நவம்பர் மாத நாள்குறிப்புகள் மறப்பானேன்?

விண்வெளித் தொலைக்காட்சி'க்கு இது பொன்விழா ஆண்டு. 1962-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், புவி எல்லைகள் கடந்து, அடி வானத்துக்கு அப்பாலும் "தொலைக்காட்சி அலை' வீசிற்று.

விண்வெளித் தொலைக்காட்சி'க்கு இது பொன்விழா ஆண்டு. 1962-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், புவி எல்லைகள் கடந்து, அடி வானத்துக்கு அப்பாலும் "தொலைக்காட்சி அலை' வீசிற்று. ரஷியாவின் ஆண்டிரியன் நிக்கோலயெவ் (வாஸ்டாக்-3), பாவெல் பாப்போவிச் (வாஸ்டாக் -4) ஆகிய இரண்டு விண்கல வீரர்கள் விண்ணில் சந்தித்த வரலாற்று நிகழ்ச்சியே உலகின் முதல் "விண்வெளித் தொலைக்காட்சி'. அதனை ஒளிபரப்பியவர் ஆண்டிரியன் நிக்கோலயெவ்.

இவர் 1963 நவம்பர் 3 அன்று வாலென்டினா தெரஸ்கோவா என்னும் உலகின் முதல் விண்வெளி வீராங்கனையை மணந்தார் என்பது துணுக்குச்செய்தி.

உலகத் தொலைக்காட்சி நாள் ஆண்டுதோறும் நவம்பர் 21 என்று கொண்டாடப்பட்டு வருகின்றது. 1966-ஆம் ஆண்டு இதே நாளில்தான் ஐக்கிய நாடுகளின் முதலாவது உலகத் தொலைக்காட்சிப் பேரவை மாநாடு நடத்தப்பட்டது.

இயல்பாகவே இந்திய விண்வெளியின் தொடக்கப் புள்ளியும் நவம்பர் 21 தான். முதல் ஏவூர்தி நம் மண்ணில் இருந்து சீறிக்கிளம்பிய நாள் 21-11-1963. உலக விண்வெளியின் இந்தியக் கருவறை, தும்பா என்கிற மீன்பிடி கிராமம். அதன் உருவாக்கத்தில் தேசப்பற்று கொண்டு உதவிய தயாபர உள்ளங்களை இன்றும் வாழ்த்துகிறோம்.

பாருங்கள், இன்னொரு பொருத்தம். உலக மீன்வள தினமும் நவம்பர் 21 தானே. இதற்கு மத்தியில் பாரதத் தாயின் பாதம் அருகில் தனக்கு "அரிப்பு' ஏற்படும்போது எல்லாம் இந்திய மீனவர்களைச் "சொறிந்து விட்டுக்கொண்டே' இருக்கிறது துளி நாடு. புத்த நாட்டுக் கொடியிலோ ஆயுதம் ஏந்திய ஒற்றைச் சிங்கம்!

சமீபத்தில் இத்தாலி நாட்டுக் கடற்படையால் வீணாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர் இந்திய மீனவர்கள் சிலர். அவர்களைக் கொன்றவர்கள் தங்கள் அன்னிய தேசியக் கொடியுடன் "ஃபார்முலா ஒன்' பந்தயத்தில் இங்கு வெற்றிவலம் வந்தார்கள். உங்களையே நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள். இந்தியப் படை, இத்தாலியரைக் கொன்றுவிட்டு இந்தியக் கொடியுடன் அந்நாட்டில் உலா வர முடியுமா?

வரி ஏய்ப்புக்காக இத்தாலியில் முன்னாள் அதிபர் தண்டிக்கப்படுகிறார். இதே கதை இந்தியாவில் நடக்குமா?

ஆனாலும் இந்திய விண்வெளியின் பத்தாம் ஆண்டு தினத்தை ஒட்டி எமக்கு ஒரு பசுமையான நினைவு. தும்பா ஏவூர்தி உந்துபொருள் தயாரிப்புக் கூடத்தில் எம் அறிவியல் பணி தொடங்கிய வெள்ளி நாள் நவம்பர் 19. (1973 நவம்பர் 21 ஞாயிற்றுக்கிழமை ஆயிற்றே!). உள்ளபடியே, சர்வதேச ஆடவர் தினமும் இதே நவம்பர் 19 அல்லவா?

இந்திய முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா, கொலம்பியா விண்வெளி ஓடத்தில் தமது முதல் பயணம் மேற்கொண்ட நாளும் 1997 நவம்பர் 19. பூமியை 252 முறை சுற்றிவந்தவர்.

இன்றைக்கு இந்திய குஜராத் வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி திரும்பிய நாளோ 2012 நவம்பர் 19. அங்கு 127 நாள்கள் தங்கிய சாதனையாளர். விண்வெளியில் பறந்தபடியே, இந்தியர்களுக்குத் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் என்பது ஒளி மத்தாப்புச் செய்தி. ஏற்கெனவே பல்வேறு பயணங்களில் மொத்தம் 322 நாள்களை விண்வெளியில் செலவழித்த பாக்கியவதி. அவ்வப்போது விண்கலனுக்கு வெளியே அண்டவெளி இருட்டில் அந்தரத்தில் ஏறத்தாழ 51 மணிநேரம் மிதந்தும் சாகசம் படைத்தவர்.

இதே நவம்பர் 19, நம் நாட்டின் முதல் பெண் பிரதமர் இந்திரா அம்மையார் நினைவுதினம் வேறு; தேச ஒருமைப்பாட்டு தினமும் கூட.

பஞ்ச (ஐந்து) நதிகள் பாயும் மாநிலத்தில் ஆயுதவாதிகள் மீது அரசு நடத்திய "நீல நட்சத்திர'த் தாக்குதலே இன்று சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. அதனை இன்று அபத்தம் என்று விமர்சிக்கிறார் மாநிலப் பெண் துணை முதல்வர். நவம்பர் 19 அன்று அதே "போராட்ட இனக் காவலர்கள்' இருவர் முன்னாள் பெண் பிரதமரைச் சொந்த வீட்டு வளாகத்திலேயே சுட்டுக் கொன்றனரே, அதை நியாயம்தான் என்கிறாரோ என்னவோ?

நம் ராணுவ வீரர்களைக் கொன்ற போராட்டவாதிகள் தியாகிகளாம். அவர்களுக்குத் "தங்க(ள்) ஆலய' வளாகத்தில் குலதெய்வ அந்தஸ்தும் அளிக்கப்படுகிறது. பச்சைத் துரோகம்.

அதே பஞ்ச நதி மாநிலத்தில் சாராய ஆறு பாயவிட்ட இதே இன வியாபாரிகளை அதே இனக் காவலாளி சுட்டுக் கொலை செய்ததும் 2012 நவம்பர் 17. அவர்தம் பண்ணை வளாகத்திலேயே கொலை; முன்னாள் பிரதமர்க்கு உண்டான அதே நிலை. குருநானக் ஜெயந்தியும் இதே நவம்பர் 28 அன்று கொண்டாடப்பட்டது.

ஏதாயினும், 2008-ஆம் ஆண்டு "குழந்தைகள் தினம்', இந்தியத் தேசியக் கொடி நிலாவில் பதிந்த வெற்றி நாள் ஆயிற்றே.

நேரு பிறந்த நவம்பர் 14-ஆம் நாள் சந்திரயானின் "நிலா மோதுகலன்' நிலாவில் விழுந்ததைப் பலர் மறந்தும் இருக்கலாம்.

இந்த நிலையில், இந்தியத் தொல்பொருள் ஆய்வாளரும் லண்டன் ராயல் கழகப் பேராளரும் ஆகிய பீர்பால் சாஹ்னி பிறந்த நாள் நவம்பர் 14 (1891) என்று யார் நினைத்துப் பார்த்தார்களோ?

உலக நீரிழிவு நோய் தினம் நவம்பர் 14 என்றாவது தெரிந்து கொள்வோம்.

அவ்வளவு ஏன், இந்திய முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பயின்ற சென்னை மருத்துவக் கல்லூரி 1664 நவம்பர் 16 அன்றுதான் நிறுவப்பட்டது. அந்நாளில் புனித ஜார்ஜ் கோட்டையில் தொடங்கப்பட்ட முதல் பிரிட்டிஷ் மருத்துவக் கூடம். கிழக்கிந்திய ராணுவ வீரர்களுக்குச் சிகிச்சை வழங்குவதற்காக சர் எட்வர்ட் விண்டர் உருவாக்கியது.

நவ(ம்பர்) பாரத வரலாற்றில் பறவையியல் ஆர்வலரும் ஆய்வாளரும் ஆன சலீம் அலி பிறந்ததும் நவம்பர் 12 (1986).

பாரதியாரால் பாடப்பெற்ற ஜகதீஷ் சந்திர போஸ் பிறந்த நாள் நவம்பர் 30 (1858).

கொடி நாள் நவம்பர் 30.

என்றாலும் 1930 ஆம் ஆண்டு நோபல் பரிசு வாங்கச் சென்ற சுவீடன் மகாபெரும் சபையில் தனது தாய்நாட்டுக்குச் சொந்தமாகத் தேசியக் கொடி இல்லையே என்று வருத்தப்பட்டாரே சர் சி.வி. ராமன், அவர் பிறந்த நாளும் நவம்பர் 7 (1888), இறந்ததும் நவம்பர் 21 (1970) ஆயிற்றே.

நம் நாட்டில் தேசியக் கல்வி தினம் நவம்பர் 11. இருந்தாலும், உலக அறிவியல் தினம் நவம்பர் 10 என்பதும் முத்திரைச் செய்தி. உலக அமைதிக்கும் மேம்பாட்டுக்கும் உரிய யுனெஸ்கோ தினம். அதிலும் "சமூக, பொருளாதார, கலாசார, அரசியல் அமைப்புகளில் அனைத்து நாடுகள் இடையே தொடர்பு, கூட்டுறவு, மறுமலர்ச்சிக்கான உலகளாவிய வளங்குன்றாத் திறம்' நிலைபெற வேண்டும். இதுவே இந்த ஆண்டு மையக் கருத்தாக அறிவிப்பு ஆனது.

ஆனால் இதே ஆண்டில்தான் நார்வே நாட்டில் இந்தியத் தம்பதியரின் குழந்தைகளை அந்நாட்டு அரசு கடத்திச் சென்றது. குழந்தை நல விதிகளின்படி சரியான விளையாட்டுப் பொம்மை, உடை, வீடு ஆகிய வசதிகள் வழங்கப்படவில்லை என்றாலே குற்றமாம். 3 வயது மகனுக்குத் தனிப் படுக்கை கொடுக்க வேண்டும். அம்மா - அப்பா பக்கத்தில் உறங்கச் செய்தால் கடுங்குற்றம்.

அதிலும் மடியில் கிடத்தி பாலூட்டும் தருணத்தில் அன்னை, குழந்தையின் தலையை மட்டும் தாங்கிப் பிடித்தபடி அமர்ந்து இருப்பது வன்முறையாம். பாலூட்டும்போதும் அரசாங்கமே பக்கத்தில் நின்று உற்று நோக்கும்போல.

அமெரிக்காவில் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் துறையினால் இந்தியக் குழந்தை பறிக்கப்பட்டது. ஒரு நாட்டில் பிள்ளையைத் தனியே கட்டிலில் படுக்க வைக்கிறது சட்டம். இன்னொரு நாட்டில் அதனால் குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்தால் குற்றம். தாயிடம் இருந்து குழந்தையைப் பறிக்கும் நாடுகளின் தாயுணர்வு பற்றி நமக்கு ஏன் வம்பு? "பெரிய' பிள்ளைகளுக்கும் டாலர் போதை ஊட்டி, பெற்றோரை மறுதலிக்கச் செய்யும் நாடுகள் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

அயர்லாந்தில் கருக் கலைப்பு மத விரோதக் குற்றமாம். எந்தக் காரணத்திற்காகவும் கருவறையில் வளரும் சிசுவை அகற்றுதல் ராஜ விதிகளுக்குப் புறம்பானதாம். நல்ல நம்பிக்கை. குறை உயிரால் முழு உயிருக்கு ஆபத்து என்றால், எது முக்கியம்? வாழ்ந்துகொண்டு இருக்கும் பெரிய உயிரா, கருவில் உருவாகும் சின்ன உயிரா என்று விவாதிப்பானேன்? ""(தொப்பூள் கொடி ஆகிய) "பற்றுட (சேயொட்டுத் திசு) அற்ற கண்ணே பிறப்பு (தனிப்பிறவி). அறுக்கும் மட்டும் (சிசுவிற்கும்) நிலையாமை காணப்படும்'' என்ற வள்ளுவர் அறிவியல் சும்மா இல்லை. எதுவானாலும், அயர்லாந்து இந்திய அன்னையைக் கொன்றது மத்திய ஐரோப்பியப் பழஞ்சாண் விதிமுறை.

இந்த லட்சணத்தில் நவம்பர் 25 அன்று சர்வதேசப் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள் என்றும் சொல்கிறோம்.

வெளிநாட்டில்தான் இந்தக் கொடுமை என்று இல்லை. இங்கும் சிங்க மராட்டியர் இடையே புலிக் கொடியுடன் "மண்ணின் மைந்தர்' முழக்கம் செய்தவர் பூர்ண ஆயுளில் 17-11-2012 அன்று மறைந்தார். மறுநாள் இறுதி அஞ்சலியை ஒட்டி இளம்பெண்கள் இருவர் தங்கள் "முகநூலில்' சுதந்திரமாகக் கருத்துப் பரிமாறியதில் யாருக்கு என்ன எரிச்சலோ? சட்ட விதிகளுக்குப் புறம்பாக இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டதுதான் மிச்சம். அவர்களை விடியலில் விடுவித்து என்ன பயன்? சர்வதேசச் சிறுமிகள் தினம்தான் நவம்பர் 14 அன்று கொண்டாடி விட்டோமே.

இந்தியாவில் நீதி சேவை தினம் என்னவோ நவம்பர் 9 தான். ஆனாலும், 1949 நவம்பர் 26 அன்று இந்திய அரசியல் சாசனம் நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது. அதனாலேயே நவம்பர் 26 தேசச் சட்ட நாளாக அனுசரிக்கப்பட்டும் வருகின்றது.

தெரிந்தோ தெரியாமலோ, 2008 நவம்பர் 26 அன்று தீவிரவாத மும்பைத் தாக்குதல் நடந்தது. அதில் கைது ஆனவனுக்குத் தண்டனை நிறைவேறிய நாள் நவம்பர் 21 (2012). இருக்கட்டும்.

அருணாசலப் பிரதேசத்தையே, "சீன ஆக்கிரமிப்பில் இந்தியா' என்கிறபடி எழுதிக் கடவுச் சீட்டு வழங்குகிறது அண்டை நாடு. பிரம்மபுத்திரா நதிநீர்த் தாவா தீரவில்லை. ஏற்கெனவே ஒட்டுக் கேட்க உதவும் செல்பேசி, நாய்த் தீனிப் பண்டங்கள், காலைக் கடிக்கும் மலிவான செருப்புகள், குழந்தைகள் கடித்து விளையாட நச்சு வேதிப் பொம்மைகள் என்று பெரிய வர்த்தகத்தில் நம்மை மழுங்கடித்து ஆயிற்று. அன்னிய நேரடி முதலீடும் வந்தால் நல்லதுதானே! உள்நாட்டிலேயே நம் குழந்தைகளை அன்னிய அடிமை வேலைக்கு அனுப்பலாம். நமக்குத் தேவை பணம்?

ஆனாலும், சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்னம் திருநெல்வேலி சந்திப் பிள்ளையார் முக்கில் அரசு காட்டிய இலவசத் திரைப்படம்தான் மனதில் ஓடுகிறது. "சிங்க நாதம் கேட்குது, சீன நாகம் ஓடுது' என்று சிம்மக் குரலோன் கர்ஜனைக் காட்சிகள். 1962 நவம்பர் 20 அன்று சீனாவைத் தனது ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்கச் செய்தது இந்திய ராணுவம். அந்த வீரர்களுக்கு வெற்றிப் பொன்விழா வேண்டாம். நினைவாஞ்சலி கூடவா சாத்தியம் இல்லாமல் போனது?

நம் ஊடகங்களுக்கோ பழம் நடிகைப் பாட்டிகளின் பேட்டிகள், பண்டிகைப் பட்டிமன்றங்கள் நடத்தவே நேரம் இல்லை. ஆட்சியாளர்களோ செய்வதையும் செய்துவிட்டு, எதிர்த்துப் பேசும் எதிரிக் கட்சிகளை என்ன விலைக்கு வாங்கலாம் என்று வெளிநாடுகளில் "ரூம் போட்டு' யோசிக்கிறார்களே?

நமக்குத்தான் இருக்கவே இருக்கிறது, நவம்பர் 16. வேறு என்ன, சர்வதேச சகிப்பு தினம். அதுவும் மறந்து போயிற்றா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com