Enable Javscript for better performance
எளிமை, இனிமை, நேர்மை, திறமை - குஜ்ரால்!- Dinamani

சுடச்சுட

  எளிமை, இனிமை, நேர்மை, திறமை - குஜ்ரால்!

  By இரா. செழியன்  |   Published on : 04th December 2012 02:19 AM  |   அ+அ அ-   |    |  

  இந்தியாவின் முன்னாள் பிரதமர் இ ந்தர்குமார் குஜ்ரால் மறைந்தது அரசியல் துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

   தனிப்பட்ட முறையில் குஜ்ரால் மட்டுமல்ல, அவர் குடும்பமே இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமான பங்கு பெற்றிருந்தது. இப்பொழுதைய பாகிஸ்தான் எல்லைக்குள் - நூறு ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்த பஞ்சாப் மாநிலத்தில் ஜீலம் நகரில் இருந்த குஜ்ராலின் தந்தை அவதார் நாராயண் குஜ்ரால், அன்னை புஷ்பா குஜ்ரால் இருவரும் வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களில் சிறை சென்றவர்கள்.  பெற்றோரின் சுதந்திர எழுச்சி மகன் இந்தர் குமாரிடம் மிகவாகத் தொடர்ந்தது.

    1931-இல் காங்கிரஸ் இயக்கத்தின் ஒத்துழையாமைப் போராட்டத்தில் 12 வயது மாணவனாக இருந்த குஜ்ரால் கலந்துகொண்டு போலீஸôரின் தடியடிப் பிரயோகத்துக்கு ஆளானார். வாழ்நாள் முழுவதும் எங்கு எதேச்சாதிகாரம் தலையெடுத்தாலும் அதை எதிர்த்து நிற்கும் மன உறுதி இளம் வயதிலேயே குஜ்ராலுக்கு வந்துவிட்டது.

   குஜ்ரால், பஞ்சாப் மாநிலத்திலிருந்த லாகூர் ஹெய்லி பொருளாதாரக் கல்லூரியில் சேர்ந்தார். அப்பொழுதே அகில இந்திய மாணவர் அமைப்பின் செயலாளராக இருந்ததுடன் லாகூர் ஹெய்லி கல்லுரி மாணவர் சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்டார். இறுதியாக முதல்தர மாணவராகத் தேர்ச்சிபெற்று வெளிவந்தார்.

   தாம் பெற்ற உயர்தரப் படிப்பையும் பட்டத்தையும் வைத்து வளமான குடும்ப வாழ்வுக்கு அவற்றைப் பயன்படுத்தாமல், தமது உழைப்பையும் திறமையையும் பொதுவாழ்வுக்கு  அர்ப்பணித்தார்.

   1942 ஆகஸ்டு போராட்டத்தில் அவர் சிறை சென்றார். 1945-இல் லாகூர் கல்லூரியில் அவருடன் படித்த ஷீலா பாசின் என்பவரை மணந்தார். பிற்காலத்தில் உருதுக் கவிதைகளை எழுதிய அவருடைய மனைவி பிரபலக் கவிஞராகப் பாராட்டப்பட்டார்.

   1947 இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு குஜ்ரால் குடும்பம் தில்லிக்கு வந்தது. மாநகரின் காங்கிரஸ் இயக்க அமைப்பில் குஜ்ரால் முக்கியப் பங்கு ஏற்றார். 1959-இல் புது தில்லி மாநகராட்சியில் ஐந்தாண்டுக்காலம் துணைத் தலைவராக இருந்தார்.

   1964 முதல் 1976 வரை இரு முறை நாடாளுமன்றத்தின் மாநில அவை உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967-இல் இந்திரா காந்தி ஆட்சியில் நாடாளுமன்ற விவகார-செய்தித் தொடர்பு இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

    1962 முதல் மக்களவை உறுப்பினராக நான் இருந்தேன். எதிர்க்கட்சியினருடன் அடிக்கடி தொடர்பு கொள்வதால் குஜ்ரால் என்னிடம் நெருங்கிப் பழகினார்.

   அவருடன் எனக்கு அப்பொழுது ஏற்பட்ட தொடர்பு நலிவடையாத நீண்டகால நட்புறவாக நிலைபெற்றது. பல்வேறு சமயங்களில் அளவுக்கு மீறி அவர் என்னைப் பாராட்டி எழுதியிருக்கிறார், பேசியிருக்கிறார். அவற்றையெல்லாம் அவருடைய பண்பட்ட பெருந்தன்மை என நினைவில் நான் வைத்துக்கொண்டிருக்கிறேன்.

   1966 ஜூன் மாதத்தில், இந்தியாவின் பொருளாதாரச் சீரழிவைப் போக்க உலக வங்கியின் வற்புறுத்தலால் நாணய மாற்று முறையில் அமெரிக்க டாலருக்கு ஈடாக இந்திய ரூபாய்க்கு இருந்த மதிப்பை 36 சதவிகிதம் திடீரென்று குறைக்க இந்திரா காந்தி முற்பட்டார்; அதைக் காங்கிரஸ் தலைவர் காமராஜ் ஏற்றுக்கொள்ளவில்லை. அமைச்சர்கள் சி.சுப்ரமணியம், அசோக் மேத்தா ஆகியோர் எதிர்த்தனர். ரூபாய் மதிப்பு மிகத்தாழ்வு நிலைக்குக் குறைக்கப்பட்டதை எதிர்த்து குஜ்ரால் நேரடியாகப் பிரதமரிடம் வாதாடினார். அவற்றையெல்லாம் இந்திரா காந்தி ஒதுக்கிவிட்டார்.   

   1969-இல் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டபொழுது, குஜ்ரால் இந்திரா காங்கிரஸýடன்  இணைந்திருந்தார். அதிலும் பிரதமர் இந்திரா காந்தியின் நம்பிக்கைக்கு உரிய நாலைந்து பேர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவில் குஜ்ரால் முக்கியமானவராக விளங்கினார். 

    ஆயினும் கிடைத்த பதவி-மதிப்பு ஆகியவற்றை வைத்து கட்சியின் மேலிடம் செய்வதையெல்லாம் கண்மூடித்தனமாக ஆதரிக்கவோ, அவற்றைத் தவறான முறையில்  பயன்படுத்தவோ குஜ்ரால் என்றும் முன்வந்ததில்லை.  

   அமைச்சரவையைக் கலந்துகொள்ளாமல், இந்திரா காந்தி 1975 ஜூன் 25 நள்ளிரவில் உள்நாட்டு நெருக்கடி கால ஆணைக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை வாங்கி, ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய் உள்பட ஆயிரக்கணக்கானவர்களைச் சிறைகளுக்குள் அடைத்தார். ஒருவரைக் கைது செய்து சிறைத்தண்டனை தருவதற்கு முன்னதாக, கையாளப்படவேண்டிய நீதிமுறைகளான, குற்றச்சாட்டு, சாட்சியங்கள், விசாரணை, தீர்ப்பு ஆகியவை எதையும் கவனிக்காமல் "மிசா' (உள்நாட்டு பாதுகாப்பு பராமரிப்பு சட்டம்) சட்டத்தின் கீழ் பல்லாயிரக்கணக்கானவர்கள், சிறைக் கோட்டங்களில் தள்ளப்பட்டனர்.

   ஜூன் 25 இரவு 2 மணிக்கு உறங்கிக்கொண்டிருந்த குஜ்ரால் எழுப்பப்பட்டார்; மறுநாள் காலை 6 மணிக்கு மத்திய அமைச்சரவையின் அவசரக்கூட்டம் பிரதமர் அலுவலகத்தில் நடைபெறும் என்று அமைச்சரவைச் செயலாளர் செய்தி அனுப்பினார்.

   ஜூன் 26 காலை 6 மணிக்கு பிரதமர் அலுவலகத்துக்கு வந்த அமைச்சர்களுக்கு, எதற்காக அவசரக் கூட்டம் கூட்டப்படுகிறது என்பது புரியவில்லை. இந்திரா காந்தி காலை 6 மணிக்கு அலுவலகத்துக்கு வந்து, ""மிகவும் தேவைப்பட்ட காரணத்தால், முந்தைய இரவில் உள்நாட்டு நெருக்கடி கால உத்தரவு குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டது'' என்று  கூறினார், அங்கு வந்திருந்த அமைச்சர்களுக்கு, வெளிநாட்டு விவகாரம் குறித்து ஒரு நெருக்கடிகாலப் பிரகடனம் அமலில் இருக்கும்பொழுது, அதற்கு மேலும் எதற்காக ஒரு நெருக்கடிகாலப் பிரகடனத்தை வெளியிடவேண்டும் என்பது புரியவில்லை. வந்த அமைச்சர்கள் திகைப்புடனும் குழப்பத்துடனும் பிரிந்து சென்றனர்.

   அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின் வெளியே வந்த குஜ்ரால், ஒரு எதிர்பாராத சச்சரவுக்கு ஆளாக்கப்பட்டார். அதுபற்றி, இந்திரா காந்தியின் நீண்டகால நெருங்கிய நண்பராக இருந்த புபுல் ஜெயகர் எழுதிய ""இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு'' என்ற ஆங்கில நூலில் அடங்கியுள்ள விவரங்கள் இங்கு தமிழில் தரப்படுகின்றன.

    ""எவரும் எதிர்பார்க்காத நெருக்கடி கால அறிவிப்பு குறித்து ஐ.கே.குஜ்ரால் மிகவும் ஆச்சரியப்பட்டார். பத்திரிகைச் செய்திகளைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சட்டம் இல்லாத நிலைமையில் என்ன செய்வது என்று செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சர் என்ற முறையில் குஜ்ரால் கவலைப்பட்டார். 

   குஜ்ரால் வெளிவந்தபொழுது, எதிரே மிகவும் ஆங்காரத்துடன் சஞ்சய் காந்தி நின்றுகொண்டு அவரைப் பார்த்துச் சொன்னார் - ""தொலைக்காட்சியில் செய்தி அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முன்னதாக என் பார்வைக்கு அவற்றை அனுப்பி வைக்க வேண்டும்'' என்று.

    உடனடியாக குஜ்ரால் பதிலளித்தார், ""அப்படி முன்கூட்டி அனுப்புவது இயலாத ஒன்று. தொலைக்காட்சி அறிவிப்புகள் மிகவும் ரகசியமானவை. வெளியிடுவதற்கு முன் அவற்றை யாருக்கும் காட்ட முடியாது''.

    இவ்வாறு காரசாரமான விவாதம் நடைபெறும்பொழுது, இந்திரா காந்தி அங்கு வந்து, ""என்ன விவகாரம்?'' என்று கேட்டார். செய்தி அறிவிப்புகளை முன்கூட்டித் தரக்கூடாது என்பதற்குத்  தொலைக்காட்சி விதிமுறைகளை குஜ்ரால் விளக்கமாகக் கூறினார். இந்திரா காந்தி, ""அதைக் கவனிக்கலாம்'' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அதன்பின் குஜ்ரால் வீடு திரும்பினார்.

    அத்துடன் சஞ்சய்-குஜ்ரால் வாக்குவாதம் முடியவில்லை. புபுல் ஜெயகர் மேலும் எழுதியதாவது: "மீண்டும் பிரதமர் இல்லத்துக்கு வருமாறு குஜ்ரால் அழைக்கப்பட்டார். குஜ்ரால் வந்தபொழுது பிரதமர் அங்கு இல்லை. அங்கு இருந்த சஞ்சய் காந்தி குஜ்ராலைப் பார்த்துச் சொன்னார். ""காலைத் தொலைக்காட்சியில் மக்களுக்குப் பிரதமர் தந்த அறிக்கை எல்லா அலைவரிசைகளிலும் சரியாக வெளிவரவில்லை''.

    சஞ்சய் காந்தி பேசியதை குஜ்ராலால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உடனே குஜ்ரால் கூறினார் - ""என்னிடம் நீ பேசுவது என்றால், முதலில் மரியாதையாகப் பேசக் கற்றுக்கொள். என் மகனைவிட வயது குறைந்தவன் நீ. உன்னிடம் எத்தகைய விளக்கத்தையும் தரவேண்டிய அவசியம் எனக்கு இல்லை'' என்று குஜ்ரால் கடுமையாகக் கூறிவிட்டு வேகமாகத் தம் வீட்டுக்குத் திரும்பினார். அத்துடன் தமது அமைச்சர் பதவியைவிட்டு விலகிவிடவும் முடிவு செய்தாராம். அதை அறிந்த அவருடைய நெருங்கிய நண்பர்கள் அவரை அமைதிப்படுத்தினார்கள். ஆனால், அதற்குப் பிறகு வேறொரு துறையின் அமைச்சர் பதவிக்கு குஜ்ரால் மாற்றப்பட்டுவிட்டதாக, பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தார்.

    இந்த விவரம் புபுல் ஜெயகர் எழுதிய நூலில் இருக்கிறது.

    குஜ்ராலுக்குப் பதிலாக செய்தி-ஒலிபரப்புத் துறையின் அமைச்சராக வித்யா சரண் சுக்லா நியமிக்கப்பட்டார். சஞ்சய் காந்தி எள் என்றால் எண்ணையாக ஆகிவிடுவார் சுக்லா. பல்வேறு வகைகளில் செய்தி நிறுவனங்களை - பத்திரிகையாளர்களைக் கடும்  கட்டுப்பாட்டுக்கும் அடக்கு முறைக்கும் ஆளாக்கி வைத்தார். அவர் காலத்தில் இந்தியாவின் செய்தித்துறை எந்தச் செய்தியையும் சுதந்திரமாக வெளியிட முடியாதபடி இருண்ட சிறையில் அடைக்கப்பட்டது.

    பிரதமராக இந்திரா காந்தி இருந்தாலும், நெருக்கடி காலத்தில் சஞ்சய் காந்திதான் ஆட்சி நடத்தினார் என்பதை உணர்ந்த நெருங்கிய நண்பர்கள் குஜ்ராலை அவ்வப்பொழுது அமைதிப்படுத்தினார்களாம். 1976-இல் ரஷிய நாட்டின் இந்தியத் தூதராக குஜ்ரால் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு சஞ்சய் காந்தியின் ஆதிக்கம் குஜ்ரால் பக்கம் செல்லவில்லை.

    1977 மார்ச் மாதத்தில் பொதுத்தேர்தலுக்குப் பிறகு மொரார்ஜி தேசாய் தலைமையில்  ஜனதா ஆட்சி அமைந்தது, அப்பொழுது வெளிநாட்டுத் தூதர்களை மாற்றிடும் முறை  ஆரம்பித்தது. பலரை மாற்றினாலும், ரஷியாவில் இந்தியத் தூதராக குஜ்ரால் நீடிப்பது நல்லது என்று ஜனதா மந்திரிசபை ஒருமனதாக முடிவு செய்தது. 

    ஜனதா அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சியில் சரண்சிங் - சஞ்சய் செய்து கொண்ட ஏற்பாட்டால் மொரார்ஜி தேசாய் அமைச்சரவை கலைக்கப்பட்டது., 1980 பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி மீண்டும் பிரதமராக ஆனார். அப்பொழுது, 1977-80 இல் ஜனதா அமைச்சரவையின் நம்பிக்கையைப் பெற்றுவிட்ட குஜ்ராலுக்கு, இந்திரா அமைச்சரவையில் எத்தகைய இடமும்  இருக்காது என்பது எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரிந்த ஒன்றாகும். குஜ்ராலும் எந்த அரசாங்கப் பதவியையும் எதிர்பார்க்கவில்லை.

    1984 அக்டோபர் 31 அன்று இந்திரா காந்தி அவருடையப் பாதுகாப்புக் காவலர்கள் இருவரால் சுடப்பட்டு இறந்ததும், ராஜீவ் காந்தி பிரதமராக ஆனார்.

    1984-85 இல் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் அதற்கு முன்பு ஜவாஹர்லால் நேரு உள்பட எவரும் அடைந்திராத அளவுக்கு 523 உறுப்பினர்கள் கொண்ட மக்கள் சபையில் 403 இடங்களைப்பெற்று ராஜீவ் காந்தி பிரதமராக ஆனார். ஆயினும் ராஜீவ் ஆட்சியில் ஏற்பட்ட போஃபர்ஸ் ஊழல் காரணமாக 1989 தேர்தலில் அவருக்குப் பலமான தோல்வி கிடைத்தது.

    இதுவரை வந்துள்ள சுதந்திர இந்தியாவின் மத்திய ஆட்சி அமைப்பில், 1989-க்குப் பிறகு தனிப்பட்டு எந்தக் கட்சியும் பொதுத்தேர்தலுக்குப் பிறகு மக்களவையில் பெரும்பான்மை பலத்தைப் பெற்றதில்லை. 1989 டிசம்பர் 2 முதல் 1998 மார்ச் 19 வரை மத்தியில் 6 அமைச்சரவைகள் மாறியிருக்கின்றன. பிரதம மந்திரி, அவரின் கட்சி, கால அளவு ஆகியவற்றின் விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

    வி.பி.சிங். - ஜனதாதளம் - 1989 டிசம்பர் 2 முதல் 1990 நவம்பர் 10 வரை.

    சந்திரசேகர் - ஜனதாதளம் - 1990 நவம்பர் 10 முதல் 1991 ஜூன் 21 வரை.

    நரசிம்மராவ்  - இ.காங்கிரஸ் - 1991 ஜூன் 21 முதல் 1996 மே 16 வரை.

    வாஜ்பாய் - பிஜேபி - 1996 மே 16 முதல் 1996 ஜூன் 1 வரை.

   தேவகெüடா - ஜனதாதளம் - 1996 ஜூன் 1 முதல் 1997 ஏப்ரல் 21வரை.

   குஜ்ரால் - ஐனதாதளம் - 1996 ஏப்ரல் 21 முதல் 1997 மார்ச் 19 வரை.

   இவைகளில் வி.பி.சிங், தேவகெüடா ஆட்சிக் காலங்களில் குஜ்ரால் வெளியுறவு அமைச்சராக இருந்தார்.

    தேவகெüடா ஆட்சி கவிழ்ந்ததும் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து எடுத்த முடிவில் ஐ.கே. குஜ்ரால் சுதந்திர இந்தியாவின் பனிரெண்டாவது பிரதம மந்திரியாக 1997 ஏப்ரல் 21-ம் தேதி பதவி ஏற்றார்.  

   அதற்கு முன்பு அவர் ஏற்றுக்கொண்ட பல்வேறு பொறுப்புகளில் குறிப்பாக, வெளிநாடுகளில் இந்தியத் தூதராகவும், வெளியுறவு அமைச்சராகவும் இருந்து பெற்ற அனுபவமும் உலக அளவில் தரப்பட்ட மதிப்பும் நம்பிக்கையும் அவரைப் பிரதம மந்திரியாக ஆக்குவதற்கு துணை செய்தன.

    குஜ்ரால் பிரதமராக இருந்த கால அளவு ஓராண்டுக்கும் குறைவானதே என்றாலும், வெளிநாட்டு உறவில் முக்கியமான ஒரு கொள்கையை உண்டாக்கினார். வெளிநாட்டுத் தொடர்பு என்றால், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் என வளர்ச்சியடைந்த நாடுகளுடன் உறவு கொள்வதில் இந்தியா முனைப்பாக இருந்தது. இந்தியாவுக்கு அண்மையில் இருக்கும் பர்மா, நேபாளம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானம், மத்திய-தென்கிழக்கு நாடுகள் ஆகியவற்றுடனும் நல்லுறவை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று குஜ்ரால் வகுத்தார்.

   குஜ்ராலிடம் எளிமை இருந்தது, இனிமை இருந்தது, பொறுமை இருந்தது. எல்லாவற்றையும்விட நேர்மை, திறமை கலந்து இருந்தன. நேர்மை இருந்து திறமை இல்லாதவரின் செயல்பாடு சிறப்படையாமற் போகலாம். அதேபோல் திறமை இருந்து நேர்மை இல்லாதவரால் மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறமுடியாதபடி ஆகிவிடும். நேர்மை, திறமை ஒன்றுபட்டு இருந்த காரணத்தினால்தான், குஜ்ராலின் பொதுவாழ்வு இன்றும் போற்றப்படத்தக்கதாக இருக்கிறது..

   2012 நவம்பர் 30-ஆம் நாளன்று அவர் மறைந்தார். இன்னும் நான்கு நாள்கள் அவரின் உடல் நலம் தாங்கியிருந்தால், 2012 டிசம்பர் 4-ஆம் தேதியன்று அவருக்கு 94 வயது நிறைவடைந்திருக்கும்.

    எவ்வளவு காலம் ஒருவர் வாழ்ந்தார் என்பதைவிட, இருந்த வாழ்வில் எந்த அளவு மற்றவர்களுக்காக வாழ்ந்தார் என்பதுதான் முக்கியமானது. 

   குஜ்ரால் வாழ்ந்த காலத்தில் அவரை அனைவரும் வாழ்த்தும் வகையில் நிறைவான வாழ்வை அவர் பெற்றிருந்தார். அவர் மறைந்தாலும் அவருடைய பெயர் இந்திய அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. 


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp