக் காப்போமாக.

இன்று நாம் பெறும் ஆனந்தத்தை கவிகளே வர்ணிக்க முடியும். இன்றைய காட்சியை பல ஆண்டுகளுக்கு முன்னரே கனவில் கண்டு பாரதியார் எழுதி வைத்துள்ளார். அவரது பாடலுடன் வாசகர்களுக்கு வாழ்த்துக் கூறுகிறோம். 

 ஆனந்த சுதந்திரம்
 

ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே
 ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
                                                                     (ஆடுவோமே)
 

எங்கும் சுதந்திர மென்பதே பேச்சு - நாம்
 எல்லோரும் சமமென்ப துறுதியாச்சு
 சங்கு கொண்டே வெற்றி யூதுவோமே - இதைத்
 தரணிக்கெல்லாமெடுத் தோதுவோமே
                                                                    (ஆடுவோமே)
 

நாமிருக்கு நாடு நம தென்பதறிந்தோம் - இது
 நமக்கே யுரிமையா மென்பதறிந்தோம் - இந்தப்
 பூமியிலெவர்க்கு மினி அடிமை செய்யோம் - பரி
 பூரண னுக்கே யடிமை செய்து வாழ்வோம்
                                                                    (ஆடுவோமே)
 

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
 வாழிய பாரத மணித் திருநாடு
 தாயின் மணிக்கொடி பாரீர் - அதைத்
 தாழ்ந்து பணிந்து புகழ்ந்திடவாரீர்.
 வாழ்க அன்னை! வாழ்க சுதந்திரம்!.

சுதந்திர தினத்துக்கு முந்தைய தினமான 1947, ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியான தலையங்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com