Enable Javscript for better performance
திருத்த வேண்டிய எழுத்துகள்- Dinamani

சுடச்சுட

  

  பல ஆண்டுகளுக்கு முன்னால், பிரபல எழுத்தாளர் ஒருவரை சென்னை வானொலிக்காக, பேட்டி கண்டார் ஒரு பெண் எழுத்தாளர்.

   தமிழில் யாருடைய எழுத்துகளை நீங்கள் விரும்பி வாசிக்கிறீர்கள் என்பது கேள்வி.

   தமிழில் என்னைத் தவிர வேறு யாராவது எழுதுகிறார்களா என்ன- என்பது சொல்லப்பட்ட பதில்.

   இப்படியும் ஒரு தற்பெருமையா என்று வாசகர்கள் விக்கித்துப் போனார்கள். சில வீடுகளில் இந்த மட்டுமீறிய தற்பெருமையால் தாக்குண்டு வானொலிப் பெட்டி பழுதாகியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

   இன்னோர் எழுத்தாளர் தனது பேட்டி ஒன்றில் சொன்ன புகழ்பெற்ற பதில் ஒன்று உண்டு. தமிழில் நீங்கள் விரும்பி வாசிக்கும் மூன்று எழுத்தாளர்கள் யார் யார் என்ற கேள்விக்கு அவர் தந்த பதில் 1. நான் 2. நான் 3. நான் என்பது.

   தங்களைத் தவிர வேறுயாருக்கும் எழுதத் தெரியவில்லை என்று அறிவிக்கும் இளைய எழுத்தாளர்கள் இன்று பெருகி வருகிறார்கள். மூத்த எழுத்தாளர்களின் தரத்தையும் அனுபவத்தையும் மதிக்காமல், அவர்கள் எழுதிய காலகட்டத்தில் அவர்கள் போராடிய தருணங்களை நினைத்துப் பாராமல், அவர்களை மேடைகளில் ஏகவசனத்தில் பேசும் போக்கும் தோன்றியிருக்கிறது.

   முன்னோடி எழுத்தாளர்களான புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, தி. ஜானகிராமன், கல்கி,  நா.பார்த்தசாரதி போன்றோருக்கெல்லாம் எழுதவே வரவில்லை என்று சொல்லும் எழுத்தாளர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்.

    எழுத்தாளர்கள் சிலரது தற்பெருமையின் லட்சணம் இப்படி என்றால் சிலர் செய்யும் முகஸ்துதியின் லட்சணம் இன்னும் அதிகம்.

    மாபெரும் பதவியில் இருந்த ஒருவரைப் பார்த்து, ஓர் எழுத்தாளர் தம் புகழுக்கெல்லாம் அவரே காரணம் என்றும் அவர் என்ன செய்யச் சொன்னாலும் தான் செய்யத் தயாராக இருப்பதாகவும் மேடையில் அறிவித்தார்.

   அந்த மட்டுமீறிய வார்த்தைகள், அவையோரை மட்டுமல்லாமல் புகழப்பட்ட நபரையுமே அருவருப்படையச் செய்திருக்க வேண்டும்.

   கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாத பெருமிதமும் அடுத்தவர்களுக்காக வளைந்து கொடுக்காத சுயமரியாதையும் எழுத்தாளர்கரளின் லட்சணங்கள். ஆனால் அளவற்ற ஆணவமும் தேவையற்ற முகஸ்துதியும் எழுத்தாளர்களை மிகவும் கேவலப்படுத்தி விடுகின்றன.

    வீட்டிலேயே முதுகெலும்பைக் கழற்றி வைத்துவிட்டு, மேடைக்கு மேடை பதவியில் உள்ளவர்களை முகஸ்துதி செய்து அதன்மூலம் சலுகைகளும் விருதுகளும் பெற முயலும் எழுத்தாளர்களை எவ்விதம் திருத்துவது?

     எழுதுபவர்களில் பலர் எழுத்தை ஒரு கலையாகக் கையாள்கிறார்களே தவிர, சிறந்த எழுத்துகளை எழுதும் ஒருவரின் மனம் பண்பட்டு முதிர்ச்சியுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை என்ற உண்மை வாசகர்களுக்கு உறைக்கும்போது அவர்கள் மனம் ஆயாசம் கொள்கிறது.

     அண்மைக்காலமாக இலக்கியவாதிகள் எழுத்திலேயே கெட்ட வார்த்தைகளால் ஒருவரையொருவர் திட்டிக் கொள்வதும் வழக்கமாகி விட்டது. இவர்கள் ஒருவருக்கொருவர் கொள்ளும் கோபத்தில் உண்மையும் உண்டு. பொய்யும் உண்டு.

      ஓர் எழுத்தாளர் தன் நண்பரொருவரிடம் தன் நூலுக்கு ஒரு நிபந்தனையுடன் அணிந்துரை கேட்டிருக்கிறார். என்னுடைய இந்த நூல் நன்றாக இருந்தாலும் நன்றாக இருப்பதாக நீ அணிந்துரை தரக் கூடாது. என்னைத் தாறுமாறாக ஏக வசனத்தில் திட்டி இவன் எல்லாம் ஏன் எழுத வருகிறான் என்பது மாதிரி ஓர் அணிந்துரை தரவேண்டும். அப்போதுதான் புத்தகம் பிரமாதமாக விற்கும் என்று வேண்டினாராம் அவர்

    மனச்சாட்சி உடைய அந்த நண்பர் புத்தக விற்பனைக்காக நான் திட்ட மாட்டேன், என் மனத்தில் பட்ட உண்மையான கருத்தைத் தான் என்னால் எழுத முடியும் என்று கூறி இந்த சம்பவத்தை அப்படியே தாம் ஒரு கட்டுரையாகவும் எழுதி விட்டார்.

     இன்று அறிவில் ஓங்கி வளர்ந்துவரும் இளைய சமுதாயம், எழுத்தாளர்களின் இந்தக் கூத்தையெல்லாம் பார்த்து உள்ளூற நகைத்துக் கொண்டிருக்கிறது.

    எழுத்துலகில் மட்டும்தான் இப்படி. மற்றபடி திரையுலகில் சிவாஜி கணேசனுக்கு இணையாக இன்னொருவர் இருந்ததுண்டா? அவர் எத்தனை தன்னடக்கத்துடன் வாழ்ந்தார். இசையுலகில் எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு இணையாக இன்னொருவரைச் சொல்ல முடியுமா? அவரது எளிமையும் தன்னடக்கமும் உலகப் புகழ்பெற்றதாயிற்றே. ஆனால் தமிழ் எழுத்தாளர்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்களோ?

    எழுத்தாளர்களில் பலரும்  சமூகத்தை சீர்திருத்தவே தாங்கள் எழுதுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் சீர்திருத்தப்பட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் எழுத்தாளர்களா அல்லது இந்த சமூகமா?

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai