சுடச்சுட

  

  இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக்கூடாது, காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை இடைநீக்கம் செய்யவேண்டும் போன்ற ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரம்பற்ற பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கும் தோழர் தியாகுவின் கோரிக்கைகளை தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரித்துள்ளன. மேலும் பல தமிழ் அமைப்புகள் இதே கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன.

  காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, இந்த கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் என்று தோன்றவில்லை. இந்திய அரசின் இலங்கைக் கொள்கையை ஆதரிப்பவர்கள், இலங்கையை நாம் ஆதரிக்காவிட்டால் அங்கே சீனாவின் பிடி அதிகரித்துவிடும், அது நமது பாதுகாப்புக்கு ஆபத்தாக அமைந்துவிடும் என சாக்கு போக்குகள் சொன்னாலும் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளில் தங்களுக்கிருக்கும் பங்கை ராஜபக்ச வெளிப்படுத்தி விடுவாரோ என்ற அச்சமே இந்திய ஆட்சியாளர்களின் இலங்கைத் தொடர்பான நிலைப்பாட்டைத் தீர்மானிக்கிறது என்பதே தமிழ்நாட்டு மக்களின் என்ணமாக இருக்கிறது.

  இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவான தனது நிலைப்பாட்டையும் மீறி, கடந்த இரண்டு முறை ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை ஆதரித்ததற்குக் காரணம், தமிழ்நாடு கொடுத்த அழுத்தம்தான். இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் யாவும் ஒரே குரலில் வலியுறுத்தியதால்தான் இந்திய அரசு தனது நிலையை கடைசி நேரத்தில் மாற்றிக்கொண்டது. இப்போதும் அதேவிதமான அழுத்தம் தரப்பட்டால் இந்திய அரசின் நிலை மாறக்கூடும். ஆனால் அந்த அழுத்தத்தைத் தருவதில் மூன்று சிக்கல்கள் உள்ளன.

  தமிழக அரசியல் கட்சிகள் ஈழத் தமிழர்கள் குறித்து எதிர்வினை புரிவதற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் முக்கியமான காரணியாக இருந்து வந்துள்ளனர். ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானங்கள் வந்தபோதெல்லாம் அவர்கள் முழுமூச்சோடு அதற்கு ஆதரவு திரட்டினர்; மாநாடுகளை நடத்தினார்கள்; இணைய தளங்களின் மூலம் பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள்; சர்வதேச மனித உரிமை அமைப்புகளோடு இணைந்து செயல்பட்டார்கள். ஆனால், காமன்வெல்த் மாநாடு தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் அத்தகைய போராட்டங்கள் எதையும் இதுவரை முன்னெடுக்கவில்லை.

  காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மேற்கொண்டிருக்கும் நிலைப்பாட்டைக்கூட தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் நிலையில் அவர்கள் இல்லை. குழுவாதப் போக்கு அவர்களை மென்மேலும் பிளவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.

  இந்த குழுவாதமானது அரசியல் அமைப்புகளை நடத்துகிறவர்களை சிதைப்பது மட்டுமின்றி, புலம்பெயர் நாடுகளில் ஆர்வத்தோடு கருத்தியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஈழத் தமிழ் அறிவுஜீவிகள் பலரையும் செயலிழக்க வைத்து முடக்கிப் போட்டுவிட்டது. அதுமட்டுமின்றி, தமக்கு ஆதரவு தெரிவித்த தமிழகத்தின் உணர்வுகளை அவமதிக்கும் விதமாகவும் அது வெளிப்பட்டு வருகிறது. இது முதலாவது சிக்கல்.

  இலங்கை வடக்கு மாகாணத்தில் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அரசாங்கம், காமன்வெல்த் மாநாடு தொடர்பாக எடுக்கவிருக்கும் நிலை என்ன என்பது தெளிவுபடவில்லை. அந்த மாகாணத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் விக்னேஸ்வரன் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என ஏற்கனவே கருத்து தெரிவித்திருக்கிறார்.

  அவரும் அவர் சார்ந்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அப்படித்தான் பேச முடியும். இல்லாவிட்டால் அவர்களை "பிரிவினைவாதிகள்' என ராஜபக்ச அரசு சித்திரிக்கும். இவ்வாறு தந்திரோபாய ரீதியில் த.தே.கூ அரசு பேசுவதாக வைத்துக்கொண்டாலும், அவர்களது நிலைப்பாடு தமிழ்நாட்டின் மீது தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும். தமிழர்களின் ஏகோபித்த ஆதரவோடு வெற்றி பெற்றிருக்கும் த.தே.கூ அரசு எடுக்கும் நிலைபாட்டுக்கு மாறாக தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் பேசுவதில் சிக்கல் உள்ளது.

  "த.தே.கூ ஒரு சமரசவாதக் கூட்டணி, அது தமிழர்களுக்கு எந்தவித உரிமையையும் பெற்றுத் தராது' என புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலர் சொல்வது போல தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் சொல்லலாம்.

  "த.தே.கூ சொல்வதை நாங்கள் ஏற்கவில்லை, இந்திய அரசு பங்கேற்கக்கூடாது எனச் சொல்வதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது' என வாதிடலாம். ஆனால் அது எடுபடாது. த.தே.கூ வுக்கு ஈழத் தமிழர்கள் அளித்திருக்கும் பெருமளவிலான வாக்குகள் அந்தக் கூட்டணியைத்தான் அவர்கள் தங்களின் ஒரே பிரதிநிதியாகக் கருதுகிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்தி விட்டன. இந்நிலையில் த.தே.கூ அரசின் நிலைக்கு மாறாக தமிழ்நாட்டில் உள்ளவர்கள் பேசினால், அது ஈழத் தமிழர்களின் உணர்வுகளுக்கும் விருப்பத்துக்கும் மாறாக நாம் பேசுவதாகவே பொருள்படும். இந்திய அரசும் இந்த முரண்பாட்டை பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கும்.

  இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துவாரெனில், தமிழ்நாட்டிலிருக்கும் தமிழ் தேசிய அமைப்புகளுக்கு அது நெருக்கடியாகவே அமையும். இது இரண்டாவது சிக்கல்.

  பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழ்நாட்டிலிருக்கும் அரசியல் கட்சிகள் இனி எதைச் செய்தாலும் கூட்டணிக் கணக்கை மனதில் வைத்தே செய்யும். காங்கிரஸ் அல்லது பாஜக என ஏதோ ஒரு கட்சியோடு கூட்டணி வைத்தாக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் அவர்கள், கூட்டணிக்கு குந்தகம் வராமல்தான் எதையும் பேசுவார்கள். ஈழப் பிரச்னையில் காங்கிரஸ் அம்பலப்பட்டு நிற்கிறது. காங்கிரஸ் அளவுக்கு மோசமில்லையென்றாலும் பாஜகவும் ஈழத் தமிழர்களுக்கு எதிராகவே நடந்து கொண்டது.

  ஈழப் பிரச்னையிலும் தமிழக மீனவர் பிரச்னையிலும் தங்களுக்கு அக்கறை இருப்பதுபோல இப்போது பா.ஜ.க காட்டிக்கொண்டாலும், அவர்கள் ஆட்சியிலிருந்த காலத்தில் அவ்வாறு அவர்கள் நடந்துகொள்ளவில்லை. 2000 ஆவது ஆண்டு மே மாதத்தில் யாழ்ப்பாணத்தை மீட்பதற்கு "ஓயாத அலைகள்' என்ற தாக்குதலை நடத்தி சுமார் நாற்பதாயிரம் இலங்கை ராணுவவீரர்களை போராளிகள் சிறை பிடித்தனர். அந்த வெற்றியோடு தனி ஈழ அறிவிப்பைச் செய்வதற்கும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர். அப்போது தங்களுக்கு உதவுமாறு இலங்கை அரசு இந்தியாவிடம் கெஞ்சியது. அதை ஏற்று அவர்களைக் காப்பாற்றியது அப்போதிருந்த வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசுதான். "இலங்கை ராணுவவீரர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு போராளிகள் அனுமதிக்கவில்லையென்றால், இந்திய கப்பல் படையை அனுப்பி அவர்களை மீட்போம்' என போராளிகளை மிரட்டியது வாஜ்பாய் அரசு.

  அதுமட்டுமின்றி இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்று கொண்டிருந்த நேரத்தில் அதைத் தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததோடு, 1999 ஆம் ஆண்டு முதன்முதலாக இலங்கைக்கு ரோந்து கப்பல்களை வழங்கி உற்சாகப்படுத்தியதும் அதே வாஜ்பாய் அரசுதான். கடந்த ஆண்டு இந்தியப் பாராளுமன்றத்தில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, "இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை அல்ல' எனக் கூறி அதை நிறைவேற்றவிடாமல் தடுத்ததும் பா.ஜ.க தான்.

  ஈழப் பிரச்னையைப் பேசுவது காங்கிரசுக்கும் சிக்கல், பாஜகவுக்கும் சிக்கல் என்பதால், ஈழப் பிரச்னையை ஒரு எல்லைக்குமேல் வலுவாக எழுப்புவது தேசியக் கட்சிகளோடு கூட்டணி அமைக்கும் கனவிலிருக்கும் தமிழகக் கட்சிகளுக்கு சங்கடமானதாகவே இருக்கும். இது மூன்றாவது சிக்கல்.

  இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு பார்த்தால், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்ற பிரச்சாரத்தை தமிழ்நாட்டிலிருக்கும் சிறிய இயக்கங்கள் மட்டும்தான் முன்னெடுக்க வாய்ப்புள்ளது.

  சில மாதங்களுக்கு முன்னால், மாணவர்கள் ஈழப் பிரச்னையை முன்வைத்து தன்னெழுச்சியாகப் போராடியதுபோல இப்போது போராடுவதற்கு வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. அந்த நேரத்தில் வெளியான பாலச்சந்திரனின் படுகொலை தொடர்பான படங்கள் மாணவர்களை எழுச்சி கொள்ள வைத்தன. தன்னெழுச்சியாக மேலெழும்பும் எந்தப் போராட்டமும், திட்டமிட்ட முறையில் வழி நடத்தப்படவில்லையெனில் தானாகவே தணிந்து போய் விடும். மாணவர் போராட்டமும் அப்படித்தான் ஆனது.

  ஈழத் தமிழர்கள்மீது தமிழக அரசியல் கட்சிகள் உண்மையான அக்கறையோடுதான் இருக்கின்றனவா? இந்தத் தடைகளையெல்லாம் மீறி தமிழகம் எந்த அளவுக்கு ஒன்றிணைந்து போராடும்? அது காங்கிரசைப் பணிய வைப்பதாக இருக்குமா? காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளாமல் இந்திய அரசைத் தடுக்குமா போன்ற கேள்விகளுக்கான விடைகள் இன்னும் சில நாள்களில் தெரிந்துவிடும்.

   

  கட்டுரையாளர்: பொதுச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai