Enable Javscript for better performance
தொழில் வளர்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும்- Dinamani

சுடச்சுட

    

    தொழில் வளர்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும்

    By என். முருகன்  |   Published on : 03rd November 2014 01:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்தியில் பா.ஜ.க. அரசு பதவியேற்ற பின், பிரதமர் நரேந்திர மோடி மிகப் பெரிய அளவில் நிர்வாகத்திலும், பொருளாதாரத்திலும் மாறுதல்களை கொண்டு வரும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளார். தொழில் முன்னேற்றமும், அதைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதார முன்னேற்றமும் உருவாகும் விதத்தில் அன்னிய நாட்டினர் நமது நாட்டில் பல தொழிற்சாலைகளை நிறுவும் வகையில் அன்னிய முதலீடுகள் நம் நாட்டிற்குள் வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக சீனா, ஜப்பான் ஆகிய இரண்டு நாடுகளிலிருந்தும் எஃப்.டி.ஐ. எனப்படும் நேரடி முதலீடுகள் இந்தியாவிற்கு வர வேண்டும் என்பதற்கான கடுமையான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

    ஆனால், இதுபோன்ற அன்னிய நேரடி முதலீடுகள், வளர்ந்து வரும் நாடுகளில் செய்யப்படுவது உலக பொருளாதார நடவடிக்கைகளின் புதிய முயற்சி அல்ல என்பதும், இதுபோன்ற அன்னிய நேரடி முதலீடுகளினால் குறுகிய கால நன்மைகள் விளைந்தாலும் நீண்டகால ஆபத்துகள் உருவாகும் என்பதும் அனுபவம் தந்த பாடம். இதைப் பற்றி மிகப் பெரிய அளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இந்தியா போன்ற ஒரு வளரும் நாட்டில் அன்னிய நாட்டின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்று, பெரிய அளவில் முதலீடு செய்து ஒரு பொருளின் உற்பத்தியைத் துவங்கும்போது உடனடியாக நல்ல பொருளாதார முன்னேற்றம் உருவாகும்.

    உதாரணமாக, சிமென்ட், இரும்பு, இயந்திரங்கள் ஆகிய வியாபாரங்கள் செழிப்பாக நடக்கும். அதாவது, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு கனரக தொழிற்சாலையை ஒரு வெளிநாட்டு நிறுவனம் உருவாக்க முயலும்போது, கட்டடங்களுக்கு தேவையான சிமென்ட், ஜல்லி, செங்கல், கம்பிகள் போன்ற கட்டடப் பொருள்கள் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெகுவாக விற்பனையாகும். கட்டடத் தொழிலில் நிறைய பேருக்கு வேலையும் கிடைக்கும்.

    அடுத்து, தொழிற்சாலை கட்டி முடிக்கப்பட்ட பின்பு, அங்கே நிறைய பேருக்கு வேலை கிடைக்கும். மேலும், அந்தத் தொழிற்சாலை இருக்கும் பகுதியில் நிறைய கடைகள், ஓட்டல்கள், வீடுகள் மற்றும் அந்தப் பெரிய தொழிற்சாலைக்கு உதிரிப் பாகங்கள் உருவாக்கும் சிறு மற்றும் குறுந்தொழில்களும் உருவாகும். இதுபோன்ற வளர்ச்சிகள் சுமார் ஐந்து ஆண்டுகள் நடைபெறும்.

    அதற்குப் பிந்தைய நடவடிக்கைகள் நமது பொருளாதாரத்தை மிகவும் பாதித்துவிடும். இதுபோன்ற ஒரு தொழிற்சாலை தயாரிக்கும் பொருள்களை விற்பனை செய்து, அதிக லாபம் ஈட்டி அதை தனது நாட்டிற்கு கொண்டு செல்லும்.

    அதனால், நமது வெளிநாட்டு செலாவணி கையிருப்பு மிகவும் பாதிக்கப்படும். அதைவிட, பன்னாட்டு நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால், நம் நாட்டில் இந்த பொருள்களை உற்பத்தி செய்யும் நடுநிலை மற்றும் சிறுதொழில் செய்வோர் மிகப்பெரிய அளவில் நஷ்டமடைவார்கள்.

    உதாரணமாக, நமது நாட்டின் கைத்தறி துறையை காட்டலாம். மிகப் பெரிய அளவில் ஆடை உற்பத்தி செய்யும் நெசவு மில்கள், தாங்கள் தயாரிக்கும் ஆடைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்து, கைத்தறி தொழிலை நசுங்கச் செய்து விட்டார்கள். இது எல்லா தொழில்களுக்கும் பொருந்தும்.

    மிகவும் துல்லியமாகத் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை குறைந்த விலைக்கு விற்று, அதன்மூலம் எந்தப் போட்டியும் இல்லாத வகையில் பல தொழிற்சாலைகளை மூட வைத்து விடுகிறார்கள், வெளிநாட்டிலிருந்து நம்நாட்டிற்கு வந்து தொழிற்சாலைகளைத் தொடங்குபவர்கள்.

    பின்னர், இவர்கள் மட்டுமே அந்தப் பொருள்களை உருவாக்கும் நிலைமை ஏற்பட்ட பின், பொருள்களின் விலையை மிக அதிகமாக உயர்த்தி கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். இந்தக் காரணத்தை முன்நிறுத்திதான் வெளிநாட்டு முதலீடுகளை மிகுந்த கவனத்துடன் நாம் பழைய காலங்களில் ஒதுக்கி வைத்துள்ளோம்.

    மேலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் நம் நாட்டின் சிறு மற்றும் குறுந்தொழில்கள்தான் சீரான வகையில் நடந்துள்ளன. எடுத்துக்காட்டாக, ரூ.4,000 கோடியில் உருவாக்கப்பட்ட ஒரு மோட்டார் கார் தொழிற்சாலையின் வேலைவாய்ப்பு சுமார் 1,000 தொழிலாளிகளை பணியில் அமர்த்தும். பெரும்பாலான வேலைகள் தானியங்கி இயந்திரங்களால் நிறைவேறும் வேலைகளாக இருக்கும்.

    ஆனால், நமது கிராமப்புறங்களிலும் சிறு நகரங்களிலும் சுமார் ரூ.10 கோடி முதலீட்டில் இயங்கும் ஒரு சிறுதொழிலில் சுமார் 200 பேர் வேலை செய்வார்கள்.

    அரசு இதுபோன்ற சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு மானியமும், கடனுதவிகளும் செய்தால் ரூ.4,000 கோடி முதலீட்டில் உருவாகும் வேலைவாய்ப்பு எண்பதாயிரம் பேருக்கு கிடைக்கும்.

    நாட்டின் பொருளாதாரம் சிறந்த கட்டமைப்புகளை கொண்டிருந்தால், அந்த நாட்டில் முதலீடு செய்யும் வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் வெற்றி நடைபோடும்.

    ஆனால், அந்த வெளிநாட்டு நிறுவனம் செய்யும் முதலீட்டை மட்டும் வைத்துக்கொண்டு முன்னேற்றம் உருவாக முடியாது. எனவேதான், நல்ல தொழில் கட்டமைப்பை உருவாக்கி, நமது நாட்டின் பெரிய தொழில் நிறுவனங்களே எல்லா வகையான பெரிய தொழிற்சாலைகளையும் துவங்க வழி செய்ய வேண்டும்.

    அதுபோன்ற நிலைமை ஏற்பட்டால், அதனால் உருவாகும் வேலைவாய்ப்பு நமது நாட்டின் இளைஞர்களுக்குப் பயன்படும். பெரிய நிறுவனங்களின் வருமானம், வேறு பல தொழிற்சாலைகளையும் உருவாக்கி பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.

    ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகம் உலகெங்கும் நடத்திய ஓர் ஆய்வில், இங்கிலாந்து நாட்டிலிருந்து மற்ற நாடுகளில் முதலீடு செய்யும் பெருந்தொழில்களால் அந்த நாடுகளுக்கு நிறைய நன்மைகள் உருவானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அதே ஆய்வின்படி, ஜெர்மனி, அமெரிக்காவிலிருந்து வளரும் பொருளாதார நாடுகளில் முதலீடு செய்யும் பெரும் தொழிற்சாலைகளால் நன்மைகளைவிட பொருளாதாரப் பாதிப்புகள்தான் உருவாகியுள்ளன என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் வளரும் நாடுகள் பாதிக்கப்பட்டது, அந்நாடுகளில் ஜப்பான் முதலீடு செய்தபோதுதான் என்பது கசப்பான உண்மை.

    வளர்ந்துவிட்ட பொருளாதார நாடுகள், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் நேரடி முதலீடு செய்து நிறைய லாபம் சம்பாதிக்கும் விஷயத்தின் மற்றொரு அம்சம், அந்தத் தொழில்கள் நவீன உற்பத்தி நடைமுறைகளைக் கொண்டு வந்து தொழில் செய்ய வேண்டும் என்பதே.

    அதாவது, விஞ்ஞான முன்னேற்றத்தின் பலனாக நவீன நடைமுறைகளை வளரும் நாடுகள் கற்றுக் கொள்ளும். ஆனால், இதுபோன்ற நடைமுறைகளை நம் நாட்டிற்கு கொண்டு வராமல் நம் நாட்டின் நடைமுறைகளில் உள்ள பல குறைபாடுகளை உபயோகித்து கொள்ளை லாபம் சம்பாதிக்க முயலும் வெளிநாட்டு நிறுவனங்களினால் நமக்கு தீமையே விளையும்.

    2006-ஆம் ஆண்டில் இந்தியா போன்ற வளரும் பொருளாதார நாடுகளுக்கு அன்னிய முதலீடாக வந்த பணம், ரூபாய் 31 லட்சத்து 37 ஆயிரத்து 200 கோடி என உலக வங்கி கணக்கிட்டுள்ளது.

    இதே 2006-ஆம் ஆண்டில் வளரும் நாடுகளிலிருந்து கணக்கில் காட்டாமல் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பணம் ரூபாய் 53 லட்சத்து 19 ஆயிரத்து 600 கோடி எனவும் ஓர் ஆய்வு கூறுகிறது. இந்தக் கணக்கீட்டின்படி, அகில உலகிலுமுள்ள வளரும் நாடுகள், அன்னிய முதலீட்டின் மூலம் பெற்ற பணத்தை விட, அதிகமான பணத்தை வளர்ந்துவிட்ட பொருளாதார நாடுகளுக்கு செலுத்தியுள்ளது தெரிய வருகிறது.

    சட்ட விதிகளுக்குப் புறம்பாக வெளிநாட்டு வங்கிகளில் போடப்படும் கருப்புப் பணத்தைத் தடுத்தாலே போதும், நம்நாட்டின் தொழில் வளம் பெருகும்.

    கருப்புப் பண முதலைகளுக்கு உதவினால்தான் நிறைய லஞ்சம் கிடைக்கும் என்பதால், அரசின் உயரதிகாரிகள் அவர்களுடன் கைகோத்து செயல்படுகிறார்கள்.

    பெல்ஜியம் நாட்டின் ஒரு நிறுவனம் எடுத்த ஆய்வின்படி, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வரி ஏய்ப்பு மூலம் பெரிய தொழில் நிறுவனங்கள் சுமார் 60 லட்சம் கோடி ரூபாயை வெளிநாட்டு வங்கிகளில் சேர்த்து விடுகிறார்கள்.

    இதுபோன்ற தொழில் நிறுவனங்கள் எப்படி கருப்புப் பணத்தை உருவாக்குகின்றன என்பதும் நமது அரசின் உயரதிகாரிகள் எல்லோருக்கும் தெரியும். "விலை மாற்றம்' என்ற அம்சத்தில் தங்கள் தொழிலுக்கு வாங்கும் மூலப்பொருள்களுக்கு அதிக விலை கொடுப்பதாகவும், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களுக்கு குறைந்த விலையை நிர்ணயித்து நஷ்டம் உருவாகும்படியும் கள்ளக் கணக்கு எழுதி கருப்புப் பணம் சேர்க்கப்படுகிறது.

    இதைக் கண்டுகொள்ளாமல் இருக்க அதிகாரிகளுக்கு கையூட்டு, அரசியல்வாதிகளுக்கு தேர்தல் நிதி என்பதுதான் தொடர்ந்து வரும் நடைமுறை!

    இவற்றைச் சரி செய்தாலே, நமது நாட்டில் தொழில் வளர்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும் உருவாகும். சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் முதலீடு நமக்கு தேவைப்படாது. மாறாக அந்நாடுகளுக்கு பல பொருள்களை நாம் ஏற்றுமதி செய்ய முடியும்.

     

    கட்டுரையாளர்: ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு).

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai