வெறுக்கத்தக்கவையா தெரு நாய்கள்?

சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம், பிறந்து 12 நாள்களே ஆன ஒரு குழந்தையை எலி கடித்துக் குதறிச் சாகடித்துவிட்ட செய்தி வெளியானது.

சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம், பிறந்து 12 நாள்களே ஆன ஒரு குழந்தையை எலி கடித்துக் குதறிச் சாகடித்துவிட்ட செய்தி வெளியானது. இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் வெளியான, "அரசு மருத்துவமனைகளில் எலிகள், பூனைகள், நாய்கள் ஆகியவற்றின் தொந்தரவு' பற்றிய செய்திகள் விவாதப் பொருளானது.

மருத்துவமனைகள் தங்களுடைய பாதுகாப்பான உறைவிடம் என்ற நிலையை எலிகள், பூனைகள் மற்றும் தெருநாய்கள் ஆகியவை ஏற்படுத்திக் கொண்டன எனும் கசப்பான உண்மை அப்போதுதான் பலருக்கும் புரிந்தது.

சென்னை மாநகராட்சியில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்தத் தனியாக ஒரு துறை இயங்குகிறது. இவர்கள் நடவடிக்கை எடுத்து செப்டம்பர் மாதத்தில் 525 நாய்களையும், 16 பூனைகளையும், 3,048 எலிகளையும் சென்னை மாநகரின் அரசு மருத்துவமனைகளிலிருந்து பிடித்துள்ளனர். மாநகராட்சியின் நடவடிக்கைக்கு புளூகிராஸ், பிராணிகளைக் கொடுமைப்படுத்துவதைத் தடுக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள் சில மற்றும் பிராணிகளை விரும்புபவர் சங்கம் ஆகியனவும் பூரணமாக ஒத்துழைத்துள்ளன.

அதனால், தெரு நாய்களைக் கொன்று தீர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தினாலே போதும். சென்னை மாநகராட்சி, சமூக சேவை நிறுவனங்களான புளூகிராஸ் உள்ளிட்ட மூன்று அமைப்புகளுடன் சேர்ந்து சென்ற மூன்று ஆண்டுகளில் 54 ஆயிரத்து 919 தெரு நாய்களைப் பிடித்துக்கொண்டுபோய் அவற்றில் 51 ஆயிரத்து 312 நாய்களைக் குடும்பக் கட்டுப்பாடு செய்து மறுபடியும் பல தெருக்களிலும் விட்டுவிட்டது. சில தெரு நாய்கள் தனி மனிதர்களுக்குச் சொந்தமான காவல் நாய்கள் என்பதால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன.

இதுபோன்ற நடவடிக்கைகள் வெற்றியடையக் காரணம் புளூகிராஸ் போன்ற சமூக நன்னமைப்புகளின் சேவை மனப்பான்மையே!

எந்த லாப நோக்கமும் இல்லாமல், பிராணிகளை வதைக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்புகளின் சேவை மிகவும் பாராட்டத்தக்கது.

1960-இல் இயற்றப்பட்ட, பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின் 11-வது ஷரத்தில், ""எந்த ஒரு பிராணியையும் அடித்தோ துன்புறுத்தியோ கொடுமைப்படுத்துபவர்களுக்கு அபராதமோ அல்லது மூன்று மாத சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது.

தெருக்களில் சுற்றித்திரிந்து மனிதர்களைக் கடித்துவிடும் நாய்களால் "ரேபிஸ்' எனும் கொடுமையான நோய் பரவுவது உலகின் பல நாடுகளிலும் தொடரும் கடுமையான ஓர் ஆபத்து. இந்த ரேபிஸ், பாதிக்கப்பட்டவர்களைக் கொன்றுவிடும் தன்மை உடையது. இன்றுவரை இதற்குச் சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தெரு நாய்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவற்றுக்கு நோய் பரவாமல் தடுப்பதும், நாய்கள் மனிதர்களைக் கடிக்காமல் இருக்கும் வகையில் தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வதுமே ரேபிûஸத் தடுக்கும் வழிமுறை. தெரு நாய்கள் பற்றிய தகவல்கள் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பெரும்பான்மையான தெரு நாய்கள் "பேரையா' எனும் இனத்தைச் சார்ந்தவை. இவை மனிதகுல நாகரிகம் தோன்றிய காலம் முதலாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் வாழ்ந்து வருகின்றன. மனிதக் கழிவுகள் தொடங்கி தெருவில் குப்பையுடன் எறியப்படும் மிச்சம் மீதியான உணவுப்பொருள்கள் வரை இந்தத் தெரு நாய்களுக்கு உணவாகின்றன. இந்நாய்கள் தெருவில் கழிவுகளை அகற்றும் சுத்திகரிப்பு வேலையைச் செய்வதால் பழங்காலம் தொட்டு இன்றுவரை இவற்றை வெகுவாக ஆதரிக்கும் குணம் கிராமங்களிலும் நகரின் குடிசைப் பகுதிகளிலும் உண்டு.

மும்பை நகரின் 1 கோடியே 20 லட்சம் மக்கள்தொகையில் பாதிப்பேர், அதாவது 60 லட்சம் மக்கள் குடிசைப்பகுதிகளில் வசிக்கிறார்கள். இந்நகரில் தினமும் சேரும் குப்பை சுமார் 6,000 டன்கள். இதில் 500 டன்கள் வரை தினமும் கூட்டப்படாமல் தெரு ஓரங்களில் குவிந்து கிடப்பவை. எனவேதான் அதிக எண்ணிக்கையில் அங்கே தெரு நாய்கள் காணப்படுவதாக ஆய்வு கூறுகிறது.

சென்னை நகரில் தினமும் சுமார் 4,500 டன் குப்பை சேர்கிறது. கூட்டப்படாமல் தெரு ஓரங்களில் இருக்கும் குப்பையின் அளவு மட்டுமே சுமார் 500 டன்கள்.

75 ஆண்டுகளுக்கு முன் நம் மாநிலத்தில் நகர, கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளின் பொறுப்பு தெரு நாய்களின் ஆபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுவது.

அதன்படி நாய் வண்டிகளில் தெரு நாய்களை விரட்டிப் பிடிப்பார்கள். ஒரு நீண்ட குச்சியின் முனையில் சுருக்குக் கயிறைக்கட்டி, ஓடும் நாய்களைத் துரத்தி அவற்றின் கழுத்தில் சுருக்குப் போட்டு இழுத்து நாய் வண்டிகளின் கூண்டுக்குள் அடைப்பார்கள்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் தெரு நாய்களைக் கொல்ல ஒரு தனி கட்டடம் அமைக்கப்பட்டது. பிடிபட்ட நாய்கள் பேசின் பிரிட்ஜிலுள்ள கட்டடத்தில் அடைத்து வைக்கப்படும். இவற்றுக்கு "பவுண்டு'கள் எனப் பெயர்.

(இதேபோன்ற "பவுண்டு'கள் கிராமப்புறங்களிலும் உண்டு. அடுத்தவர் நிலத்தில் மேயும் மாடுகளை அதில் அடைத்துவிடுவார்கள். கால்நடையின் சொந்தக்காரர் வந்து நிலத்துக்குச் சொந்தக்காரருக்கு நஷ்ட ஈடும் கிராம நிர்வாகிக்கு அபராதமும் செலுத்திய பிறகு மாட்டை ஓட்டிச்செல்ல அனுமதிக்கப்படுவார்.)

இவ்வாறு பிடிபட்ட நாய்களில் தனியாரின் வளர்ப்பு நாய் இருந்தால் அவர்கள் பவுண்டிற்கு வந்து நாய் "லைசென்ஸ்' கட்டணங்களைக் கட்டி நாய்களை கூட்டிச் செல்லலாம். மற்ற நாய்கள் எல்லாவற்றையும் கூண்டுக்கம்பிகளில் மின்சாரம் பாய்ச்சிக் கொன்று விடுவார்கள்.

இந்த முறையில் இந்தியாவில் ஆண்டுக்கு 50,000 தெரு நாய்கள் கொல்லப்பட்டன. இந்த நடவடிக்கையினால் தெரு நாய்கள் அடியோடு ஒழிந்துவிடவில்லை என்பதும் அவைகளின் எண்ணிக்கை பெருகி வந்தது என்பதும் அறியப்பட்டது. 1993-ஆம் ஆண்டில் இதுபோல் தெரு நாய்களைக் கொன்று குவித்து அவற்றை ஒழித்துவிட முடியாது எனும் உண்மையை உலக சுகாதார மையம், மத்திய அரசின் பிராணிகள் நல்வாழ்வு ஆணையம் மற்றும் புளூகிராஸ் போன்ற சமூக அமைப்புகள் பறைசாற்றி, தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களைப் பிடித்துக்கொண்டு போய் அறுவை சிகிச்சை மூலம் அவற்றுக்குக் குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என எல்லோரையும் ஏற்க வைத்தன.

ஒரு தெருவில் நாய்களைப் பிடித்துக்கொண்டு போய் கொன்ற பின்னரும் அதே தெருவில் குப்பை கூளங்கள் தொடர்ந்தால் மற்ற தெருக்களிலிருந்து நாய்கள் அந்தத் தெருவுக்கு வந்து விடுகின்றன. அதுபோலவே ஒரு தெருவில் குப்பைகூளங்களே இல்லாதவாறு சுத்தமாக வைத்திருந்தால் அந்தத் தெருவின் நாய்கள் குப்பை கூளங்கள் உள்ள மற்றொரு தெருவுக்குச் சென்று விடுகின்றன. எந்தத் தெருவிலுமே குப்பைகூளங்கள் கொட்டிக் கிடக்காத வகையில் நகர்ப்புறங்கள் சுத்தமாக இருந்தால் அங்கே தெரு நாய்கள் இருக்காது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாட்டிலுள்ள நகரங்கள் இதற்கு உதாரணம்.

அரசு மருத்துவமனைகளில் நாய்கள் சுதந்திரமாக உலா வருவது என்பது அந்த மருத்துவமனைகளைப் பராமரிக்கும் ஊழியர்கள் தங்கள் வேலைகளைச் சரியாகச் செய்வதில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

அங்கு வரும் நோயாளிகளின் உறவினர்களும் பார்வையாளர்களும் பல இடங்களிலும் அமர்ந்து உணவு உண்பது மற்றும் குப்பைகளை எறிவது போன்ற நடவடிக்கைகளை எந்த வரைமுறையோ, கட்டுப்பாடோ இல்லாமல் செய்கிறார்கள். இதை முழுமையாகத் தடுத்து நிறுத்த வேண்டியது சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்தையே சாரும். நாய்களின் போஷகர்கள் இவர்கள்தான்.

சென்னை மாநகரத் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களில் பலவற்றை நாய்கள் மீது பற்றும் பாசமும் கொண்ட பலர் உணவுகளையும் பிஸ்கட்டுகளையும் தெருக்களில் போட்டு தங்கள் சொந்த நாய்கள்போல் அன்பு பாராட்டி வளர்க்கிறார்கள். அதற்கு இரண்டு காரணங்கள்.

ஒன்று நாய்கள் மீது அன்பும் பாசமும் இருந்தாலும் வீட்டில் நாய் வளர்க்க முடிவதில்லை. அந்தக் குறையைப் போக்கிக்கொள்ள தெரு நாய்களிடம் அன்பு செலுத்தி திருப்தி அடைகிறோம்.

இரண்டாவதாக, நம் குடியிருப்புப் பகுதிகளில் இதுபோன்ற தெரு நாய்கள் காவல் வேலையைச் செய்வதால் பலருக்கு இவை பிடித்துப் போகின்றன. இரவு நேரங்களில் புதிய நபர்களோ, வேறு பகுதியிலிருந்து நாய்களோ வந்தால் நமது தெருநாய்கள் குரைப்பதும் அன்னியர்களைத் துரத்துவதும் சகஜம்.

ஹைதராபாத் நகரின் ஜூபிலி ஹில்ஸ் மிகவும் பிரபல்யமான இடம். அங்கு 48-வது சாலையில் மஷ்ரூம் எனப் பெயரிடப்பட்ட ஒரு தெரு நாய். அங்கே பல அடுக்குமாடிக் கட்டடங்களைக் கட்டும் பணியாளர் குடும்பங்களுடன் ஒட்டுறவாடி அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்து வருகிறது. அவர்களின் குழந்தைகளுடன் விளையாடுகிறது. ஏழு ஆண்டுகளாக இதுபோல் அப்பகுதியில் ஐக்கியமாகிவிட்ட அந்தத் தெரு நாயைப் பற்றிய முழு விவரங்களையும் திரட்டி அந்நகரின் புளூகிராஸ் ஓர் அறிக்கையைப் பிரசுரம் செய்துள்ளது. தெரு நாய்கள் வெறுக்கத்தக்க ஜீவன்கள் அல்ல என்பதற்கு இது உதாரணம்.

சென்னை மாநகரில் மட்டுமல்லாமல், இந்தியாவின் எல்லா நகரங்களிலும் கடந்த பத்திருபது ஆண்டுகளாகத் தெரு நாய்கள் அதிகரித்திருப்பதற்குக் காரணம், ஆங்காங்கே காணப்படும் தெருவோரச் சிற்றுண்டிக் கடைகளும், இறைச்சிக் கடைகளும், குப்பை கூளங்களும்தான். தெருவோர வண்டிக்கடையிலிருந்து வீசப்படும் கழிவுகள் தெரு நாய்களின் அபரிமிதமான அதிகரிப்புக்கு மூல காரணம் என்றால், அன்றைக்கன்றே அகற்றப்படாமல் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் தெரு நாய்களின் கட்டுப்பாடில்லாத இனப்பெருக்கத்துக்கு இன்னொரு முக்கியமான காரணம்.

சாலையோர உணவு விடுதிகளை முழுவதுமாக ஒழிப்பது; குப்பைக் கூளங்களே இல்லாத நகரத்தை உறுதி செய்வது - இவை இரண்டையும் செயல்படுத்த முடிந்தால், தெரு நாய்த் தொந்தரவு என்பது கனவாய், பழங்கதையாய் மாறிவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com