Enable Javscript for better performance
தனிச் சிறப்பு உடையது உதகை தாவரவியல் பூங்கா: வேளாண் அமைச்சர்- Dinamani

சுடச்சுட

  

  தனிச் சிறப்பு உடையது உதகை தாவரவியல் பூங்கா: வேளாண் அமைச்சர்

  By kirthika  |   Published on : 28th May 2016 04:59 AM  |   அ+அ அ-   |    |  

  உதகை தாவரவியல் பூங்கா தனிச் சிறப்பு உடையது என உதகையில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு குறிப்பிட்டார்.

  உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் 120-ஆவது மலர்க் காட்சியை வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்த அமைச்சர் துரைக்கண்ணு பேசியதாவது:

  பேரவைத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் அரசு விழா இது. நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை அறிந்து அவற்றை ஒவ்வோர் ஆண்டாக முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி வந்துள்ளார். இந்த வசதிகளை வெளியுலகுக்கு அறிவிக்கும் வகையிலேயே ஆண்டுதோறும் மலர்க் காட்சியும் நடைபெற்று வருகிறது.

  நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா மையங்கள் இருந்தாலும், உதகையில் உள்ள அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு தனிச் சிறப்பு உள்ளது. இதன் காரணமாகவே, ஆண்டுதோறும் குறைந்தது 25 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். நூறாண்டுகள் கடந்த பழமையான மரங்களும், 200-க்கும் மேற்பட்ட அரிய வகை தாவரங்களும் இப்பூங்காவில் நிறைந்துள்ளன என்றார்.

  விழாவிற்குத் தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் பேசியதாவது:

  உதகையில் நடைபெறும் மலர்க் காட்சியின் மூலமாக சுற்றுலாப் பயணிகள் உதகையை மட்டுமன்றி மாவட்டத்தின் பிற பகுதிகளையும் கண்டுகளித்துச் செல்ல வாய்ப்பளிக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் ரோஜா பூங்கா முதல், மாவட்டத்தின் நுழைவாயிலான காட்டேரி பூங்கா, தேயிலைப் பூங்கா, வண்ணத்துப் பூச்சி பூங்கா என பல்வேறு பூங்காக்களையும் உருவாக்கியுள்ளது முதல்வர் ஜெயலலிதாவின் சாதனையே என்றார்.

  விழாவில், தமிழக அரசின் வேளாண்மைத் துறை செயலாளர் விஜயகுமார் பேசியதாவது: மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பல்வேறு மானியத் திட்டங்களின்கீழ் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. தும்மனட்டி பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள காரனேஷன் மலர் நாற்றுகள் உற்பத்திப் பண்ணையிலிருந்து வரும் ஜூன் முதல் விவசாயிகளுக்கு நாற்றுகள் விநியோகிக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

  மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுனன் பேசியதாவது: ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில்தான் உதகையில் உலக பிரசித்தி பெற்ற ரோஜா பூங்கா உருவாக்கப்பட்டது. நரிக்குறவர் சமுதாயத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்ததைப்போல, நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் படகர் இன மக்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசிடம் தொடர்ந்து குரல் எழுப்பப்படும் என்றார்.

  நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் பேசியதாவது: தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களால் அடுத்த சட்டப் பேரவைத் தேர்தலிலும் தமிழகத்தில் அதிமுகவே ஆட்சியைப் பிடிக்கும் என்றார்.

  குன்னூர் சட்டப் பேரவை உறுப்பினர் சாந்தி ராமு பேசியதாவது: நீலகிரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

  உதகை சட்டப் பேரவை உறுப்பினர் கணேஷ் பேசியதாவது: முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் கனவுத் திட்டமான ரோப் கார் திட்டத்தை உதகையில் விரைவில் நிறைவேற்ற வேண்டும். உதகை நகரில் அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். தோட்டக் கலைத் துறையில் தாற்காலிகமாகப் பணியாற்றும் 900 தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றார்.தொடர்ந்து, ஆவின் இணையத் தலைவர் அ.மில்லர் தமிழக அரசின் சாதனைகளை விவரித்தார்.

  தோட்டக் கலைத் துறை இயக்குநர் சித்திரசேனன் வரவேற்றார். தோட்டக் கலைத் துறை இணை இயக்குநர் என்.மணி நன்றி கூறினார்.

  முன்னதாக, உதகை மலர்க் காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர் துரைக்கண்ணு, காரனேஷன் மலர்களால் உருவாக்கப்பட்டிருந்த சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் மாதிரியையும், இரட்டைக் குருவி வடிவமைப்பையும் பார்வையிட்டு அதிகாரிகளைப் பாராட்டினார். தொடர்ந்து, தினமணி நாளிதழின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அங்கை அமைச்சர் பார்வையிட்டார். அமைச்சர் விழா மேடைக்குச் செல்லும்போது வெலிங்டன் ராணுவ மைய வாத்தியக் குழுவின் வாத்திய இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai