சுடச்சுட

    

    அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கட்சியின் தேசியத் தலைவராவதற்கு மூத்த காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் ஆதரவு தெரிவித்தார்.

    தில்லியில் மூன்று முறை முதல்வராக இருந்தவர் ஷீலா தீட்சித். அதன் பிறகு மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது, கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு பதவிக்கு வந்த சில மாதங்களில் ஆளுநர் பதவியை ஷீலா தீட்சித் ராஜிநாமா செய்தார். அதன் பிறகு தீவிர அரசியலில் இருந்து சில மாதங்கள் விலகி இருந்த அவர், தில்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் முழு நேர அரசியல் பணிக்குத் திரும்பினார்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வர வேண்டும் என்று குரல் கொடுத்து வரும் திக் விஜய் சிங், மதுசூதன் மிஸ்திரி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் வரிசையில் ஷீலா தீட்சித் இணைந்துள்ளார்.

    காங்கிரஸ் தலைமையை ராகுல் காந்தி ஏற்பது தொடர்பாக அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என்று கட்சி மேலிடம் கருதுகிறது. இந்நிலைப்பாட்டை விரைவில் கட்சி மேலிடம் செயல்படுத்த வேண்டும்.

    45 வயதாகும் ராகுல் காந்தி காங்கிரஸின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். பிகார் மாநில தேர்தல் உள்பட பல்வேறு மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் காங்கிரûஸ வழிநடத்தியது ராகுல் காந்தி. அதன் விளைவாக அந்த மாநிலங்களில் இழந்த செல்வாக்கை காங்கிரஸ் நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. கடந்த காலங்களில் கட்சி அளவில் போதுமான ஒத்துழைப்பின்மையால் ராகுலின் முயற்சிகளுக்கு சரியான தீர்வு கிடைக்காமல் போயிருக்கலாம். அந்த அனுபவங்கள் மூலம் அவர் படிப்பினைகளைக் கற்றுக் கொண்டிருப்பார். பிற அரசியல் தலைவர்களைப் போலவே தனக்கென ஒரு வட்டத்தை ராகுல் வைத்திருப்பதில் தவறில்லை.

    ராகுலின் சிந்தனை காங்கிரஸில் உள்ள சில மூத்த தலைவர்களுக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், அவர்தான் தலைவர் என்று அறிவிக்கப்பட்டு விட்டால், அவரது வழியில் செயல்படுவதுதான் சிறந்த தொண்டருக்கு அடையாளம். அந்த வகையில் ராகுலின் தலைமை சுமுகமாக செயல்பட சில மேலிடத் தலைவர்கள் தானாக முன்வந்து தங்கள் கட்சிப் பதவிகளை ராஜிநாமா செய்யத் தயாராக உள்ளதாக அறிகிறேன்.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவரானதும் கட்சியில் உள்ள எல்லா வயது மூத்த நிர்வாகிகளை ராகுல் கழித்து விடுவார் என்று சிலர் கூறுவதை என்னால் ஏற்க முடியாது. ராகுலின் நோக்கம் அதுவல்ல என்பது எனக்குத் தெரியும். கட்சியில் பல யுகங்களைப் பார்த்து விட்டோம். இனி இளையோருக்கு வழி விட வேண்டும் என்று என்னைப் போலவே பல மூத்த தலைவர்களும் சிந்திக்கிறார்கள். அச்சிந்தனையை ஊக்குவித்து ராகுல் தலைமைப் பதவி ஏற்க மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றார் ஷீலா தீட்சித்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai