சுடச்சுட

  

  ஆர்.கே.நகரில் செவ்வாய்க்கிழமைகளில் குறைதீர் மனுக்கள் பெறப்படும்:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

  By dn  |   Published on : 14th June 2016 05:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jaya

  தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் குறைதீர் மனுக்களை அளிக்கலாம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
  இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
  ஒரு நல்ல அரசு என்பது மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் அரசாகத் திகழ வேண்டும். இதற்காக அதிமுக அரசு கொள்கைகளை வகுத்து, திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது.
  விவாத மன்றமாகப் பேரவை: அரசின் கொள்கைகள், திட்டங்கள், அவற்றைச் செயல்படுத்தும் முறைகள் பற்றி விவாதிக்கும் மன்றமாக சட்டப் பேரவை திகழ்கிறது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் அரசின் திட்டங்கள் பற்றி விவாதித்தாலும், தங்கள் தொகுதி பற்றிய பொதுவான பிரச்னைகள் பற்றியும் எடுத்துக் கூற முடியும். ஆனால், தனிப்பட்ட பிரச்னை, வேண்டுகோள் ஆகியன குறித்து விவாதிக்க இயலாது. எனவேதான், தனிநபரின் குறைகளைத் தீர்ப்பதற்கு பல அமைப்புகள் இயங்கி வருகின்றன.
  குறை தீர்க்கும் நாள்: மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகிய அலுவலர்கள் தங்களது தலைமையிடத்தில் இருந்து திங்கள்கிழமைதோறும் குறைகளைக் கேட்டு தீர்வு கேட்க மக்கள் குறைதீர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  இதேபோன்று, மாதம் ஒரு முறை ஒரு கிராமத்தில் மாவட்ட ஆட்சியரால் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்படுகிறது. இவை பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தாலும், பொதுமக்களின் குறைகளை விரைந்து தீர்த்திடும் வகையில் பல முன்னோடி திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது.
  தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப் பிரிவிலும், இணையதளத்திலும் மனுக்களை அளிக்கலாம். இவற்றின் மீது தொடர்புடைய துறைகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை, தனி அலுவலர் மேற்பார்வையிடுகிறார்.
  அம்மா சேவை மையம்: இதுதவிர, அம்மா திட்ட முகாமும், தொலைபேசி மூலமே 24 மணி நேரமும் செயல்படும் குறைகளைத் தெரிவிக்கும் வகையில் அம்மா சேவை மையமும் பெரும் பங்கு வகிக்கின்றன. அரசு சேவைகளை எளிதில் பெறும் வகையில் 10,000-க்கும் மேற்பட்ட இ-சேவை மையங்களும் செயல்பட்டு வருகின்றன.
  ஆர்.கே.நகரில் மனு: சட்டப்பேரவைக்கு என்னை (ஜெயலலிதா) தேர்ந்தெடுத்த டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே. நகர்) தொகுதி மக்கள் தங்களது குறைகளை எளிதில் தீர்க்கும் வகையில், சிறப்பு வழிமுறை இனி கடைப்பிடிக்கப்படும்.
  இதன்படி, முதல்வரின் தனிப் பிரிவின் தனி அலுவலர் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையன்று தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்று நாள் முழுவதும் அங்கேயே இருந்து, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொள்வார். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படும் என்று
  ஜெயலலிதா கூறியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai