முரண்பாடு வேறுபாடு படும்பாடு

உலகம் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது. எத்தனை குறைபாடுகள் இருந்தால் என்ன? எத்தனைவிதமான தடைகள் வந்தால் என்ன? உலகம் இன்னும் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது. அதன் முன்னேற்றத்தை யாராலும் எதனாலும் தடுத்து நிறுத்த முடியாது.

உலகம் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது. எத்தனை குறைபாடுகள் இருந்தால் என்ன? எத்தனைவிதமான தடைகள் வந்தால் என்ன? உலகம் இன்னும் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது. அதன் முன்னேற்றத்தை யாராலும் எதனாலும் தடுத்து நிறுத்த முடியாது.

மனிதன் தோன்றிய காலத்திலிருந்து எத்தனை கலவரங்கள், கலகங்கள், புரட்சிகள், போர்கள்! தெய்வத்தின் பெயராலும், சமயத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் சிந்தப்பட்ட ரத்தம் உறைந்து போகாமல் காய்ந்து போகாமல் இருந்திருந்தால் அதுவே மற்றொரு சமுத்திரமாகும். இருந்தாலும் உலகம் இயங்கிக் கொண்டேதான் இருக்கிறது.

இதற்குக் காரணம் என்ன? முரண்பாடுகள். சொல்வது ஒன்று, செயல்படுவது மற்றொன்று. சொல்லுக்கும் செயலுக்கும் இருக்கும் இடைவெளி. இந்த இடைவெளி நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. இந்த இடைவெளியைக் குறையாமல் பார்த்துக்கொள்ளும் சுயநல சக்திகள்; அதன் சூழ்ச்சிக்குப் பலியாகும் பாமர மக்கள்.

தருமபுரி மாவட்டத்திலுள்ள நாயக்கன்கொட்டாயில் இருவேறு சமூகத்தைச் சேர்ந்த இருவர் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஏற்பட்ட கலவரம் பேரழிவில் போய் முடிந்திருக்கிறது. கடந்த நவம்பர் 7 அன்று நடந்த தாக்குதலில் நத்தம் காலனியில் 144 வீடுகளும், கொண்டம்பட்டியில் 90 வீடுகளும், அண்ணாநகரில் 34 வீடுகளுமாக 268 வீடுகள் மற்றும் 54 வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன. கலவரக்காரர்களைக் கண்டு அஞ்சி வீட்டை விட்டே ஓடிவிட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

தேசிய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆணையத்தின் இயக்குநர் வெங்கடேசன் நேரில் பார்வையிட்டு சேதங்களை மதிப்பீடு செய்துள்ளார். "இது ஒரு திட்டமிட்ட வன்முறை' என்றும் கூறியுள்ளார்.

பட்டியல் இனத்தவர் மீது இவ்வாறு திட்டமிட்டு வன்முறையை ஏவுவது என்பது புதிதல்ல. 1968-ஆம் ஆண்டில் கீழ்வெண்மணியில் அரங்கேற்றப்பட்டது. 44 பேர் பெண்மணிகளும், பிள்ளைகளுமாக குடிசையோடு எரிக்கப்பட்டனர்.

கீழத்தஞ்சை மாவட்டத்தில் அது கூலி உயர்வு போராட்டத்தினால் ஏற்பட்டது. மிராசுதாரர்கள் சங்கத்துக்கு எதிரான அந்தப் போராட்டம் கலகமாக மாறியது. அதிலும் தாழ்த்தப்பட்ட மக்களே பாதிக்கப்பட்டனர். அன்றும், இன்றும் அரசும் காவல்துறையும் கைகட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கிறது என்பதே சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

1992 ஜுன் 20 அன்று இதே தருமபுரி மாவட்டத்தில் வாச்சாத்தி கிராமத்தில் சந்தன மரக்கட்டைகளை வீடுகளில் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி வீடுகளில் சோதனை நடைபெற்றது. அப்போது வாச்சாத்தி மக்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது, குறிப்பாக பெண்கள் பலர் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 269 அரசு ஊழியர்கள் குற்றம் புரிந்திருப்பதாக 2011-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இப்போதே 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. எப்போது இந்தப் பழங்குடி மக்களுக்கு நியாயம் கிடைக்கப் போகிறதோ? அதுவரை எத்தனை பேர் உயிரோடு இருக்கப் போகிறார்களோ?

இதே சம்பவத்தன்று வனத்துறையினரைச் சூழ்ந்துகொண்டு தாக்கியதாக 75-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 104 பேர் மீது பதிவு செய்யப்பட்டிருந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ஆதாரம் இல்லை என்று கூறி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் 300-க்கும் மேற்பட்ட வாச்சாத்தி கிராமப் பழங்குடியினர் காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகே அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றத்துக்கும், வீட்டுக்கும் இம்மக்கள் அலைக்கழிக்கப்பட்டும், வழக்கின் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை; இனியும் இந்த வழக்கின் விசாரணையைத் தொடர அனுமதிப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. ஆகவே வாச்சாத்தி கிராம மக்கள் 104 பேர் மீதான வழக்குகளும் ரத்து செய்யப்படுகின்றன என்று உயர் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

இத்தனை ஆண்டுகாலம் இந்தப் பாமர மக்கள் பசியோடும், பட்டினியோடும் அலைக்கழிக்கப்பட்டதற்குத் தண்டனையும், இழப்பீடும் கிடையாதா? அதிகாரமும், செல்வாக்கும் இருக்குமானால் சாதாரண மக்களை அலைய வைக்கலாம், ஆட்டிப் படைக்கலாம், அப்படித்தானே? இப்படிப்பட்ட நிகழ்வுகள் எத்தனையோ? ஊமைகளுக்கு வாய் ஏது?

இந்த நாட்டில் உறவு முறையால் வளர்ந்து வரும் சாதிப் பிரிவுகள் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்திவிட்டன. தாழ்த்தப்பட்ட மக்களும், பழங்குடியினரும் அனுபவித்து வரும் கொடுமைகள் எழுத அடங்காதவை. இந்தப் பாகுபாட்டில் பிறந்த தீண்டாமைக் கொடுமையை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்களும், போராடியவர்களும் வணக்கத்துக்குரியவர்கள்.

"சாதி இரண்டொழிய வேறில்லை' என்றார் ஒளவைப் பிராட்டியார். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்றார் திருவள்ளுவர். "சாதிகள் இல்லையடி பாப்பா' என்ற பாரதியார், "குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாபம்' என்று சாபம் இட்டார். "சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே' என்று அங்கலாய்த்தார் பாரதிதாசன்.

இருந்தாலும், தெய்வத்தின் பெயராலும், சமயத்தின் பெயராலும், சாத்திரங்களின் பெயராலும் இந்தப் பாகுபாட்டை நியாயப்படுத்தும் போக்கு நீண்ட காலமாகவே நடந்து வருகிறது. மனிதருக்குள் ஏற்றத்தாழ்வு என்பது மனிதநேயம் கொண்டோரால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தச் சமுதாயம் ஏன் இப்படி முன்னுக்குப் பின் முரணாக மாறிப் போனது? சமுதாயத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் திரைப்படமாகட்டும், நமது நடுவீட்டில் நாட்டாண்மை செய்யும் தொலைக்காட்சியாகட்டும் காதலைத் தூக்கி வைத்துதான் துதிபாடுகின்றன. தெய்வீகக் காதல் என்றும், "காதல் போயின் சாதல்' என்றும் பாடம் நடத்துகின்றன.

காதலை மையமாக வைத்த படங்களே வெற்றி பெறுகின்றன என்றும், மற்ற படங்கள் வெற்றியடைவதில்லை என்றும் திரைப்பட வட்டாரங்களின் கொள்கை முடிவாக இருக்கிறது. இயக்குநர் சிகரமாக இருந்தாலும், இயக்குநர் இமயமாக இருந்தாலும் இதை மாற்றியமைக்க முடியவில்லை.

இவ்வாறு திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் நாள் முழுவதும் பார்த்து ரசிக்கும் மக்கள், தங்கள் வீடுகளில் வந்துவிட்டால் அந்தக் காதலை ஏற்க மறுப்பது ஏன்? "குய்யோ, முறையோ' என்று கூப்பாடு போடுவது ஏன்? சாதிக் கலவரமாகவும், சமயக்கலவரமாகவும் மாற்றுவது ஏன்? ஏன் இந்த முரண்பாடு? இந்த முரண்பாடுதான் எல்லா வேறுபாடுகளுக்கும் அடிப்படையாக அமைகிறது.

"இந்தக் காலத்தில் யார் சாதி பார்க்கிறார்கள்' என்று பேசும் பெரிய மனிதர்களே சாதிகளை வளர்க்கும் பணியில் ரகசியமாக ஈடுபட்டு வருகின்றனர். சாதிச் சங்கங்களும், அரசியல் கட்சிகளும், இதைத் திட்டமிட்டு வளர்க்கின்றன. "பொதுநலம்' என்ற பெயரால் சுயநலத்தை மட்டுமே சொந்தமாக்கிக் கொண்டவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

தமிழர்களின் பண்பாடு, நாகரிகம் இவற்றின் அடையாளங்கள் அழிந்து வருகின்றன என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகிறது.

தமிழர்களின் பொற்காலமாகப் போற்றப்படும் சங்க காலத்தில் காதல் திருமணங்களே வாழ்வியலாக இருந்தது. தலைவனும், தலைவியும் தனியிடத்துச் சந்தித்து, களவு, கற்பு என்னும் இல்லறவியலை இனிதே பேணினர். இதை "அகப்பொருள்' என்று தொல்காப்பியம் போற்றிப் புகழ்கிறது.

"என் தாயும், உன் தாயும் யாரோ அறியோம்; என் தந்தையும், உன் தந்தையும் என்ன முறையோ? தெரியாது. இருப்பினும், செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் அம்மண்ணின் நிறமாக மாறியதுபோல நம் இருவர் நெஞ்சும் கலந்துபோய்விட்டன' என்ற குறுந்தொகைப் பாடல் அக்காலக் காதல் வாழ்வைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

இந்தக் காதல் அரும்புவதும், வளர்வதும் இயற்கையானது. ஆனால், இன்று திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் காட்டப்படுபவை இயற்கைக்கு எதிரானவை. இப்போது காதலாகக் காட்டப்படுபவை ஒரு மனநோயாளியின் வக்கிரப் பார்வைகள். வேலை வெட்டியில்லாமல் ஒரு பெண்ணின் பின்னால் சுற்றிச் சுற்றி வருவதும், "ஐ லவ் யூ' சொல்லச் சொல்லிக் கட்டாயப்படுத்துவதும் வன்முறையில்லையா?

இந்த வன்முறையினால் செய்யப்படும் திருமணங்கள் நிலைப்பதில்லை. காதல் திருமணங்கள் தோல்வியடைந்து போனதினால் பெரியவர்கள் பார்த்து முடிக்கும் திருமணங்கள் பெருகலாயின. இதனையே,

""பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப'' என்று தொல்காப்பியப் பொருளதிகாரம் கூறுகிறது.

இவ்வளவையும் மீறி இக்காலத்திலும் ஒருசில உண்மையான காதல் திருமணங்கள் நிகழ்கின்றபோது, அதைத் தடுக்கும் அதிரடியான நடவடிக்கைகள் சாதியின் பெயரால் கலவர பூமியாக மாறி வருகிறது. இதைப் பற்றிக் கவலைப்படுகிறவர்கள், கண்டிக்கவும் முன்வர வேண்டாமா?

ஆண்டாண்டு காலமாக அதிகாரம் செலுத்திவரும் ஆதிக்க சாதியினருக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் உயிர்த்தெழுவதைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. இத்தைகய சாதி மறுப்புத் திருமணங்கள் இத்தனை காலமாகக் கட்டிக் காத்து வந்த தங்கள் அதிகார உலகத்தைத் தகர்த்து விடுமோ என்று அஞ்சுகின்றனர். அதற்குக் கொடுக்கப்பட்ட விலையே இந்தக் கொடூர வன்முறைகள்.

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் காலம் மாறிக் கொண்டிருக்கிறது. இந்தக் காலமாறுதலை ஏற்றுக்கொள்வதே அறிவுடைமை. எல்லோரும் எல்லாமும் பெற்று சமத்துவ நிலையை அடைவதை யாராலும் தடுத்து நிறுத்திவிட இயலாது. உலகம் அதை நோக்கியே முன்னேறிக் கொண்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com