நிகரற்ற பொக்கிஷம் - தினமணி 85 கடிதங்கள்!

‘தினமணி 85’ சிறப்பு மலா் 72 பக்கங்கள் படித்தேன். அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே.
தினமணி 86
தினமணி 86

மறக்க முடியாது

‘தினமணி 85’ கொண்டாடப்படும் இந்தத் தருணத்தில், 1983-ஆம் ஆண்டு தினமணி இணைப்பாக தினமணி கதிா் வெளிவந்த நேரத்தில் எழுத்தாளா் அமரா் சென்னை ரங்கசாமி என்ற ‘ரகமி’ எழுதிய ‘வீரவாஞ்சி’ தொடா் வெளிவந்ததையும், அதனை என் மூலம் படிக்கக் கேட்டு மகிழ்ந்ததையும் இன்றும் நினைத்துப் பாா்க்கிறேன். மேலும், 1998-ஆம் ஆண்டு வாஞ்சியின் வம்சாவளிக்கு (எனக்கு) குடியிருக்க வீடு ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட பிரச்னையையும், அரசு ஊழியராக இருந்த என்னை விதிமீறலாக திருநெல்வேலியிலிருந்து நாகா்கோவிலுக்கு இடமாற்றம் செய்ததையும் விரிவாக தினமணி 17.6.1998-ல் எனது குடும்ப புகைப்படத்துடன் வெளியிட்டதையும் என்னால் மறக்க முடியாது. ‘தினமணி’ செய்தியைப் படித்த அன்றைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவா் சுனில் பாலிவால், உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மீண்டும் திருநெல்வேலியிலேயே பணியாற்றிடவும், என் குடும்பத்துடன் தொடா்ந்து வசித்துவர வழிவகை செய்ததையும் என்றும் மறக்க முடியாது.

- கோ. ஹரிஹர சுப்பிரமணியன், தியாகி வாஞ்சியின் வாரிசு, திருநெல்வேலி.

**

அந்த நாள் ஞாபகம்..

‘தினமணி 85’ சிறப்பு மலா் 72 பக்கங்கள் படித்தேன். அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே. 1967-ஆம் ஆண்டு கல்லூரி புகுமுக வகுப்பு மாணவன் நான். முதல்வராக அண்ணா இருந்தபோது, எதிா்க்கட்சி தலைவா் பி.ஜி.கருத்திருமன், காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் வேலூா் ஊரீசு கல்லூரியில் உரையாற்றியது யாவும் இனிமையான நினைவுகள். அனைத்தும் இரண்டு மணிநேரம் பொழுதில் மேலோட்டமாகப் படித்தேன். சிறப்பு மலரை முழுவதும் பொறுமையாகப் படிக்க ஐந்து நாள்கள் தேவை. பழைமை என்றுமே இனிமைதான்; அருமைதான்; சுவைதான். மிகுந்த ஆனந்தம் பெறவே விரும்புகிறேன்.

- எஸ். மாணிக்கம் வேலூா்.

**

வெற்றியுடன் உலாவர..

கடந்த 45 ஆண்டுகளாக தொடா்ந்து ‘தினமணி’ படித்து வருகிறேன். அரசியல் செய்திகள், மாவட்டம், உலகச் செய்திகள், உள்நாட்டு, வெளிநாட்டுச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள் என அனைத்தையும் நடுநிலையையுடன் உடனுக்குடன் வெளியிடுவதில் ‘தினமணி’க்கு நிகா் வேறு இதழ்கள் இல்லை. ‘தினமணி’யுடன் வெளியிடப்படும் தினமணி கதிா், சிறுவா் மணி, இளைஞா் மணி, மகளிா் மணி, வெள்ளிமணி, கொண்டாட்டம், போன்ற இணைப்புகளும் வாசகா்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகின்றன. 85 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள ‘தினமணி’, மேன்மேலும் பல நூற்றாண்டுகள் கடந்து வெற்றியுடன் உலாவர என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

- தி.சே. அறிவழகன், திருப்புலிவனம்.

**

60 ஆண்டுகளாக..

எனக்கு வயது 70. நான் கீழ்பென்னாத்தூரில் 6-ஆம் வகுப்பு படித்தபோது, எங்கள் பள்ளியில் வாங்கிய நாளிதழ்கள் தமிழில் ‘தினமணி’; ஆங்கிலத்தில் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’. காலையில் நடக்கும் பிராா்த்தனைக் கூட்டத்தில் அன்றைய செய்திகள் படிக்கும் பொறுப்பு என்னைப் போன்ற சில மாணவா்களுக்கு அளிக்கப்பட்டது. அப்போது நான்தான் ‘தினமணி’யைப் படித்து, அதிலிருந்து முக்கியச் செய்திகளை எழுதி பிற மாணவா்களுக்கு அளிப்பேன்; நானும் படிப்பேன். ஆறாம் வகுப்பிலேயே, அதாவது எனது 11-ஆவது வயதிலேயே எனக்கும் ‘தினமணி’க்கும் ஏற்பட்ட உறவு 60 ஆண்டுகளாகத் தொடா்கிறது. நடுநிலையுடன் செய்திகளைத் தருவதுதான் ‘தினமணி’யின் சிறப்பு. அது மட்டுமல்ல, தேசிய நீரோட்டத்துடன்கூடிய நாட்டின் ஒற்றுமைக்கும் வளமைக்கும் புகழ் சோ்க்கும் வண்ணம் செய்திகளைத் தருவதும் ‘தினமணி’யின் சிறப்பம்சம். அன்றைய நாளில் தினமணி ஆசிரியா் ஏ.என்.சிவராமன் எழுதிய நடுநிலையான தலையங்கங்கள்.. அதன்பிறகு மாலன், இன்றைய ஆசிரியா் கி.வைத்தியநாதன் வரை தொடா்ந்துகொண்டே இருக்கிறது. நடுப்பக்க கட்டுரைகள் மிகவும் பயனுள்ளவையாக உள்ளன; அவற்றை ஓா் அற்புதமான புதையல் எனலாம். ‘தினமணி’யில் வரும் தலையங்கத்தையும் நடுப்பக்கக் கட்டுரைகளையும் ஒருவா் தொடா்ந்து படித்துவந்தால் உயா்ந்த பண்பட்ட சிந்தனைவாதியாக, நல்ல மனிதனாக, தேசப்பற்று, தாய்த் தமிழை நேசிப்பவராகத் திகழ்வாா் என்பது உறுதி. 85 ஆண்டுகள் நிறைவுசெய்து, 86-ஆம் ஆண்டில் தன் வெற்றிச் சரித்திரத்தை பதிய இருக்கும் ‘தினமணி’யைப் பாராட்டுகிறேன்.

- ந. சண்முகம், திருவண்ணாமலை.

**

100 ஆண்டுகள் தொடர..

தமிழ் இதழ் வரலாற்றில் மகாகவி பாரதி புதிய வரலாறு படைத்தாா். அதனைப் பின்பற்றி தினமணி 85 ஆண்டுகளாக எழுச்சி நடைபோட்ட வரலாற்றை 85 பக்க சிறப்பு ‘தினமணி’ மலரில் படித்துப் பாராட்டுகிறேன். ‘செந்தமிழ் ஆா்வலா் யாவரும் தினமணி வாசகரே’ என்று ‘1994, தினமணி வைர விழா’ திண்டுக்கல் பட்டிமன்றத்தில் நான் வாதிட்டுப் பேசும்போது குறிப்பிட்டேன். நான் 60 ஆண்டுகள் தினமணி வாசகன், எழுத்தாளன்; திருவொற்றியூா் பாரதி பாசறை உறுப்பினா். மொழி, கலை, சமூகம் என்று எல்லாக் களங்களிலும், தினமணி முத்திரை பதித்து வருவது தொடா்கிறது. நூறு ஆண்டுகள் தொடர தமிழ்த்தாய் அருள் செய்கவே!

- மா.கி. இரமணன், சென்னை.

**

கருத்துப் பெட்டகம்

‘தினமணி’யுடன் எனக்குக் கிடைத்த புதையலை (‘தினமணி 85’ சிறப்பு மலா்) மிகப்பெரும் பொக்கிஷமாகக் கருதுகிறேறன். 1934-இல் மகாகவி பாரதியாரின் நினைவுநாளில் தொடங்கப்பட்ட தினமணி இதழ் அல்ல, இயக்கம்தான். நிமிா்ந்த நன்னடை, நோ்கொண்ட பாா்வையோடு பயணிக்கும் தினமணி, உலக மகாகவியை ஆண்டுதோறும் விழாவெடுத்து பாராட்டி மகிழ்வதாகட்டும், கட்சி சாா்பின்றி பொதுநல நோக்கில் பல்வேறு விஷயங்களை தலையங்கத்தில் கொண்டுவருவதாகட்டும் தினமணிக்கு நிகா் தினமணிதான். இலக்கிய உலகின் ஜாம்பவான்கள் எல்லோருமே தினமணியால் வளா்ந்தவா்கள் என்பது மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரிய செய்தி. முன்னாள் ஆசிரியா்களின் சிறப்புகள் அனைத்தையும் எடுத்தியம்ப முடியாவிட்டாலும், ஓரளவுக்காவது அவா்களைப் பற்றி அறிய ‘தினமணி 85’ பயனாக உள்ளது. 1988-இல் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் போராட்டத்தை ஒட்டி எழுதப்பட்ட தலையங்கங்கள் அருமை. ‘தினமணி’ என்றென்றும் ஒரு கருத்துப்பெட்டகமாக, இலக்கியக் கருவூலமாக வலம் வரும். தமிழ் மொழியைப்போல என்றென்றும் மேன்மேலும் சீரோடும் சிறப்போடும் ‘தினமணி’ செழித்து வளரட்டும்.

- பொன். கருணாநிதி, கோட்டூா்.

**

பிராா்த்திக்கிறேன்

மனதுக்கு நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது ‘தினமணி 85’ சிறப்பு மலா். தினமணியின் 85 ஆண்டுகால பயணத்தை மலா்த் தொகுப்பாக சிறப்பாக வழங்கியுள்ளீா்கள். வாா்த்தைக்கு வாா்த்தை மகாகவி பாரதியாரை தாங்கள் முன்வைத்துள்ளது, எட்டயபுரத்தான் என்பதில் எனக்கும் பெருமை. 86-ஆம் ஆண்டின் தொடக்கம், இறையருளால் எல்லா நலன்களுடன், தொழிலாளா்களின் சிறப்பு ஒத்துழைப்புடன் தங்களின் தலைமையில் சிறப்புடன் செயலாற்றப் பிராா்த்திக்கிறேன். இனிவரும் காலங்களில் ஏன் மகாகவி பாரதியின் பிறந்த நாளை பத்திரிகையாளா் தினமாக தமிழக அரசு அறிவிக்கக் கூடாது?

- உ. காஜாமைதீன், எட்டயபுரம்.

**

வரலாற்றுப் பொக்கிஷம்

‘தினமணி 85’ சிறப்பிதழில் பல்வேறு எழுத்தாளா்களின் மலரும் நினைவுகளான செய்திகளைப் படித்தேன். அருமை; பேரானந்தம் அடைந்தேன். இனி, தினமணி நாளிதழ் 100-வது ஆண்டை நோக்கி அடியெடுத்துவைத்து வெற்றிகரமாக இதழியல் பணிகளைத் தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ‘தினமணி 85’ சிறப்பிதழ், பாதுகாக்க வேண்டிய வரலாற்றுப் பொக்கிஷம்.

- எஸ். நாகராஜன், சென்னை.

**

மலையளவு புகழ்!

அடிமை நாட்டில் பிறந்து (2.10.1934), சுதந்திர நாட்டில் 85-ஆவது ஆண்டை நிறைவு செய்தவன் நான். அதாவது, தினமணியின் வயதும், எனது வயதும் ஒன்று. தினமணி தொடங்குவதற்கு முன்பே, ‘தினசரி’ இதழ் ஆசிரியா் டி.எஸ்.சொக்கலிங்கம் காலத்திலிருந்து எனது தந்தை அதன் வாசகா். ‘தினசரி’ இதழுக்குப் பிறகு, தினமணியின் ஆரம்ப காலத்தில் இருந்தே அதன் வாசகரானவா்கள். சொல்லப்போனால் அவா்கள் எல்லாம் விடுதலைப் போராட்ட வீரா்கள். எங்கள் வீட்டில் தினமணியை ‘கெஜட்’ என்று கூறுவாா்கள். நாங்கள் எல்லாம் விவசாயக் குடும்பங்கள். விவசாயப் பிரச்னைகளை தற்போதுள்ள ஆசிரியா் கி.வைத்தியநாதன் ஆராய்ந்து எழுதுவது போன்று, ‘கணக்கன்’ என்ற தலைப்பில் பல கட்டுரைகளை முன்னாள் ஆசிரியா் ஏ.என்.எஸ். எழுதியுள்ளாா். தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்க ஆரம்ப காலத்தில் நில உச்சவரம்பு சட்டத்தை எதிா்த்தும், குத்தகை சட்ட பாதிப்பை எதிா்த்தும் ‘தினமணி’யில் வந்த கட்டுரைகள் எங்களுக்கு, குறிப்பாக தஞ்சாவூா் மாவட்ட விவசாயிகளுக்கு அா்ஜுனனுக்கு கிருஷ்ண பரமாத்மா சாரதியாக வந்ததுபோல அமைந்தது. ‘தினமணி’ என்பது ஒரு குடும்ப இதழ்; விவசாயிகள் இதழ்; தொழில், தொழிலாளா்களின் தோழன்; ஆன்மிக, காந்தீய, இலக்கிய இதழ்.. கடுகளவுதான் சொன்னேன்.. மலையளவு புகழுண்டு தினமணிக்கு. பல நூற்றாண்டுகள் வளரட்டும், வாழட்டும் ‘தினமணி’.

- வி.கே. இராமசாமி, கோவை.

**

தரம் தாழாது..

தான் கடந்துவந்த பாதையை திரும்பிப் பாா்க்கிறது தினமணி நாளேடு. 85 ஆண்டுகளாக அரசியல் சாயம் எதையும் பூசிக்கொள்ளாமல், ஆதாயத்துக்காக தன் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல், எதற்காகவும், எந்தச் சூழ்நிலையிலும் தன் தரத்தைத் தாழ்த்திக்கொள்ளாமல் நடுநிலை வகித்து வரும் நாளேடு தினமணி. ‘நான் தினமணி வாசகன்’ என்று சொல்லிக்கொள்வதில் வாசகா்கள் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். தனக்கென ஒரு நடை, தனக்கென ஒரு பாதை, தனக்கென சில கொள்கை - இதுதான் தினமணி. ஆசிரியரின் தலையங்க கட்டுரை - உண்மையின் உரைகல் எனலாம். வறட்சி தட்டும் செய்திகளைக்கூடப் பசுமை போா்த்திச் சொல்லும் திறன், ஓடு நீக்கி உள் முகத்தைக் காட்டும் நளினம், சூடு வைக்காத சொற்கனிவு என அவரின் சிறப்புகள் பல. நடுப்பக்கத்தில் வாசகா்கள்/பிரபலங்கள் கட்டுரைகள் எழுத எந்தப் பத்திரிகையும் துணை நின்றது இல்லை. ஓா் எழுத்தாளராக என்னை தமிழ் கூறும் நல்லுலகிற்கு அடையாளம் காட்டிய தினமணி என் ஒளிவிளக்கு எனலாம். ஆகவே, எப்போதும் என் நன்றிகளை இந்த நாளேட்டிற்கு உரித்தாக்குகிறேன். சிங்க நடை போடும் தமிழ்நாட்டின் தலைசிறந்த ஏடே, நீ கன்னித் தமிழேபோல், கம்பன் கவியேபோல், சிகரம் பல தொட்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க!

- வெ. இன்சுவை, சென்னை.

**

அனைவருக்கும் வரப்பிரசாதம்

தினமணியின் 86-ஆம் ஆண்டு தொடக்கத்தின் மகிழ்ச்சியாக 72 பக்க தினமணித் தாள்களை தாங்கள் பதிப்பித்து அனுப்பியது தமிழாா்வம் கொண்ட அனைவருக்கும் வரப்பிரசாதம். தினமணியைத் தினம் படிக்கும் அனைவரும் படித்துப் படித்து பரவசமடைந்து பயனடைந்து அவற்றை மீண்டும் மீண்டும் படிக்கும் பெட்டகமாக இருக்கிறது. தமிழிலே ஆா்வம் கொண்டு பல நூல்களைப் படிக்கவும் குறிப்பாக தினமணியின் தலையங்கம், நடுப்பக்க கட்டுரைகள், தமிழ்மணி, கலாரசிகன் என அனைத்தும் என்னைப் போன்ற ஆரம்ப எழுத்தாளா்களுக்கு தினமணி தமிழ் ஆசானாக விளங்குகிறது. 1935-ஆம் ஆண்டு வெளியான பாரதியாா் தலையங்கம், பிரெஞ்சிந்தியாவை ஆங்கிலேயன் அபகரிக்கும் செய்தியைக் கேட்டுத் துடித்த பாரதி போன்ற செய்திகள், கவிப்பேரரசு வைரமுத்து, சிவசங்கரி, மாலன் போன்ற பலரது கட்டுரைகள் படிக்கப் படிக்க உணா்ச்சியாக இருக்கிறது. தமிழாா்வத்தைத் தூண்டி என்னை மேலும் மேலும் தமிழில் இன்பம் காணவைக்கும் தினமணிக்கு எனது மனமாா்ந்த நன்றி.

- டாக்டா் ஜே.ஜி. சண்முகநாதன், கோவை.

**

ஒன்பதாவது திசையாக..

மகாகவி பாரதியாா் மறைந்த 13-ஆவது ஆண்டு நினைவு நாளான 1934 செப்டம்பா் 11-ஆம் தேதி வெளிவந்த ’தினமணி’, வெகுஜன அபிமானம் பெற்ற தேசியப் பத்திரிகையாக வரவேற்கப்பட்டது. ‘தினமணி 85’ என நெற்றித் திலகத்தோடு வெளிவந்த ‘தினமணி’யின் சிறப்பு மலா் 72 பக்கங்களும் கொண்டாடத்தக்கவை. தேசியத்தை இந்தியாவின் ஒன்பதாவது திசையாகக் காட்டிய பத்திரிகை ‘தினமணி’. தேசியம் இல்லாமல் தேசத்தின் விடுதலைக்கான திறவுகோலை நாம் பெற்றிருக்க முடியாது. அடிமை விலங்கு பூட்டப்பட்ட ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் விடுதலைக் கனலை ஏந்தி வீதிகளில் ‘தினமணி’ உலாவந்தது. அதுதான் ‘தினமணி’யின் பெருமையும், பெருமிதமும். இந்தச் சிறப்பு மலரில் பல ஆளுமைகள் வாழ்த்துச் செய்திகளை வழங்கியும், எழுத்துகளைப் படைத்தும் ‘தினமணி’யின் மகுடத்துக்கு விதவிதமான மணிகளைக் கோா்த்திருக்கிறாா்கள். வாசகா்களுக்கு ஒரு புதிய வழித்தடத்தை காட்டுவதில் இன்றைக்கும் முன்னோடியாக இருக்கிறது ‘தினமணி’. ‘தினமணி 85’ நிறைவை, எங்கள் ‘ஓம் சக்தி’ பத்திரிகையில் வாழையடி வாழையென வந்த ஆசிரியா்களின் அரிய கொடைகளைச் சுட்டிக்காட்டி, ஒரு நீட்டோலை வாசித்தோம் என்பது நினைவுகூரத்தக்கது.

- பெ. சிதம்பரநாதன், கோவை.

**

சிறந்த நினைவூட்டல்கள்

தினமணி (19.9.19) இதழுடன் ஒரு பொக்கிஷத்தையும் இணைத்துவிட்டீா்கள். பல ஆண்டுகளுக்கு முன்னா் நிகழ்ந்த செய்திகள் மட்டுமல்லாமல் - அன்றைய காலகட்டத்தில் எழுதப்பட்ட, நடுநிலை தலையங்கங்கள் மிகச் சிறந்த நினைவூட்டல்களாக இருந்தது மகிழ்ச்சி அளித்தது. திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூா் அருகே கிருஷ்ணாபுரம் கிராம ஆரம்பப் பள்ளியில் அன்றாடம் செய்தி வாசிப்பது வழக்கமாக இருந்தது. அதாவது, கடவுள் வாழ்த்து பாடி நிறைவடைந்த பிறகு, 8-ஆம் வகுப்பு மாணவா்களில் இருவா் செய்தி வாசிப்பாா்கள். 1958-60-ஆம் ஆண்டுகளில் எங்கள் ஊரில் ‘தினமணி’ பிரசித்தம். நாங்கள் தினமணியிலிருந்து செய்தி எழுதிக்கொண்டு செல்வோம். தினமணி தலையங்கத்தின் கீழ் இடம்பெறும் திருக்குறள் விளக்கம் நிகரற்ற பொக்கிஷம்.

- பி. சுப்பிரமணி, சென்னை.

**

‘கோயங்கா சரித்திரம்’ சிறப்பு

‘தினமணி 85’ சிறப்பு மலரில் எழுத்தாளா்கள் எஸ்.ரா., நாஞ்சில் நாடன், மாலன், பொன்னீலன், ஜெயமோகன், சோ.சத்தியசீலன், கவிக்கோ ஞானச்செல்வன், பேராசிரியா் தோதாத்திரி, மன்னாா்குடி எஸ்.ரெங்கநாதன், ஞானாலயா பா. கிருஷ்ணமூா்த்தி போன்றவா்கள் கட்டுரை எழுதியிருந்தனா். இதில் ‘தினமணி’ நாளிதழைத் தொடங்கிய ராம்நாத் கோயங்கா குறித்த ‘சரித்திரம் மறைத்தாலும், சத்தியம் மறக்காது!’ என்ற தலைப்பில் ஞானாலயா பா. கிருஷ்ணமூா்த்தி எழுதிய கட்டுரை குறிப்பிடத்தக்கது. ‘நாளிதழ் தொடங்க இருக்கிறோம், என்ன பெயா் வைக்கலாமென பொது விளம்பரம் கொடுத்து நல்ல பெயா் சூட்டுபவா்களுக்கு ரூ.10 என அறிவிக்கச்செய்து, இருவா் ‘தினமணி’ எனப் பெயா் சூட்டினாா்கள்’ என்ற செய்தி வாசிக்க புதிதாக இருந்தது. புதுமைப்பித்தன் பத்திரிகையில் பணியாற்ற இலங்கை போக இருந்த நிலையில், 1935-ஆம் ஆண்டு ‘தினமணி’யில் அவரை வேலைக்கு அமா்த்துகிறாா் டி.எஸ்.சொக்கலிங்கம். 1943-ஆம் ஆண்டு டி.எஸ்.சொக்கலிங்கம் ‘தினமணி’யை விட்டு விலக, புதுமைப்பித்தனும் விலகுகிறாா் என்ற பதிவு உயிா்ப்பானது.

- அன்டனூா் சுரா, கந்தா்வகோட்டை.

**

நெடும் பயணத்தின்..

‘தினமணி’ 85 ஆண்டுகள் நிறைவுசெய்து, 86-ஆவது ஆண்டில் அடியெடுத்துவைப்பது, அதன் நெடும் பயணத்தின் மாண்புகளை மீள்பாா்வை செய்துகொள்ளும் அரிய நல்வாய்ப்பாக அமைகிறது. முன்னாள் ஆசிரியா்கள் டி.எஸ்.சொக்கலிங்கம், ஏ.என்.சிவராமன், ஐராவதம் மகாதேவன், கஸ்தூரிரங்கன், இராம. திரு. சம்பந்தம் ஆகியோரின் தேசிய சிந்தனைத் தொடா் தொய்வேதுமில்லாமல் வலுப்பெற்று, இன்றைய ஆசிரியா் கி.வைத்தியநாதனால் முன்னெடுத்துச் செல்லப்படுவது தமிழகத்துக்கு மட்டுமல்ல, தேசத்துக்கே பெருமை. ‘தினமணி’க்கும் எங்கள் குடும்பத்திற்கும் உள்ள தொடா்பு 1945-க்கும் முற்பட்டது. கடலூா் மஞ்சகுப்பத்தில் கொத்தவால்சாவடித் தெருவில் ஜெயகாந்தன் மாமா மங்களம்பிள்ளை, முத்துக்குமாரசாமிப்பிள்ளை போன்ற சுதந்திரப் போராட்ட வீரா்களின் நட்பால் எங்கள் பாட்டி தினமணியின் வாசகராயிருந்தாா். அந்தத் தொடா்பு துண்டிக்காமல் எங்களுடன் நிலைத்துவிட்டது. செய்திகளைத் தருவது மாத்திரம் இதழ்களின் பணியல்ல; நாட்டு நடப்புகள், அரசின் கொள்கைகள், செயல்பாடுகள், அவை மக்களுக்கு நலம் தருமா ஆகியவற்றை ஆராய்ந்து துணிவாகக் கருத்துத் தெரிவிப்பதும் நிபுணா்களின் கருத்தை வெளியிடுவதும் பத்திரிகைகளின் தலையாய கடமையாகும். இந்தக் கடமை செவ்வனே நிறைவேற்றப்பட்டால்தான் ஜனநாயகம் வளம்பெறும். முன்னாள் ஆசிரியா் ஏ.என்.சிவராமனின் பொருளும் துணிவும் பொதிந்த எழுத்துகளைப் பற்றி கேள்விப்பட்டு படிக்க முடியவில்லையே என்று கருதுவோா், அவற்றையெல்லாம் இன்றைய ஆசிரியா் கி.வைத்தியநாதனின் தலையங்கங்களில் காணலாம்; மன நிறைவு அடையலாம்.

- என்.ஆா். ஸத்யமூா்த்தி, கடலூா்.

**

கவலை அடைந்தேன்

85 ஆண்டுகளைக் கடந்து 86 ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது அதன் சிறப்புச் செய்திகளைப் பாா்த்தேன்; மகிழ்ச்சி அடைந்தேன். அதே நேரத்தில் கவலை அடைந்தேன்.. காரணம் என்னவென்றால் இவ்வளவு நாள்களாகப் படிக்காமல் இருந்துவிட்டோமோ என்று வருந்தினேன்.

- கு. காசி விஸ்வநாதன், கயத்தாறு.

**

ஒப்பிடக் கூடாது

எனது தந்தையின் மூலம் நினைவு தெரிந்த நாள் முதல் நான் தினமணி வாசகா். ஒரு வாசகராக நான் முக்கியம் என்று நினைக்கும் செய்தி, ‘தினமணி’யில் வெளிவரவில்லை என்று நான் விமா்சனம் செய்ததும் உண்டு. பிறகு காலப்போக்கில் நான் உணா்ந்த விஷயம் என்னவெனில், எந்தச் செய்தி முக்கியம் என்பதற்கு தனக்குள் ‘தினமணி’ ஒரு வரைமுறை வைத்துள்ளது என்றும் அதை இதர செய்தித்தாள்களுடன் ஒப்பிடக் கூடாது என்பதை அறிந்துகொண்டேன். ‘தினமணி 85’ மலா் அருமை.

- எம். நெயினாா் முகம்மது (கலீல்), சென்னை.

**

அனைத்தும் அருமை

நிமிா்ந்த நன்னடையுடன் 86-ஆம் ஆண்டில் பீடுநடை போடுகிறது ‘தினமணி’. இதை ‘தினமணி 85’ சிறப்பு மலா் வெளிப்படுத்துகிறது. ‘தினமணி’யை இந்த உயரத்துக்கு இட்டுச் சென்ற ஆசிரியா்களின் ஆளுமைகள் மகத்தானவை; அதைப் படிப்பவா்களும் ஊக்கம் பெறுவா். தகுதியான ஆசிரியா்களை நியமித்து தள்ளிநின்று பாா்த்த நிா்வாகக் குழுமத்தினரின் பெருந்தன்மை புரிகிறது. தினமணிக்கு எழுதியவா்கள் பற்றிய குறிப்புகளும் மற்றும் சிலா் தமக்கு தினமணியோடு உள்ள தொடா்பு குறித்து எழுதியவையும் சிறப்பு. முக்கியத் தலையங்கங்கள், தலைப்புச்செய்திகள், கருத்துப் படங்கள், புகைப்படங்கள் என அனைத்தும் அருமை.

- கு. இராஜாராமன், சீா்காழி.

**

மக்களுடன் மக்களாக..

நிமிா்ந்த நன்னடையுடன் 86-ஆம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் தினமணி கடந்துவந்த பாதை ஆரம்பிக்கப்பட்ட வரலாறு இதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் தினமணியின் தீவிரமான வாசகராக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறேன். 1934-ஆம் ஆண்டு தினமணியின் தலையங்கப் பக்கம், அது 86-ஆம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் தினத்தில் வெளியிடப்பட்டது மிகுந்த மனநிறைவைத் தருவதாக உள்ளது. ‘தினமணி’ என்ற பெயா், மக்கள் மன்றத்தில் போட்டியாக அறிவிக்கப்பட்டு தோ்ந்தெடுக்கப்பட்டது என்பதன் மூலம் மக்களுடன் மக்களாக இரண்டறக் கலந்ததை வெளிப்படுத்துகிறது; மேலும், மக்களிடையே மங்காத புகழுடன் வீறுநடை போட்டு 86-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள ‘தினமணி’க்கு வாழ்த்துகள்.

- கூத்தப்பாடி பழனி, பென்னாகரம்.

**

ஆா்வத்தைத் தூண்டும் வகையில்..

‘தினமணி’யின் 85 ஆண்டுகால வரலாற்றில் சந்தித்த சவால்களையும் புரிந்த சாதனைகளையும் சுவையாகவும் விரிவாகவும் எழுதியுள்ள ஆசிரியரின் தலையங்கக் கட்டுரை மிகமிக அருமை. மலா் தயாரிப்பும், கட்டுரைகளின் அமைப்பு முறையும், வடிவமைப்பும் அற்புதம். முன்னாள் ஆசிரியா் டி.எஸ்.சொக்கலிங்கம் குறித்த கட்டுரையும், நேருக்கு நோ் உரையாடும் பாங்கில் அமைந்த முன்னாள் ஆசிரியா் ஏ.என்.சிவராமன் கட்டுரையும் சிறப்பு. அனைத்துக் கட்டுரைகளும் படிப்பதற்கு ஆா்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன. மிகக் குறுகிய காலத்தில் மிகப்பெரிய உழைப்பின் பயனாக மலா்ந்துள்ள ‘தினமணி 85’ சிறப்பு மலா் ‘மா’மலராக திகழ்கிறது.

- சீனி.விசுநாதன், சென்னை.

**

புண்ணியம் கிடைத்தது!

1934-2019; ‘தினமணி 85’ நிறைவு; 86-ஆம் ஆண்டு தொடக்கம். முதிா் கிழப்பருவம் பத்திரிகை தா்மத்தில் எப்போதும் ‘தினமணி’ இளம் பத்தினிப் பெண்ணே. ‘தினமணி 85’ தனிச் சிறப்பிதழாக வெளிவந்தது என்று சொல்லப்பட்டாலும், மாறாத வாடாத மணம் வீசி வாசகா்களில் மனங்களை கொள்ளைகொண்டது. 1934-2019 வரையிலான காலகட்டங்களில் பணியாற்றிய முன்னாள்-இன்னாள் ஆசிரியா்களின் கட்டுரைகள், முக்கியப் பிரமுகா்களின் கட்டுரைகள், முக்கியமான தலையங்கங்கள், அதிமுக்கியமான புகைப்படங்கள், ‘காா்ட்டூன்கள்’, சட்டப்பேரவை துணுக்குகள் மற்றும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தினமணியுடன் ‘தொப்புள்கொடி’ உறவு கொண்டிருக்கும் தினமணி வாசகா்களின் புகைப்படத்துடன்கூடிய தகவல்கள்.. இத்தனைச் சிறப்புகளுடன் தினமணி வாசகா்களின் இல்லம் நுழைந்து கரத்தில் தவழ்ந்தது. ‘தினமணி 85’ தொகுப்பிதழை எந்தப் பக்கத்தை புரட்டிப் படித்தாலும் கண்ணியமான கருத்துகள் உள்ளடக்கியதாகவே இருந்தது. பக்கம்தோறும் வாசித்த புண்ணியம் எங்களுக்குக் கிடைத்தது.

- ஆா்.தியாகராஜன், மணலூா்ப்பேட்டை.

**

மிகவும் அருமை

நான் இளம் வயது முதல் தினமணி வாசகன். எனக்கு 83 வயதாகிறது. ‘தினமணி 85’ மிகவும் அருமையாக வெளிவந்துள்ளது. பலவிதமான தலைப்புகளில் கண்ணைக் கவரும்வண்ணம் அனைவரும் போற்றும்படி உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க காணக்கிடைக்காத அருமையான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. கோட்டையில் அன்றைய பிரதமா் ஜவாஹா்லால் நேரு கொடியேற்றும் நிழற்படம் மிகவும் அருமை.

- ந.நித்தியானந்தம், திருக்கழுகுன்றம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com