"சில்லறை' பிரச்னை அல்ல!

சிறு சிறு பிரச்னைகளை "சில்லறை பிரச்னைகள்' என்பார்கள். ஆனால், அந்த "சில்லறை பிரச்னையே' பல நேரங்களில் பெரிய பிரச்னையாகிவிடுகிறது. குறிப்பாக, பேருந்துகளில் இந்த சில்லறை படுத்தும்பாடு பெரும்பாடு.

சிறு சிறு பிரச்னைகளை "சில்லறை பிரச்னைகள்' என்பார்கள். ஆனால், அந்த "சில்லறை பிரச்னையே' பல நேரங்களில் பெரிய பிரச்னையாகிவிடுகிறது. குறிப்பாக, பேருந்துகளில் இந்த சில்லறை படுத்தும்பாடு பெரும்பாடு.

நடத்துநர்-பயணிகள் உறவைக் கலவரப்படுத்துவதில் சில்லறைப் பிரச்னைக்கு முக்கிய இடம் உண்டு. என்னதான் மன உறுதி மிக்கவராக இருந்தாலும், ஒன்பது ரூபாய் டிக்கெட்டுக்கு பத்து ரூபாய் கொடுத்துவிட்டு, "மீதி ஒரு ரூபாயைப் பிறகு தருகிறேன்' என்ற நடத்துநர், அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவாரா அல்லது "ஒரு ரூபாபை அப்போதே கொடுத்துவிட்டேன்' என்று கடைசி நேரத்தில் கூறிவிடுவாரா என்று நினைத்துக் கொண்டிருப்பதிலேயே அந்த மன உறுதி குலைந்துபோகிறது.

சரியான சில்லறை கொடுக்காமல் டிக்கெட் கேட்கும்போது, தப்பு செய்துவிட்டு தலை குனிந்து நிற்பது போன்ற சூழ்நிலையை நடத்துநரின் ஒற்றைப் பார்வையே ஏற்படுத்தி விடுகிறது.

நடத்துநர் நம்மைக் கடந்து போகும்போதெல்லாம் அவரது முக தாட்சண்யம் கிடைத்துவிடாதா என்று ஏக்கப் பார்வை பார்த்து, அவர் கண்டுகொள்ளாமல் போகும் தருணங்களில் வெறுப்படைந்து, இறுதியில் வாய்விட்டு கேட்டால்கூட, "ஒரு ரூபாய் சில்லறை தானேங்க, அதை வச்சு நான் கோட்டையையா கட்டப் போகிறேன், இறங்கும்போது வாங்கிக்குங்க' என நடத்துநர் அதிகாரத் தொனி காட்டும்போது வாய்மூடி மௌனமாகத்தான் இருக்க வேண்டியிருக்கிறது.

மீறி நடத்துநரிடம் வாக்குவாதம் செய்தால், "டிக்கெட்டில் ஒரு ரூபாய் பாக்கி என எழுதித் தருகிறேன், டெப்போவில் வந்து வாங்கிக் கொள்ளுங்கள்' என சட்டம் பேசுவார்கள். அதே ஒரு ரூபாய் குறைவாகக் கொடுத்து, "இறங்கும்போது தருகிறேன்' என்று கூறி யாராவது டிக்கெட் வாங்க முடியுமா? அன்றி இந்த ஒரு ரூபாய்க்காக டெப்போவுக்கு சென்று வரத்தான் முடியுமா?

பேருந்து நகரும் நேரத்தில் ஓடிவந்து ஏறும் பயணியிடம், "சில்லறை இருந்தால் ஏறு, இல்லையென்றால் அப்படியே இறங்கிவிடு' எனச் சொல்லும் "கடமை உணர்வுமிக்க' நடத்துநருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், ஏறவும் முடியாமல் இறங்கவும் முடியாமல் படிக்கட்டில் தவிக்கும் பயணியின் நிலைமையை நினைத்துப் பாருங்கள்.

"பேருந்து நிலையத்தில் ஒரு மணி நேரம் காத்திருக்க முடிகிறது, சில்லறை மாற்றிவைக்க மட்டும் தெரியாதா' என நடத்துநர்கள் சில நேரம் எரிச்சலுடன் கேட்கிறார்கள். ஆனால், பேருந்து நிலையத்தில் மட்டும் என்ன சில்லறை மாற்றும் இயந்திரங்கள் வைத்திருக்கிறார்களா அல்லது சில்லறை மாற்றித் தருவதற்கென்றே கடைகள் ஏதாவது உள்ளதா?

100 ரூபாய்க்கு சில்லறை மாற்ற வேண்டுமானால், 6 ரூபாய் கொடுத்து டீ அல்லது காபி வாங்கிக் குடிக்க வேண்டியிருக்கிறது. 6 ரூபாய்தானே போனால் போகிறது, நமக்கு சில்லறை கிடைக்கிறதே என நினைக்கும் அளவுக்கா சாமானியர்களின் பொருளாதார நிலைமை இருக்கிறது.

"பேருந்தில் இருந்து இறங்கி' பிற இடங்களுக்கு வருவோம், அங்கும் சில்லறை பிரச்னைதான் பெரும் பிரச்னை. 6 ரூபாய்க்கு டீ அல்லது 7 ரூபாய்க்கு காபி வாங்கிக் குடித்தால் மீதிச் சில்லறை இல்லாத காரணத்தாலேயே, ஒரு வடையும் சேர்த்து வாங்கிச் சாப்பிட வேண்டியிருக்கிறது. வடை சாப்பிட மாட்டேன் என்று ஏதாவது கொள்கை முடிவு உங்களுக்கு இருந்தால்கூட இந்த சில்லறைப் பிரச்னையால், அதைச் செயல்படுத்த முடிவதில்லை.

இப்போதெல்லாம் பெட்டிக் கடைகளில் ஏதாவது பொருள் வாங்கிவிட்டு மீதி ஒரு ரூபாய் சில்லறை பெற வேண்டியிருந்தால் அது அநேகமாக ஹால்ஸ் அல்லது விக்ஸ் வடிவில்தான் கிடைக்கும். உங்களுக்கு தொண்டை கரகரப்பு, இருமல் இல்லாவிட்டால்கூட வேறுவழியின்றி அதைச் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.

சில கடைகளில் மொத்தமாக 500 அல்லது 1000 ரூபாய்க்கு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் சில்லறையாக சில நபர்கள் கொடுத்துவிட்டு அதற்குக் கமிஷனாக ஒரு தொகையும் வாங்கிக்கொண்டு செல்வதைப் பார்க்கலாம்.

ஒற்றை ரூபாய் சில்லறை இல்லாமல் பொதுஜனம் தவிக்கும்போது இவர்களுக்கு எப்படி இந்த அளவுக்கு சில்லறை கிடைக்கிறது. ஒருவேளை உணவுப் பொருள் பதுக்கல்போல, சில்லறைப் பதுக்கலும் நடக்கிறதோ?

குடிநீர், சாலை வசதி, வேலையின்மை, சுகாதாரம், போக்குவரத்து என பிரச்னைகளை தீர்க்க திட்டத்துக்கு மேல் திட்டம் போடும் அரசு, இந்த "சில்லறைப் பிரச்னையை'த் தீர்க்கவும் ஒரு திட்டம் தீட்டக்கூடாதா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com