Enable Javscript for better performance
இது முன்னோட்டம்தான்...- Dinamani

சுடச்சுட

  

  பருவமழை தொடங்கிய பிறகு ஏற்படும் பாதிப்பு என்பது ஆண்டுதோறும் தொடர்ந்து வரும் நிகழ்வு. வரும் முன் காப்பது நல்லது என்பது தெரிந்தும் அதைக் கடைப்பிடிக்காமல் வந்த பின் காப்பதை நடைமுறையில் வைத்திருப்பதால், குறைந்த அளவு மழை பொழிந்தாலும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

  வடகிழக்குப் பருவமழை அதிகமாக பொழிந்தாலும், குறைவாகப் பொழிந்தாலும் தமிழ்நாட்டில் அதற்கேற்றவாறு பாதிப்பு இருக்கும். இதனை அரசும் உணர்ந்திருப்

  பதால்தான் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசு இயந்திரங்களை தயார் நிலையில் வைத்துள்ளது.

  ஆனாலும், பருவமழை தொடங்கியவுடன் சாலையில் தண்ணீர் தேங்குகிறது. தண்ணீர் வடிந்தவுடன் அதில் பள்ளங்கள் தோன்றி சாலை குண்டும், குழியுமாக மாறி விடுகிறது. பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த சிரமம் உண்டாகிறது.

  விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்போ வேறு வகை. அவர்களின் வாழ்வாதாரமான விளைநிலங்களில் புகும் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் நிற்பதால், பயிர்கள் அழுகி விடுகின்றன. கடைசியில் அந்தக் கண்ணீர் விவசாயிகளின் கண்களின் வழியாக வெளியேறுகிறது.

  இவையெல்லாம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் நிகழ்வுகள். இவை தொடர்ந்து கொண்டிருப்பதும், இந்த கடினமான சூழலிலும் வேறு வழியின்றி தங்களின் நாள்களைக் கடத்தும் மக்கள் நிலையும் பரிதாபகரமானதே.

  நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை தற்போதுதான் தொடங்கியுள்ளது. ஆனால், அதற்குள் பாதிப்புகள் ஏராளம். அறிவியல் முன்னேற்றமடையாத காலத்தில், மன்னர்களால் கட்டப்பட்ட பல கோயில்கள், பல நூற்றாண்டுகளை கடந்து, இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பல்வேறு புயல் மழைகளை தாங்கி, கடந்து செல்லும் கனரக வாகனங்களின் ஓட்டத்தை தன்னுள் வாங்கி, இன்னமும் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன.

  ஆனால், அறிவியல் முன்னேற்றமடைந்த காலத்தில் கட்டப்பட்ட பல கட்டடங்கள், சாதாரண மழைக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் இடிந்து விழுகின்றன.

  அதேபோல் பல விளைநிலங்கள் வீடு

  களாக உருமாறியதால், அந்த நிலங்களின் நீர் பாய்ச்சலுக்கு உதவியாக இருந்த வாய்க்கால்கள் பயனற்றுப் போய்விட்டன.

  இதனால், நாளடைவில் அவை தூர்ந்து, மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழியின்றி அங்குள்ள வீடுகளைச் சுற்றி ஏரி போல நீர் நிறைந்திருக்கக் காரணமாகின்றன.

  பொதுவாக ஒரு கிராமத்துக்கு இரண்டு அல்லது மூன்று குளங்களாவது இருக்கும். அவை ஆழமாக இருக்கும். தண்ணீரை அதிகமான அளவுக்கு உள்வாங்கும். வெள்ளம் வரும்போதும், ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போதும் இத்தகைய குளங்கள்தான் கிராமங்களை அழிவிலிருந்துக் காப்பாற்றும்.

  டெல்டா மாவட்டங்களில் தற்போது பெய்த தொடர்மழையில் கூட 75 சதவீத அளவிற்கே குளங்கள் நிரம்பியுள்ளன. ஆனால் சில கிராமங்களில் குளங்களுக்கு செல்லும் வாய்க்கால்கள் தூர் வாரப்படாததால் செடிகள் முளைத்து தண்ணீர் செல்ல வழி இல்லாததால் அருகில் உள்ள விளை

  நிலங்களில் பாய்ந்து அவற்றைப் பாழ்படுத்துகிறது. மழை விட்டால் மட்டுமே தண்ணீர் வடியும் என்பது அங்குள்ள நிலை.

  அதேபோல் சாலைகள் அமைப்பதில் வருவாய் மட்டுமே மனதில் இருப்பதால் அதில் தரமோ, உறுதியோ இருப்பதில்லை. இதனால்தான் மழைக்காலங்களில் அவை குட்டைகளாக மாறுகின்றன.

  பொதுப் பணித் துறை பராமரிப்புக்காக அரசு ஒதுக்கிய நிதியை அதிகாரிகள் முறையாகப் பயன்படுத்தியிருந்தால், தூர்வாரப்

  படவில்லை என்று விவசாயிகளிடமிருந்து கண்டனக் குரல்கள் எழுந்திருக்காது.

  அதேபோல், அரசு அறிமுகப்படுத்திய பண்ணைக் குட்டை அமைத்தல் திட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்தி இருந்தால், வயல்களுக்கு தண்ணீர் இல்லை என்ற பிரச்னையோ தண்ணீரில் மூழ்கியுள்ளது என்ற பிரச்னையோ வந்திருக்காது.

  ஒவ்வொரு ஆண்டும் பருவமழை வந்தபிறகே அதிகாரிகள் தங்கள் பணிகளைத் தொடங்குகிறார்கள். ஆனால், பருவமழை தன்னுடைய பணியினை செவ்வனே செய்து, ஊர்களை நிர்மூலமாக்கி விடு

  கிறது. பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வாதரங்களை இழந்து விடுகின்றனர்.

  எறும்பு மழைக் காலத்துக்குத் தேவையான உணவை முன்கூட்டியே சேர்த்து வைத்துக் கொள்ளுவதைப்போல மழைக்காலத்தில் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க முன்கூட்டியே திட்டமிடுதல் அவசியம்.

  தற்போது ஏற்பட்டுள்ள சேதங்கள் எல்லாம் ஒரு முன்னோட்டமே. நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை தனது உக்கிரத்தைக் காட்டும்.

  நாம் உடனடியாக சுதாரிக்காவிட்டால் தீவிரமடையும் பருவமழைக்கு நாம் கொடுக்கும் விலை மிகப் பெரிதாகவே இருக்கும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai