அரிசி விலை உயர்வது ஏன்...

உணவுக் கார்ப்பரேஷனும் சரி, மாநில சிவில் சப்ளைக் கார்ப்பரேஷன்களும் சரி, உணவு தானியக் கொள்முதலில் காட்டும் வேகத்தை வினியோகத்திலும், ஏற்றுமதியிலும் காட்டுவதில்லை; இதனால் உணவு தானியங்கள் தேங்கிக் குவிந்து வீணாவதுடன், சீரான வினியோகம் இல்லாததால் விலை ஏற்றத்தையும் தவிர்க்க முடியவில்லை.

உணவுக் கார்ப்பரேஷனும் சரி, மாநில சிவில் சப்ளைக் கார்ப்பரேஷன்களும் சரி, உணவு தானியக் கொள்முதலில் காட்டும் வேகத்தை வினியோகத்திலும், ஏற்றுமதியிலும் காட்டுவதில்லை; இதனால் உணவு தானியங்கள் தேங்கிக் குவிந்து வீணாவதுடன், சீரான வினியோகம் இல்லாததால் விலை ஏற்றத்தையும் தவிர்க்க முடியவில்லை.

பல கோடி டன்கள் கோதுமையும் அரிசியும் தேங்கியுள்ள நிலையில் விலை உயர்வது வியப்பாயுள்ளது. ஏற்றுமதியில் வேகம் இல்லை. உள்ளூர் வினியோகத்திலும் வேகம் இல்லை.

÷ஜூலை 2013-ஐ நெருங்கும்போது நமது கோதுமை + அரிசி இருப்பு 10.6 கோடி டன்கள் அளவுக்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 2012-இல் கையிருப்பு 52 மில்லியன் டன் கோதுமையும் 30 மில்லியன் டன் அரிசியும் சேர்த்து 82 மில்லியன் டன்கள். ஒரு மில்லியன் என்பது பத்து லட்சமாகும். அதில் "ரிசர்வ் ஸ்டாக்' 3.2 கோடி டன்கள் போகத் தேக்கம் 5 கோடி டன்கள்.

அக்டோபர் 2012-இல் பொது வினியோகம் - ஏற்றுமதிக்குச் செலவழித்தது போக எஞ்சியவை 6.6 கோடி டன்கள். கோதுமை 4.3 கோடி டன்கள். அரிசி 2.3 கோடி டன்கள். "ரிசர்வ் ஸ்டாக்' 2.1 கோடி டன்கள். தேக்கம் 4.5 கோடி டன்கள். "ரிசர்வ் ஸ்டாக்' என்பது "உள்ளூர்த் தேவைக்குமேல் ஏற்றுமதிக்கு' என்று பொருள் கொள்ளலாம். "ரிசர்வ் ஸ்டாக்'கும் தேக்கமுற்றுள்ளதின் பொருள், ஏற்றுமதியிலும் வேகம் குறைவு!

÷2013-14-இல் நெல் வடிவில் அரிசிக் கொள்முதல் 2 கோடி டன்கள் என்றும், கோதுமைக் கொள்முதல் 4 கோடி டன்கள் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டு கரீஃப் அரிசி, ரபி கோதுமை உற்பத்தி உயர்வாகவே மதிப்பிடப்பட்டுள்ளது.

புதிய வரவாக 6 கோடி டன் உணவு தானியங்கள் இருப்பு வைக்கும் நேரத்தில், பழைய இருப்பில் சுமார் 3 கோடி முதல் 4 கோடி டன்கள் வீணாகும் அபாயம் உள்ளது.

எனினும் அரசு தரப்பு அறிக்கைப்படி 2010-11, 2011-12 ஆண்டுகளில் எஞ்சிய இருப்பு 14 மில்லியன் டன்களை "மனித உணவாகப் பயன்படுத்த முடியாது' என்ற சான்றிதழுடன் சாராயத்திற்கோ, கால்நடைக்குரிய அடர் தீவனமாகவோ ஏலத்திற்கு விடப்படலாம்.

2ஜி, நிலக்கரிபோல் ""விலையில்லாமல்'' அள்ளிக்கொள்ள வாய்ப்பிருந்தால் உணவு அமைச்சருக்கு "யோகம்' உண்டு. கெட்டுப் போய்விட்டதாகச் சொல்லப்பட்டு ஏலத்துக்கு வரும் அரிசி-கோதுமையில் முக்கால் பங்கு, "மனிதர் உண்ண' வெளி அங்காடிக்கு வரும் என்றாலும் அப்படிப்பட்ட வழங்கலிலும் வேகம் காட்டமாட்டார்கள்.

வேறு தில்லுமுல்லுகளும் உண்டு. "நிஜமாகவே கெட்டுப்போனதை', "நல்ல சரக்காக' பொது வினியோகத்திற்கு அனுப்பி, "கெட்டுப்போனதாக' முத்திரை குத்தப்பட்ட "நல்ல சரக்கு' ஏலமாகவோ, ஏலமில்லாமலோ வெளி அங்காடிகளுக்கு மெல்ல மெல்ல வரலாம். யாருக்குத் தெரியும்?

கோதுமை ஏற்றுமதி ஆகஸ்டு 2012 முதல் தொடங்கப்பட்டது. 10 லட்சம் டன் ஒதுக்கப்பட்டாலும் இன்று வரை 5 லட்சம் டன்களே ஏற்றுமதியாயின. விற்ற விலை டன்னுக்கு ரூ.16,470 முதல் ரூ.17,604. கோதுமை ஏற்றுமதியில் தனியார் அனுமதி இல்லை. பொதுத்துறையின் (அரசுத் துறையின்) ஏற்றுமதி இருப்பினும் கோதுமை விலை உயர வேண்டிய அவசியம் இல்லை.

விலை உயர்வுக்கு அடிப்படையான காரணம் வெளி அங்காடிக்குரிய கோதுமை வழங்கலில் ஏற்பட்டுள்ள குளறுபடியே. சுமார் 4 கோடி டன்னுக்கு மேல் இருப்பை வைத்துள்ள உணவுக் கார்ப்பரேஷன் வெளி அங்காடித் தேவையை நிறைவு செய்யாதது வியப்பாயுள்ளது!

இந்தியாவின் கோதுமை வியாபாரம் முற்றிலும் அரசு நிறுவனமான "இந்திய உணவுக் கார்ப்பரேஷன்' வசம் உள்ளதால் அங்காடித் தேவையை நிறைவு செய்யாமல் ""பெருந்தன்மைப் பதுக்கலை''ச் செய்வது ஏன்? தனிப்பட்ட வியாபாரி செய்தால் தண்டனைக்குரிய பதுக்கல், அதையே அரசு செய்தால் "பெருந்தன்மைப் பதுக்கல்'.

கோதுமை விலை குறைய பழைய இருப்புகளைச் சற்றுத் தள்ளுபடி விலையில் வெளியில் வழங்கலாம். "உருட்டு மாவு ஆலை' (ரோலர் பிளவர் மில்) அதிபர்கள் தமிழ்நாட்டில் அதிகம். ஆட்டா, ரவா, சேமியா, மைதா விலைகள் குறைய வாய்ப்பு இருந்தும் தமிழ் நாட்டில் உள்ள "உருட்டு மாவு ஆலை'களுக்கு மலிவு விலை கோதுமை கிடைப்பது இல்லை.

இதற்கு மாறாக, நிறைய இருப்பு இருந்தும்கூட தேவையில்லாமல் அதிகபட்ச விலையை மேலும் மேலும் உயர்த்தி சேமித்து வீணாக்குவதுதான் பொதுத்துறையின் பெருந்தன்மைப் பதுக்கலா?

÷கோதுமை ஏற்றுமதியிலும் மந்த நிலை உள்ளது. ஜூன் 2013-க்குள் 1 கோடி டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய வேண்டும். "காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்' என்பதுபோல் கோதுமை ஏற்றுமதிச் சந்தையில் விலகியுள்ள ரஷியா, உக்ரைன் இடத்தை இந்தியா பற்றிக்கொண்டு நல்ல விலையைப் பெறும் அரிய வாய்ப்பை இழக்காமல் இருக்க மாதம் 10 லட்சம் டன் ஏற்றுமதிக்கு முயல வேண்டும். தாமதித்தால் ஆஸ்திரேலியா, அர்ஜென்டீனா மேற்படி காலி இடத்தைப் பிடித்துவிடும். லாபகரமான விலைக்கு வழியிருக்காது. அடுத்த ஜூன் 2013-க்குப்பின் விலை சரிய வாய்ப்புள்ளது.

÷ஜூன் 2013 ஐ நெருங்கும்போது இந்தியாவில் கோதுமை இருப்பு 6.1 கோடி டன்கள் என்ற செய்தியே உலக கோதுமை விலை வீழ்ச்சிக்கு வித்திட்டுவிடும். கோதுமை ஏற்றுமதி முழுக்கவும் "ஓ.ஜி.எல்." (ஓபன் ஜெனரல் லைசென்ஸ்) - அதாவது அரசின் பொது உரிமத்தில் நிகழ்வதால், தேவைக்கு மேல் இருப்பு வைப்பதைத் தவிர்த்து உள்ளூரில் வெளி அங்காடிகளுக்கும் தென்னகத்தில் மிகுந்துள்ள கோதுமை உருட்டுமாவு ஆலைகளுக்கும் மலிவு விலை கோதுமையை வழங்கி லாபம் பெறவேண்டும்.

÷உணவுக் கார்ப்பரேஷனிடம் பழைய கோதுமை இருப்பு 2010-11, 2011-12 ஆண்டுகளில் கொள்முதல் செய்தவை - கெட்டுப்போகும் சூழ்நிலையில் உள்ளதைத் தனியார் ஏற்றுமதிக்கும் அனுமதிக்கலாம். வால்மார்ட் வரும்வரை வைத்திருக்கக்கூடாது.

இப்படிப்பட்ட இரண்டாம் தர கோதுமை மேற்கு ஆசியா, கிழக்கு ஆசியா கோதுமை உருட்டு ஆலைகளுக்குத் தேவைப்படலாம். உகந்தவை மனித உணவாகவும், மற்றவை சாராயம் அல்லது கால்நடைத் தேவைக்கும் பயனுறலாம்.

இப்படி வெளி அங்காடிகளுக்குத் தாராளமாக கோதுமையை வழங்கும்போது உள்ளூரில் உணவுப் பணவீக்கத்தையும் குறைத்துக் கொண்டு அன்னியச் செலாவணிப் பற்றாக்குறைக்கும் சற்றுப் பங்களித்து "இடைவெளியை'க் குறைக்கலாம்.

÷அரிசி ஏற்றுமதியில் கோதுமையில் காட்டப்படாத வேகம் உள்ளது. பாசுமதி அரிசி ஏற்றுமதி வழக்கப்படியானது. ஆனால் பாசுமதியல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதியில் மாபெரும் சாதனையே நிகழ்ந்துள்ளது. உலக அரிசி வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறந்த தாய்லாந்தை இந்தியா வீழ்த்திவிட்டது. அரிசியில் மட்டும் ஏற்றுமதி அதிகரித்ததற்கு தனியார் உரிமம் முக்கியக் காரணமாயிருக்கலாம்.

கடந்த 12 மாதங்களில் மொத்த அரிசி ஏற்றுமதி ஒரு கோடி டன்னைத் தொட்டுவிட்டது. வரும் 12 மாதங்களில் 1 கோடி டன் அரிசி ஏற்றுமதி 1.5 கோடி டன்னாகக் குறி இலக்கு நிர்ணயமாகிவிட்டது.

÷தமிழ்நாட்டில் இலவச அரிசி தாராளமாக வழங்கப்பட்டாலும் வெளி அங்காடியில் அரிசி விலை உயர்வைத் தவிர்க்க முடியாத சூழ்நிலைக்குரிய முக்கியமான காரணம் ரேஷன் இலவச அரிசியின் "தரம்' போற்றும்படி இல்லை. இலவச அரிசியைப் பெறுபவர்கள் நிஜமாகவே சமைக்கிறார்களா?, ஐந்து ரூபாய்க்கு இட்லிக் கடைக்கு விற்கிறார்களா?

மாடு வளர்ப்பவர்கள் மாவாக அரைத்து அடர் தீவனமாக வழங்கும் வாய்ப்பு அதிகம். மாட்டுக்கு ஜீரணம் ஆகவேண்டுமானால் அதை மேலும் தவிட்டுடன் கலந்து "பாலிஷ்' செய்து, சம அளவு கம்பு அல்லது வெள்ளைச் சோள மாவில் கலந்து 10 சதவீதம் அடர்தீவனம் + 90 சதவீதம் பசும்புல் + வைக்கோல் வழங்கினால் மாட்டுக்குக் கறவை கூடும் வாய்ப்பு உண்டு என்பது எங்கள் அனுபவம்!

÷தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில்தான் தரமான அரிசி உற்பத்தி உண்டு. வெள்ளைப் பொன்னி, வெள்ளைக்கார் ஆகியவற்றுக்கு அங்காடி மதிப்பு உண்டு. தஞ்சாவூர் - காவேரி டெல்டா பகுதியில் விளையும் ராஜராஜன், ஏ.டி.டி. 36 போன்ற குறுகிய கால நடுத்தர ரகம் அரசுக் கொள்முதலுக்காகவே தயாராகிறது.

தென் மாவட்டங்களில் தரமான அரிசி உற்பத்தி குறைவு. உண்மையைச் சொல்வதானால் பெரும்பாலான தமிழர் உண்ணும் "டீலக்ஸ்' பொன்னி ரகம் ஆந்திரம், கர்நாடகம், மாகராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலிருந்து வருவதால்தான் இந்த விலை ஏற்றம்.

÷உணவுப் பாதுகாப்பு மசோதா பற்றி கவலைப்பட வேண்டிய நாடு இந்தியா அல்ல. இந்தியாவில்தான் கோதுமையும் அரிசியும் மலையெனக் குவிந்துள்ளதே! பொது வினியோகத் தேவையை உணவுப் பாதுகாப்புக்காக மேலும் சற்றுக் கூட்டினாலும்கூட உணவுத் தேக்கம் இந்தியாவில் தவிர்க்க முடியாத தவறாகிவிட்டது. வாழ்க பாரதம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com