"நோவார்டிஸ்'-இந்தியாவின் பொறுப்பும் வழக்கும்

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு மருந்து நிறுவனம் "நோவார்டிஸ்' . அது, "க்ளீவெக்' என்ற மருந்தைக் கண்டுபிடித்து அதற்கு காப்புரிமை கேட்டு நம் நாட்டிடம் விண்ணப்பித்தது.

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு மருந்து நிறுவனம் "நோவார்டிஸ்' . அது, "க்ளீவெக்' என்ற மருந்தைக் கண்டுபிடித்து அதற்கு காப்புரிமை கேட்டு நம் நாட்டிடம் விண்ணப்பித்தது. அதற்கு காப்புரிமை பாதுகாப்பு கிடைக்கத் தகுதியில்லை என்று இந்தியக் காப்புரிமை அலுவலகம் கூறியது. "நோவார்டிஸ்', அறிவுசால் சொத்து மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின்முன், மேல்முறையீட்டினைத் தாக்கல் செய்தது. அதுவும் நிராகரிக்கப்பட்டது. பின்பு உச்சநீதிமன்றம் சென்றது "நோவார்டிஸ்'. நம் உச்சநீதிமன்றமும் "நோவார்டி'சின் வழக்கை ஆணித்தரமாக நிராகரித்தது.

இந்தத் தீர்ப்பு உலகெங்கும் எதிரொலித்தது. பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் இந்திய அரசிடம் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்ததுடன், இந்தியாவின் போக்கைக் கண்டிக்கவும் முற்பட்டன. அமெரிக்க வர்த்தக சபையும், "இந்தத் தீர்ப்பு சரியல்ல' என்று கருத்து தெரிவித்தது.

இன்னொரு புறம், உலகளாவிய அளவில் மருத்துவர்களும் அரசியல்வாதிகளும் அறிஞர்களும் ஊடகங்களும் இந்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றனர். "இந்தியாவில் அளிக்கப்பட்டிருக்கும் இத்தீர்ப்பு, வளர் பொருளாதரா நாடுகளின் ஏழை மக்களுக்கு மட்டுமல்ல, வளர்ந்த நாடுகளில் இது போன்ற மருந்துகளை வாங்க முடியாமல் தத்தளிக்கும் மக்களுக்கும் வரப்பிரசாதம்' என்றார்கள்.

"க்ளீவெக்'கை கண்டுபிடித்த விஞ்ஞானி பீட்டர் ட்ரூகரும் "இந்தத் தீர்ப்பு சரிதான்' என்றார். "எல்லைகளற்ற மருத்துவர்கள்' என்ற அமைப்பு (medecins sans Frontieres) தனது மகிழ்ச்சியை உரக்கக் கூவியது. இந்த அமைப்பின் நோக்கம் என்னவென்றால், வளர் பொருளாதார நாடுகளிலும் பின்தங்கிய ஏழை நாடுகளிலும் மருத்துவ வசதி அனைவருக்கும் எட்ட வேண்டும் என்பதுதான்.

இந்தத் தீர்ப்பினால் புதிய மருத்துவக் கண்டுபிடிப்புகள் குறைந்து விடும் என்றும், "நோவார்டிஸ்', "பாயர்', "க்ளாக்úஸா' மற்றும் "பைசெர்' போன்ற மருந்து நிறுவனங்கள் இனிமேல் இந்தியாவில் தங்களுடைய உயர்வான மருந்துகளை விற்பனைக்கு அளிக்காது என்றும், பலவிதமான மறைமுக அச்சுறுத்தல்கள் வந்தன. இப்படி உலகெங்கும் அதிர்வலைகளைக் கிளப்பிய தீர்ப்பு எதைப் பற்றி இருக்கும் என்று நாம் அறிந்து கொள்ள முயற்சி செய்தோமா என்றால், இல்லை.

புற்றுநோய் இப்பொழுது அபாயகரமான அளவில் அதிகரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பான "க்ளீவெக்' எனப்படும் மருந்து ஒருவகை (ல்யூகீமியா) கட்டுப்படுத்தும் மருந்து பற்றியது. "க்ளீவெக்' என்கிற மருந்து "இமாடினிப் மேசைலேட்' என்ற ரசாயன உப்பின் ஒரு மாறுபட்ட படிவம், அவ்வளவே. இந்த மருந்துக்குதான் "நோவார்டிஸ்' காப்புரிமை கேட்டது.

ஒரு கண்டுபிடிப்பிற்கு காப்புரிமை கிடைத்தால், அந்தக் காப்புரிமையின் சொந்தக்காரரைத் தவிர வேறு யாரும் காப்புரிமையின் ஆயுள்காலம் முடியும் வரை அந்தப் பொருளைத் தயாரிக்க முடியாது. காப்புரிமையின் ஆயுள்காலம் இருபது வருடங்கள். எல்லா கண்டுபிடிப்புகளுக்கும் காப்புரிமை கிடைக்காது. இந்திய காப்புரிமைச் சட்டத்திற்கு உள்பட்ட கண்டுபிடிப்புகளுக்குதான் காப்புரிமை தரப்படும்.

1995இல் இந்தியா, அறிவுசால் சொத்துரிமைகளின் வர்த்தகம் சம்பந்தப்பட்ட பன்னாட்டு ஒப்பந்தத்திற்கு (Trade - Related Aspects of  Intellectual Property Rights - TRIPS) தன்னை உள்படுத்திக்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, அனைத்து உறுப்பு நாடுகளும் அதன் ஷரத்துக்களுக்குக் கட்டுப்பட வேண்டும். இந்த ஒப்பந்தத்திற்கு விரோதமின்றி ஒவ்வொரு நாடும் தனது குடிமக்களின் நலனைக்கருதி தனி சட்டங்களை அமைத்துக்கொள்ளலாம். 2001இல் தோஹா அறிவிப்பு (Doha Declaration) வந்தது. இதன் பின்னணி என்னவென்றால், "ட்ரிப்ஸ்' ஒப்பந்தத்தினால் எந்தவொரு நாடும் தன் மக்களின் பொதுநலத்தை, அதிலும் குறிப்பாக, உடல் நலத்தை காப்பாற்றுவதற்குத் தடையாக இருக்கக்கூடாது என்பதே. இந்திய காப்புரிமைச் சட்டம், "ட்ரிப்ஸ்' ஒப்பந்தத்தையும் தோஹா அறிவிப்பையும் மனதில் கொண்டுதான் இயற்றப்பட்டது.

இந்திய காப்புரிமைச் சட்டத்தின் பிரிவு 3டியைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். தெரிந்த ஒரு பொருளின் மாற்று வடிவங்களின் கண்டுபிடிப்பு காப்புரிமை பெறுவதற்கு தகுதியற்றது என்று இந்தப் பிரிவு கூறுகிறது. ஆனால் அந்த தெரிந்த பொருளின் பலாபலனைவிட (efficacy) அந்த மாற்றுவடிவத்தின் பலாபலன் குறிப்பிடுமளவுக்கு உயர்வாக இருந்தால், அப்பொழுது காப்புரிமை வழங்கப்படும். 2005இல் நம் காப்புரிமைச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட இந்த மாற்றங்கள் மிக முக்கியமானவை. நாட்டு மக்களின் சுகாதாரம், உடல்நலம் இவற்றைக் கருத்தில் கொண்டு செய்யப்பட்ட மாற்றங்கள். உச்சநீதிமன்றம் "நோவார்டிஸ்' தீர்ப்பில், "நாடாளுமன்றம் நான்கே நான்கு நாள்கள் விவாதித்துவிட்டு மாற்றங்களை அமலுக்குக் கொண்டுவந்தது' என்று குறிப்பிட்டுள்ளது.

இரு கடிதங்களை "நோவார்டிஸ்' தீர்ப்பில் இணைத்திருக்கிறார்கள் நீதிபதிகள். ஒன்று, உலக சுகாதார நிறுவனம் நம் மத்திய சுகாதார அமைச்சருக்கு எழுதியது. மற்றொன்று, ஐ.நா. "எய்ட்ஸ்' நிறுவனத்தின் இயக்குனர் நம் மத்திய வர்த்தக தொழில் துறை அமைச்சருக்கு எழுதியது. இரண்டிலும் கூறப்பட்டுள்ள விஷயங்கள் என்னவென்றால், "இந்தியாதான் உலகத்தில் "எய்ட்ஸ்' போன்ற கொடும் நோய்களுக்கு மருந்துகளை மலிவான விலையில் வழங்கும் நாடுகளில் முதன்மையாக உள்ளது'; "ஏழை நாடுகள் தங்கள் மக்களின் நோய்களுக்கு மருந்தை இந்தியாவினிடமிருந்துதான் எதிர்பார்க்கின்றன'; "இந்தியா தொடர்ந்து ஏழை நோயாளிகளின் நலனை கருத்தில் கொள்ளவேண்டும்' ஆகியவைதான். "ட்ரிப்ஸ்' ஒப்பந்தத்தினால் இதில் எந்த மாற்றமும் இருக்ககூடாது என்பதுதான் அந்தக் கடிதங்களின் சாராம்சம்.

ஏழை மற்றும் வளர் பொருளாதார நாடுகள் "எச்.ஐ.வி. எய்ட்ஸ்', புற்றுநோய் போன்ற கடும் நோய்களை எதிர்கொள்ள இந்தியாவைதான் எதிர்நோக்குகின்றன. இந்தியாவிலிருந்து மட்டும்தான் குறைந்த விலையில் இதற்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன என்பது எவ்வளவு பேருக்குத் தெரியும்?

மேலே சொன்ன 3டி பிரிவின் குறிக்கோள் என்ன என்று தெரிந்து கொள்வோம். காப்புரிமை வழங்கப்படும் ஒரு கண்டுபிடிப்பு புதுமையாக (novel) இருக்க வேண்டும். ஆனால் அது, வெளிப்படையாக எல்லாருக்கும் தெரியும் வண்ணம் இருக்கக்கூடாது (non-obvious).

இந்தப் பிரிவைச் சட்டமாகக் கொண்டுவராவிட்டால் ஒவ்வொரு சிறு மாற்றத்துக்கும் மருந்து தயாரிப்பாளர்கள் காப்புரிமை கேட்கலாம். அப்படிக் கேட்டால் அந்த மருந்துக்கு இருபது, இருபது ஆண்டுகளாகத் தொடர்ந்து காப்புரிமை பாதுகாப்பு கிடைத்து, அந்த மருந்து, உரிமையாளருக்கு ஏகபோக உரிமையாகிவிடும். இதனை ஆங்கிலத்தில் evergreening என்பார்கள். அதாவது, அந்த மருந்துக்கு மார்கண்டேய நிலை ஏற்படும் என்று சொல்லலாம். இந்த "என்றும் பசுமை'யாவதைத் தடுப்பதற்குதான் இந்தப் பிரிவு. இந்தப் பிரிவு நம் சட்டத்தில் இருப்பதனால், காப்புரிமைக்குப் பாதுகாப்பு இருக்கும். இருபது ஆண்டுகள் முடிந்ததும் எவர் வேண்டுமானாலும் அந்த மருந்தை தயார் செய்யலாம். சந்தையின் கட்டாயங்களினால் விலை குறையும்.

இங்கே "க்ளீவெக்' மருந்தின் அடிப்படை ரசாயனப் பொருள் "இமாடினிப்'. இந்த "இமாடினிப்'பிற்கு காப்புரிமை அமெரிக்காவில் வழங்கப்பட்டது. இதன் உப்பு வடிவம் "இமாடினிப் மேசைலேட்'. "நோவார்டிஸ்' இந்த ரசாயன உப்பின் மாற்றுவடிவமான "பீட்டா க்ரிஸ்டலைன்' (beta crystalline) வடிவத்திற்கும் காப்புரிமை கொடுக்க வேண்டும் என்று கேட்டது.

நாம் முன்னமே பார்த்தோம், இது போன்ற மாற்று வடிவங்களுக்கு காப்புரிமை வேண்டுமென்றால், அந்த மாற்றுவடிவத்தின் பலாபலன் அதிகமாக இருக்க வேண்டும் என்று. இங்கு "நோவர்டிஸ்'சின் வாதம் என்னவென்றால், இந்த புது வடிவம், தெரிந்த பொருளைவிட உடம்பால் எளிதில் உறிஞ்சி கொள்ளப்படும்; எளிதாகக் கரையும்; உடம்பில் இருப்பு சக்தி (bio avilability) அதிகம் என்றெல்லாம் கூறினார்கள்.

ஆனால் இந்த வழக்கிற்கு முன்னாலேயே 2007இல் சென்னை உயர்நீதிமன்றம் "மருந்து கண்டுபிடிப்பின் பலாபலன் அதிகமாக இருக்கவேண்டும் என்றால், நோயை முறிக்கும் தன்மையில் (therapeutic efficacy) இந்த மாற்று வடிவம் உயர்வாக இருந்தாக வேண்டும்' என்று தீர்ப்பளித்திருந்தது. இதையே உச்சநீதிமன்றம் ஆமோதித்தது.

ஒன்று இங்கே நினைவில் கொள்ளவேண்டும். இந்த "இமாடினிப்' என்ற ரசாயனப்பொருள் புற்றுநோய் சிகிச்சைக்கு மகத்தான கண்டுபிடிப்பு. அதற்குக் கிடைத்த காப்புரிமை "இமாடினிப்'பிற்கு மட்டுமல்ல, அதன் உப்பு வடிவமான "இமாடினிப் மேசைலேட்'டிற்கும் சேர்த்துதான் என்றும், இவ்விரண்டும் தெரிந்த பொருள்கள் என்றும் அவைகளைவிட இந்த "பீட்டா க்ரிஸ்டலைன்' வடிவம் உயர்வாக இருத்தல் வேண்டும் என்றும் நம் உச்சநீதிமன்றம் கூறியது. அந்த வகையில், "இந்த மாற்று வடிவம் உயர்வாக உள்ளது என்று நிரூபணம் ஆகவில்லை. ஆகையால் காப்புரிமை வழங்க இயலாது' என்று தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை படித்தால் ஓரளவிற்கு நம் நாட்டில் காப்புரிமைச் சட்டங்கள் எங்கு துவங்கி, எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என்று விளங்கும். நம் சட்டத்தை ஒட்டியே இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. இந்தத் தீர்ப்பைப் பற்றியும் இந்த சட்டத்தை பற்றியும் எல்லாரும் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், இது நம் உடல் நலனைப் பற்றியது; பொது சுகாதாரம் என்ற அடிப்படை உரிமை பற்றியது. பன்னாட்டு நிறுவனங்களின் வியாபார எதிர்பார்ப்புகளும், காப்புரிமைக்கு தகுதிகள் என்னென்ன என்றும் பல நோக்கில் பிரச்னையைக் காணலாம். அந்தத் தீர்ப்பை எல்லாரும் படிக்க வேண்டும். அல்லது அதன் சாராம்சத்தையாவது படிக்கவேண்டும்.

இன்னொரு உத்தரவு, அது "நேக்சவார்' என்ற ஒரு மருந்து பற்றியது. அது கல்லீரல் மற்றும் சிறுநீரக புற்றுநோய்க்கு மருந்து. அதற்கு மாதம் ஒன்றுக்கு இரண்டு லட்ச ரூபாய்க்கும் அதிகமான விலையை "பாயர்' என்ற மருந்து நிறுவனம் நிர்ணயித்தது. "நட்கோ' என்ற நிறுவனம், மாதம் ஒன்றுக்கு எட்டாயிரத்து எண்ணூறுக்கு அதனை விற்கமுடியும் என்று சொல்லி அந்த மருந்தை தயார் செய்ய இந்திய காப்புரிமை (இர்ய்ற்ழ்ர்ப்ப்ங்ழ்-ஞ்ங்ய்ங்ழ்ஹப்) கட்டாய உரிமம் கேட்டது. அந்த கட்டாய உரிமம் வழங்கப்பட்டவுடன் உலகெங்கும் அதன் எதிரொலி விவாதத்தை ஏற்படுத்தியது. இது 2012இல் வந்த உத்தரவு.

இந்த இரண்டு உத்தரவுகளுமே மருத்துவ உலகையும், அறிவுசால் சொத்து சட்ட வல்லுனர்களையும் புற்றுநோய் பாதித்த நோயாளிகளையும் அவர்தம் குடும்பங்களையும் நிமிர்ந்து உட்கார வைத்தன. அவர்களது நன்றியால் நீதித்துறை போற்றப்பட்டது.

உலக நாடுகள் குறிப்பாக ஏழை எளிய நாடுகள் இந்தியாவைப் பல்வேறு காரணங்களுக்காக எதிர்நோக்குகின்றன. குறிப்பாக, அவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்க இந்தியாவால் உதவ முடியும் என்று நம்புகின்றன. நமது இளைஞர்கள் விஞ்ஞானத்தில் வளர வேண்டும். நாம் பல புதிய மருந்துகளைக் கண்டுபிடித்து அவற்றிற்குக் காப்புரிமை பெறவேண்டும். காப்புரிமை பெற்ற அந்த மருந்துகள் குறைந்த விலைக்கு, பன்னாட்டு மருத்துவத் தயாரிப்பு நிறுவனங்கள்போல கொள்ளை லாபத்தை எதிர்பார்க்காமல், உலகச் சந்தையில் விற்கப்பட வேண்டும். அதற்கான நிலைமையும், தகுதியும், கடமையும் இந்தியாவுக்கு உண்டு. அதுதான் "நோவார்டி'சுக்கும் "பாயரு'க்கும் இந்தியா அளிக்கும் பதிலாக இருக்கும்!

கட்டுரையாளர்: உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com