ஹரிஜனங்கள் கோரிக்கை - தலையங்கம்

ஹரிஜனங்களுக்கு விசேஷ சலுகையுடன்கூடிய கல்வி வசதி தேவை என்பதை வலியுறுத்துகிறது இந்தத் தலையங்கம்.

ஹரிஜனங்கள் கோரிக்கை

ஹரிஜன நலன் குறித்து விரிவாகப் பேசும் இந்தத் தலையங்கம், விசேஷ சலுகையுடன் கூடிய கல்வி வசதிதான் அவர்களது முக்கியமான தேவை என்று முன்வொழிகிறது.

இந்தியாவெங்கும் சட்டசபைகளிலுள்ள ஹரிஜன மெம்பர்களும் அந்த சமூகத்தின் மற்ற தலைவர்களும்கூடி நாகபுரியில் ஸ்ரீசிவஷண்முகம் பிள்ளையின் தலைமையில் நடத்திய மகாநாடு குறிப்பிடத்தக்கது. ஹரிஜனங்களின் முன்னேற்றம் விசேஷமானதோர் பொறுப்பு என்பதை ஏற்றுக் கொண்டு அதற்கென சில சிபாரிசுகளை சுதந்திர இந்தியாவின் அரசியலைத் தயாரித்தவர்கள் சேர்த்திருக்கிறார்கள். ஹரிஜன நலவுரிமை அதிகாரி என்று ஒருவரை நியமிக்கலாமென்பது அந்தச் சிபாரிசுகளில் ஒன்று. அப்படிச் செய்யவேண்டுமென்று ஸ்ரீசிவஷண்முகம் தமது தலைமையுரையில் வற்புறுத்தினார். இதற்காக ஒரு தனி இலாகாவே ஏற்பாடாக வேண்டும் என்று மகாநாடு தீர்மானித்துள்ளது.

இன்றைய நிலையில் வெவ்வேறு முறைகளும் ஏற்பாடுகளும் ஹரிஜனங்களுக்கு அவசியமாகலாம் என்பதை மறுக்க முடியாது. பெரும்பான்மையும் இவற்றிற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் ராஜ்ய (மாகாண சமஸ்தான) சர்க்கார்கள்தாம். அவர்கள் ஸ்தல நிலைமையின் தேவைகளுக்குத் தக்கபடி திட்டம் வகுத்துப் பணியாற்றுவர் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் ரொக்க வசதிக் குறைவாலும், உற்சாகமில்லாமையாலும் போதிய அளவுக்கு சில ராஜ்யங்களில் நடவடிக்கை எடுக்கப்படாமற் போவது சாத்தியமே. அதற்கு இடமில்லாமலிருக்க வேண்டுமென்றால் மத்திய சர்க்கார் இப் பிரச்சினையில் நேரடியாக சிரத்தை காட்டுவது அவசியம் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். தீண்டாமை தவிர மற்ற வகைகளில் பிற்பட்ட வகுப்பினருக்கும் ஹரிஜனங்களுக்குள்ள எல்லா பிரச்னைகளும் இருந்து வருகின்றன. விசேஷ சலுகையுடன் கூடிய கல்வி வசதிதான் அவர்களுடைய முக்கியமான தேவை. எனவே நடைமுறையில் பிரத்தியேக ஏற்பாடுகள் அவசியமான போதிலும், கொள்கை வகுத்துத் திட்டம் செய்வதில் பொதுவாக நடந்து கொள்வதற்கு இடமிருப்பதாகவே கருதுகிறோம். வறுமை சம்பந்தப்பட்டவரை அது எல்லா வகுப்புகளிலுமே பரவி நிற்கிறது. வகுப்பு அடிப்படையில் இல்லாமல், மனித உரிமைப் பிரச்னையாகவும் சமுதாயத்தின் செல்வ நிலைப் பிரச்னையாகவும் கருதித்தான் அதை ஒழிப்பதற்கு வேலை செய்ய வேண்டும்.

உத்தியோகங்களில் ஹரிஜனங்களும் மற்ற பிற்பட்ட வகுப்பினரும் போதியவாறு இடம் பெறச் செய்வதற்காக மத்திய ராஜ்ய சர்வீஸ் கமிஷன்களில் ஹரிஜனங்கள் நியமனமாக வேண்டும் என்பது நாகபுரித் தீர்மானங்களில் ஒன்று. இது எந்த அளவுக்கு அனுபவ சாத்தியம்; விரும்பத்தக்கது என்பது சர்ச்சைக்குரிய விஷயம். இதைவிட நியாயம் வழங்குவதற்கான முழுப் பொறுப்பையும் சம்பந்தப்பட்ட சர்க்காரிடமே விட்டுவிடுவதுதான் அனுகூலமுள்ள வழியெனத் தோன்றுகிறது.

ஹரிஜனங்களிடையே பல்வேறு அரசியல் ஸ்தாபனங்கள் இப்பொழுது இருந்து வருகின்றன. இவை ஐக்கியப்பட வேண்டும் என்ற விருப்பம் நியாயமானதுதான். அப்படி ஒன்றுபடுவதாகயிருந்தாலும், ஹரிஜனங்கள் தனி அரசியல் கட்சியாக இயங்குவது கூடாதென்றே அபிப்பிராயப்படுகிறோம். சமூக முன்னேற்றத்துக்கான பொது மேடையாகப் பணியாற்றினால்தான் பொது ஸ்தாபனத்துக்கு செல்வாக்கும், பலமும் இருக்கும்.

தீண்டாமையைச் சட்டபூர்வமாக ஒழித்தாகிவிட்டது. ஆலய வழிபாடு உட்பட எல்லா உரிமைகளையும் சம அந்தஸ்துடன் அவர்கள் அனுபவிக்கலாம் என்பது பல சட்டங்களின் மூலம் உறுதி செய்யப்பட்டுவிட்டது. இதை ஸ்ரீசிவஷண்முகம் பிள்ளையே எடுத்துக்காட்டியிருக்கிறார். எனினும் நடைமுறையில் இந்த உரிமைகள் பலவிடங்களில் கிடைப்பதில்லை என்று அவர் வருந்துகிறார். பெரும்பான்மையோர் புது நிலைக்குத் தலைவணங்கியுள்ளனர் என்பது வெளிப்படை. ஹரிஜனத் தலைவர்கள் பொறுமையுடன் உழைத்தால் ஹிந்து சமூகத்திலுள்ள பிற பகுதியினரின் ஆதரவைக் கணிசமாகப் பெறுவது திண்ணம். சட்டம் அளித்துள்ள உரிமையை அனுபவிப்பதற்கு வேண்டிய தைரியமும் பொறுப்புணர்ச்சியும் சாமான்ய ஹரிஜனங்களுக்கு ஏற்படுவதுதான் இப்பொழுதுள்ள பிரச்சினை. எனவே பிறரை நொந்து கொள்வதில் பயனில்லை. மதமாற்றப் பரிகாரங்களாலும் நோக்கம் கைகூடிவிடாது. இதை ஸ்ரீசிவஷண்முகம் பிள்ளை குறிப்பாக எடுத்துக் காட்டியிருப்பதை வரவேற்கிறோம்.

பிற்பட்ட நிலை, தாழ்த்தப்பட்ட நிலை முதலியன ஒழியவேண்டியவைகளே. அதைத் துரிதமாக்குவதற்காகச் சில சலுகைகளும் பெரு முயற்சிகளும் கொஞ்ச காலத்திற்கு இன்றியமையாதவை. ஆனால் இந்த இரண்டு நிலைமைகளும், தனி உரிமைகளாக நிலைத்துவிடும்படி விடக்கூடாது. இவை இரண்டும் சமுதாயத்திலுள்ள சீர்கேட்டின் வெளித் தோற்றங்கள். வேகமாய் நடவடிக்கை எடுத்து சமுதாயத்தை சீர்ப்படுத்தி, சம சந்தர்ப்ப வசதியைத் தோற்றுவிப்பதுதான் பரிகாரம். இந்தப் பிரச்னைகள் வேகமாய்த் தீர்க்காவிடில், பொது வாழ்வு என்ற உடலில் இவை புரையோடி, தீராது எக்கச்சக்கங்களை விளைவிக்கும். நலவுரிமைப் பிரச்சினையின் இந்த அடிப்படையான உண்மையை மறக்கலாகாது.

ஹரிஜனங்களுக்கு விசேஷ சலுகையுடன்கூடிய கல்வி வசதி தேவை என்பதை வலியுறுத்துகிறது இந்தத் தலையங்கம். (5.6.1950)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com