சுடச்சுட

    

    பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

    By kirthika  |   Published on : 03rd June 2016 07:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் குறைந்த வட்டியில் வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
    வறுமைக் கோட்டுக்குகீழ் வாழும் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் ஆகியோரின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் புதுதில்லி தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சி கழகத்தின் நிதி உதவியுடன் சென்னையில் உள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பொது காலக்கடன் திட்டம், தனிநபர் கடன் திட்டம், பெண்களுக்கான புதிய பொற்காலத் திட்டம், மகிளா சம்ரிதி யோஜனா, சிறு கடன் திட்டம், போக்குவரத்து இனங்களுக்கான காலக்கடன் ஆகியவற்றில் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.
    தகுதி:
    பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறமாக இருந்தால் ரூ.98,000 மற்றும் நகர்ப்புறமாக இருந்தால் ரூ.1,20,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். சுயஉதவிக் குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும். மகளிர் திட்ட அலுவலரால் தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். தனி நபர் கடன் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும். மகளிருக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.
    கறவை மாடுகள் வாங்க ரூ.60 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படும்.
    வாகனங்கள் வாங்க ரூ.3 லட்சத்து 13 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படும்.
    சுயஉதவி குழுவுக்கு ஒரு நபருக்கு ரூ.50,000 என அதிகபட்சமாக ரூ.10,00,000 வரை கடனுதவி வழங்கப்படும். கடன் கோரும் விண்ணப்பத்துடன் ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை நகல், திட்ட அறிக்கை (பெரிய திட்டங்களுக்கு), ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனக் கடன் பெறுவதாக இருந்தால் மட்டும்) மற்றும் வங்கி கோரும் இதர ஆவணங்கள் ஆகியவற்றை இணைத்து ஜூன் 30-ஆம் தேதிக்குள் ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அல்லது ஈரோடு கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்பிக்கப்பட்ட மனுக்கள் வங்கிகளின் விதிமுறைக்கு உள்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு சென்னை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநருக்கு அனுப்பி தகுந்த ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு வங்கி மூலமாக கடனுதவி வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai