சீனா சாதிக்காததை இந்தியா சாதிக்குமா?

சந்திரனுக்கு வெற்றிகரமாக சந்திரயானை அனுப்பிய இந்தியா இப்போது செவ்வாய் கிரகம் மீது கண் வைத்துள்ளது.

சந்திரனுக்கு வெற்றிகரமாக சந்திரயானை அனுப்பிய இந்தியா இப்போது செவ்வாய் கிரகம் மீது கண் வைத்துள்ளது. எல்லாம் திட்டமிட்டபடி நடக்குமானால் வருகிற நவம்பர் மூன்றாம் வாரத்தில் செவ்வாய் கிரகத்தை நோக்கி இந்திய விண்கலம் செலுத்தப்படும்.

சந்திரனுக்கு இந்தியா 2008 அக்டோபரில் அனுப்பிய விண்கலம் சந்திரயான் என்று பெயர் கொண்டதாக இருந்தது. செவ்வாய்க்குச் செல்ல இருக்கும் விண்கலத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. அதற்கு மங்கள்யான் என பெயரிடப்படலாம் என்று கருதப்படுகிறது(இந்தி மொழியில் செவ்வாய்க்கு மங்கள் என்று பெயர்).

மங்கள்யான் திட்டம் நிறைவேறுமானால் உலகில் செவ்வாய் கிரகத்துக்கு வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பிய நான்காவது நாடு என்ற பெருமை இந்தியாவுக்குக் கிடைக்கும். ரஷியா, அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு ஆகியன ஏற்கெனவே இதைச் சாதித்துள்ளன. செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்ப பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி கண்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதையே வேறு விதமாகச் சொன்னால் செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்புவதில் சீனாவை இந்தியா முந்திக் கொண்டது என்று கூறலாம்.

இந்தப் பெருமையைப் பெறும் நோக்கில் தான் மங்கள்யான் திட்டத்தில் இந்தியா முனைந்துள்ளதாக ஒரு கருத்து உண்டு. நிபுணர்கள் சிலர் இந்தியாவின் மங்கள்யான் திட்டம் வீண் செலவு என்றும் இந்த நேரத்தில் இந்தியா இதில் ஈடுபடத் தேவையில்லை என்றும் கூறுகின்றனர். இந்திய விண்வெளி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் மாதவன் நாயரும் இவ்விதமாகவே கூறுகிறார்.

விண்கலங்களை காவு கொள்ளும் கிரகம் என்ற பெயர் செவ்வாய்க்கு உண்டு. கடந்த பல ஆண்டுகளில் செவ்வாய் நோக்கி செலுத்தப்பட்ட சுமார் 40 விண்கலங்களில் 19 மட்டுமே வெற்றி கண்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவுக்குச் சொந்தமானவை.

ஒரு விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்புவதென்பது வேறு. செவ்வாய்க்கு அனுப்புவது என்பது வேறு. சந்திரன் எப்போதும் பூமியைச் சுற்றிக் கொண்டிருப்பது. பூமியிலிருந்து சந்திரன் சுமார் 4 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பூமியைச் சுற்றி வருகின்ற காரணத்தால் சந்திரன் எப்போதும் கிட்டத்தட்ட அதே தொலைவில் இருப்பதாகும்.

செவ்வாய் சமாச்சாரம் வித்தியாசமானது. செவ்வாய் கிரகமும் சரி, பூமியும் சரி வெவ்வேறு வட்டங்களில் இருந்தபடி சூரியனை சுற்றுபவை. ஆகவே செவ்வாய்க்கும் பூமிக்கும் இடையே குறைந்தபட்ச தூரம், அதிகபட்ச தூரம் என்பது உண்டு. செவ்வாய்க்கும் பூமிக்கும் குறைந்தபட்ச தூரம் சுமார் 5 கோடி கிலோ மீட்டர், அதிகபட்ச தூரம் 40 கோடி கிலோ மீட்டர். பூமிக்கும் செவ்வாய்க்கும் உள்ள தூரம் மிகக் குறைவாக இருக்கின்ற சமயத்தில்தான் செவ்வாயை நோக்கி விண்கலம் செலுத்தப்படுகிறது. இதற்குக் காரணம் இதில் பல சாதகங்கள் உள்ளன என்பதே. அந்த வகையில் 26 மாதங்களுக்கு ஒரு முறை இந்த வாய்ப்பு கிட்டும். இந்த ஆண்டு நவம்பர் மாதம் அப்படியான வாய்ப்பு ஏற்படுகிறது. இதைவிட்டால் அடுத்து 2016 ஜனவரியில் தான் இப்படியான வாய்ப்பு கிட்டும். இப்போதுள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி இந்த ஆண்டிலேயே மங்கள்யானை செலுத்த இந்தியா முனைப்பாக உள்ளது.

செவ்வாய்க்கு ஒரு விண்கலத்தைச் செலுத்துவதானால் அதற்கு சக்திமிக்க ராக்கெட் தேவை. அமெரிக்கா 2011 நவம்பரில் செவ்வாய்க்கு செலுத்திய கியூரியாசிடி விண்கலத்தை சுமந்து சென்ற அட்லஸ் - 5 ராக்கெட் அப்படிப்பட்டது. அது ஐந்து முதல் 13 டன் எடை கொண்ட விண்கலத்தைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. அந்த ராக்கெட்டில் திரவ ஹைட்ரஜனும் திரவ ஆக்சிஜனும் எரிபொருள்களாகப் பயன்படுத்தப்பட்டன.

இத்துடன் ஒப்பிட்டால் வருகிற நவம்பரில் இந்தியாவின் மங்கள்யான் விண்கலத்தை செலுத்த இருக்கும் பி.எஸ்.எல்.வி ராக்கெட் குறைந்த திறன் கொண்டதே. அந்த ராக்கெட்டினால் அதிகபட்சம் 1300 கிலோ (1.3 டன்) எடையைத்தான் சுமந்து செல்ல இயலும். ராக்கெட்டின் திறன் குறைவு என்பதால் உயரே கிளம்பியதும் ஒரே பாய்ச்சலில் செவ்வாயை நோக்கிப் பாய்ந்து செல்ல இயலாது.

இதைச் சமாளிக்க பெல் புரூனோ என்ற அமெரிக்க கணித நிபுணர் உருவாக்கிய பாணியிலான சுற்றுப்பாதையைத்தான் பின்பற்ற வேண்டியிருக்கும். அதாவது இந்திய ராக்கெட் உயரே சென்றதும் நீள் வட்டப் பாதையில் பூமியைச் சுற்ற முற்படும். அப்படிச் சுற்ற ஆரம்பிக்கும்போது மங்கள்யானும் ராக்கெட்டும் ஒரு கட்டத்தில் பூமியிலிருந்து சுமார் 500 கிலோ மீட்டரில் இருக்கும். அப்போது ராக்கெட் எஞ்சினை சில நிமிஷ நேரம் இயக்குவர். இதன் காரணமாக ராக்கெட் சீறிப் பாய்ந்து மறு முனையில் அதிகத் தொலைவை எட்டும். மறுபடி 500 கிலோ மீட்டர் உயரத்துக்கு வரும்போது மீண்டும் ராக்கெட் எஞ்சின் இதே போல இயக்கப்படும். இதனால் மறு முனையில் மேலும் அதிகத் தொலைவை எட்டும். இப்படி ஐந்து தடவை செய்வர். மறு முனையில் ராக்கெட் சுமார் 2 லட்சம் கிலோ மீட்டர் உயரத்தை எட்டிய நிலையில் கடைசியாக வேகமாக உந்தப்பட்டு செவ்வாயை நோக்கிப் பயணிக்கத் தொடங்கும்.

ஒருவர் தோட்டத்தில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து மேலும் கீழுமாக ஊஞ்சலாடுகிறார். ஒவ்வொரு தடவையும் காலை வேகமாக உந்தும் போது ஊஞ்சல் மேலும் மேலும் உயரே செல்கிறது. ஒரு கட்டத்தில் அவர் ஊஞ்சலிலிருந்து ஒரே தாவலில் காம்பவுண்ட் சுவரைத் தாண்டி பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் போய் குதிக்கிறார். மங்கள்யான் செவ்வாய் கிரகத்துக்குச் செல்லும் பெல் புரூனோ பாதை இப்படிப்பட்டதே.

பத்து மாதங்களுக்குப் பிறகு செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் சிக்கி செவ்வாயை சுற்றி வர ஆரம்பிக்கும். சந்திரனுக்கு இந்தியா அனுப்பிய சந்திரயான் இப்படியான பாதையில் தான் சென்றடைந்தது.

மங்கள்யான் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் சிக்கிய பின் செவ்வாய் கிரகத்தை மிக நீள் வட்டப்பாதையில் சுற்றிச் சுற்றி வரும். அப்போது அது ஒரு கட்டத்தில் செவ்வாய்க்கு மேலே 500 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும். பிறகு மங்கள்யான் 80,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு விலகிப் போய் விடும். அடுத்த சுற்றில் மறுபடி 500 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும். மங்கள்யானின் சுற்றுப்பாதையை மாற்றி அமைக்க முடியுமானால் அது எப்போதும் சீராக 500 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி செவ்வாயை நன்கு ஆராய இயலும். ஆனால் அப்படிச் செய்ய முடியாது. ஏனெனில் சுற்றுப்ப்பாதையைத் திருத்தி அமைக்க மங்கள்யானில் போதுமான எரிபொருள் இராது. காரணம் அது வடிவில் சிறியது என்பதே. மங்கள்யானை கூடுதல் எரிபொருளுடன் பெரிய வடிவில் தயாரிப்பதென்றால் பி.எஸ். எல்.வி ராக்கெட்டினால் அதை உயரே கொண்டு செல்ல இயலாது.

கடந்த 2001-ஆம் ஆண்டில் அமெரிக்கா செவ்வாய்க்கு அனுப்பிய மார்ஸ் ஒடிசி என்ற விண்கலமும் ஆரம்பத்தில் மிக நீள் வட்டப் பாதையில்தான் செவ்வாயை சுற்ற ஆரம்பித்தது. அவ் விண்கலத்தில் இருந்த எரிபொருளைப் பயன்படுத்தி அதன் சுற்றுப்பாதை சீராக்கப்பட்டது. பின்னர் அது செவ்வாயை எப்போதும் சுமார் 500 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி சுற்றிவர ஆரம்பித்தது. இதனை உயரே செலுத்த, சக்தி மிக்க ராட்சத ராக்கெட் பயன்படுத்தப்பட்டது என்பதால் அதிக எடை உடைய கூடுதல் எரிபொருள் கொண்ட மார்ஸ் ஒடிசி விண்கலத்தை அனுப்ப முடிந்தது

சொல்லப்போனால் மங்கள்யானில் இடம் பெறுகின்ற சில கருவிகளின் மொத்த எடை வெறும் 15 கிலோ. ரஷியா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றின் ராக்கெட்டுகளை பெரிய லாரி என்று வர்ணித்தால் இந்திய ராக்கெட் ஒரு சிறிய வேன். இப்படிக் கூறுவது இந்திய பி.எஸ்.எல்.வி ராக்கெட்டை மட்டம் தட்டுவதாக ஆகாது.

ஜி.எஸ்.எல்.வி என்னும் பெரிய ராக்கெட்டை தயாரிப்பதில் நாம் ஈடுபட்டிருக்கிறோம். அது மூன்று டன் விண்கலத்தை உயரே செலுத்தக்கூடியது. ஆனால் அந்த ராக்கெட்டை உருவாக்குவதில் இன்னும் முழு வெற்றி கிட்டவில்லை. ஆகவேதான் மங்கள்யானை நம்மிடம் உள்ள சிறிய ராக்கெட்டின் திறனுக்கு ஏற்றவகையில் சிறியதாகத் தயாரிக்க வேண்டியதாயிற்று. இந்த ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டைவிட மேலும் திறன் கொண்ட ராட்சத ராக்கெட் ஒன்றும் உருவாக்க்கப்பட்டு வருகிறது. அதை உருவாக்கி பல தடவை சோதித்து வெற்றி கண்ட பின்னர் செவ்வாய்க்கு நாம் நிறைய எடை கொண்ட மேலும் நிறைய கருவிகளையும் கொண்ட பெரிய மங்கள்யான் விண்கலத்தைச் செலுத்துவதில் ஈடுபட்டிருக்கலாம். அதை விட்டு அவசர அவசரமாக சிறியதொரு விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்புவதில் அர்த்தமில்லை. செவ்வாய்க்கு எதையாவது ஒன்றை இப்போதே அனுப்பி ஆகவேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை.

ஆனாலும் சிறிய விண்கலத்தாலும் பெரிய கண்டுபிடிப்புகளைச் செய்ய இயலும் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

1958-ஆம் ஆண்டில் அமெரிக்கா அனுப்பிய எக்ஸ்புளோரர் -1 என்னும் மிகச் சிறிய (எடை வெறும் 13 கிலோ) செயற்கைக்கோள்தான் பூமிக்கு மேலே சுமார் 1000 கிலோ மீட்டர் உயரத்தில் வான் ஆலன் கதிர்வீச்சு மண்டலம் இருப்பதை கண்டுபிடித்துக் கூறியது.

செவ்வாய்க்கு இந்தியா அனுப்பும் மங்கள்யான் விண்கலத்தின் பிரதான நோக்கம் செவ்வாயில் மீத்தேன் வாயு உள்ளதா என்று கண்டறிவதாகும், செவ்வாய்க்கு அமெரிக்கா அனுப்பிய கியூரியாசிடி எனப்படும் நடமாடும் ஆராய்ச்சிக் கூடம் ஓராண்டுக்கும் மேலாக செவ்வாயில் அங்குமிங்கும் நடமாடி வருகிறது. செவ்வாயில் மீத்தேன் வாயு இல்லை என்பதாகவே கியூரியாசிடி இதுவரை நடத்திய ஆய்வுகள் காட்டியுள்ளன.

கியூரியாசிடி கண்டுபிடிக்க முடியாத விஷயத்தை மங்கள்யான் கண்டுபிடித்து விடுமா என்று கேட்டால் அது பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. ஆனால் மங்கள்யான் எதையும் கண்டுபிடிக்காமல் போனாலும் அது ஒரு சாதனையை நிகழ்த்தியதாகவே கருதப்படும். அதாவது சீனாவினால் சாதிக்க முடியாத ஒன்றை இந்தியா சாதித்ததாகிவிடும்.

கட்டுரையாளர்: மூத்த பத்திரிகையாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com