சுடச்சுட

  

  மனிதர்களின் ஐம்புலன்களில் கண்களுக்குத் தனிச் சிறப்புண்டு. உயிரை இழக்கும் உடல், சடலமாக மதிப்பிழப்பதுடன் மண்ணில் புதைந்து போகிறது. ஆனால் கண்கள், வேறொரு உடலுடன் இணைந்து பூமியில் வாழும் வரம்பெற்றவை.

  இந்தியாவின் கண்தேவை 70 லட்சம். கருவிழி பாதிக்கப்பட்டு, பிறர் அளிக்கும் கண் தானத்துக்காக காத்திருப்போர் 10 லட்சம். ஆண்டுக்கு 75 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை கண்கள் தேவைப்படுகின்றன. ஆனால், 22 ஆயிரம் கண்கள் மட்டுமே தானமாகப் பெறப்படுகின்றன.

  இத்தனை தேவையிருந்தும், கண் தானம் குறித்த விழிப்புணர்வில் மத்திய-மாநில அரசுகள் போதிய தீவிரம் காட்டாமல் உள்ளன.

  கண் தானம் குறித்து ஒரு சில அரிமா சங்கங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் ஏற்படுத்திவரும் விழிப்புணர்வு பாராட்டுக்குரியது. இருப்பினும் அரசின் தீவிர முயற்சி இவ் விஷயத்தில் மிகவும் அவசியம்.

  எந்த வயதினரும் தங்கள் கண்களைத் தானமாகச் செய்யலாம், ஒருவர் இறந்து 6 மணி நேரத்துக்குள் கண் தானம் செய்ய வேண்டும், ரத்த அழுத்தம், நீரிழிவு, புற்றுநோய்த் தாக்கியவர்கள் மட்டுமன்றி கண் கண்ணாடிகள் அணிபவர்களின் கண்களும் தானமாக வழங்க உகந்தவையே.

  இந்தியாவில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கண் வங்கிகளில், 33 கண் வங்கிகள்தான் மிகவும் சிறப்பான செயல்பாட்டில் உள்ளதென்பது வேதனையான விஷயம்.

  கிராமப்புறங்களில் பட்டதாரிகளுக்குக் கூட கண் தானம் குறித்த சரியான புரிதல்கள் இல்லை. கண் தானம் செய்தால் சடலத்தின் முகம் சிதைந்துபோகும், விகாரமாகிவிடும் உள்ளிட்ட அச்சுறுத்தலுடன் சில மூடநம்பிக்கைகளும் தொடர்கின்றன. கண்களை வாங்கி விற்றுவிடுவார்கள் என்ற பேச்சும் கிராமங்களில் அடிபடாமல் இல்லை.

  இதுபோன்ற மூட நம்பிக்கையைத் தகர்ப்பதும், முறைகேடுகள் நடைபெறாமல் தடுப்பதும் அரசின் தலையாய கடமை.

  கண் தானம் செய்யப் பதிவு செய்துள்ளவர்களில் 35 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோரின் கண்கள் அவர்களின் வாக்குறுதிப்படி தானமாகப் பெற இயலாத நிலை ஏற்படுகிறது. இதற்கு அவர்களது உறவினர்களின் எதிர்ப்பே முக்கிய காரணம்.

  இன்றளவும் ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பலனின்றி இறப்போர் அதிகம். துக்கம் முட்டி நிற்கும் அந்தச் சமயத்தில், இறந்தோரின் கண்களைத் தானமாக வழங்க யாரை அணுகுவது என்ற தகவல் தெரியாமல் எடுத்துச் செல்லப்படும் உடல்கள் ஏராளம்.

  சில நேரங்களில் வழிகள் தெரிந்தாலும், அந்த நேரத்தில் அந்த இடத்தில் இருந்து நகர்ந்து செல்ல இயலாத மன உளைச்சலில் உறவினர்கள் இருப்பார்கள். இதுபோன்ற நிலையை மாற்ற அரசு மருத்துவமனைகளின் பிரேதப் பரிசோதனை வளாகம் அருகே செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்டவைகளின் மூலம் கண் தான விழிப்புணர்வு குழுக்களைப் பணியில் அமர்த்தி, விரும்புவோரின் கண்களைத் தானமாகப் பெறலாம்.

  ரத்த தானம், எய்ட்ஸ் ஒழிப்பு போன்றவற்றுக்கு அளித்துவரும் முக்கியத்துவத்தை அரசுகள் கண் தானத்துக்கும் அளிக்க வேண்டும்.

  கண் தானம் செய்வதில் இலங்கை முன்னணியில் உள்ளது. இறந்தோரின் உடல்களைக் கண்தானத்துக்குப் பின்புதான் புதைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை புத்த பிக்குகள் விதைத்து வருகிறார்கள்.

  தமிழகத்தைப் பொருத்தமட்டில் கண் தானம் செய்வதில் விருதுநகர் மாவட்டம் இப்போது முன்னணியில் இருக்கிறது. அதற்கு அங்கு மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வே காரணம்.

  மாணவர்களிடம் ஏற்படுத்தும் விழிப்புணர்வே கண் தானத்தை அதிகப்படுத்தும் முதல் வழி. ஆகவே, பள்ளிப் பாடப்புத்தகங்களில் கண் தானம் குறித்த தகவல்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும்.

  பள்ளி-கல்லூரி மாணவர்கள் கண் தானம் மற்றும் ரத்த தானம் குறித்த கட்டுரைகளைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடலாம். இதன் மூலம் அவர்கள் விரும்பாவிட்டாலும், கண் தானம் குறித்த விழிப்புணர்வு தானாக மனதில் பதிய வாய்ப்புள்ளது.

  ஒவ்வொரு வட்டத்துக்கும் ஒரு கண் வங்கியை அரசு ஏற்படுத்த வேண்டும். 108 ஆம்புலன்ஸ் சேவை மக்கள் மனதில் பதிந்துவிட்டதுபோல, கண் தானம் அளிக்கவும் எளிய வழிகளை ஏற்படுத்த வேண்டும்.

  ரத்த தானம் என்பது கூட ஒருவர் தானாக எடுக்கும் முடிவுதான், கண் தானம் என்பது அவரது உறவினர்கள் கூடி எடுக்கும் முடிவைப் பொருத்ததுதான்.

  எனவே, ஊராட்சித் தலைவர்கள் தலைமையில் கண் தான விழிப்புணர்வு சங்கங்களை தமிழக அரசு ஏற்படுத்தி அந்தக் கிராமத்தில் இறப்போரின் உறவினர்களிடம் பேசி கண் தானம் செய்ய வலியுறுத்தலாம். அவ்வாறு அவர்கள் செய்ய முன்வந்தால், ஊராட்சி அலுவலகம் சார்பில் பாராட்டுச் சான்றிதழ் அளித்து கெüரவிக்கலாம்.

  இறப்பு விகிதம் அதிகம் கொண்ட இந்தியாவில், கண் தான விழிப்புணர்வு முழுமையாகிவிட்டால், பார்வைபெற காத்திருப்போரின் பட்டியல் இல்லாமல் போய்விடும்.   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai