காங்கிரஸ், பாஜக ஒத்துழைக்க வேண்டும்

செய்தி ஊடகங்களில் இப்போது அடிபடும் செய்தியே, ஊடகங்களைப் பற்றியதுதான்!

செய்தி ஊடகங்களில் இப்போது அடிபடும் செய்தியே, ஊடகங்களைப் பற்றியதுதான்! ஜீ டி.வி.யின் 2 மூத்த ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது மிகவும் துரதிருஷ்டவசமானது. எவர் ஒருவர் கைது செய்யப்படுவதும் துயரத்தையே தரும். அதற்காக நாட்டில் "நெருக்கடி நிலை' நிலவுவதாக ஜீ டி.வி. தரப்பில் கூறப்படுவது மிகைப்படுத்தலாகவே தெரிகிறது.

 ஜீ டி.வி.யின் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டில்  உண்மையைவிட அரசியலே அதிகம். அவர்கள் இப்படிக் கூறுவதால் போலீஸ்காரர்கள் வழக்கின் தன்மையை மாற்றிவிட முடியாது, நீதிமன்றங்களும் தவறான தீர்ப்பை வழங்கிவிட முடியாது.

 செய்தி ஊடகங்கள் செய்திகளைத் தரும் அவசரத்தில் நூறு தவறுகளைச் செய்தாலும் அதனால் ஆயிரம் நன்மைகள் விளைவதை மறுக்க முடியாது. லஞ்சம் கொடுக்க வந்ததாக ஜீ டி.வி. தரப்பிலும் மிரட்டிப் பணம் பறிக்க முயன்றதாக தொழிலதிபர் ஜிண்டால் தரப்பிலும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

 இருவரும் தங்கள் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களாக விடியோ பதிவுகளைக் காட்டுகின்றனர். ஜீ டி.வி.யின் 2 மூத்த ஆசிரியர்கள் போலீஸ் காவலில் இரண்டு நாள்களைக் கழித்துவிட்டனர்.

 இதில் யார் சொல்வது உண்மை என்று இதுவரை தெளிவாகவில்லை. "யாராக இருந்தாலும் சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்படுவது அவசியம்' என்று மட்டுமே சொல்லத் தோன்றுகிறது.

 அரசியல்வாதிகளிலும் வியாபாரிகளிலும் ஒரு சிலர்தான் ஜீ டி.வி. ஆசிரியர்கள் கைதுக்கு அனுதாபப்படுவார்கள்.

 மற்றவர்களை எல்லாம் ஊழல்வாதிகளாகச் சித்திரிக்கும் ஊடகவியலாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை தீர விசாரித்தால் தெரிந்துவிடும்.

  இந்தக் கைது விவகாரத்தால் பத்திரிகைக் சுதந்திரத்துக்கோ, தனி மனித சட்டப்பூர்வ உரிமைகளுக்கோ, மனித உரிமைகளுக்கோ எந்தக் கெடுதியும் ஏற்பட்டுவிடவில்லை என்பதே உண்மை.

 இந்த விவகாரம் தொடர்பாக, "இந்தியப் பிரஸ் கவுன்சில் தலைவர்'  ஓய்வுபெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு சில முக்கியமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். அதை யாராவது அக்கறையுடன் கேட்பார்களா என்பதே சந்தேகம்தான்.

 அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், செய்தி ஊடகத்தாரிடையே "ஆழ்ந்த, நீண்டகாலத் தொடர்பு' இருக்கிறது. இந்த விவகாரம் அதை வெளியே கொண்டுவரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் தவறுகளைத் திருத்திக்கொள்வதற்கு முன்னதாக கசப்பான சில பாடங்களைக் கற்க வேண்டி நேரும்.

 ******

மத்தியில் அரசியல் சண்டை தொடங்கிவிட்டது. அன்னிய நேரடி முதலீட்டுக்கான எதிர்ப்பு என்பது இந்த விவகாரத்துக்காக மட்டும் அல்ல,வேறு சண்டைக்கும் மூலகாரணமாக இருக்கிறது.

  எதிர்காலக் கூட்டணி எப்படி இருக்கப் போகிறது என்பதற்கு இதில் சில சமிக்ஞைகள் கிடைத்து வருகின்றன.

 மக்களவைக்கு உடனடியாக பொதுத் தேர்தல் வருவதை ஆளும் கூட்டணிக் கட்சிகள் மட்டுமல்ல, எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் பல்வேறு கட்சிகளும் விரும்பவில்லை.

 தி.மு.க., சமாஜவாதிக் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றைச் சரிக்கட்டி, "தங்களை விட்டு விலகுவது நல்லதல்ல' என்பதை வெகு திறமையாக காங்கிரஸ் அறிவுறுத்திவிட்டது.

  2013-இல் பொதுத் தேர்தல் வருவதற்கு 25% வாய்ப்பும், 2014 மே மாதம் வருவதற்கு 75% வாய்ப்பும் இருக்கிறது.

******

ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் காங்கிரஸ் கட்சியும் நன்கு ஒருங்கிணைந்து செயல்பட்டுவருகின்றன.

  பாரதிய ஜனதா தலைவராக கட்கரி நீடிப்பதற்கு கட்சியே பிளவுபட்டு நிற்கிறது. இதை காங்கிரஸ் வெகு சாமர்த்தியமாக தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

 ராம் ஜேத்மலானியை கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்தது குறித்து கட்சித் தலைவர்கள் வாயே திறக்கவில்லை; இருந்தாலும் அடுத்த பதவிக்காலத்துக்குக் கட்சித் தலைவர் யார் என்பதைத் தீர்மானிக்கும்வரை பாரதிய ஜனதாவில் ஏற்பட்ட கலகம் அடங்காது.

  குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகே கட்சிக்குள் ஒற்றுமை ஏற்படலாம்.

******

நம் அனைவருக்கும் ஆசைகள் பல, ஆனால் வாக்கோ ஒன்றுதான்; நான் சிந்திப்பது, பேசுவதெல்லாம் மைய அரசின் நிலைத்தன்மையின் மீது உள்ள அக்கறை காரணமாகத்தான். இப்போதுள்ள பெரிய கூட்டணிகளால் ஆட்சி அமைக்க முடியாமல் போய், இதைவிடச் சிக்கலான "ஜிலேபி' கூட்டணிகள் ஏற்பட்டால் நாட்டின் நிர்வாகம் என்ன ஆவது, அரசின் ஸ்திரத்தன்மை எப்படி இருக்கும் என்றுதான் கவலைப்படுகிறேன்.

 கிளிப்பிள்ளையைப் போல காங்கிரஸýக்கு 140, பாஜகவுக்கு 130, பிற கட்சிகளுக்கு 260 முதல் 270 வரை என்று திரும்பத்திரும்பக் கூறிவருகிறேன்.

  மூன்றாவது அணியில் பிரதமர் பதவிக்குத் தகுதியுள்ளவர்களாக சுமார் 6 பேரும், அவர்களை ஆதரிக்கும் 40 கட்சிகளும் ஆட்சியில் அமர்ந்தால் என்ன நடக்கும் என்று நினைத்துப் பார்த்தே நடுங்குகிறேன்.

******

எல்லா விஷயங்களிலும் எல்லோருமே கருத்து வேற்றுமையை மட்டுமே பேசிக்கொண்டிருக்க முடியாது. இந்த அளவுக்கு உக்கிரமமாகக் கோபத்தை வெளிப்படுத்திச் சண்டை போடும் அளவுக்கு, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு என்பது மிகப்பெரிய பிரச்னையே அல்ல. அன்னிய முதலீட்டாளர்களுக்கு இந்த நாட்டின் மீது நம்பிக்கை ஏற்படவேண்டும். எதிர்கால நன்மைகளுக்காக நிகழ்காலத்தில் நாம் சில தியாகங்களைச் செய்ய வேண்டும்.

 எல்லோரும் பூதாகரமாக சித்திரிப்பதைப் போல அன்னிய நேரடி முதலீட்டால் உள்நாட்டு சில்லறை வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்திவிட முடியாது.

 அதிலும் தங்களுடைய மாநிலத்தில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதா, வேண்டாமா என்பதை அந்தந்த மாநில அரசுகளே தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது. அப்படியிருக்க இதற்கு இவ்வளவு பெரிய எதிர்ப்பு ஏன்?

 முக்கியமான பொருளாதாரப் பிரச்னைகளில் காங்கிரஸ், பாரதிய ஜனதா இரண்டும் அமர்ந்துபேசி இணக்கமான முடிவை எட்ட வேண்டும். பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தொடர்பாக இவ்விரு கட்சிகளிடையே இந்தத் தொடரிலேயே இப்படிப்பட்ட ஒற்றுமை ஏற்பட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

 ஒரு காலத்தில் நாடாளுமன்றத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைப் பெற்றிருந்த இடதுசாரி கட்சிகள் இப்போது இருபதுக்கு வந்துவிட்டது. மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கூட்டணியை திரிணமூல் உதறிவிட்டதால் அடுத்த மக்களவை பொதுத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சிக்குக் கூடுதலாக 10 இடங்கள் கிடைக்கலாம்.

 காங்கிரஸ், பாரதிய ஜனதா மட்டுமல்ல, இடதுசாரி கட்சிகளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

******

இந்தியாவில் மீண்டும் கிரிக்கெட் பக்கம் கவனம் திரும்பியிருக்கிறது. முதல் டெஸ்டில் வெற்றிபெற்றோம், இரண்டாவது டெஸ்டில் தோற்றுவிட்டோம். 

  ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ரிக்கி பான்டிங் ஆட்டத்திலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். இனி சச்சின் எப்போது போகப்போகிறார் என்ற விவாதம் தொடங்கிவிடும். ராகுல் திராவிடும் வி.வி.எஸ். லட்சுமணனும் நல்ல "ஃபார்மில்' இருந்தபோதே ஓய்வுபெற்றுவிட்டனர்.

 2013-ஆம் ஆண்டை நெருங்கிக் கொண்டிருப்பதால் எதையும் ஆக்கப்பூர்வமாகவே சிந்திப்போம். இருபதாண்டுக்கால முதல்தர கிரிக்கெட் போட்டிகளின் பங்கேற்புக்குப் பிறகும் சச்சின் டெண்டுல்கர் உடல் தகுதியுடன் விளையாடுகின்றார். அவரும் அவருடைய அணியும் சிறப்பாக விளையாடி மேலும் பல சாதனைகளைப் படைக்குமாறு வாழ்த்த விரும்புகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com