Enable Javscript for better performance
அறிவு தந்த மன்றங்கள்- Dinamani

சுடச்சுட

  

  இயற்கையை ஆராதிக்கும் ஆங்கிலக் கவிஞர் வேர்ட்ஸ் வொர்த் ஒரு முறை விருந்தினர் ஒருவருக்கு தம் வீட்டைச் சுற்றிக் காட்டியபோது நூலகத்திற்கு அழைத்துச் சென்றாராம். அங்கிருந்த நூல்களை எல்லாம் காட்டிவிட்டு, "இதுதான் என் நூலகம், ஆனால் என் படிப்பெல்லாம் இதற்கு வெளியிலேதான்' என்றாராம். அவர் இயற்கையிலிருந்து பாடம் படிப்பதைத்தான் அப்படிச் சொல்லியுள்ளார். அதுபோல மாணவர்கள் வகுப்பறையில் கற்பதைவிட அதிகமாகக் கற்கும் இடங்களாக கல்வி நிலையங்களில் இருந்த பல்வேறு மன்றங்கள் சில ஆண்டுகளுக்கு முன்புவரை விளங்கின.

  அந்நாளில், வகுப்பில் பாடம் தொடர்பான நூல்களைக் கற்றார்கள். அரசியல் நிலை, தமிழுணர்வு, ஆங்கிலத்தின் அழகு, பொது அறிவு ஆகியவற்றை தங்கள் கல்வி நிலையங்களில் இருந்த மன்றக் கூட்டங்களில் அறிஞர்கள் ஆற்றிய சொற்பொழிவுகளால் பெற்றார்கள். சில பொழுது வகுப்பறையில் கேட்டிராத அரிய செய்திகளை இம்மன்றங்களிலிருந்து அறிந்துகொண்டார்கள். அக்கூட்டங்கள் படிப்பினைப் பாதிக்காத வகையில் பெரும்பாலும் வகுப்பு முடிந்தபின் நிகழ்ந்தன.

  முன்னாளில் சென்னைக் கல்லூரிகளில் பயின்றவர்கள் ராஜாஜி, பெரியார், சி.சுப்பிரணியம், அண்ணா, நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன் ஆகியோர் பேச்சை அடிக்கடி கேட்டு அரசியல் அறிவு பெற்றார்கள். சிதம்பரநாதன் செட்டியார், ம.பொ.சி., கி.வா.ஜ., அ.ச. ஞானசம்பந்தம் போன்றோர் பேச்சுகளைக் கேட்டு சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற தமிழ்க் காப்பியங்களின் சிறப்பையும் தமிழின் வளத்தையும் அறிந்து மகிழ்ந்தார்கள்.

  தேவநேயப்பாவாணர், குன்றக்குடி அடிகளார் போன்றோர் பேச்சுகளால் தமிழுணர்வு பெற்றார்கள். கண்ணதாசன், அகிலன் போன்றோர் பேச்சுகளைக் கேட்டுப் படைப்பிலக்கியத்தில் ஆர்வம் கொண்டார்கள். செüந்தரா கைலாசம் பேச்சைக் கேட்டு இலக்கிய இன்பத்தில் திளைத்தார்கள். திருக்குறளார் முனுசாமி பேச்சைக் கேட்டுக் குறளின் பெருமையை அறிந்ததோடு குலுங்கிக் குலுங்கிச் சிரித்து மகிழ்ந்தார்கள்.

  அப்பெருமக்கள் மேடையிலும் உரையாடலிலும் சொன்ன கருத்துகளை அடுத்த நாள் மாணவர்கள் தங்களுக்குள் விவாதித்தார்கள். அவ்வப்பொழுது எண்ணி அசைபோட்டு மகிழ்ந்தார்கள்.

  ஒருமுறை தம் பேச்சை முடித்த கவிஞர் கண்ணதாசன் காரில் ஏறுவதற்கு முன்பு ஒரு வட்டமான பெட்டியைத் திறந்து மாத்திரைகளை அள்ளி வாயில் போட்டுக்கொண்டார். வழி அனுப்புவதற்காக அருகில் நின்ற கல்லூரி முதல்வர், ""என்ன இவ்வளவு மாத்திரை சாப்பிடுகிறீர்கள்?'' என்று வியப்போடு வினவினார். கண்ணதாசன் சிரித்துக்கொண்டே, ""இப்பொழுது மாத்திரையில்தான் என் யாத்திரையே இருக்கிறது'' என்றார். கவிஞர் தம் நலக்குறைவையும் இலக்கிய நயத்தோடு சொன்ன முறையைக் கேட்டவர்கள் நெடுநாள் அது குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

  ஒருமுறை பச்சையப்பன் கல்லூரியில் அண்ணா பேச வந்தபோது மாணவத் தலைவர் "இங்குக் கற்றது எதற்காக" என்னும் தலைப்பில் அண்ணா உரைநிகழ்த்துவார் என்று அப்பொழுது தலைப்பை அறிவிக்க, அவர் அழகாகப் பேசியது ஆண்டுகள் பல கழிந்த பின்னரும் நெஞ்சில் நீங்காமல் இருக்கிறது.

  ஆங்கிலத்தில் உரையாற்றியவர்களும் மாணவர்களின் நிலை அறிந்து எளிமையாகப் பேசினார்கள். அண்ணாவின் ஆசிரியராகத் திகழ்ந்த ஆங்கிலப் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஒரு கல்லூரியில் விளையாட்டு விழாவில் சொற்பொழிவு நிகழ்த்த வந்திருந்தார். அது இரண்டாண்டுகளுக்கு முன்புதான் தொடங்கப்பட்ட கல்லூரி. ஆசிரியர்கள் அனைவரும் இருபத்தைந்துக்கும் குறைந்த வயதினர். முதல்வராக இருந்தவருக்குச் சுமார் நாற்பது வயது. பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, ஆங்கிலத்தில் "மிக இளமையான கல்லூரி இளமையான மாணவர்கள் இளமையான ஆசிரியர்கள் அப்படி ஒன்றும் அதிக வயதாகிவிடாத முதல்வர்' என்று பேச்சைத் தொடங்கிய பொழுது மாணவர்கள் அனைவரும் ஆரவாரித்து அவருடைய பேச்சாற்றலை எண்ணி மகிழ்ந்தார்கள்.

  தேசியவாதியும் சிறந்த ஆங்கிலப் பேச்சாளருமான செங்கல்வராயன் ஒரு கல்லூரியில், "இன்றைய மாலை உங்களிடையே இருப்பதில் பெருமகிழ்ச்சி. தலைவர் அவர்களே, எனக்கு நீங்கள் தலைப்பு ஏதும் தரவில்லை. எதைப்பற்றிப் பேசுவது? பொருளாதாரம் பற்றிப் பேசலாம் என்றால் அது சப்பென்று இருக்கும்: அரசியல் பேசலாம் என்றால் அது ஆபத்தானது: உலக அமைதியைப் பற்றிப் பேசலாம் என்றாலோ அமைதி அக்குவேறு ஆணிவேறாகச் சிதைந்து கிடைக்கிறது' என்று பேசத் தொடங்கியபோது மாணவர்கள் எழுப்பிய கையொலி அடங்க நெடுநேரம் ஆயிற்று.

  இராஜாஜி, பெரியார், நீதிபதி ஏ.எஸ்.பி. ஐயர் போன்றவர்கள் தங்கள் கல்லூரிக்கு வந்தபோது அவர்களை அருகில் சென்று கண்டும் சில பொழுது அவர்களோடு பேசியும் மகிழும் அரிய வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைத்தன. தங்கள் ஆசிரியர்களுள் சிறந்த சிலரைக் குறிப்பிட்டு அவர்கள் பேசியபோது இத்தகைய ஆசிரியர்களிடம் பயிலும் பேறு பெற்றோமே என்று மகிழ்ந்தார்கள். சிலர் தாங்களும் அவர்களைப் போல எதிர்காலத்தில் வரவேண்டும் என்னும் ஆர்வம் கொண்டார்கள். அவர்கள் பேசும் முறையைக் கூர்ந்து நோக்கி அம்

  முறையில் பேசிப் பழகினார்கள். சிலர் தங்கள் குரலை அவர்கள் குரல் போல மாற்றிக்கொண்டு பேச முயன்றனர்.

  மாணவர்களின் பேச்சு தலைவர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தியதும் உண்டு. 1955 ஆம் ஆண்டு பச்சையப்பன் விடுதி விழாவில் அன்றைய தமிழக நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியம் கலந்து கொண்டார். அப்பொழுது மாணவத் தலைவராக இருந்த திருப்பத்தூர்ப் பேராசிரியர் பா. நமசிவாயம் பாராட்டுரை வழங்கினார். அவர் பேச்சைக் கேட்ட பின் எப்பொழுதும் கல்லூரி விழாக்களில் ஆங்கிலத்திலேயே பேசும் அமைச்சர் தம்

  பேச்சை, கல்லூரி முதல்வர் அவர்களே என்று விளித்து முதன்முதலாகத் தமிழில் பேசத் தொடங்கினார். மாணவர் பேச்சு தம்மை மாற்றிவிட்டதாகவும் இனித் தாம் கல்லூரிகளில் தமிழிலேயே பேசப் போவதாகவும் கூறினார். அண்ணா தாம் படித்த கல்லூரியில் ஒரு மாணவன் பேச்சைக் கேட்டு அமைச்சர் தமிழில் பேச உறுதி பூண்ட செயலைப் பாராட்டி அடுத்த வாரம் தனது "திராவிட நாடு' பத்திரிகையில் எழுதினார். சில நாள்களுக்குப் பின் தெற்கே ஒரு கல்லூரியில் அமைச்சர் சி. சுப்பிரமணியம் தமிழில் பேசத் தொடங்கியபோது மாணவர்கள் ஆங்கிலம் ஆங்கிலம் என்று குரல் கொடுக்க அதனைப் பொருட்படுத்தாமல் தமிழிலேயே பேசி முடித்தாராம்.

  மன்றங்கள் மாணவர்கள் திறமையை வளர்தன. ஆசிரியர்கள் அணிக்கு தலைமை தாங்க மாணவர்கள் துணைப் பேச்சாளர்களாக அமைந்து விவாதம் புரிந்தார்கள். அம்மன்றங்கள் பல்வேறு போட்டிகளை நிகழ்ந்திப் பரிசுகளும் சுழற் கோப்பைகளும் வழங்கின. இதனால் மாணவர்கள் வகுப்பு இல்லாத நேரங்களில் வீண் வம்புகளில் ஈடுபடுவதற்கு நேரமின்றி ஏதோ ஒரு போட்டிக்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

  இன்று பெரும்பாலான கல்வி நிலையங்களில் மன்றங்கள் இல்லை. கல்லூரி ஆண்டு விழா, விளையாட்டு விழா போன்றவற்றை முதல்வர் வரவேற்புரை நிகழ்த்தப் பேராசிரியர் ஒருவர் நன்றியுரை கூறத் தாங்களே நடத்தி முடித்துவிடுகிறார்கள். மாணவர்க்குரிய திடலில் ஆசிரியர்கள் அத்துமீறிப் புகுந்து பயிற்சி பெறுகிறார்கள்

  இந்த நிலை ஏன்? மன்றங்களுக்கு தேர்தல் நிகழும்போது வன்முறை நிகழ்வதும், மாணவத் தலைவர்கள் அரசியல் சார்புடையவர்களாக அமைந்து தட்டிக் கேட்க முடியாத வகையில் செயற்படுவதுமே இவை முடங்கியதற்குக் காரணங்கள் என்கிறார்கள்.

  தேர்தல்களில் மாணவர்களிடையே மோதல் நிகழ்வதும், எழுதுகோல் பிடிக்கும் கைகள் கத்தியையும் தடியையும்

  எடுத்துத் தாக்கிக்கொள்வதும், அரசியல்வாதிகளின் கைப்பாவைகளாக மாறுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதவையே.

  அதற்காக மன்றங்களைக் கலைத்துவிடுவதா? ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு மாணவப் பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்து அவர்களைக்கொண்டு மன்றங்களுக்குரிய பொறுப்பாளர்களைத் தேர்வு செய்யலாம். அவர்களை பேராசிரியர்களின் மேற்பார்வையில் செலவுகளைச் செய்யுமாறு

  கட்டுப்படுத்தலாம்.

  மின்சாரம் எதிர்பாராமல் பாய்ந்து ஆளைத் தூக்கி எறிந்துவிடுகிறது என்பதற்காக அதனைப் பயன்படுத்தாமல் இருக்கிறோமா? நெருப்புச் சுட்டுவிட்டது என்பதற்காக அடுப்பைப் பற்ற வைக்காமல் விடுகிறோமா? மாணவர் மன்றங்களினால் சில சிக்கல்கள் உண்டாகின்றன என்பதற்காக அவற்றை மூடுவது சரியான நடவடிக்கை ஆகாது.

  மாணவர்களிடையே மொழியுணர்வு, மொழி அறிவு, இலக்கிய ஆர்வம், அரசியல் தெளிவு, தலைமைப் பண்பு முதலியவை வளர்வதற்கும் அவர்கள் ஓரளவு திசைமாறாமல் இருப்பதற்கும் வாய்ப்பளிக்கும் மன்றங்களை இயங்கச் செய்வது இன்றியமையாத தேவை. மன்றங்களில் அறிஞர்களின் உரைகளைக் கேட்டு மாணவர்கள் மகிழும் நாள் எந்நாளோ?

  கட்டுரையாளர்: தமிழ்த்துறைத் தலைவர் (ஓய்வு), பச்சையப்பன் கல்லூரி, சென்னை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai