ஒலி மாசு: கட்டுப்படுத்துவது யார்

இரு சக்கர வாகனங்களின் விற்பனை உயர்வு, புதிய ரக கார்கள் அறிமுகம்'' என

""இரு சக்கர வாகனங்களின் விற்பனை உயர்வு, புதிய ரக கார்கள் அறிமுகம்'' என அடிக்கடி செய்திகளைக் காணலாம்.

 வாகனம் தயாரிக்கும் நிறுவனங்கள் விற்பனையை அதிகரிக்க பல புதிய வியூகங்களை வகுத்துச் செயல்பட்டு வருகின்றன.

 நாளுக்கு நாள் பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப வாகனங்களும் பெருகிக்கொண்டே வருகின்றன.

 ஆனால், சாலையில் இந்த வாகனங்களால் எழுப்பப்படும் ஒலி அதிகரித்து வருவதை யாரும் கண்டுகொள்ளாதது மிகவும் வருந்தத்தக்கது.

  ஒரு காலத்தில் வீட்டில் சைக்கிள் இருப்பது அபூர்வம் என்ற நிலை இருந்து வந்தது.

 தற்போது வணிகம், வியாபாரம், தொழில் செய்வதற்கு மோட்டார் சைக்கிள் மிகவும் அத்தியாவசியமாகிவிட்டது. 

  நகரமயமாக்கல், தொழிற்சாலைகளின் பெருக்கம் ஆகியவை காரணமாக சுற்றுச்சூழல் மாசைப்போல, ஒலி மாசு பிரச்னையும் அதிகரித்து வருகிறது.

 ஒரு வீட்டில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனரோ, அதற்கு ஏற்ப வாகனங்களும் உள்ளன. இதில் பலர் முறையாகப் பயிற்சி பெற்று வாகனம் ஓட்டுவது கிடையாது.

 எனவே, எந்த சமயத்தில் வாகனத்தில் உள்ள ஒலிப்பானை ஒலிக்கச் செய்ய வேண்டும் என்ற அடிப்படை விஷயம்கூட தெரிவதில்லை.

 பல இடங்களில் மனிதர்கள் இயல்பாகப் பேசாமல் சற்றுக் குரலை உயர்த்திப் பேசுவதுண்டு. அவர்களை சிலர் வேடிக்கை பார்ப்பதுண்டு. எப்போதும் இயல்பாகப் பேச வேண்டும். பேச்சின் ஒலியை டெசிபல் அளவில் குறிப்பிடுகிறார்கள்.

 இயல்பான பேச்சின் அளவு 60 டெசிபல் ஆகும். நீங்கள் பேசுவது 80 டெசிபல்லுக்கு மேலாக இல்லாமல் இருந்தால் காதுகளுக்கு நல்லது. காதுகளின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

 சரி விஷயத்திற்கு வருவோம். இரு சக்கர வாகன ஓட்டிகள் விதவிதமான ஒலிப்பான்களை வாகனத்தில் மாட்டிக்கொண்டு உபயோகித்து வருகிறார்கள்.

 தங்களின் வாகனத்தின் ஒலிப்பான் சத்தத்தை மற்றவர்கள் கேட்க வேண்டும் என பல நேரங்களில் ஒலிப்பானை ஒலிக்கும் பழக்கத்தை பலர் வைத்துக் கொண்டுள்ளனர்.

 ஆட்டோவின் ஒலிப்பான் சத்தத்தை தொடந்து இரு நிமிஷங்கள் கேட்டால் காது செவிடாகிவிடும்.

 மணல் லாரி, செங்கல் லாரி ஓட்டுநர்கள் நெரிசல் மிகுந்த சாலையில் செல்லும்போது, ஒலிப்பானில் வைத்த கையை எடுப்பதில்லை.

  இந்த ஒலி மாசினைக் கட்டுப்படுத்துவது யார்?    காதுடன் காது வைத்து ரகசியம் பேசினால் 20 டெசிபல். இயல்பான பேச்சின் அளவு 50 முதல் 60 டெசிபல் வரை, உரக்கப் பேசினால் 85 டெசிபல்.

 போக்குவரத்து நெரிசல் சந்திப்பில் ஓசை இருந்தால் 90 டெசிபல்தான் இருக்க வேண்டும். தியேட்டர்கள்-ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சிகளில் 120 டெசிபல்தான் இருக்க வேண்டும். இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா? சாலையில் நடந்து சென்றாலோ, இரு சக்கர வாகனம் ஓட்டிச் சென்றாலோ ஒலி மாசிலிருந்து தப்ப முடியாது.

   திருட்டு வாகனம், மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டுவது, விதியை மீறி வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட மீறல்களுக்கு காவல் துறை நடவடிக்கை எடுக்கிறது.

 உபயோகமற்ற வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் வாகனப் போக்குவரத்துத் துறையினர் நடவடிக்கை எடுக்கின்றனர்.

   ஆனால், இந்த ஒலி மாசு பிரச்னைகளுக்கு யார் நடவடிக்கை எடுப்பது எனக் கேட்டால் இரு துறையினரும் நாங்கள் இல்லை எனக் கூறுகிறார்கள்.

 இந்த ஒலி மாசு பிரச்னையை விளையாட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது. காதில் ஓசையை மூளைக்குக் கடத்துவதற்கு ஹேர்செல்கள் மற்றும் உணர்வு நரம்பு உள்ளது.

 நடுக்காதிலிருந்து ஓசை சென்றடைந்த வினாடியில் அதிரும் ஹேர்செல்கள் மிகவும் முக்கியமானவை. இயல்பான ஓசைவரும்போது, ஹேர்செல்கள் இயல்பாக அதிர்வடைந்து, ஓசையை மூளைக்குக் கடத்தும்.

 வெளிக்காது-நடுக்காது மூலம் அதிக ஓசை காதுக்கு வரும்நிலையில், அங்கு கோடிக்கணக்கில் உள்ள ஹேர்செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக மடியத் தொடங்கும்.

 இவ்வாறு மடியத் தொடங்கும் நிலையில், அவை இயற்கையாக மீண்டும் உருவாகாது.

  இதன் விளைவால் கொஞ்சம் கொஞ்சமாக செவித்திறன் இழப்பு விகிதம் அதிகரித்துக் கொண்டே சென்று காது கேளாமை பிரச்னை ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். நீங்கள் உங்கள் ஊரில் இந்தப் பிரச்னை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு  ஏற்படுத்துங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com