மறுகாலனிய ஆதிக்கத்தை எதிர்ப்போம்

வணிக நிமித்தம் 17, 18ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் தென்பகுதியில் கடல் மார்க்கமாக புகுந்துவிட்ட ஐரோப்பியர்களில், கடைசியாக ஆங்கிலேயர்களுக்கும், பிரஞ்சுக்காரர்களுக்கும் வந்தவாசியில் நடைபெற்ற இறுதிகட்டப் போரில்

வணிக நிமித்தம் 17, 18ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் தென்பகுதியில் கடல் மார்க்கமாக புகுந்துவிட்ட ஐரோப்பியர்களில், கடைசியாக ஆங்கிலேயர்களுக்கும், பிரஞ்சுக்காரர்களுக்கும் வந்தவாசியில் நடைபெற்ற இறுதிகட்டப் போரில், (1760 ஜனவரி 22) பிரெஞ்சுக்காரர்களை வென்று தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டனர் ஆங்கிலேயர்கள். தமிழ்நாடு தொடங்கி, வங்காளம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அமைந்திருந்த அரசியல் அதிகார மையங்களை, கற்பனையான காரணங்களைச் சொல்லி பின்னர் கைப்பற்றத் தொடங்கிவிட்டனர்.

தமிழ்நாடு தொடங்கி இந்திய மண்ணில் அரசியல் அதிகாரங்களைக் கைப்பற்றத் தொடங்கிய காலத்தில் ஆங்கிலேயர்களின் துப்பாக்கிகளும், பீரங்கிகளும், வெடிமருந்துகளும், அவர்களது ராணுவ பலத்தை அதிகப்படுத்தியிருந்தாலும், அவர்களைத் தோற்கடித்து அவர்களின் அரசியல் ஆதிக்கத்தை முழுமையாகத் தடுத்துநிறுத்தும் வல்லமையும், ஆற்றலும் கொண்ட பேரரசுகள் இந்திய நாட்டில் எங்கும் இல்லாமல் போனதும், காலம் நமக்குச்செய்த மிகப்பெரிய துரோகம் ஆகும்.

அத்துடன் இங்கு நிலவிய ஒற்றுமையின்மையும், வறுமையும், பஞ்சமும், ஆங்கிலேயர்களின் கழுகுக்கண் பார்வையிலிருந்து தப்பிவிடவில்லை. ஆங்கிலேயர்கள் தங்களின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இந்தச் சூழ்நிலைகளைப் பாலங்களாகப் பயன்படுத்தவும் தவறிடவில்லை.

இந்தச் சோக வரலாற்றின், சுவடுகளையும், குருதிதோய்ந்த வரலாற்றுப் பக்கங்களையும், ஆண்டுதோறும் ஒரு நாள், நாட்டு மக்களுக்கு நினைவுபடுத்துவதற்குக் காரணம், இது மறைந்து போகக்கூடிய அல்லது மறந்து போகக்கூடிய வரலாற்றுப் பதிவுகள் அல்ல; மாறாக, இது ஆண்டுதோறும் நினைவுகொள்ளவேண்டிய நிரந்தர நினைவுச்சின்னமாகும் என்பதற்காகத்தான்.

வீரம் செறிந்த நம் தமிழ் மண்ணில் நெற்கட்டுஞ்சேவல் பூலித்தேவர், தளபதி ஓண்டிவீரன், வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, தளபதி.சங்கரலிங்கம், சிவகெங்கைச் சீமையின் மருதுபாண்டியர்கள், வேலு நாச்சியார், ஆதிதிராவிட வீரப்பெண்மணி குயிலி, அழகுமுத்துக்கோன், விருப்பாச்சி கோபால் நாயக்கர், ஓடாநிலை தீரன் சின்னமலை, தளபதி கருப்புசேர்வை, ஆணையர் நாட்டுக்கள்ளர் தளபதிகள் (உசிலம்பட்டி அருகில் உள்ள அன்றைய கள்ளர் நாட்டுத் தலைமையிடம்) இவர்களெல்லாம் 18ஆம் நூற்றாண்டின் மத்தியிலியிருந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதமேந்தி போர்க்களத்தில், ஆங்கில எதிரிகளையும், உள்நாட்டுத் துரோகிகளையும் சந்தித்தவர்கள், போரிட்டவர்கள், போர்க்களத்தில் மாண்டவர்கள். போரின் முடிவில் தூக்குக் கயிற்றைச் சந்தித்தவர்கள்.

இப்படி நாடு அடிமைப்பட்ட ஒரு சோக வரலாறு மீண்டும் எந்த வடிவத்திலும், இந்திய மண்ணில் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் எச்சரிக்கையோடு இருந்து தீர வேண்டும் என்பதை நினைவுபடுத்தும் நாள்தான் இந்த நினைவு நாளாகும்.

கடந்த காலத்தில் நடைபெற்ற யுத்த முறைகளைப் பின்பற்றி ஒரு நாட்டை அடிமையாக்குவது இன்று இயலாத ஒன்றாகும். இன்று உலகில் எங்காவது இரு நாடுகளிடையே யுத்தம் ஏற்படுமானால் அது நிச்சயம் உலக யுத்தமாக மாறிவிடும். அவ்வாறு உலக யுத்தமாக மாறிடும் சூழ்நிலையில், உலகில் உள்ள எந்த நாடும் யுத்த தாக்கத்திலிருந்து தப்பிவிடமுடியாது.

அதுமட்டுமல்ல, இன்றுள்ள அறிவியல் வளர்ச்சி பல ஆயிரம் கிலோ மீட்டர் கடந்து எதிரிகளின் இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகள் பெருக்கம், விண்வெளியில், கடல் வழியில், தரை வழியில் ஊடுருவிச்சென்று தாக்கும் ஏவுகணைகளின் புதிய, புதிய கண்டுபிடிப்புகள், அணு ஆயுதங்களின் பெருக்கம் இவை எல்லாம் உலகத்தின் அழிவை ஒரு அழுத்தும் பொத்தானில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.

பொத்தானை அழுத்திய சில வினாடிகளில் உலகம் அழிவைச் சந்திக்கும். எவ்வளவு வல்லமைபெற்ற நாடும், மக்களும் உயிர்வாழ இயலாது. பலநூறு கோடிக்கணக்கான ஆண்டுகளில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சி மாற்றங்களால் உருவான உயிரினங்கள் அழிந்து, இயற்கை வளம் அழிந்து, இனி உயிரினங்கள் வாழவும், வளரவும் இயலாத சூன்யப் பிரதேசம் ஆகிவிடும் இந்த பூமி என்பதை நாம் நன்றாகவே அறிந்துள்ளோம்.

இந்த அச்சத்தின் காரணமாகத்தான் எத்தகைய வல்லரசு நாடுகளும் எவ்வளவு ஆயுத பலம் பெற்றிருந்தாலும் போரைக் கண்டு அஞ்சுகிறது. ஆரம்பிக்கும் நாடே போரில் அழிந்துவிடும் என்பதை ஒவ்வொரு நாடும் இன்று உணர்ந்திருக்கிறது.

உலக நாடுகள் அமைப்பு இருப்பதால்தான் உலக யுத்தம் தடுக்கப்படுகிறது என்பது மாயத்தோற்றம். உண்மையிலேயே உலக யுத்தம் வராமல் இருப்பதற்கான உண்மையான காரணம் அவரவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அழிவின் பயம்தான்.

ஆனாலும் வல்லரசு நாடுகள், தங்களின் அறிவியல் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, ராணுவ பலம் ஆகியவற்றை அடித்தளமாக்கிக் கொண்டு, வளரும் நாடுகளையும் வளராத நாடுகளையும் அச்சுறுத்தி அந்த நாடுகளை தங்கள் நாடுகளின் உற்பத்திப் பொருட்களுக்கான விற்பனைச் சந்தைகளாகப் பயன்படுத்துகிறார்கள். அந்த நாடுகளின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதோடு, அந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரங்களான வேளாண்மை, வேளாண்சார்ந்த தொழில், சிறுவணிகம் ஆகியவற்றையும் பறித்திடும் முயற்சியில் "பொருளாதாரச் சீர்திருத்தங்கள்' என்ற கவர்ச்சிகரமான கோஷத்துடன் களம் இறங்கியுள்ளார்கள்.

வளர்ந்த நாடுகளின் சதிவலை ஒப்பந்தங்களில் வளர்ச்சி பெறாத நாடுகளும், வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளும் கையொப்பமிட்டு, சிக்கிக் கொண்டால், தங்கள் தங்கள் நாடுகளின் பொருளாதாரச் சுதந்திரத்தை முற்றிலுமாக இழக்கக்கூடிய அபாய கட்டம் நிச்சயம் உருவாகும்.

வளர்ந்த நாடுகளிடம் பொருளாதாரச் சுதந்திரத்தை இந்தியாபோன்ற வளரும் நாடுகள் இழந்துவிட்டால், வளரும் நாடுகளின் அரசியல் சுதந்திரம் பின்னர் படிப்படியாக பறிக்கப்படும்; அதைத் தடுக்கும் சக்தி, வளரும் நாடுகளுக்கு ஒரு காலகட்டத்தில் இல்லாமலே போய்விடும்.

வளரும் நாடுகளின் நாடாளுமன்றங்களும் சட்டமன்றங்களும், பொருளாதார ஆதிக்கம்பெற்று வளர்ந்த நாடுகளின் கைப்பாவைகளாக மாறிவிடும். வளர்ந்த நாடுகள் இந்த இலக்கை அடைவதற்கு, பன்னாட்டு நிறுவனங்கள் எல்லா வகையிலும் துணை நிற்கும், ஏன், தூண்டுகோலாகவும் செயல்படும்.

வளர்ந்த நாடுகளின் இத்தகைய பொருளாதார ஆதிக்கம், "பொருளாதாரச் சீர்திருத்தம்' என்ற கொல்லைப்புற வாயில் வழியாக நுழைந்து பின்னர் வெகுவிரைவில் அரசியல் அரியணையில் அமரும் கட்டம் நிச்சயம் உருவாகும். பொருளாதாரத்தில் நலிந்துபோன நாடும், நலிந்துபோன மக்களும் காலப்போக்கில் அடிமை நாடாகவும், அடிமை மக்களாகவும் மாறிவிடுவார்கள்.

பொருளாதாரச் சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையில் அரசியல் சுதந்திரம் ஆட்டம் கண்டுவிடும். பின்னர் நாடு என்பது மனித குலத்தின் சரணாலயமாகவும், நாட்டு மக்கள் மனித விலங்கினங்களாகவும் உருமாறி ஆக்கிரமிப்பு நாடுகள் வழங்கும் உணவும், உறையுளும் அவர்களை வாழ்விக்கும் அடிப்படை உயிர்ப்பு சக்தி என்ற நிலையே இறுதிக்கட்டமாகும்.

இந்த நிலைமையை வளரும் நாடுகளில் - வளர்ந்த நாடுகள் உருவாக்கக் காரணம், அவர்களது நாடும், மக்களும், இயற்கை வளங்களும் செழிப்படைய வேண்டும் என்கின்ற சுயநலம் அல்லது பேராசை என்பதைத் தவிர வேறு இருக்க முடியுமா?

"ஆசையை அறுத்துவிடு, ஆசையே அனைத்து அழிவிற்கும் காரணம்' என்று உலகிற்குப் போதித்த புத்தரும், வள்ளுவரும் பிறந்த இந்த மண், பேராசை பிடித்த வல்லரசுகளின் அடிமை பூமியாக மாறுவதை இந்த மண்ணில் அமைந்த அரசே வரவேற்பதும், வாழ்த்துச் சொல்வதும், சிவப்புக்கம்பளம் விரிப்பதும் எத்தகைய விபரீத விளைவுகளை உருவாக்கும் என்பதை இந்திய மக்கள் அனைவரும் எண்ணிப்பார்த்துச் செயல்படவேண்டிய அவசர - அவசியமான காலகட்டம் இன்று உருவாகியுள்ளது.

இந்த அவல நிலைமை உருவாவதற்கு இந்திய நாட்டு மக்கள் காரணமா? இல்லை, மாறாக இந்திய அரசுதான் காரணம்; இந்திய அரசு வல்லரசு நாடுகளின் பொருளாதார ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டாமா?

அண்ணல் காந்தியின் கிராம சுயாட்சி அல்லது சுதந்திரம், பண்டித ஜவாஹர்லால் நேருவின் சமதர்மக் கொள்கை, ஜெயப்பிரகாஷ் நாராயணன், அசோக்மேத்தா, ராம் மனோகர் லோகியா ஆகியோரின் சோஷலிசக் கொள்கைகள், இந்திரா காந்தியின் பெரும் தொழில்களை நாட்டுமையாக்கும் கொள்கைகள் இவைகள் எல்லாம் அரசியல் பிரமிடுகள் ஆகிவிட்டனவா?

வல்லரசு நாடுகளின் ஆதிக்கம் இந்தியாவில் உறுதியாக நிறுவப்படும் என்பதற்கான வெளிப்படையான நடவடிக்கைதான் சில்லறை வணிகத்தில் வெளிநாட்டவரின் முதலீடு; அதுபோன்று ஆயுள் காப்பீட்டுத்துறை, ஓய்வூதியம் ஆகிய துறைகளிலும், வெளிநாட்டவர் முதலீடு செய்வதற்கு இந்திய நடுவண் அரசு அனுமதித்தது கொடுமையான நடவடிக்கையாகும்.

மத்திய அரசிற்கு வெளியில் இருந்தும், மத்திய அரசில் அங்கம் பெற்றும் உள்ள மாநிலக் கட்சிகள்தான், மத்திய அரசு ஆட்சியில் நீடிக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் கட்டத்தில் உள்ளன.

இந்த இக்கட்டான அரசியல் சூழ்நிலையில் "பொருளாதாரச் சீர்திருத்தங்கள்' என்ற பெயரில் அன்னிய முதலீட்டைப் பல துறைகளில் அனுமதிக்க அரசு முன்வந்திருக்கிறது. இந்த நடவடிக்கையை மத்திய அரசிற்கு ஆதரவு தரும் பல மாநிலக் கட்சிகளும் எதிர்க்கின்றன. மக்களும் எதிர்க்கின்றனர். ஆனால் மத்திய அரசு விடாப்பிடியாக அன்னிய முதலீட்டை அனுமதிப்போம் என்று பிடிவாதம் செய்கிறது என்றால், அதற்கான பின்னணி ஒன்று, இருந்துதான் தீரவேண்டும்.

அந்தப் பின்னணிதான் உலக ஏகாதிபத்திய நாடுகள் இந்தியா மீது கொடுக்கும் அழுத்தம்; ""எப்படியும் மத்திய அரசைக் காப்பாற்றுவோம்'' என்ற ஏகாதிபத்திய நாடுகளின் வாக்குறுதியும் இன்றைய மத்திய அரசின் கண்மூடித்தனமான நம்பிக்கைக்குக் காரணம் ஆகும்.

மன்மோகன்சிங்-சிதம்பரம்-மாண்டேக் சிங் அலுவாலியா ஆகிய மத்திய அரசின் உச்சநிலைப் பொறுப்பில் உள்ளவர்கள் நாட்டு மக்களுக்கு எடுத்துக்காட்டிய கவர்ச்சிகரமான விளைவுகள், இந்தப் பொருளாதாரச் சீர்த்திருத்தங்கள் மூலம் உருவாகவில்லை என்பதை மக்கள் மிக நன்றாகவே உணர்ந்துள்ளார்கள்.

தாராளமயமும், பொருளாதாரச் சீர்திருத்தங்களும், மக்கள் வாழ்நிலையிலும், நாட்டின் பொருளாதாரத்திலும், அதிசயக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திடவும் இல்லை. பெரிய அளவில் தொழில்நுட்ப முன்னேற்றத்தையோ, வேலை வாய்ப்பையோ உருவாக்கிடவும் இல்லை. மாறாக இந்த நாட்டின் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதற்கும் லஞ்சம்-ஊழல்-வரிஏய்ப்பு பெருகுவதற்கும் மட்டுமே பயன்பட்டுள்ளது என்பதே இந்நாட்டு மக்களின் அனுபவமாகும்.

பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற கவர்ச்சிகரமான தலைப்பில், ஏற்கனவே பிரதமர் நரசிம்மராவ் காலத்தில் இந்தியா சார்பாக கையொப்பமிட்ட "காட்' ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிறைவேற்றப்படுகின்ற இந்த வினோதமான, ஏன், தேசவிரோத பொருளாதாரச் சீர்திருத்தங்கள், மீண்டும் இந்தியாவில் மறு காலனி ஆதிக்கத்தை உருவாக்கும்.

கிழக்கிந்தியக் கம்பெனியால் உருவாக்கப்பட்ட அடிமை இந்தியாவை மீட்டெடுக்க இந்திய மக்களுக்கும் மேலே குறிப்பிட்ட வீரத் தியாகிகளின் தூக்குமேடைகளிலிருந்தும், போர்க்களங்களிலிருந்தும் தொடங்கி 150 ஆண்டுகள் தேவைப்பட்டது. இனி இந்திய நாட்டில் மீண்டும் கிழக்கிந்தியக் கம்பெனிகள் உருமாறி பன்னாட்டு நிதி நிறுவனங்களாக வடிவமெடுத்து இந்திய நாட்டை ஆக்கிரமிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமானால், இந்திய குடிமக்கள் அனைவரும் மேலே குறிப்பிட்ட முதல் இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்ட மாவீரர்களைப் போல் போர்க்களத்தில் நிற்போம்; விளைவுகளைப் பற்றிய வீண் சிந்தனைகளை வீசிஎறிவோம்.

எதுவரினும் எக்காளம் முழங்கிடச் சந்திப்போம், என்றைக்கும் மறுகாலனி ஆதிக்கத்தை இந்திய மண்ணில் அனுமதியோம்; இதுவே இந்த நாளில் எங்களின் வீர முழக்கம். ஆம், எங்களின் வீர சபதம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com