வரலாற்றில் வாழும் வள்ளியம்மை

தென்னாப்பிரிக்க இந்தியர்களின் நலனுக்காக பாரிஸ்டர் மோகன்தாஸ் காந்தி அந்நாட்டின் வெள்ளையர் அரசுக்கு எதிராக நடத்திய அகிம்சாபூர்வமான சத்தியாக்கிரகங்கள் மூன்று கட்டங்களாக நிகழ்ந்தன.

தென்னாப்பிரிக்க இந்தியர்களின் நலனுக்காக பாரிஸ்டர் மோகன்தாஸ் காந்தி அந்நாட்டின் வெள்ளையர் அரசுக்கு எதிராக நடத்திய அகிம்சாபூர்வமான சத்தியாக்கிரகங்கள் மூன்று கட்டங்களாக நிகழ்ந்தன.

அவ்வறப் போராட்டத்தில் உயிரைத் தியாகம் செய்தவர்கள் பற்பலர். ஆனாலும், இளம் வீராங்கனை வள்ளியம்மை போன்று அண்ணல் காந்தியின் உள்ளத்தை உருக்கியவர்கள் ஒரு சிலரே.

அரசு சட்ட விதிகளின்படி நடைபெற்ற திருமணங்கள் மற்றும் கிறிஸ்தவ திருமணங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்று தென்னாப்பிரிக்க உச்சநீதிமன்றம் மார்ச் 13, 1913 அன்று தீர்ப்பளித்தது. அதன்படி, இந்தியாவிலோ தென்னாப்பிரிக்காவிலோ இந்து, முஸ்லிம், பார்ஸி முறைப்படி நடந்தேறிய திருமணங்கள் ஏதும் சட்டப்படி செல்லாது என்றானது.

மற்ற அநீதிகளுடன் இந்தத் தீர்ப்பையும் எதிர்த்து இறுதிக்கட்ட சத்தியாக்கிரகம் முடுக்கிவிடப்பட்டது. அதில் பெண்களும் பங்கேற்க வேண்டுமென காந்திஜி கூறினார்.

அதன்படி, அக்டோபர் 1913 இறுதியில் ஜோஹன்னஸ்பர்க் நகரிலிருந்து நியூகாஸிலுக்கு புறப்பட்ட பெண்கள் பேரணியில், வள்ளியம்மையும் அவரது தாயாரும் சேர்ந்து கொண்டனர். பெண்கள் கைது செய்யப்படாததால் அந்த அணி சட்டவிரோதமாக டிரான்ஸ்வால் மாகாணத்தை நோக்கி சென்றது. அதன் எல்லையில் அவர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டு டிசம்பர் 22, 1913 அன்று கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மூன்று மாத கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர்கள் மாரிட்ஸ்பர்க் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் படுமோசமான உணவு, கடுமையான வேலைகள், ஜெயில் துணிமணிகளை துவைத்தல், கட்டாந்தரையில் படுக்கை } அதனால் சிறையில் இருந்தபோதே வள்ளியம்மை நோய்வாய்ப்பட்டார். பின்னர், பாரிஸ்டர் காந்திக்கும் அரசு உள்விவகார மந்திரி ஜெனரல் ஸ்மட்ஸýக்கும் ஏற்பட்ட சமரச உடன்பாட்டிற்குப் பிறகு, தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே (பிப்ரவரி 11, 1914இல்) பெண் சத்தியாக்கிரகிகள் விடுவிக்கப்பட்டனர்.

வள்ளியம்மையின் தந்தை ஆர். முனிசாமி முதலியாரின் பூர்வீகம் பாண்டிச்சேரி. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக குடியேறிய சிலருள் இவரும் ஒருவர். பாரிஸ்டர் காந்தியின் சாத்வீக எதிர்ப்பு இயக்கங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர். உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்ததால் இவரால் 1913இல் நடந்த இறுதிக்கட்டப் போராட்டத்தில் கலந்துகொள்ள இயலவில்லை.

இவரது மனைவி ஜானகியம்மை அன்றைய தஞ்சை ஜில்லாவின் (இப்போது நாகை மாவட்டம்) தில்லையாடி கிராமத்தைச் சேர்ந்தவர். மகள் வள்ளியம்மை பிறந்தது (1898) வளர்ந்தது எல்லாமே தென்னாப்பிரிக்காவில்தான். அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி. 1913 போராட்டத்தின்போது அவருக்கு வயது பதினாறு.

சிறை சென்ற அன்றே வள்ளியம்மையின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. சிறைச்சாலையில் படுத்த படுக்கையாகவே இருந்தார். பிப்ரவரி 11, 1914 அன்று விடுதலையானபோது அவருக்கு கடும் டைபாய்டு காய்ச்சல். விடுதலையான இடத்திலேயே சில நாள்கள் தங்கி சிகிச்சை பெற

நேர்ந்தது.

அண்ணல் காந்தி, தமது ஆங்கிலேய நண்பர் போலக்குடன் அங்கு சென்று பார்த்தார். எலும்பும் தோலுமாக படுத்துக்கிடந்த அப்பெண்ணைக் காண காந்திஜிக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. அவர்களுக்கிடையே நடந்த குறுகிய உரையாடலை காந்திஜி தமது சுயசரிதையில் இவ்வாறு பதிந்துள்ளார்:

"வள்ளியம்மா, நீ ஜெயிலுக்குப் போனதற்காக வருந்துகிறாயா?' என்று கேட்டேன்.

"வருத்தமா? இப்போது என்னைக் கைது செய்தாலும் திரும்பவும் ஜெயிலுக்குப் போகத் தயாராக இருக்கிறேன்' என்றாள் ஈனக்குரலில்.

"ஆனால் அப்படிப் போனால் உனக்கு மரணமும் நேரிடலாமே?' என்றேன்.

"அதனால் என்ன? தாய் நாட்டிற்காக உயிரையும் தியாகம் செய்ய யாரேனும் தயங்குவார்களா?' என்று பதிலிறுத்தினாள். அதற்குச் சில நாட்களுக்குப் பின் (பிப்ரவரி 22, 1914 அன்று) வள்ளியம்மை இறந்து போய்விட்டார்' (சுயசரிதம், அத்தியாயம் 40).

வள்ளியம்மையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பாரிஸ்டர் காந்தி தமது "இந்தியன் ஒபீனியன்' வார இதழில் (25-2-1914) வெளியிட்ட செய்தியில், "அவ்விளம் பெண்ணின் (வள்ளியம்மை) எதிர்பாரா திடீர் மரணம் ஓர் கடுந்துயர் நிகழ்வு. இந்தியாவின் மேதக்க உத்தம புத்திரியின் அகால மறைவு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டது. ஏன், எதற்கு என்றெல்லாம் கேள்வி எழுப்பாமல் அப்பெண் தனது கடமையைச் செய்தாள். மகளிர்க்குரிய மன உரம், பெருமிதம், சீரிய பண்பு ஆகியவற்றின் எடுத்துக்காட்டாகத் திகழும் அவளது நினைவை இந்திய சமூகத்தினர் அனைவரும் மனதில் பதிக்க வேண்டும். அவளது குடும்பத்தினர்க்கு எங்களது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்'. இவ்விரங்கல் செய்தியை அடுத்து வள்ளியம்மையின் வாழ்க்கைக் குறிப்பையும் காந்திஜி அவ்விதழில் வெளியிட்டார்.

காந்திஜியின் மூத்த சகோதரர் லக்ஷ்மிதாஸ் காந்தி மார்ச் 9, 1914 அன்று இந்தியாவில் காலமானார் என்ற செய்தி வந்தது. அதையொட்டி காந்திஜிக்கு தென்னாப்பிரிக்காவின் பல இடங்களிலிருந்து ஏராளமான அனுதாபத் தந்திகள் வந்து

குவிந்தன.

அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காந்திஜி "இந்தியன் ஒபீனியன்' (18-3-1914) இதழில் இவ்வாறு எழுதினார்: "மறைந்த என் தமையனார்தான் தந்தையின் ஸ்தானத்திலிருந்து எனக்கு வாழ்வளித்தார். நான் லண்டனில் பாரிஸ்டர் படிப்பதற்கு பண உதவி புரிந்தார். அவர் மறைவு எனக்கு உண்மையிலேயே பேரிழப்பு. அவ்வாறாயினும், வள்ளியம்மையின் அகால மரணம் என் தமையனின் மறைவைக் காட்டிலும் எனக்குப் பேரிடியான செய்தி என்றே தோன்றுகிறது...'

தில்லையாடி வள்ளியம்மையின் அஞ்சா நெஞ்சத்தையும் தியாகத்தையும் நினைவுகூர்ந்து தென்னாப்பிரிக்காவில் பல்வேறு பொதுக் கூட்டங்களில் காந்திஜி மனமுருகிப் பேசியுள்ளார். இந்தியாவுக்கு திரும்பவிருந்த காந்திஜிக்கும் கஸ்தூர்பாவுக்கும் ஜோஹன்னஸ்பர்க் நகரில் 1914 ஜூலை அன்று கூட்டப்பட்ட ஓர் மாபெரும் பிரிவுபசாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் காந்திஜி உணர்ச்சி பொங்க, "இந்நகர், வள்ளியம்மாளை அர்ப்பணித்துப் பெருமை சேர்த்துள்ளது. ஓ, அந்த இளம் பெண்! நான் இப்போது பேசும்போது அவளது உருவம் என் கண் முன் நிற்கிறது. சத்தியத்துக்காக உயிர் நீத்தவள் அவள். தன்னம்பிக்கையே அவளது ஆயுதம். எனக்கிருக்கும் கல்வியறிவு அவளுக்கில்லைதான். சத்தியாக்கிரகம் என்பதன் தாத்பரியம்கூட அவளுக்குத் தெரிந்திருக்காது. சாத்விகப் போராட்டத்தினால் தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்கு என்ன நன்மை ஏற்படும் என்பதையும் அவள் அறியாள். ஆயினும், தனது நாட்டு மக்களுக்காக அவள் உத்வேகத்துடன் சிறை சென்றாள். பின்னர் தன் உடல் நலம் முற்றிலும் பாதிக்கப்பட்டு வெளியே வந்தாள். சில நாட்களில் இறந்து போனாள்...' என்று கூறினார் ("இந்தியன் ஒபீனியன்' கோல்டன் நம்பர், 1914).

ஜோஹன்னஸ்பர்க்கில், ஜூலை 15, 1914 அன்று வள்ளியம்மைக்கும் நாகப்பனுக்கும் ஒரு நினைவுச் சின்னம் திறந்து வைக்கப்பட்டபோது பேசிய காந்திஜி, "வள்ளியம்மாவின் முகத்தைப் போன்று நாகப்பனின் முகம் எனக்கு அவ்வளவு தெளிவாக ஞாபகம் இல்லை (தென்னாப்பிரிக்க சாத்வீகப் போராட்டத்தில் சிறை சென்றவர்களில் நாகப்பனும் ஒருவர். இளைஞன். கடுங்காவல் சிறைவாசத்தின்போது சரியான உணவும் கம்பளி உடையும் தராமல் சிறைக்காவலர்கள் அவரைத் திறந்த வெளியில் புல்வெட்டும் வேலை வாங்கியதால், நிமோனியாவால் பீடிக்கப்பட்டு ஜூலை 6, 1902 அன்று மரணமடைந்தார்). அவ்விருவரிடத்தும் துன்பங்களைச் சகித்துக்கொள்ளும் மன உறுதியும், பொறுமையும், நாட்டுப் பற்றும், சாவுக்கும் அஞ்சாத மனத் திண்ணமும் இருந்தன. இவற்றைவிட ஒரு மனிதனுக்கு வேறு என்னதான் வேண்டும்?' என்று புகழஞ்சலி செலுத்தினார்.

வள்ளியம்மையின் உயிர்த் தியாகத்தைப் போற்றும் வகையில் "வள்ளியம்மாள் மண்டபம்' ஒன்றை தென்னாப்பிரிக்க இந்தியர்கள் நிறுவினர்.

இது குறித்து தனது "தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்' என்ற நூலில் காந்திஜி எழுதியதாவது: "வள்ளியம்மா அவளுடைய சேவையைக் கொண்டு ஓர் ஆலயத்தையே நிர்மாணித்துக் கொண்டு விட்டாள். அவளது கீர்த்தி மிகு புனித உருவம் அநேகர் உள்ளங்களில் இன்றுகூடப் பதிந்து நிற்கும். இந்தியா வாழும்வரை தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரக வரலாற்றில் வள்ளியம்மாளின் பெயரும் நிலைத்து நிற்கும்'.

ஆம்! அவர் மறைந்து நூறாண்டு கடந்த பின்பும் அது நிலைத்து நிற்கத்தான்

செய்கிறது.

இன்று தில்லையாடி வள்ளியம்மையின் நூறாவது நினைவு நாள்.

கட்டுரையாளர்: காந்திய அறிஞர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com