Enable Javscript for better performance
கும்பகோணம் பள்ளித் தீ விபத்து: கூடுதல் இழப்பீடு கோரிய மனுவுக்கு அரசு பதிலளிக்க உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணம் பள்ளித் தீ விபத்து: கூடுதல் இழப்பீடு கோரிய மனுவுக்கு அரசு பதிலளிக்க உத்தரவு

    By dn  |   Published on : 16th June 2016 01:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை: கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரிய வழக்கில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
    2004-ம் ஆண்டு, ஜூலை 16-ம் தேதி கும்பகோணத்தில் ஒரே வளாகத்தில் இயங்கிய ஸ்ரீ கிருஷ்ணா, சரஸ்வதி நர்சரி பள்ளிகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 94 பள்ளி குழந்தைகள் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், 16 குழந்தைகள் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.
    இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு உரிய இழப்பீட்டை நிர்ணயம் செய்வதற்கு, ஏற்கெனவே ஓய்வுப் பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமனை நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதன்படி, அனைத்து தரப்பினரிடம் விசாரணை நடத்தி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ. 5 லட்சமும், கடும் தீக்காயம் அடைந்த குழந்தைகளுக்கு தலா ரூ. 6 லட்சமும், சிறிய காயமடைந்த குழந்தைகளுக்கு ரூ. 50 ஆயிரமும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று பரிந்துரையில் நீதிபதி கே.வெங்கட்ராமன் குறிப்பிட்டிருந்தார். இதற்கு குழந்தைகளின் பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதன் பின்னர், கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பாதிக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் இன்பராஜ் சார்பில் தாக்கல் செய்த மனுவில், மோட்டார் வாகன விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிர்ணயிக்கப்படும் இழப்பீடு தொகையின் அடிப்படையில், நீதிபதி கே.வெங்கட்ராமன் இந்த இழப்பீட்டை நிர்ணயம் செய்துள்ளார்.
    இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஒருவருக்கு உயிர் வாழ உரிமை உள்ளது. இவர்களது உயிரைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும். எனவே, இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 21-ன் கீழ், அதாவது பொதுச் சட்டத்தின் கீழ் இழப்பீட்டை நிர்ணயம் செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்திருக்கவில்லை. எனவே, தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு என்று நிர்ணயம் செய்து, அந்த தொகையை பெற்றோருக்கு வழங்க வேண்டும். தீ காயத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தலா ரூ.20 லட்சம், சிறு காயமடைந்தவர்களுக்கு ரூ.5  லட்சம் இழப்பீடாக நிர்ணயம் செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
     அப்போது, கூடுதல் இழப்பீடு கோரிய மனு குறித்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும். மேலும், ஸ்ரீ கிருஷ்ணா தொடக்கப் பள்ளி, சரஸ்வதி தொடக்கப் பள்ளி நிர்வாகங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, அடுத்த கட்ட விசாரணையை ஜூலை 13-க்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai