Enable Javscript for better performance
வீணாகும் பனைமரங்கள்!- Dinamani

சுடச்சுட

  வீணாகும் பனைமரங்கள்!

  Published on : 20th September 2012 09:39 AM  |   அ+அ அ-   |    |  

  இந்தியாவில் 8 கோடி பனைமரங்கள் நிற்கின்றன என்றும், அவற்றுள் தமிழ்நாட்டில் 5 கோடி இருப்பதாகவும் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புள்ளிவிவரம் சொல்லிற்று. இப்போது நிச்சயமாக அவ்வளவு மரங்கள் இருக்கும் என்று கூற முடியாது. ஆனால், இருப்பவைகளையாவது முறையாகப் பயன்படுத்த வேண்டாமா? பனைமரத்தைப் பற்றி நாம் சாதாரணமாக நினைத்து விடுகிறோம். இதன் பயன்களும், முக்கியத்துவமும் ஏன் யாருக்கும் புரிவதில்லை.

  ÷தாலசாஸ்திரம் என்ற நூல் பனைமரத்தால் 801 பலன்கள் கிடைக்கின்றன என்று கூறுகிறது. எத்தகைய நிலத்திலும் வளரும் தன்மையுடையது பனை. மழை பெய்யும் காலத்தில் கிடைக்கும் நீரையும், தன்வேர்களால் நிலத்திலிருந்து உறிஞ்சும் நீரையும் கொண்டே பனைமரம் வாழ்கிறது. இதற்கென நீர் பாய்ச்சுவதோ, உரமிடுவதோ, பூச்சி மருந்து தெளிப்பதோ கிடையாது. இவ்வாறு இயற்கைதரும் அற்புத மரத்தைக் கற்பகத்தரு என்றே அழைத்தார்கள்.

   பனம் பழச்சாற்றை வெயிலில் துணியில் பரப்பிக் காயவிட்டுத் துண்டுகளாக்கி "பனாட்டு'  என்ற பெயரில் இனிப்புப் பண்டமாகச் சுவைத்திருக்கிறார்கள்.

   தென்னையில் ஆண் மரம், பெண் மரம் என்று கிடையாது. பனையில் ஆண் பனை  அலகுப்பனை என்றும், பெண் பனை பருவப்பனை என்றும் அழைக்கப்படுகிறது. பெண் பனையில் நுங்கு கிடைக்கிறது. இரண்டிலும் பதநீர் எடுக்க முடியும். ஆனால், பெண் பனையில் வரும் பாளைகளில் பதநீர் எடுத்தால் பிறகு நுங்கு கிடைக்காது, பனம் பழம் கிடைக்காது, பனை விதை கிடைக்காது.

   பனங்கொட்டை மண்ணில் புதைக்கப்பட்டு கிழங்காகிறது, கிழங்கை  எடுக்காமல் அப்படியே விட்டுவிட்டால் அது பனைமரமாகிவிடுகிறது. எனவே பெண் பனைகளைவிட ஆண் பனைகளில் பதநீர் எடுப்பதே நல்லது.

  ÷பதநீர், உடலுக்கு நலம் தருவது, பலம் தருவது. இரவு முதல் அதிகாலை வரை, விண்மீன்களும், நிலாக் கதிர்களும் ஒளிபாய்ச்சுகின்றன. காலை முதல் ஞாயிறு தன் கதிர்களால் குளிப்பாட்டுகிறது. தொழிலாளி பாளையைச் சீவிச் சுரக்கும் நீரில் கடல்வயிற்றுச் சிப்பியின் சுண்ணாம்பும் சேர்ந்து பதப்படுத்துகிறது.

  ÷இந்தப் பதநீரைக் குடித்தால் உடல் வெப்பமடையும் நேரத்தில் குளிர்ச்சியூட்டுகிறது. உடல் குளிர்ச்சியாயிருந்தால் வெப்பமூட்டுகிறது.

  ÷நரம்பும் சதையும் பழுதடைந்தால் இதயத்தின் செயல்பாடு முடங்கிப்போகும். இவ்வாறு நிகழ்ந்துவிடாமல் பதநீரிலுள்ள சுண்ணாம்புச் சத்து பாதுகாக்கிறது. பல்லும் எலும்பும் பதநீரால் உறுதிப்படுகின்றன.

  ÷பதநீரிலிருக்கும் இரும்புச் சத்து நரம்பு மண்டலத்துக்குச் செயலூக்கத்தை அளிப்பதோடு நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொடுக்கிறது.

  ÷பதநீரிலிருக்கும் தையமின் என்ற உயிர்ச்சத்து, மூளையைச் சுறுசுறுப்பாகச் செயல்பட வைக்கிறது. ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.

  ÷வைட்டமின் பி2 எனப்படும் "ரிபோபிளேவின்' என்கிற சத்து, குளுக்கோமா என்கிற கண்நோய் வராமல் தடுத்துப் பாதுகாக்கிறது. பதநீரிலிருக்கும் நியாசின் எனும் மூலக்கூறு மனத்தடுமாற்றம் வராமலும், வாய்ப்புண் வராமலும் காக்கிறது.

  ÷மண்ணில் எந்தவித முதலீடும் இல்லாமல், பராமரிப்பும் இல்லாமல், உரமிடுதல் நீர்பாய்ச்சுதல் என்று செலவே இல்லாமல் வளர்ந்து நிற்கும் மரங்களிலிருந்து இத்தனை நலன்களைத் தரும் பதநீரை நாம் எடுக்கிறோமா? எடுக்காமல் இருப்பது மடமை அல்லவா?

  ÷பனையைச் சார்ந்த காகமும் அமுதுண்ணும் - என்ற பழமொழியே தமிழ்நாட்டில் உண்டு.

  ÷பதநீரைக் கூழாக்கி சிரட்டையில் ஊற்றி எடுப்பதைக் கருப்பட்டி, கற்பகக்கட்டி என்கிறோம். பதநீரைப் பக்குவமாகக் காய்ச்சிக் கூழாக்கி சில நாள்களில் படிக வளர்ச்சிப்படி கற்கண்டாகத் தயாரிக்கலாம். இவையனைத்தும் அருமையான சக்தி படைத்தவை.

   வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் சிறைசென்று தளர்ந்து மெலிந்துபோன ம.பொ.சி.யை அழைத்துக் கொண்டு ராஜாஜி, சென்னையிலிருந்த காந்தி மகானிடம் அழைத்துச் சென்று, ""இவர் பனை ஏறும் குலத்தைச்  சேர்ந்தவர், ஆனால் கள்ளுக்குப் பரம எதிரி'' என்று அறிமுகப்படுத்தினார்.

    காந்தி ஒட்டி உலர்ந்து மார்பு கூடுதட்டிப் போயிருந்த ம.பொ.சி.யைக்காட்டி ""இவர் பதநீர் குடித்தால் தேறிவிடுவார். நான் புளித்தகள்ளுக்கு எதிரி. இனிக்கும் பதநீருக்கு நண்பன். நான் கரும்புச் சீனி சாப்பிடுவதில்லை, இனிப்புக்குக் கருப்பட்டிதான் சாப்பிடுகிறேன்'' என்றார்.

   குஜராத் மாநிலத்தில் பிறந்த அண்ணல் மகாத்மா காந்தியடிகளுக்குத் தெரிந்திருந்தது பனையின் பெருமை. பதநீரின் அருமை.

  ÷ஒரே ஒரு மாவட்டத்திலிருந்து நான் பெற்ற அதிகாரபூர்வமான புள்ளிவிவரத்தைத் தருகிறேன் . விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அன்புடன் எனது வேண்டுகோளை ஏற்றுத் தந்த தகவல்.

  ÷பருவமடைந்த 72,555 மரங்களில் மட்டுமே தொழிலாளர்கள் ஏறிஇறங்கிப் பயனைக் கொண்டு வருகிறார்கள். பருவமடைந்துவிட்டோம்; பதநீரும், நுங்கும் தருவதற்கு நாங்கள் தயாராய் இருந்தும் எங்களைப் பயன்படுத்துவாரில்லையே; உலக மக்களுக்கு நாங்கள் உதவ முடியவில்லையே என்று ஓலைக்கரங்களால் தங்கள் தலைகளில் அடித்துக் கொண்டு அழுது அரற்றும் மரங்கள் 14,22,099.

  ÷நாம் பயன்படுத்துவது ஒரு லட்சத்துக்கும் குறைவு. பயன்தரத் தயாராயிருந்தும் நாம் எடுத்துக் கொள்ளாத மரங்கள் 14 லட்சத்துக்கும் அதிகம். இது ஒரே ஒரு மாவட்டத்தில். அதுவும் சிறிய மாவட்டமாகிய விருதுநகரில்.

  இவ்வாறாயின் தமிழகம் முழுவதும் உள்ள 32  மாவட்டங்களில் இவ்வாறு நாம் பயன்படுத்தாமல் நிற்கும் பனைமரங்கள் எவ்வளவு?

  ÷வீட்டுமுன் நின்றாலும், தோப்புத்துறவுகளில் நின்றாலும் சும்மாதானே பயனற்று நிற்கின்றன என்று 200, 300 ரூபாய்க்கும் வெட்டி விற்றுவிடுகிறார்கள். அவை செங்கல்சூளைகளில் விறகாகி எரிகின்றன. இந்நிலை தொடருமானால், வருங்காலச் சந்ததிகளுக்கு பனை மரங்களைப் படம் வரைந்துதான் காட்ட வேண்டிவரும்.

  ÷10 ஆண்டுகளுக்கு முன் லண்டன் சென்ற நான், அங்கிருந்து நுங்கு குழம்பு (நுங்கு ஜாம்), பனம்பழச்சாறு கொண்ட டப்பாக்களை வாங்கிவந்து தமிழக முதல்வர் கருணாநிதியிடம் காட்டினேன். அதிகாரிகளை அழைத்து இவைபோல் செய்யுங்கள் என்று ஆணையிட்டார். செய்தார்கள். மகிழ்ச்சி பொங்க அவற்றைச் சுற்றுலாப் பொருட்காட்சி நடக்கும் தீவுத்திடலில் காட்சிக்கும், விற்பனைக்கும் வைத்தேன். மக்கள் மகிழ்ச்சியோடு  வாங்கிச்  சென்றார்கள். அதோடு நின்றுவிட்டது.

   இத்தனைக்கும் தமிழக முதல்வர் பனைத்தொழிலின் மீதும், தொழிலாளர்கள் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவராக இருக்கிறார். பனை ஏற உரிமம் பெறவும், நலவாரியத்தில் உறுப்பினராவதற்கும் விதித்திருந்த கட்டணங்களையே நீக்கிவிட்டார்.

   நலவாரிய உறுப்பினர்கள் வருமான வரம்பு நிபந்தனைகளுக்கு உள்படாமல் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தைப் பயன்படுத்த உரிமை அளித்துவிட்டார்.

   அரசு சார்ந்த பனைவெல்லக் கூட்டுறவுச் சம்மேளனங்கள் தொழிலாளிகள் மரமேறி இறக்கிக் கொண்டுவரும் பதநீருக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.4 வீதம் வாங்குவது, உழைப்புக்கேற்ற வகையில் இல்லை; அதிக விலை கொடுக்க வேண்டும் என்று முறையிட்டதை ஏற்று இரண்டரை மடங்கு உயர்த்தி இப்போது லிட்டர் ரூ.10 வீதம் வாங்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார்.

   இந்தக் கொள்முதல் தமிழகமெங்கும் நடைபெற வேண்டும்; அதற்குக் கணிசமாக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்.

   ஒரு பனைமரத்தைச் சரியாகப் பயன்படுத்தினால், ரூ.3,000 வருமானம் கிடைக்கும். இப்போது தமிழகமெங்கும் தோராயமாக 3 கோடி பனைமரங்கள் நிற்பதாக வைத்துக்கொண்டால், ஆண்டொன்றுக்கு ரூ.9,000 கோடி வருமானம் பெறலாம்.

   இந்த மரங்களில் ஏறி இறங்கப் போதுமான ஆள்கள் இல்லை. அனுபவசாலிகளைக் கொண்டு புதியவர்களுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும். பயிற்சி அளிப்பவர்களுக்கும், பயிற்சி பெறுபவர்களுக்கும் போக்குவரத்துச் செலவு, உணவு, உறைவிடம் கொடுத்து ஊக்க ஊதியமும் கொடுக்க வேண்டும்.

   நமக்கு முந்தைய தலைமுறை செய்த இந்த அற்புதப் பணியை நாமும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு புதியவர்களை உடல் உழைப்பாலேயே மரங்களில் ஏறிப் பயன் பெற ஒருபுறம் பயிற்சி அளிக்க வேண்டும்.

   இன்னொருபுறம், பனை ஏறக் கருவியொன்று மிக அவசரமாகக் காண வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டம் குட்டம் என்ற ஊரில் பசுபதி மார்த்தாண்டன் என்பவர் பனையில் பொருத்த சைக்கிள் மிதிப்பதுபோல் மிதித்து மேலே செல்லும் கருவியொன்றைக் கண்டுபிடித்தார். அம் முயற்சி முழுமை பெறும் முன் அவர் மறைந்துவிட்டார்.

   இப்போது கோபிச்செட்டிபாளையம், கோயமுத்தூர் போன்ற இடங்களில் சிலர் இந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். அவர்களுக்கும் எல்லாவிதமான ஊக்கமும் நாம் கொடுக்க வேண்டும்.

   கோவை வேளாண் பல்கலைக்கழகம் வடிவமைத்துக் கொண்டிருக்கும் கருவியை நான் இருமுறை நேரில் சென்று காணும் வாய்ப்பைத் தந்தார்கள். தொடர்ந்து அக் கருவியை மேம்படுத்த முயன்று கொண்டிருக்கிறார்கள்.

   கனமற்ற - ஆனால் உறுதியான - உலோகத்தால் இதைச் செய்ய வேண்டும். ஒருவர் தூக்கிச் செல்லும் எடைதான் இருக்க வேண்டும். சக்கரங்களைப் பொருத்தி பனந்தோப்பில் இழுத்துச் செல்லும் வகையிலும் அமைக்கலாம்.

   மிக எளிதில் பொருத்த, பயன்படுத்திக் கழற்றி அடுத்த மரத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் ஒரு கருவியை நம்மால் செய்ய முடியும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் இதை ஒரு சவாலாக ஏற்க வேண்டும்.

   இவ்வாறு செய்யும் கருவிகளை ஆய்வுசெய்து தேர்வு செய்யப்படுவனவற்றுக்கு நல்ல பரிசுகளை அரசும், தொண்டுள்ளம் கொண்ட அறக்கட்டளைகளும் கொடுக்கலாம்.

    இத்தகைய கருவிகள் பரவலாகச் செய்யப்பட்டால் பலர் பயிற்சி பெற வருவர்; மக்கள் பனை மரங்கள் மூலம் பலன் பல பெறுவர்.

   இப்போது குளிர்பானம் மற்றும் சோடா விற்கும் கடைகளிலெல்லாம் பதநீர் கிடைக்க வேண்டும். அரசும் பனை வளர்ச்சி வாரியமும், தொழிலாளர் நல வாரியமும், சம்மேளனங்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் இதை தேசபக்தியோடு அணுகி, நாட்டுத் தொண்டெனக் கருதிச் செயலில் முனைய வேண்டும்.

   ஆம், மண்ணின் மரத்தில் கிடைக்கும் அமுது பதநீர். சிறுகடைகளிலும் கிடைக்கும் வகையில் பதநீரைக் கொடுப்போம். இப்போது விஞ்ஞான முறையில் பக்குவப்படுத்த 20 நாள்களுக்கு மேலாகவும் பதநீரைக் கெட்டுப் போகாமல் வைத்திருக்கும் காகித டப்பாக்கள் கிடைக்கின்றன. அவற்றையும் குப்பிகளையும் பயன்படுத்தி, பதநீரை எங்கும் விநியோகிப்போம்.

   பெட்டிக்கடைகள் முதல் பெரிய விடுதிகள் வரை பதநீர் கிடைக்க வழி காண்போம். இதைப் பதப்படுத்தி, ஏற்றுமதிக்கு வழிகோலினால் தமிழகம் செழிக்கும். தமிழகக் கிராமப் பொருளாதாரம் மிகப்பெரிய மாற்றங்களைக் காண முடியும். வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்து கொண்டிருக்கிறோமே என்பதை இனியும் உணராமல் இருந்தால் எப்படி?


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp