ஒரு நூறு புதிய நகரங்கள்

பழையன கழிதலும் புதியன புகுதலும்' இயற்கையின் ஓட்டம். அவற்றை வரவேற்க வேண்டும். மாற்றத்தையும் புதுமையையும் மெருகேற்ற அனைவரும் முனைய வேண்டும்.

பழையன கழிதலும் புதியன புகுதலும்' இயற்கையின் ஓட்டம். அவற்றை வரவேற்க வேண்டும். மாற்றத்தையும் புதுமையையும் மெருகேற்ற அனைவரும் முனைய வேண்டும். மத்திய அரசு நூறு நவீன நகரங்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. நகரமயமாதல் உலகில் அதிவேகமாக வளர்ந்து வருகிறது.

இயற்கையின் செழிப்பு கிராமப் பகுதிகளில் இருக்கினறன. ஆனால், நவீன வசதிகளின் கவர்ச்சி மக்களை வசப்படுத்துகின்றன. ஊடகங்களின் ஊடுருவல், கவர்ச்சிகரமான விளம்பரங்கள், சினிமா இவையெல்லாம் நவீன வாழ்க்கை பற்றிய கனவுகளை பாமர மக்கள் மனதில் பதிய வைக்கின்றன. நகரத்தை நோக்கிச் சென்றால்தான், வாழ்க்கையில் முன்னேற முடியும் என்ற எண்ணம் மேலோங்குகிறது.

எல்லா நாடுகளிலும் புதிய நகரங்கள் உருவாகி வருகின்றன. மக்கள் புது வாழ்வைத்தேடி நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். பழைய தமிழ் சினிமாக்களில் வருவது போல, தலையில் முண்டாசு, மனைவி கையில் கூடை, கைக் குழந்தை, தோளில் துண்டோடு பஞ்சம் பிழைப்பதற்காக அல்ல; நகரமயமாக்கலின் பயன்பாட்டைப் பெற மக்கள் வருகிறார்கள். நிபுணர்களின் கணக்குப்படி 2050-ஆம் வருடத்திற்குள் 70 சதவீதம் ஜனத்தொகை நகரங்களில்தான் வசிப்பார்கள்.

மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் என்பவை குடிநீர், கழிவுகளை சுகாதாரமான முறையில் நீக்குதல், தடையில்லா மின்சாரம், தரமான கல்வி, மருத்துவமனைகள், உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிக்கக் கூடிய காவல்துறை. நமது நாடு சுதந்திரம் பெற்று 67 வருடங்கள் பூர்த்தியான நிலையிலும், சடக் பானி பிஜிலி சாலை, குடிநீர், மின்சாரத்திற்கு போராடும் நிலை உள்ளது.

1947-இல் சுதந்திரமடைந்த போது இருந்த 3.5 கோடி ஜனத்தொகை, இப்போது 120 கோடியைத் தாண்டியுள்ளது. 1971-இல் இருந்து 2011 வரை 40 வருடங்களில் இந்தியாவில் நகர வாசிகளின் எண்ணிக்கை 23 கோடி உயர்ந்துள்ளது. அடுத்த 20 வருடங்களில் இன்னும் 25 கோடி மக்கள் நகரவாசிகள் ஆகிவிடுவார்கள்.

ஒவ்வொரு வருடமும் சுமார் மூன்று கோடி இளைஞர்கள் நமது ஜனத்தொகையில் இணைகிறார்கள். அதில் 1.2 கோடி பேர் வேலைக்குக் காத்திருக்கிறார்கள். நகரங்களுக்குச் சென்று நவீன உலகில் வேலையில் அமர்ந்து, புதுமையை அனுபவிக்க வேண்டும் என்ற கனவை நனவாக்க விழைகிறார்கள்.

நகரத்திற்குச் சென்று என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிடாமலே நகரத்தில் தஞ்சம் புகுந்தால், வாழ்க்கை நரகமாகத்தான் அமையும். ஆனால், மக்களின் விருப்பத்தையும், ஆசாபாசங்களையும் தடை போடவும் முடியாது.

இப்போதுள்ள பழைய நகரங்கள் நெரிசலில் தள்ளாடுகின்றன. எனவே, நவீன மிடுக்கு நகரங்களை உருவாக்குவதுதான் ஒரே வழி; நல்வழியும் கூட. இதை உணர்ந்துதான் மத்திய அரசு 100 புதிய நகரங்களை உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பொன்னேரியில் அமைய உள்ளது. பொன்னேரி பொன்னகரியாக மிளிரப் போகிறது.

வளர்ந்துவிட்ட பெருநகரங்களில் இடப்பற்றாக்குறை, போக்குவரத்து நெரிசல், கழிவுப் பொருள்களின் குவியல், பாதுகாப்பு, சுகாதாரத்தில் பின்னடைவு, குடிநீர் விநியோகம் போன்ற அடிப்படை வசதிகள் சார்ந்த பிரச்னைகள் போன்றவற்றை நகரவாசிகள் எதிர்கொள்ள வேண்டும்.

நகரத்தைச் சுற்றியிருக்கும் புறநகர் பகுதிகள் கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து வருவதால் பிரச்னைகள்தான் அதிகமாகின்றனவே தவிர, கட்டுமான வசதிகள் பெருகுவதில்லை. புதிய நகரம் உருவாக்கம் இந்த பிரச்னைகளுக்கு தீர்வாக அமைகிறது.

சென்னைக்கு அருகே தையூரில் புதிய நகரம் அமைக்க 2002-இல் திட்டமிடப்பட்டது. அதனை செயல்படவிடாமல் சில எதிர்கட்சிகள் முட்டுக்கட்டை போட்டன. 2005-இல் சுமார் 1,400 ஏக்கர் நிலத்தை விமான தளத்திற்காகத் தர தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. அதுவும் சில சுயநலவாதிகள் குறுக்கீட்டினால் நிறைவேறாமல் போனது.

பெங்களூரு, ஹைதராபாத் இரண்டு நகரங்களிலும் சர்வதேசத் தரம் வாய்ந்த நவீன விமான தளமும், பயணியர் வசதிகளும் அமைந்துவிட்டன. ஆனால், நாம் இன்னும் பழுதடைந்த விமான நிலையத்தையே வைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரு நகரத்தை எடுத்துக் கொண்டால், அதற்கு தேவை, விசாலமான சாலைகள், தடையில்லா மின்சாரம், கல்விச் கூடங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், தகவல் தொடர்பு மையங்கள், கேளிக்கை வசதிகள், வியாபாரத்தளங்கள் போன்றவை பரவலாக அமைந்திருக்க வேண்டும்.

சுறு சுறு நகரத்தின் அடித்தளம் தகவல் தொழில்நுட்பம். உயர்தர கட்டுமானங்கள், சாலைகள், தகவல் பரிமாற்று வசதிகள் திட்டமிடப்பட்டு நிர்மாணிக்க வழி வகை செய்கிறது.

பொன்னேரி சுறு சுறு நகரம் ஆகப்போவதற்கான அறிவிப்பிற்கு முன்பே, சென்னை மேற்கில் திருமழிசையையும், சென்னை தெற்கில் நெமிலிச்சேரியையும் உருவாக்கப் போவதாக தமிழக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

இதைச் சுற்றி தொழிற்சாலைகள் உருவாகும். தொழில் பெருகுவதோடு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யச் கூடிய சேவை மையங்களும் வளர்ச்சியடையும்.

விரைவான வளர்ச்சி எல்லோருக்கும் சென்றடைய அரசாங்கம் மட்டும் முயற்சி எடுத்தால் போதாது. சமுதாயத்தின் பங்களிப்பு தேவை. பொதுத் துறை, தனியார் துறை பங்கேற்பு என்ற பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப் (PPP) முறையில்தான் விரைவான வளர்ச்சி சாத்தியமாகும்.

மேலும், இத்தகைய அணுகுமுறை ஒட்டுமொத்த சமுதாயத்தின் பங்களிப்பையும் சார்ந்தது. சமுதாயத்தில் ஒவ்வொரு அங்கமும் இணைந்தால் அபரிதமான வளர்ச்சி உறுதியாகும்.

ஒருமுறை ஜாம்ஷட்ஜி டாடா, கப்பலின் மேல்தளத்தில் (முதல் வகுப்பில்) ஜெர்மனிக்குப் பயணித்துக் கொண்டிருந்தார். மற்ற பயணிகள் இருந்த கீழ்தளத்தில் அதிக ஆரவாரம் கேட்டது. ஆர்வம் மிகுதியால் கீழ் தளத்திற்கு சென்றார். அங்கு சுவாமி விவேகானந்தரை சுற்றி மற்ற பயணிகள் சுவாமியின் பேச்சை கேட்க அமர்ந்திருந்தனர்.

சுவாமியை டாடா சந்தித்தார். தான் ஜெர்மனிக்கு இரும்புத் தொழிற்சாலை அமைப்பதற்காக இந்தியாவின் சில பகுதியிலிருந்து இயற்கை உலோகக் கலவைகளின் மாதிரிகளை ஜெர்மனியில் உள்ள ஆராய்ச்சிக் கூடங்களில் சோதிப்பதற்காக எடுத்துச் செல்வதாக கூறினார்.

அதற்கு சுவாமிஜி, ஏன் இந்தியாவிலேயே இத்தகைய ஆராய்ச்சி கூடங்கள் நிறுவக்கூடாது? எதற்கு நீங்கள் ஜெர்மனிக்கு செல்ல வேண்டும்? வெளிநாட்டவருக்கு எந்த அளவு இந்தியாவின் முன்னேற்றத்தில் அக்கறையிருக்கும்? ஆராய்ச்சி முடிவுகளை முழுமையாகப் பகிர்ந்து கொள்வார்களா போன்ற சந்தேகங்களை விவாதித்தார்.

மேலும் இந்தியாவில், ஆராய்ச்சி மையங்களை நிர்மாணிக்க வேண்டும் என்று அன்றே அறிவுரை வழங்கினார். ஜாம்ஷட்ஜி அவர்களும் இந்தியாவுக்குத் திரும்பி மைசூர் மன்னர் ஜெயசாமராஜ உடையாரைச் சந்தித்து விஞ்ஞான ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான தனது திட்டத்தை அளித்தார்.

மைசூர் மன்னரும் பெங்களூருவில் 300 ஏக்கர் நிலம் அளித்தார். இந்திய ஆராய்ச்சி மையம் (ஐ.ஐ.எஸ்.சி.) உருவானது. அதில் உலோகத் தொழில் கலையியல் தான் முதலில் நிறுவப்பட்டது. இந்த விஞ்ஞான மைய உருவாக்கம் பல்துறை சார்ந்த தொழிற்சாலைகள் அமைய வித்திட்டது. இன்று பெங்களூரு தொழில்நுட்ப நகரமாக வளர்ந்துள்ளது.

இத்தகைய தொழில்நுட்ப பொருளாதார மையம் (டெக்னோ எகனாமிக் ஹப்) அமைந்தால் அதைச் சுற்றி கல்வி, சுகாதாரம், வீடுகள், போக்குவரத்து மையங்கள் போன்றவற்றைத் திட்டமிட்டு, ஒருங்கிணைத்து, பி.பி.பி. முறையில் செயலாக்க வேண்டும். இதில் இளைய சமுதாயத்தினரை முழு அளவில் ஈடுபடுத்த வேண்டும்.

இளவயதினர் அதிகம் உள்ள நமது நாட்டில் படித்தவர்களில் 2.4 லட்சம் மாணவ - மாணவியர் மட்டுமே நிறுவனங்களில் பயிற்சி எடுக்கின்றனர். ஜெர்மனி போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளில் 60 சதவீதம் மாணவ - மாணவியர் படிக்கும் காலத்திலேயே தொழிற்சாலைகளில் பயிற்சி பெறுகின்றனர். இடைநிலைப் பள்ளிப்படிப்பை முடிக்கும் 2.89 கோடி மாணவர்களில், 1.66 கோடி மாணவர்கள்தான் மேல்நிலைப் பள்ளிக்கு செல்கின்றனர்.

சுமார் 1.2 கோடி மாணவ - மாணவியர் பத்தாவது முடிந்ததும் படிப்பை நிறுத்தி விடுகின்றனர். எந்த அளவுக்கு மேல்படிப்பில் இளைய வயதினர் ஈடுபடுகின்றரோ அந்த அளவிற்கு நாட்டில் முன்னேற்றமும் ஏற்படும். அதற்கு தரமான மேல்நிலைக் கல்வி அவசியம்.

நமது நாடு தரமான கல்விக்கு மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், மிகக் குறைவாகத்தான் செலவிடுகிறது. விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சியும் புதிய கண்டுபிடிப்பும்தான் கல்வித்தரத்தை நிர்ணயிக்கிறது. எம்.ஐ.டி. போன்ற அமெரிக்க உயர்தர கல்வி நிறுவனங்கள் வருடத்திற்கு 400 கண்டுபிடிப்புகளை தருகிறது. ஆனால், இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய கண்டுபிடிப்புகள்தான் பதிவாகின்றன.

"எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்' என்ற கண்ணதாசன் பாடல் வரிகளுக்கேற்ப பாதுகாப்பான வளர்ச்சி, தரமான கல்வி, வேலை வாய்ப்பு இவையே உயர்தர வளமையை உருவாக்கும்; எல்லோருக்கும் பயனளிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com