தவிர்க்க முடியாத தலைவர் சிபுசோரன்

ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன் தலைமையிலான 5 கட்சிக் கூட்டணி புதன்கிழமை பதவியேற்றுள்ளது. அந்த மாநிலம் உருவாக்கப்பட்ட 9 ஆண்டுகளில் 7}வது முறையாக அமைந்துள்ள அரசுக்க

ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன் தலைமையிலான 5 கட்சிக் கூட்டணி புதன்கிழமை பதவியேற்றுள்ளது. அந்த மாநிலம் உருவாக்கப்பட்ட 9 ஆண்டுகளில் 7}வது முறையாக அமைந்துள்ள அரசுக்கு சிபுசோரன் தலைமை வகிக்கிறார். மாநிலத்தில் இதுவரை அமைந்துள்ள அரசுகள் எல்லாமே கூட்டணி அரசுகள்தான்.

ஜார்க்கண்ட் தனி மாநிலம் கோரி இயக்கம் நடத்திய சிபுசோரன், மூன்றாவது முறையாக முதல்வராகியுள்ளார். இதற்கு முன் 2 முறை அவர் முதல்வரானபோதும் நீண்டநாள் ஆட்சியில் இருக்க முடியவில்லை. தான் ஒரு சிறந்த நிர்வாகி என்பதை அவர் இதுவரை நிரூபிக்காத போதிலும், மீண்டும் அவருக்கு முதல்வராகும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

சிபுசோரனுக்கு வயதாகிவிட்டது; அவரது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி செல்வாக்கை இழந்துவிட்டது என்று பலரும் சொல்லிவந்த நேரத்தில், சட்டப்பேரவைத் தேர்தலில் அக் கட்சி 18 இடங்களை வென்றுள்ளது. இந்நிலையில் 18 இடங்களை வென்றுள்ள பா.ஜ.க.வும், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்களும், ஐக்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்களும், சுயேச்சை எம்.எல்.ஏ. ஒருவரும் சிபுசோரன் அரசை ஆதரிக்க முன்வந்துள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் மிகச் சிறியது. அங்கு 14 மக்களவைத் தொகுதிகளும், 81 சட்டப்பேரவைத் தொகுதிகளும் உள்ளன. ஆனாலும் அங்கு ஆட்சியமைவதற்கான அரசியல் நடவடிக்கைகளைப் பார்த்தால் தேசிய அரசியல் போல் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

காங்கிரஸ் நினைத்திருந்தால் ஜார்க்கண்டில் ஜே.எம்.எம். ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்க முடியும். அதாவது ஜே.எம்.எம்., லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்திருக்க முடியும். இதற்கு அந்தக் கட்சிகளும் தயாராக இருந்தன.

 ஆனால், தற்போதைய சூழ்நிலையில் பிராந்தியக் கட்சிகளுடன் (ஜே.எம்.எம்., ஆர்.ஜே.டி.) கைகோர்க்க காங்கிரஸ் தயாராக இல்லை. இதேபோல உத்தரப் பிரதேச மாநிலத்தில்  சமாஜவாதியுடனோ, பகுஜன் சமாஜ கட்சியுடனோ கைகோர்க்க காங்கிரஸ் விரும்பவில்லை.

2005-ம் ஆண்டு ஜே.எம்.எம். கட்சியுடன் காங்கிரஸ் தேர்தல் கூட்டு வைத்துக்கொண்டது. ஆனால், இந்த முறை கூட்டு வைத்துக்கொள்ளவில்லை. இதற்குத் தார்மிக ரீதியிலான காரணங்கள் ஏதும் இல்லை. சிபுசோரனுக்கு எதிராக மூன்று வழக்குகள் உள்ளன. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கூறியது போல் காங்கிரஸ்}ஜே.எம்.எம். இடையே தேர்தலுக்கு முன் எந்த உடன்பாடும் இல்லை. சிபுசோரனுக்கு எதிராக வழக்குகள் இருந்தபோதிலும் அவருடன் காங்கிரஸ் உறவு பாராட்டி வந்துள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முதன்முறையாக மத்தியில் பதவியேற்றபோது அமைச்சரவையில் சிபுசோரனும் இடம்பெற்றிருந்தார். கொலை வழக்குத் தொடர்பாக அமைச்சர் பதவியை சிபுசோரன் ராஜிநாமா செய்தபோதும் மீண்டும் அவர் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

கடந்த காலங்களில் கோவா, அருணாசலப் பிரதேசம்  போன்ற சிறிய மாநிலங்களில் பிராந்தியக் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அரசியல் நடத்த காங்கிரஸ் தயங்கியதில்லை. இன்னும் சொல்லப்போனால் ஜார்க்கண்டில் 9 சுயேச்சைகள் தலைமையிலான ஆட்சியையே காங்கிரஸ் ஆதரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டுமல்ல; மன்னிக்க முடியாததும்கூட.

மதுகோடா அரசு பதவியேற்றதும், நான், ராஞ்சியில் உள்ள அரசு தலைமைச் செயலகத்துக்குச் சென்றேன். ஏதோ விடுமுறை நாள் போல அந்த இடம் ஆளில்லாமல் பாலைவனம்போல் காட்சியளித்தது. இதுபற்றி நான் விசாரித்தபோது,  எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என்பதால் அனைத்து அமைச்சர்களும் தொகுதிப் பக்கம் சென்றுவிட்டதாகத் தகவல் கிடைத்தது. காங்கிரஸ் போன்ற பெரிய கட்சியின் ஆதரவில் ஆட்சியமைத்துள்ள சுயேச்சைகள் தலைமையிலான அரசு நீண்டநாள் நிலைக்காது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.

ஜார்க்கண்டில் மதுகோடா அரசை தில்லியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுதான் மறைமுகமாக நிர்வகித்து வந்தது என்றுகூடச் சொல்லலாம். பிகார் தேர்தலில் தோல்வி அடைந்து செல்வாக்கை இழந்த லாலு பிரசாத், ஜார்க்கண்டில் தனது செல்வாக்கை நிலைநாட்ட விரும்பினார். லாலு மீதான வழக்குகள் பல, ராஞ்சி நீதிமன்றத்தில்தான் நடைபெற்றுவருகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக மதுகோடா அரசு மீது ஊழல் புகார்கள் எழுந்தன. ரூ. 4 ஆயிரம் கோடி அளவுக்கு அவர் ஊழல் புரிந்துவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. எனவே சிபுசோரனை ஒதுக்கி வைக்க காங்கிரஸ் விரும்பியது தார்மிக அடிப்படையில் அல்ல. அரசியல் காரணம்தான்.

ஹிந்தி பேசும் மாநிலங்களில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க,  தனித்துப் போட்டியிடுவது என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. 2010}ம் ஆண்டில் பிகாரில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும், 2012}ல் நடைபெற உள்ள உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலிலும் எப்படியும் அதிக இடங்களைப் பிடித்து விடவேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி முனைப்பாக உள்ளது. மக்களவைத் தேர்தலில் உ.பி. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்பார்த்ததைவிட அதிக இடங்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதாவது அந்த மாநிலத்தில் அதிக இடங்களை வென்ற தனிப்பெருங்கட்சி என்ற நிலையைப் பெற்றுள்ளது.

கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சி, ராஷ்ட்ரீய ஜனதாதளம் (பிகார்) மற்றும் சமாஜவாதி கட்சியுடன் (உ.பி.) கைகோர்த்தபோது, அதனால் பலன் அடைந்தது அவ்விரு கட்சிகள்தான். தற்போது ஆர்ஜேடி, சமாஜவாதி., ஆகிய இரு கட்சிகளின் செல்வாக்கும் சரிந்துள்ளது. இந்நிலையில் அவற்றுடன் கைகோர்த்து புதுவாழ்வு கொடுக்க காங்கிரஸ் விரும்பவில்லை. மேலும் சிறுபான்மையினரே பிராந்தியக்  கட்சிகளை உருவாக்கியிருந்தனர். ஆனால், அவர்களில் பலர் இப்போது மீண்டும் காங்கிரஸ் பக்கம் வரத் தொடங்கியுள்ளனர். சமீபத்திய தேர்தல்கள் இதைப் பிரதிபலிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் அரசியல் தந்திரத்தை நாம் குறைசொல்ல முடியாது. ஆனால், காங்கிரஸின் அரசியல் சூதாட்டம் எந்த அளவுக்குப் பலன் கொடுக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 2010 பிகார் தேர்தலிலும், 2012 உ.பி. தேர்தலிலும் தனித்துப் போட்டி என்ற காங்கிரஸின் திட்டம் வெற்றி தருமானால், 2014 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை முன்னிறுத்தித்தான் பிரசாரம் நடைபெறும். அதாவது காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்தால் அவர் பிரதமராவது உறுதி.

தனித்துப் போட்டி என்ற கோஷத்தை காங்கிரஸ் கையிலெடுத்துக் கொண்டுள்ள அதேநேரத்தில், பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணியை விரிவுபடுத்தும் நோக்கில் ஜார்க்கண்டில் சிபுசோரன் கட்சியை ஆதரிக்க முன்வந்துள்ளது. நாட்டில் 8 மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பாஜக, இப்போது சிபுசோரனுடன் கூட்டணி அமைத்துள்ளதன் மூலம் ஜார்க்கண்ட் மாநிலத்தையும் தனது ஆளுகைக்குள் கொண்டு வந்துள்ளது எனலாம்.

பாஜகவும் அரசியலில் தார்மிக நெறியைப் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. 2004}ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முதன்முறையாகப் பதவியேற்றபோது ஊழல் பேர்வழிகளை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று பாஜக குரல் எழுப்பியது. மன்மோகன் அரசு சிபுசோரனை இரண்டாவது முறையாக மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டபோது, பாஜக கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. மேலும் சமீபத்திய தேர்தல் பிரசாரத்தின்போது,  சிபுசோரனை கடுமையாக விமர்சித்தும் பாஜக பிரசாரம் செய்தது.

சிபுசோரனை ஆதரிப்பதில் பாஜக முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு கொஞ்சம்கூட இஷ்டம் இல்லை. மேலும் அவரைப் போல கட்சியில் உள்ள வேறு சில தலைவர்களும் சிபுசோரனுடன் கூட்டணி அரசு அமைப்பதை விரும்பவில்லை. சிபுசோரனுடன் கூட்டு சேராமல் இருந்தால் மக்களிடம் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறமுடியும் என்பது இவர்களின் கணிப்பாகும். ஜார்க்கண்டில் ஆட்சியமைக்க வேண்டிய கட்டாயத்தில் பாஜக இல்லை.

 ஜார்க்கண்ட் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அங்கு மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமையக்கூடும். அவ்வளவுதானே!

பாஜகவின் புதிய தலைவரான நிதின் கட்கரி முதன்முறையாகப் புதிய அணுகுமுறையுடன் துணிந்து ஜார்க்கண்டில் கூட்டணி அரசு அமைய ஆதரவு தெரிவித்துள்ளார். அதாவது கூட்டணி வேண்டாம், தனித்தே நிற்போம் என்ற நிலையை காங்கிரஸýம், ஆதரவு கேட்டால் அரவணைப்போம் என்ற நிலையை பாஜகவும் எடுத்துள்ளன.

கனிம வளங்கள் மிக்க ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆதிக்க சக்திகளும், மாவோயிஸ்டுகளும் நினைத்ததைச் சாதிக்கும் திறன்படைத்தவர்கள். ஆனால், அங்குள்ள மக்கள் இதுவரை இல்லாத ஒரு நல்ல அரசைத்தான் எதிர்பார்க்கின்றனர்.

நீரஜா சௌத்ரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com