Enable Javscript for better performance
விமர்சன வித்தகர் தி.க.சி.- Dinamani

சுடச்சுட

  

  நெல்லை நகரம் தந்த இலக்கியவாதிகளில் தி.க.சி. என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட தி.க.சிவசங்கரனும் ஒருவர். 1925ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் நாள் பிறந்து 25.03.2014 வரை ஜீவித்த இந்த மனிதரை சந்திக்காத தமிழக இலக்கியவாதிகளும் கிடையாது; பத்திரிகையாளர்களும் கிடையாது.

  நெல்லை தந்த மற்றொரு படைப்பாளியான வல்லிக்கண்ணன் தி.க.சி.யின் இலக்கிய வழிகாட்டி. மணிக்கொடி வ.ரா.வின் பாணியைப் பின்பற்றி எழுதிய தி.க.சி., பாரதி மீது மாளாக் காதல் கொண்டவர்.

  நெல்லையில் தனது பள்ளிப் படிப்பினைத் தொடங்கிய இவர், மாணவப் பருவத்திலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிபர் சங்கத்துடன் தொடர்பு கொண்டார். அதன்பின்னர் இடதுசாரி இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தை ஜீவா தொடங்கிய பொழுது, அதில் பங்கு கொண்டார். பின்னர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோன்றிய பொழுது தி.க.சி. அதனை வரவேற்றார். அவர் தன்னை ஒரு குறுகலான நம்பிக்கை வளையத்துக்குள் அடைத்துக் கொள்ளவில்லை.

  அந்தக் காலத்தில் நெல்லையில் முற்போக்கான சிந்தனையுள்ளவர்களைக் காண வேண்டும் என்றால் நெல்லை ரயில் நிலையம் அருகே இயங்கிக் கொண்டிருந்த "நெல்லைப் புத்தக நிலைய'த்தில் காணலாம். மாலை சுமார் ஐந்து மணிக்குப் பின்னர் பல இலக்கியவாதிகள், பேராசிரியர்கள் சந்தித்து உரையாடும் இடமாக அந்த இடம் விளங்கியது. இந்தப் புத்தக நிலையத்தை தி.க.சி.யும், சிந்துபூந்துறை அண்ணாச்சி சோ. சண்முகம் பிள்ளையும் இணைந்து நடத்தினர். நியூ செஞ்சுரி புத்தக நிலையம் தோன்றுவதற்கு முன்னரே ரஷ்ய, சீன இலக்கிய நூல்களை இப்புத்தக நிலையத்தார் மொழிபெயர்த்து வெளியிட்டனர்.

  இந்தப் புத்தக நிலையத்தில்தான் தி.க.சி., சோ.சண்முகம் பிள்ளை, பேரா. நா.வானமாமலை, தொ.மு.சி.ரகுநாதன் ஆகியோர் சந்தித்து உரையாடுவது வழக்கம். இக்கால கட்டத்தில்தான் ரகுநாதனின் "சாந்தி' என்ற மாத இதழும் வெளிவந்தது. இதிலும் தி.க.சி. பங்கு பெற்றார்.

  சொந்த வாழ்க்கைக்கான பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்ய வங்கியில் தி.க.சி. பணியாற்றினார். ஆனால் அது நீடிக்கவில்லை. 1962ஆம் ஆண்டு வங்கிப் பணியை ராஜிநாமா செய்தார். மூர்த்தி என்பவர் மூலம் "சோவியத் நாடு' பத்திரிகையின் துணை ஆசிரியராக சேர்ந்து பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் (1965-1972) "தாமரை' ஆசிரியராகவும் பண்யாற்றினார். இது சற்று சிரமமான பணி. பகல் முழுவதிலும் சோவியத் நாடு பத்திரிகையில் பணியாற்ற வேண்டும். மாலை நேரத்திலும், காலையிலும், "தாமரை'க்கான கதை, கட்டுரைகளை சரிபார்க்க வேண்டும்.

  அலுவலகம் என்பது ஒரு மேசை, நாற்காலி ஆகியவற்றோடு முடிந்துவிடும். ஏ.சி. கிடையாது, மின்விசிறி கிடையாது, மங்கிய விளக்கொளியில் இந்தப் பணியினைச் செய்ய வேண்டும்.

  இந்தச் சூழலில்தான் "தாமரை' ஆசிரியராக அக்காலத்தில் இயங்கினார். இதே காலகட்டத்தில் "தீபம்', "கணையாழி', "கண்ணதாசன்', "எழுத்து', "இலக்கியவட்டம்', "சுபமங்களா', "செம்மலர்', "வானம்பாடி' ஆகிய இதழ்களுக்கும் தி.க.சி உதவியுள்ளார்.

  தி.க.சி.க்கு புதுமைப்பித்தனைத் தெரியும். அவரது இறுதிக் காலத்தில் தி.க.சி. உதவியுள்ளார். ஜெயகாந்தனுடன் பழக்கம் உண்டு. கு.சின்னப்பபாரதி, டி.செல்வராஜ் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு உண்டு.

  தி.க.சி. ரகுநாதனுடனும் பேரா. நா. வானமாமலையுடனும் நெருங்கிப் பழகியவர். ஜீவாவுடன் பழகியவர். இவர்கள் சகோதர பாசத்துடன் பணியாற்றியவர்கள். முதல் மூவரும் ஆழ்ந்த படிப்பாளிகள், கொள்கையாளர்கள். அந்தக் காலத்தில் இவர்களைக் "கொள்கைக் கோமாளிகள்' என சிலர் கிண்டல் செய்வார்கள். தி.க.சி. அவ்வாறு அல்லர்.

  அவர் இலக்கியக் கொள்கைகளைக் கற்றுத் தேர்ந்து விமர்சனம் எழுதியவர் அல்லர். அவர் ஒரு பரந்த படைப்பாளி. மேல்நாட்டு இலக்கியங்களையும், தமிழ் இலக்கியங்களையும் ரசித்துப் படித்தவர். இது நடைமுறை அனுபவம் சார்ந்தது. பாரதி பற்றியும், புதுமைப்பித்தன் பற்றியும் பல கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார். அவை தீர்க்கமானவை; ஆணித்தரமானவை. அனுபவ அறிவு மூலமாகவே பல விஷயங்களைக் கற்றுத் தெரிந்துகொண்டு, கொள்கையாளர்களுக்குச் சமமாக உயர்ந்தவர் தி.க.சி.

  தி.க.சி. என்ற இந்த மனிதர் தொடர்புகொள்வதில் வல்லவர். ஒரு கதை அல்லது கட்டுரை வந்தால் அதனை உடனே பாராட்டுவார். தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும் செய்வார். பல மணி நேரம் உரையாடுவதிலும் வல்லவர். அவரிடம் சென்று உரையாடிவிட்டு வரும்போது நமக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படும்.

  தி.க.சி. ஒரு சிறந்த மனித நேய வாதி. நெல்லையின் 10 சுடலைமாடன் கோயில் தெரு இனி தி.க.சி. இல்லாமலேயே இருக்கும். ஆனால் இலக்கிய நண்பர்கள் மனதில் தி.க.சி. என்றும் வாழ்வார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai