Enable Javscript for better performance
உதகையில் கோடை விழா நிறைவு Closing Summer Festival in Ooty- Dinamani

சுடச்சுட

    

    குன்னூர்: நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் உதகை மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட அரங்கில் கோடை விழா நிறைவு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     நீலகிரி மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை, தோட்டக்கலைத் துறை மூலமாக கடந்த 21-ஆம் தேதி குன்னூரில் பழக்காட்சியுடன் கோடை விழா தொடங்கப்பட்டது. கடந்த 11 நாள்களாக நடைபெற்ற கோடை விழா செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
     இவ்விழாவுக்க, மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கர பாண்டியன் வரவேற்றார். சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அரங்கு அமைத்திருந்தவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.
     தொடர்ந்து, அவர் பேசியதாவது:
     தமிழக அரசின் விஷன் 2023 திட்டத்தின்கீழ், சுற்றுலாத் தலங்களில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 2023-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்துக்கு 1.5 கோடி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இதை நோக்கி தமிழக சுற்றுலாத் துறை செயல்பட்டு வருகிறது என்றார்.
     தமிழகத்தில் கலை மற்றும் கலாசாரத்தை சுற்றுலாப் பயணிகள் அறிந்து செல்கின்றனர். இவர்களின் வருகையால் சுற்றுலாத் தொழிலும் மேம்பட்டு வருகிறது. மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் வகையில் மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் மூலமாக 2012-13 ஆம் ஆண்டில் ரூ. 2.25 கோடியும், 2014-15 ஆம் ஆண்டில் 1.56 கோடியும் ஒதுக்கப்பட்டது. நீலகிரிக்கு கடந்த ஆண்டு சுமார் 29 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்தனர். 2014-ஆம் ஆண்டை விட கூடுதலாக 5 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். நடப்பு ஆண்டில் ஐந்து மாதங்களில் 8 லட்சத்து 84 ஆயிரத்து 254 பேர் வந்துள்ளனர். இதனால், இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகள் வருகை எண்ணிக்கை 30 லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
     விழாவில், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுனன், மக்களவை உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன், குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சாந்தி ஏ.ராமு, மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாவட்ட சுற்றுலா அலுவலர் பொறுப்பு ப.விஜயகுமார் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai