Enable Javscript for better performance
தண்ணீர் லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூர் மாவட்டம், செங்கப்பள்ளி அருகே சாலையில் நிறுத்தப்பட்டிருந்த தண்ணீர் லாரியின் பின்னால் அரசுப் பேருந்து மோதியதில் அப்பேருந்தின் ஓட்டுநர், சிறுமி ஆகிய இருவர் உயிரிழந்தனர். மேலும், இவ்விபத்தில், பேருந்தில் பயணித்த 15 பேர் படுகாயமடைந்தனர்.

    திருப்பூர், ஊத்துக்குளியை அடுத்த செங்கப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையின் நடுவே நட்டு வைக்கப்பட்டுள்ள செடிகளுக்கு லாரி மூலமாகத் தண்ணீர் விடும் பணி வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

    லாரியின் ஓட்டுநர் சாலையின் குறிப்பிட்ட பகுதியில் லாரியை நிறுத்தி செடிகளுக்குத் தண்ணீர் விட்டுள்ளார். இதுகுறித்து பின்னால் வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் அவர் தேவையான முன்னேற்பாடுகளையும் செய்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோவையிலிருந்து சேலம் நோக்கி 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து அந்தத் தண்ணீர் லாரியின் பின்னால் மோதியது.

    இதில், பேருந்தின் ஓட்டுநரான நாமக்கல் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (55), பேருந்து நடத்துநரான சேலத்தைச் சேர்ந்த சண்முகம் (45), பேருந்தில் பயணித்த சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (47), அவரது மகன் தீபக்குமார் (17), கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சாமூண்டீஸ்வரி (34), பூஜிகா (17), யோகேஸ்வரி (16), தருமபுரியைச் சேர்ந்த கற்பகம் (35), அவரது மகள்கள் அபிராமி (13), ஐஸ்வர்யா (9) மற்றும் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த செல்வி (23), ராஜேஷ்குமார் (35) உள்பட 16 பேர் படுகாயமடைந்தனர்.

    அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், பேருந்தின் ஓட்டுநர் சுப்பிரமணி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி அபிராமி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார். விபத்து நடைபெற்ற பகுதியை திருப்பூர் கோட்டாட்சியர் முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். இது குறித்து ஊத்துக்குளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai