வாராக்கடன்களை வசூலிக்க...

வசூலிக்க முடியாத கடன் எனக் கருதி, கடந்த ஐந்து ஆண்டுகளில் வங்கிகள் நஷ்டக் கணக்கில் (ஜ்ழ்ண்ற்ற்ங்ய் ர்ச்ச்) எழுதிய தொகை ஒரு லட்சத்து அறுபத்தி ஓராயிரம் கோடி ரூபாய்.

வசூலிக்க முடியாத கடன் எனக் கருதி, கடந்த ஐந்து ஆண்டுகளில் வங்கிகள் நஷ்டக் கணக்கில் (written off) எழுதிய தொகை ஒரு லட்சத்து அறுபத்தி ஓராயிரம் கோடி ரூபாய். இந்தத் தொகையைக் கொண்டு, 15 லட்சம் ஏழைக் குழந்தைகளுக்கு சிறப்பான உயர் கல்வி, உணவு, உடை, உறைவிடம் என அனைத்து வசதிகளையும் செய்து தரலாம்' - இப்படி ஒரு கருத்தை வெளியிட்டுள்ளவர் சமூக ஆர்வலரோ, அரசு சாரா தொண்டு நிறுவனத்தைச் சார்ந்தவரோ அல்ல. ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்தான்.

கடந்த 13 ஆண்டுகளில், வாராக்கடனாக நஷ்டக் கணக்கில் எழுதப்பட்டத் தொகை இரண்டு லட்சத்து நான்காயிரம் கோடி ரூபாய் ஆகும்.

10 பெரிய கடன்தாரர்கள் திரும்பச் செலுத்தாத வங்கிக் கடன் ரூ.18,000 கோடி ஆகும். அதுபோல் 50 பெரும் நிறுவனங்கள் திரும்பச் செலுத்த வேண்டிய வங்கிக் கடன் ரூ.40,000 கோடி வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

அரசுடைமை வங்கிகளில் முதல் 30 வாராக்கடன் கணக்குகளின் நிலுவைத் தொகை, ஒட்டுமொத்த வாராக் கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு.

2013 - 2014-ஆம் நிதி ஆண்டில், வசூலிக்கப்பட வேண்டிய தொகையான இரண்டு லட்சத்து முப்பத்தி ஆறு ஆயிரத்து அறுநூறு கோடி ரூபாயில் வெறும் ரூ.30,590 கோடி மட்டுமே "டெட் ரிகவரி டிரிபூனல்' என்கிற கடன் வசூல் டிரிபூனல்களின் வாயிலாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் செயல்படும் அனைத்து வங்கிகளிலும், ஏறத்தாழ ஆறு லட்சம் கோடி ரூபாயை வசூலிப்பதில் பிரச்னை உள்ளது. இந்தத் தொகை ஒட்டுமொத்த வங்கிக் கடனில் பத்து சதவீதம் ஆகும்.

இந்தப் பிரச்னைக்குரிய கடனில் இரண்டு வகையான கடன்கள் அடங்கியுள்ளன. ஒன்று, வாராக் கடன். இரண்டாவது, கடனாளியின் கோரிக்கையின் பேரில், வங்கிகளால் திருத்தி அமைக்கப்பட்ட கடன் (Restructured Loan). இது வாராக்கடனுக்கு முந்தைய நிலையில் உள்ள கடன். ஃபிட்ச் (Fitch) என்கிற சர்வதேச தர நிர்ணய நிறுவனத்தின் இந்திய கிளையின் ஆய்வறிக்கை இதை உறுதி செய்கிறது.

2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், "திருத்தி அமைக்கப்படும் கடன்' பற்றிய விதிமுறைகள் மாற்றப்பட உள்ளன. இதன்படி, வங்கிகள் "திருத்தி அமைக்கப்பட்ட' கடன்களை வசூல் செய்தாக வேண்டும். தவறினால், அவை வாராக்கடனாக கருதப்பட்டு, தங்கள் லாபத்தில் கோடிக் கணக்கான ரூபாயை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

"திருத்தி அமைக்கப்படும்' கடன்களுக்கான விதிமுறையின் நோக்கம் என்னவெனில், சில நேரங்களில் கடன் வாங்கியவர்கள், நியாயமாகவே கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் போகக் கூடும்.

அதுபோன்ற நேரங்களில், வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது என்பது நியாயமான ஒன்று. அந்த வகையில்தான், ரிசர்வ் வங்கி இந்த "திருத்தி அமைக்கும் முறையை' (Restructured Loan) அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில், பொருளாதார மந்தநிலை காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில், வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாகக் குறைந்தது. 1980-களுக்குப் பிறகு, இதுவே குறைந்தபட்ச அளவிலான வளர்ச்சி விகிதம்.

உருக்கு, நிலக்கரி சுரங்கம், உள் கட்டமைப்பு, ஜவுளி ஆகிய துறைகளில் உள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வங்கிக் கடன்கள் கூடுதல் பாதிப்புக்கு உள்ளாகின. கடந்த 20 ஆண்டுகளாக, வழங்கப்பட்ட அனுமதியை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததும் இத்துறையில் கூடுதல் வாராக்கடன்கள் ஏற்படக் காரணம் என்பது வெளிப்படை.

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் திருத்தி அமைக்கப்படும் கடன்களுக்கான நடைமுறையில் மாற்றம் ஏற்படும். இதனால், வாராக்கடன் தொகையின் அளவு அதிகரிக்கும் என்பது தெளிவு. இதைத் தவிர்க்கவும் முடியாது.

காரணம், எந்த நோக்கத்துக்காக ரிசர்வ் வங்கி மேற்கூறிய விதிமுறைகளை அறிமுகம் செய்ததோ, அந்த நோக்கம் வங்கிகளாலும் சரி, கடன்தாரர்களாலும் சரி, முறையாகப் பயன்படுத்தப்படவில்லை.

பல நேரங்களில், உண்மையாகவே பாதிக்கப்பட்ட நிறுவனங்களைப் போன்றே பாதிக்கப்படாத பிற நிறுவனங்களும் கடனைத் திரும்பச் செலுத்தாமல், வங்கிகளிடம் முறையிட்டு, சலுகைகளைப் பெற்றுக் கொண்டன.

சில வங்கிகள், இந்த "திருத்தி அமைக்கப்படும் கடன்களுக்கான விதிமுறை'யைச் சரியாகச் செயல்படுத்தத் தவறிவிட்டன.

இன்னும் சொல்லப் போனால், தங்கள் வங்கியில் உள்ள கடன் கணக்குகள் வாராக்கடனாக மாறக் கூடாது, அதன் காரணமாக தங்கள் லாபத்தில் தேவையான ஒதுக்கீடு செய்யும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்ற தவறான எண்ணத்தில், வாராக்கடன் விளிம்பில் உள்ள கடன்களைக்கூட, "திருத்தி அமைக்கப்பட்ட கடன்'களாக மாற்றினார்கள்.

ஆக, வங்கிகளும், வாராக்கடன்களை மூடி மறைக்க முற்பட்டனர் என்ற ரிசர்வ் வங்கியின் குற்றச்சாட்டில் நியாயம் இருக்கிறது.

மொத்த வாராக்கடனில் மூன்றில் ஒரு பங்கு, நீதிமன்றங்களில் பல்வேறு கட்ட விசாரணையில் உள்ளது. 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள இதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கை 4,085 ஆகும்.

மகாராஷ்டிரத்தில் மட்டும் 66,921 கோடி ரூபாய் வாராக்கடனை வசூலிப்பதற்காகப் போடப்பட்ட ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்கு எண்ணிக்கையிலும், வாராக்கடன் தொகையிலும் தில்லி இரண்டாவது இடத்திலும், ஒன்றுபட்ட ஆந்திரம் மூன்றாவது இடத்திலும், தமிழ்நாடு நான்காவது இடத்திலும் உள்ளன.

நீதிமன்றங்களில் கால தாமதம் ஆவதைக் குறைக்கும் வகையில், 2002-ஆம் ஆண்டில், "சர்ஃபாசி' சட்டம் (Securitization and Enforcement of Financial Assets and Enforcement of Security Interest Act) இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் ஓரளவுதான் உதவி இருக்கிறது. மேற்கூறிய நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையும், வேகமாக வளர்ந்து வரும் வாராக்கடன் தொகையும் தொடர்ந்து கவலை அளிப்பதாகவே உள்ளன.

"சர்ஃபாசி' சட்டம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினரின் கடன்களை வசூலிப்பதற்காகவே பயன்படுகிறது. பெரிய நிறுவனங்கள் தப்பி விடுகின்றன. அதனால்தான் "டெட் ரிகவரி டிரிபூனல்'களில் நான்கில் ஒரு பங்கு வழக்குகளில் மட்டுமே தீர்ப்பு கிடைத்துள்ளன. மீதி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

வாராக்கடன் தொகை அதிகரித்து அதனால் வங்கிகளுக்கு ஏற்படும் இழப்பு காரணமாக, முறையாக திரும்பச் செலுத்தும் நிறுவனங்களுக்கு தரப்படும் கடனுக்கான வட்டி வீதம் உயருகிறது.

வாராக்கடன் ஒரு தேசியப் பிரச்னையாக உருவெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னைக்கு நிலையானத் தீர்வு காணப்பட வேண்டியது அவசியம். அதற்கு மூன்று விதமான அணுகுமுறைகள் தேவை:

ஒன்று, சட்ட ரீதியான அணுகுமுறை. தற்போது கையில் உள்ள "சர்ஃபாசி' உள்ளிட்ட சட்டங்களை மட்டும் வைத்துக் கொண்டு, வாராக்கடன்களை முழுமையாக, விரைந்து வசூலிக்க இயலாது என்பதை கடந்த 15 ஆண்டுகால அனுபவம் நமக்கு உணர்த்துகிறது.

ஏற்கெனவே, "டெப்ட் ரிகவரி டிரிபூனல்'களில் வழக்குகள் குவிந்து கிடப்பதால், புதிய வழக்குகளை விசாரிக்க, குறைந்தது நான்கு ஆண்டுகளாவது ஆகும் என்று தெரிகிறது. எனவே, "டெப்ட் ரிகவரி டிரிபூனல்'களின் எண்ணிக்கையைக் கணிசமான அளவில் அதிகரித்திட வேண்டும்.

திவால் சட்டத்தில் (Bankruptcy Law) தற்காலத்துக்குத் தேவையான வகையில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். வங்கிக் கடன் தொடர்புடைய அனைத்துச் சட்டங்களிலும் காலத்துக்குத் தேவையான மாற்றங்கள் தேவை.

இரண்டாவதாக, வங்கிகள் பெரிய நிறுவனங்களுக்கு கடன்கள் வழங்கும் முறையில் தொழில்நுட்பமும் மதி நுட்பமும் கூடிய செயல்முறைகள் உருவாக்கப்பட வேண்டும். இந்த செயல்முறைகளை வழி நடத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் வழிவகை செய்யப்பட வேண்டும்.

இதற்கென வங்கிகள், இந்திய வங்கிகள் சங்கம், ரிசர்வ் வங்கி இணைந்து புதிய திட்டங்களை உருவாக்கிட வேண்டும். "15 லட்சம் குழந்தைகளுக்கு கல்வி வழங்கலாம்' என்றும் "வங்கிகள் வாராக்கடனை மூடி மறைப்பதற்காக, திருத்தி அமைக்கப்பட்ட கடன் வசதியைப் பயன்படுத்துகின்றன' என்றும் வெளிப்படையாகவும், மனித நேயத்துடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஒருவர் பேசுகிறார் என்பதைக் கேட்கும்போது, மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆனால், அத்துடன் நின்றுவிடக் கூடாது. வேண்டுமென்றே கடனைத் திரும்பச் செலுத்தாதவர்களையும், வங்கிகளில் அதற்குத் துணை போகும் சிலரின் போக்கையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

அதேநேரம், நேர்மையான கண்ணோட்டத்துடன் முடிவெடுக்கும் அதிகாரிகளின் முடிவுகள் தவறாகப் போய்விட்டால், அவர்களுக்கு பாதுகாப்பு கிடைத்திடவும் வழி செய்ய வேண்டும்.

மூன்றாவதாக, திருத்தி அமைக்கப்படும் கடன் (Restructured Loan) ஏப்ரல் முதல் ரத்து செய்யப்பட்டாலும், அந்த விதிமுறையின் நல்ல நோக்கம் ஈடேறும் வகையில் புதிய ஏற்பாடு ஒன்றை அமல்படுத்துவதற்கு ரிசர்வ் வங்கி முன்வர வேண்டும்.

இதுவரை, சர்வதேச அளவில் போற்றப்பட்டு வரும் இந்திய வங்கித் துறையின் புகழுக்கு, அதிரித்து வரும் வாராக்கடன்களால் களங்கம் ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது சம்பந்தப்பட்ட அனைவரது கடமையும் ஆகும்.

கட்டுரையாளர்: வங்கி அதிகாரி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com