Enable Javscript for better performance
ராட்டைச் சின்னமற்ற தேசியக் கொடி!- Dinamani

சுடச்சுட

  

  மகாத்மா காந்தி தொடர்பான விழாக்களில் ராட்டைச் சின்னம் பதித்த மூவண்ணக் கதர்க் கொடிகளையே கட்ட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரி அனந்தன் மதுரை விழாவில் கூறியுள்ளது பெரிதும் வரவேற்கத்தக்கது.

   கைராட்டைச் சின்னம் தாங்கிய மூவண்ணக் கொடி காந்திஜியின் கண்டுபிடிப்பு. இந்திய தேசியக் கொடியாக அதிவிரைவில் நாடெங்கும் பரவிப் போற்றப்பட்டுவந்த அதே கொடி, சுதந்திர இந்தியாவின் அதிகாரப்பூர்வமான தேசியக் கொடியாக அறிவிக்கப்படும் என்று காந்திஜியும் பெருவாரியான மக்களும் எதிர்பார்த்திருந்தனர்.

   ஆனால், ஒரு கட்சிக் கொடியே தேசியக் கொடியாக ஏற்படுவானேன் என ஒருசாரார் எழுப்பிய எதிரீட்டின் காரணமாக, மதச்சார்பற்ற கைராட்டை சின்னத்துக்குப் பதிலாக புத்த மதம் சார்ந்த அசோக சக்கரம், டாக்டர் அம்பேத்கரால் பரிந்துரைக்கப்பட்டு, 1947 ஜூலை 22 அன்று கூடிய இந்திய அரசியல் நிர்ணய சபையில் ஒப்புதல் பெற்றது.

   அதை அறிந்த காந்திஜி அதிர்ச்சியுற்று வேதனையில் ஆழ்ந்தார். அதுகுறித்து மிக்க மனத் தாங்கலுடன் தமது ""அரிஜன் பந்து'' (3-8-1947) இதழில் எழுதிய நீண்ட கட்டுரையை அவர் இவ்வாறு கடுப்புடன் முடித்தார்: ""இப்போது திருத்தி அமைக்கப்பட்டுள்ள தேசியக் கொடி எவ்வளவுதான் கலைநயத்துடன் இருப்பினும், சர்க்கா இல்லாத கொடிக்கு நான் தலை வணங்க மறுப்பேன்!''

   1947 ஆகஸ்ட் 6-ம் தேதி லாகூரில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் பேசுகையில் அண்ணல் காந்தி வருத்தம் மேலிட உரைத்தார்: ""நான் திரும்பவும் சொல்கிறேன்; இந்திய யூனியன் கொடியில் கைராட்டைச் சின்னம் இடம்பெறாவிடின் நான் அக்கொடியை எங்கும் ஏற்ற மாட்டேன்; வந்தனை செய்ய மாட்டேன். உங்களுக்கெல்லாம் தெரியும், தேசியக் கொடி முதன்முதலில் என்னால் (1921-ல்) உருவாக்கப்பட்டது. கைராட்டைச் சின்னம் அற்ற இந்திய தேசியக் கொடியொன்றை என்னால் நினைத்துப்பார்க்கக்கூட இயலாது.'' (இந்துஸ்தான் டைம்ஸ் - 8-8-1947).

   பிரதம மந்திரி ஜவாஹர்லால் நேரு சுற்றி வளைத்து ஒரு புது விளக்கம் அளித்தார். புதிய தேசியக் கொடி முந்தைய தேசியக் கொடி வடிவமைப்பைச் சற்றே மாறுதலுடன் சித்திரிக்கிறதாம். அதில் உள்ள சக்கரம், கைராட்டைச் சக்கரத்தின் கலைநயமான குறியீடு எனவும் கொள்ளலாமாம்!

   இந்த வியாக்கியானம் தன்னைச் சமாதானப்படுத்துவதற்கான சப்பைக்கட்டு என்று காந்திஜிக்குத் தெரியாதா என்ன? அதைச் சற்று இடக்காகக் குறிப்பிட்டு காந்திஜி இவ்வாறு அக்கட்டுரையை முடிக்கிறார்: ""இந்த விளக்கத்தில் தவறொன்றும் இல்லை என்றே எண்ணுகிறேன். ஏன்? கொடியின் மூன்று வர்ணங்களுக்குக்கூட பலர் பலவிதமாக அர்த்தம் கற்பிக்கக் கூடும்தான்! கொடியிலுள்ள சக்கரம், சமாதானம் - அமைதி பேணிய நிகரற்ற மன்னரும், அதிகாரத்தைத் துறந்து பாரத தேசத்தை அகிம்சை அடிப்படையில் ஆண்ட அசோக சக்கரவர்த்தியை நினைவு கூர்வதாகவும் சிலர் கொள்ளலாம். அசோகர் அனைத்து மதங்களையும் சமமாகப் பாவித்தவர், இரக்கமே உருவானவர் என்கிறார்கள்.

   அப்படியானால் ஒருவிதத்தில் ராட்டைச் சக்கரத்தை அசோக சக்கர வடிவில் காண்பது, கைராட்டையின் மகத்துவத்துக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. என்றென்றும் சுழலும் தெய்விக நியதியாம் அகிம்சையை அசோக தர்ம சக்கரம் பிரதிபலிக்கிறது என்றே நான் கொள்கிறேன்'' - ("அரிஜன் பந்து' 3-8-1947)

   புது தில்லியில் டிசம்பர் 13, 1947 அன்று காந்திஜி ஆற்றிய பிரார்த்தனைக் கூட்டத்தில் இறுதியில் தேசியக் கொடியில் கைராட்டை தவிர்க்கப்பட்டதை பின்வருமாறு பிரஸ்தாபித்தார்: ""கைராட்டை என்பது அகிம்சையின் அடையாளச் சின்னம்; அதீத ஆற்றலின் கருவூலம்; வீரத்தின் குறியீடு. அத்தகைய அகிம்சையை நாம் உள்வாங்கிக்கொண்டு இதயத்தில் இருத்துவோமாக! அப்போது அதை யாரும் அழிக்க முடியாது. அவ்வாறெனில், இந்திய தேசியக் கொடியில் கைராட்டைச் சின்னம் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? மக்கள் மனதில் அதன் தத்துவம் ஆழப் பதிந்தாலே போதும்''.

   இருப்பினும், இறுதிநாள்வரை, காந்திஜி சுதந்திர தேசியக் கொடி ஏற்றம் - வணக்கம் எதிலும் பங்கேற்கவில்லை.

   மகாத்மா காந்தியின் மற்றொரு மனத்தாங்கல் பங்கிம் சந்திரர் இயற்றி, பின்னர் நாடு பூராவும் விடுதலை இயக்க கோஷமாக விகசித்த "வந்தே மாதரம்' பாடல் சுதந்திர இந்தியாவின் தேசிய கீதமாக வரிக்கப்படவில்லை என்பது. (சுப்பிரமணிய பாரதியார் அப்பாடலை இருமுறை தமிழில் மொழிபெயர்த்தளித்துள்ளார்).

   இந்திய தேசிய காங்கிரஸின் வருடாந்திர மாநாடுகள் "வந்தே மாதரம்' பாடலுடன் தொடங்குவது 1911 முதல் வழக்கமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், "அது பாரதமாதாவின் இந்து தெய்விக உருவ வழிபாடு', இஸ்லாம் உருவ வழிபாட்டுககு எதிரானது' என முஸ்லிம் அரசியல்வாதிகள் எதிர்ப்புத் தெரிவித்தவண்ணம் இருந்தனர்.

   இந்திய தேசிய எழுச்சிக்குத் தாரக மந்திரமாகவும், தேசிய கோஷமாகவும் இருந்துவந்த அவ் வரும்பெரும் பாடலை இப்போது ஒருசாரார் இழிவுபடுத்துவதைக் கண்ட காந்திஜி மனம் வெதும்பி தமது ஆதங்கத்தை இவ்வாறு "அரிஜன்' (1-7-1939) இதழில் வெளிப்படுத்தினார்.

   ""வந்தே மாதரம் (1905-ல்) வங்கப் பிரிவினையை எதிர்த்து இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து எழுப்பிய சக்தி வாய்ந்த யுத்த கோஷமாகவே அக்காலத்தில் தலையெடுத்தது. அன்னிய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான கூக்குரல் அது. அப்போது இளைஞனாக இருந்த எனக்கு அப்பாடல் எனது உள்ளத்தை ஈர்த்துப்பிடித்தது. நான் முதன்முதலில் அந்த கீதத்தைப் பாடக் கேட்டபோது அதன் வசீகரத்தில் மெய் சிலிர்த்தேன். அது இந்துக்களுக்காக மட்டுமே இயற்றப்பட்டதாக எனக்குத் தோன்றவில்லை.

   ஆனால், துரதிருஷ்டவசமாக நாம் இப்போது கேடு காலத்தில் சிக்கியுள்ளோம். பத்தரை மாற்றுத் தங்கமாக இருந்தவை பலவும் இன்று இழிந்த உலோகமாகக் கருதப்படுகிறது.

   இவ்வாறான சூழ்நிலையில் கலப்படமற்ற தூய தங்கத்தை விற்பனை செய்ய முயல்வது விவேகம் இல்லைதான். படுமட்டமான உலோகங்களே சந்தையில் விற்பனைக்கு வந்து சீரழியட்டுமே! நமக்கென்னவாம்?'' வந்தே மாதரம் பாடலைப் பற்றி ஒருசாரார் எழுப்பிய விதண்டாவாத சர்ச்சைக்கு இணங்கித்தானோ என்னவோ, ரவீந்திரநாத் தாகூர் 1911-ல் இயற்றிய "ஜன கண மன அதிநாயக ஜயஹே' பாடலை சுதந்திர இந்தியாவின் தேசிய கீதமாக ஏற்க இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு முன்னதாகவே தீர்மானித்துவிட்டார்போலும்!

   இந்திய அரசியல் நிர்ணய சபையில் 1948 ஆகஸ்ட் 28 அன்று நேரு இவ்வாறு பரிந்துரைத்தார்: ""உள்நாட்டைவிட வெளிநாடுகளைப் பொறுத்தவரையிலேதான் தேசிய கீதம் முக்கியத்துவம் பெறுகிறது. வந்தே மாதர கீதம் மிகவும் ஈர்ப்புடையது, வரலாற்றுச் சிறப்புமிக்கது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இருப்பினும் அதன் பண்ணிசை அமைப்பு வெளிநாட்டு வாத்திய கோஷ்டிகளால் சரிவர இசைக்க அவ்வளவு ஏதுவாக இல்லை என்று சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

   மேலும், அதன் மெட்டு, அழுத்தமான சஞ்சாரங்களுக்குப் போதுமானதாக இல்லை என்றும் கூறப்படுகிறது. ஆகவேதான், "ஜன கண மன' இசையை தேசிய கீதமாக ஏற்கலாம் என்று நான் சிபாரிசு செய்கிறேன்'' என்று அறிவித்தார்.

   ஆனால், வந்தே மாதரம் பாடலைத்தான் தேசிய கீதமாக்க வேண்டும் என்ற வாதம் வலுத்தது. "ஜன கண மன' தேசபக்திப் பாடல் அல்லவே அல்ல என்கிற ஆரம்பகால சர்ச்சை மீண்டும் தலைதூக்கியது.

   அரசியல் நிர்ணய சபைத் தலைவராக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத், பல்வேறு உறுப்பினர்களுடன் பேசி அப்பிரச்னையை ஓர் முடிவுக்குக் கொண்டு வந்தார்.

   அதன்படி 1950, ஜனவரி 24 அன்று தாற்காலிகப் பார்லிமெண்டில் அவர் இவ்வாறு அறிவித்தார்: ""ஜன கண மன'' இசையமைப்பு நமது தேசிய கீதமாக ஏற்கப்படுகிறது. அதேசமயம், "வந்தே மாதரம்' பாடலும் "ஜன கண மன'வுக்கு சரிநிகரான அந்தஸ்துடன் போற்றப்படும். இந்த முடிவு அனைவருக்கும் திருப்தியளிக்கும் என நம்புகிறேன்''.

   இந்தியக் குடியரசு அடுத்த இரண்டே நாள்களில் (ஜனவரி 26, 1950) பிரகடனமாகவிருக்கும் அன்றைய அவசர சூழ்நிலையில், தாற்காலிகப் பார்லிமெண்ட் உறுப்பினர் எவரும் இந்த மழுப்பல் வாசகத் தீர்மானத்துக்கு மறுப்பு எழுப்பவில்லை. வோட்டெடுக்காமலேயே தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

   காந்திஜியின் பிரார்த்தனைக் கூட்டங்கள் எதிலும் "ஜன கண மன' இசைக்கப்பட்டதில்லை. அதென்ன, ஜன கண மன வாசகத்தைப் பற்றிய பழைய சர்ச்சை என்கிறீர்களா?

   தமது அப் பாடலுக்கு தாகூரே வழங்கியுள்ள ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துப் பாருங்கள். விஷயம் ஒரு தினுசாகப் புரியும்!

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai