எரியும் நெருப்பில் எண்ணெய்...

இந்த முறை சாதிய வன்முறைக்கு இலக்கானது வடக்கு மண்டலம். பெரும்பாலும் தென் மண்டலத்தில் மட்டும் நிகழும் சாதிய வன்முறை அண்மையில் தருமபுரி மாவட்டத்தில் அரங்கேறியது.

இந்த முறை சாதிய வன்முறைக்கு இலக்கானது வடக்கு மண்டலம். பெரும்பாலும் தென் மண்டலத்தில் மட்டும் நிகழும் சாதிய வன்முறை அண்மையில் தருமபுரி மாவட்டத்தில் அரங்கேறியது. அங்கிருக்கும் நாயக்கன்கொட்டாய் கிராமத்தில் இருவேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு சம்பவங்களின் காரணமாக, பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டதும், தொடர்ந்து நடைபெற்ற கலவரமும், வன்முறைச் சம்பவங்களும் நாடறிந்ததே.

காதல் திருமணத்தால் மட்டுமே நிகழ்ந்ததாக இந்தச் சம்பவத்தைக் கருதிவிட முடியாது. சிலரின் திட்டமிட்ட செயலும் இதற்குக் காரணம். கலவரத்தால் ஏராளமானோர் பல வகையிலும் பாதிக்கப்பட்டனர். தற்போதுதான் அங்கு மெல்ல இயல்புநிலை திரும்பிக் கொண்டிருக்கிறது.

ஆனால், அந்தச் சமூகங்களை சேர்ந்த சாதிய சங்கங்கள், அவற்றைச் சார்ந்த கட்சிகளின் தலைவர்கள் தினமும் நடத்தும் அறிக்கைப் போர்களால் அங்கு இயல்பு நிலை திரும்பாமலே போய்விடுமோ என்ற அச்சம் மேலோங்குகிறது.

நாயக்கன்கொட்டாய் பிரச்னையில் தற்போதைய தேவை, பாதிக்கப்பட்ட 3 கிராமங்களில் இயல்பு நிலையைக் கொண்டு வந்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே. அதைவிடுத்து, பிரச்னையை மேலும் ஊதி பெரிதாக்கும் வகையிலும் அரசியல் ஆதாயம் தேடும் வகையிலும், அந்தச் சமூகத் தலைவர்கள் தொடர்ந்து பேசி வருவது அவர்களின் மலிவான அரசியல் செயல்பாட்டையே காட்டுகிறது. தாங்கள் என்ன பேசுகிறோம் என்று தெரிந்துதான் பேசுகிறார்களா அல்லது தெரியாமல் பேசுகிறார்களா என்று நமக்குத் தெரியவில்லை.

சிறிதும் நாவடக்கம் இன்றி தத்தமது எதிர் தரப்பினர் மீது தினமும் புகார்களை அள்ளி வீசி, நகைச்சுவை கலந்த கருத்துகளை சமுதாயத்துக்கு வழங்கி வருகின்றனர். அவர்களின் இந்த நடவடிக்கையானது, அவர்களையும், அவர்களின் சாதியக் கட்சியையும் உயிர்ப்பித்துக் கொள்ளும் நடவடிக்கையாக எண்ண வேண்டியுள்ளது.

அந்த சாதிய அரசியல் தலைவர்களின் பேச்சால், மாநிலம் முழுவதும் உள்ள அந்த இரு சமூகத்தினரிடையேயான ஒற்றுமை குலைந்து, பகைமை உணர்வும், பழிவாங்கலும் அதிகரித்துவிடாதா?

இதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கின்றனரோ என எண்ண வேண்டியுள்ளது. மாநிலம் முழுவதும் கலவரங்கள் ஏற்பட வேண்டும். அதன் மூலம் நாமும், நாம் சார்ந்த சாதிய சங்கங்கள், நம் கட்சி ஆகியவை "வெளிச்சத்திலேயே' உலா வரலாம் என்று அந்தத் தலைவர்கள் நினைக்கின்றனர்.

அரசியல்வாதிகள் இப்படித்தான் இருப்பார்கள் என்றால், இந்தப் பிரச்னையில் முக்கியப் பங்காற்ற வேண்டிய ஊடகங்களோ, "ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' என்பதை மெய்ப்பிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றன. பிரச்னைக்குள்ளான அந்த சமூகத் தலைவர்களின் சிறப்புப் பேட்டிகளை பிரசுரித்து, மேலும் பிரச்னையைப் பெரிதாக்குகின்றன. பேட்டிகளின் தலைப்பில் அவர் இவரை "வறுக்கிறார்', இவர் அவரை "பொறிக்கிறார்' போன்ற விளம்பரங்கள் வேறு.

பிரச்னைக்குரிய சாதியத் தலைவர்களின் அரிய, சிறப்பான கருத்துகள், பேச்சுகளை இந்த நேரத்தில் அவசியம் பிரசுரிக்கவும், காட்சிப்படுத்தவும் வேண்டுமா என்பதை ஊடகங்கள் எண்ணிப் பார்க்க வேண்டியது அவசியம்.

விற்பனை, டிஆர்பி ரேட்டிங் ஆகியவற்றை மட்டுமே கருத்தில்கொள்ளாமல், சமூகத்துக்கு நாம் செய்யும் செயலால் பயன் உண்டா என்று பகுத்தறிந்து செயல்பட வேண்டும்.

மும்பை சம்பவத்தின்போதே ஊடகங்கள் செயல்பட்ட விதம் குறித்துப் பரவலாக விமர்சிக்கப்பட்டது. தருமபுரி கலவரத்தின்போதும் பத்திரிகைகளின் செயல்பாடுகள் எதிர்மறையாகவே இருந்தன.

சமூக நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவற்றை மறந்த சந்தர்ப்பவாத அரசியல் தலைவர்களும், ஊடகங்களும் நெருக்கடியான நேரங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும்.

நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆனபோதும் நாயக்கன்கொட்டாய் சம்பவங்கள் போன்று தொடர்வது உண்மையிலேயே நாம் "வேற்றுமையில் ஒற்றுமை' காண்கிறோமோ என்ற கேள்வியை எழுப்புகிறது.

பிரச்னைக்குரிய சாதியத் தலைவர்களின் பேச்சு, கருத்துகளை அந்தந்த சமூக மக்கள் கவனமாகவே பார்க்க வேண்டும். ஏனெனில் கொஞ்சம் யோசித்தாலும், அவர்களைத் தங்கள் பக்கம் ஈர்த்துவிடுவார்கள்.

சாதியை வைத்தும், வன்முறைச் சம்பவங்களின் மூலமும் ஆதாயம் தேடும் சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் தலைவர்களை அடையாளம் கண்டு, அவர்களைப் புறக்கணிப்போம். தருமபுரி சம்பவங்கள் போன்றவை நடைபெறாமல் இருக்க உரிய பகுத்தறிவோடு நடந்து கொள்வோம்.

ஏனெனில், பாதிக்கப்படுவது தலைவர்களல்ல. சாதிய அரசியல் தலைவர்கள் இன்று அறிக்கைப்போரில் மோதிக் கொள்வார்கள். ஆனால், நாளையே தேர்தல் என்று வந்துவிட்டால், அவர்கள் இணைந்து ஊடகங்களுக்குக் காட்சி அளித்துவிட்டு, நடந்ததை மறப்போம்; நடப்பதை நினைப்போம் என்றும், அரசியலில் நிரந்தரப் பகைவர் இல்லை என்றும் சிந்தனை பேட்டி தருவார்கள். பாவம் செய்தவர்கள் மக்கள் மட்டுமே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com