Enable Javscript for better performance
மரங்களில் ஆணியடித்து விளம்பரம் செய்தால் வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டத்திலுள்ள மரங்களில் அவற்றின் வளர்ச்சிக்கு இடையூறாக ஆணியடித்து விளம்பரம் செய்தால், வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற நடவடிக்கைக்கு உள்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.கங்காதர் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருவரும் கூட்டாக அளித்த பேட்டி: வரும் ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து சுமார் 2 லட்சம் மரக்கன்றுகள் வரை நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    நடப்படும் மரக்கன்றுகள் 3 மாதங்கள் தொடர்ந்து பராமரிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. ஏற்கெனவே சாலையோரங்களிலும், தெருக்களிலும் உள்ள மரங்களைப் பாதுகாக்கும் வகையில், ஆணியடித்து விளம்பரம் செய்துள்ள நிறுவனங்கள் அவற்றை அகற்றிக் கொள்ள இரு நாள்கள் அவகாசம் வழங்கப்படும். அதன்பிறகு, உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத் துறை மற்றும் காவல் துறையினரின் கூட்டு நடவடிக்கையில், விளம்பரம் செய்துள்ள நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்படும். அந்த வழக்கின் மூலம் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். ஜூன் 5ஆம் தேதி மாவட்டம் முழுவதும் இந்த விளம்பரங்களையும், ஆணிகளையும் அகற்றும் பணியும், ஆணி அடித்து மரங்களின் வளர்ச்சியைக் கெடுக்கக் கூடாது என்ற விழிப்புணர்வுப் பணிகளும் மேற்கொள்ளப்படும்.

    பேரிடர் மேலாண்மை: பேரிடர் மேலாண்மைக்கென மத்திய அரசின் சட்டத்தின்கீழ், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான பேரிடர் மேலாண்மை முகமை செயல்பட்டு வருகிறது.

    எதிர்வரும் தென்மேற்குப் பருவமழையைச் சமாளிக்க, அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இப்போதே தொடங்கப்படும்.

    மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள 24 மணி நேரமும் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி எண்களான 1077, 18004257016, 18004251071 ஆகியவற்றிலும் பொதுமக்கள் புகார்களைத் தெரிவிக்கலாம். மேலும், காவல்துறை மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும், நோய்த் தடுப்புக்காக சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகத்திலும், கால்நடைகள் பாதுகாப்புக்காக அந்த துறையின் இணை இயக்குநர் அலுவலகத்திலும், காட்டுத்தீ போன்ற விபத்துகளை சமாளிக்க தீயணைப்புத் துறை மற்றும் வனத்துறை அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்படும்.

    இதுகுறித்த தகவல்களை கிராம அளவில் பொதுமக்களிடம் தெரிவிக்கும் வகையில், வரும் 4-ஆம் தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டங்களை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai