Enable Javscript for better performance
வரலாறு இருக்கிறது; வரலாற்று உணர்வு...?- Dinamani

சுடச்சுட

  

  வரலாறு இருக்கிறது; வரலாற்று உணர்வு...?

  By த. ஸ்டாலின் குணசேகரன்  |   Published on : 05th November 2014 02:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வரலாற்றுப் பெருமிதம் கொண்ட இளைஞர்கள் எந்த நாட்டில் அதிகமாக இருக்கிறார்களோ, நிகழ்காலம் குறித்துக் கவலை கொள்ளும் இளைஞர்கள் எந்த தேசத்தில் அதிகமாக உள்ளனரோ, எதிர்காலம் பற்றிய கனவுகளை நெஞ்சில் தேக்கிக் களமிறங்குகிற இளைஞர்கள் எந்த மண்ணில் அதிகமாக வாழ்கின்றனரோ அந்த நாட்டின் வளர்ச்சியை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது' என்று மகான் அரவிந்தர் கூறியிருக்கிறார்.

  இன்று உலக அரங்கில் இந்தியா கம்பீரமாக நிற்பதற்கு பல காரணங்கள் இருப்பினும் ஹரப்பா, மொகஞ்சதாரோ, நாளந்தா, தட்சசீலம் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களே முக்கியக் காரணங்களாகத் திகழ்கின்றன.

  சிந்துவெளி நாகரிகம் நிலவிய நாடு இந்தியா என்பது தெரிந்த பின்னர்தான் இந்தியத் தாயின் முகத்தை உலகத்தார் உன்னிப்பாகப் பார்த்தனர்.

  சிறப்பிற்குச் சிறப்புச் சேர்த்த இவற்றிற்கெல்லாம் அகழாய்வுகள்தான் அடிப்படை. தமிழ் மண்ணில் - ஆதிச்ச நல்லூர், அரிக்கமேடு, நொய்யல்கரைக் கொடுமணல் போன்ற சில இடங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் விளைவாகத் தமிழ்த்தாய் புத்தெழுச்சி பெற்று வீறு நடை போடுகிறாள்.

  இந்தப் பின்புலத்தில் இன்றைய தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சியின் நிலை என்னவாக உள்ளது என்பதை சிந்திப்பது அவசியமாகும்.

  இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறை, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகப் பழங்கால வரலாற்றுத் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டுத் தொல்லியல் துறை ஆகிய நான்கு அமைப்புகள் மட்டும்தான் தமிழகம் முழுவதிலும் அகழ்வாய்வு செய்வதற்குத் தகுதியும் உரிமையும் பெற்ற அமைப்புகளாகும்.

  இதிலும் கூட, தமிழ்நாட்டிலுள்ள மூன்று அமைப்புகள் தன்னிச்சையாக தாங்கள் விரும்பிய இடங்களில் விரும்பியவாறு ஆய்வுகளில் இறங்கிவிட முடியாது. மத்திய அரசு நிறுவனமான இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் அனுமதியைப் பெற்ற பின்னர்தான், மீதமுள்ள மூன்று அமைப்புகளும் களமிறங்க விதி அனுமதியளிக்கிறது.

  அகழாய்வில் இந்திய அளவில் குறிப்பிடத் தகுந்த அறிஞர்களாக தமிழ் மண்ணைச் சார்ந்த வரலாற்றாய்வறிஞர்கள் ஒய். சுப்பராயலு, கே. ராஜன், ஆர். நாகசாமி, கே.வி. இராமன், பி. சண்முகம் ஆகியோர் திகழ்கின்றனர்.

  அகழாய்வில் இவர்களது அறிவும், அனுபவமும், நுட்பமான அணுகுமுறையும் இத்துறைச் சார்ந்த அனைவராலும் வியந்து போற்றப்படுகிறது. இவர்களோடு இத்

  துறையில் முத்திரைபதித்த இன்னும் சிலர் தமிழகத்தில் உள்ளனர்.

  இவ்வளவிருந்தும் தமிழக அகழாய்வுப் புள்ளி விவரங்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன.

  தமிழகத்தில் அகழாய்வுக்கு ஏற்ற இடங்கள் என்று அறிஞர்களால் பட்டியலிடப்பட்ட இடங்களின் எண்ணிக்கை சுமார் 2,000 ஆகும்.

  அறிஞர்கள் தங்களுக்குள் ஆய்வாளர் குழு ஒன்றை அமைத்துக் கொண்டு, நீண்ட கள ஆய்விற்குப் பிறகு ஆய்விற்கான 2,000 இடங்கள் குறித்த பட்டியலைத் துல்லிமான விளக்கங்களுடன் மாவட்ட வாரியாக வரிசைப்படுத்திப் புத்தகமாக வெளியிட்டுள்ளனர்.

  இதில் சுமார் நூறு இடங்களில் மட்டும் தான் இதுவரை அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்களெல்லாம் கேட்பாரில்லாமல் அப்படியே கிடக்கின்றன.

  ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இடங்களிலும் பத்து சதம், பதினைந்து சதம் பரப்பளவில் மட்டுமே இதுவரை அகழாய்வுகள் நடைபெற்றுள்ளன. அதிலும் பெரும்பகுதி ஆய்வுப்பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. சில ஆய்வுகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

  ஏறக்குறைய நூறு இடங்களில் நடைபெற்றுள்ள அகழ்வாய்வுகளின் முடிவுகளில் சுமார் 20 சதவீதம் மட்டுமே அறிக்கைகளாக வெளியிடப்பட்டுள்ளன. அப்படியென்றால், இந்த நூறு இடங்களில் நடைபெற்ற ஆய்வுகளால் என்ன பயன்?

  ஆய்வு முடிவுகளை அறிக்கைகளாக விரைவில் வெளியிட்டால் மட்டுமே அவை மற்ற ஆய்வாளர்களுக்கும் ஆய்வில் ஆர்வமுள்ளவர்களுக்கும் பயன்பட்டு அடுத்தடுத்த ஆய்வுகளுக்கு அடித்தளமிடுவதாக அமையும்.

  1985-இல் கொடுமணல் ஆய்வுகள் தொடங்கப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக ஏழு ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இதுவரை பத்து சதவீதப் பகுதிகளில் மட்டுமே அகழாய்வுகள் நடைபெற்றுள்ளன.

  கால்நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்றுவரும் மிக முக்கியமான இந்த ஆய்வு சம்பந்தமான எந்தவொரு விரிவான அறிக்கையும் இதுவரை வெளியாகவில்லை.

  கொடுமணல் அகழாய்வின் மூலம் சங்க காலத்தின் சிறப்பு நிரூபிக்கப்பட்டுள்ளது. 2,500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் மேலை நாடுகளுடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தது கொடுமணல் ஆய்வின் மூலம் நிறுவப்பட்டுள்ளது.

  அப்போதே இரும்புக் கருவிகள் புழக்கத்தில் இருந்ததும், இரும்பு உருக்கும் களங்கள் இருந்ததும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

  சிந்துவெளி நாகரிகம் என்பதைப்போல நொய்யல்வெளி நாகரிகம் என்ற ஒரு நாகரிகம் தமிழ் மண்ணில் சிறந்து விளங்கியதைக் கொடுமணல் அகழாய்வு உலகத்திற்கு அறிவித்தது.

  பண்டையக் கால மக்கள் விட்டுவிட்டுச் சென்ற பொருள்கள், அக்காலத்தில் புழக்கத்திலிருந்த காசுகள், முத்திரைகள், வணங்கிய மண் பொம்மைகள், உலோகப் பொருள்கள் போன்ற எண்ணற்ற தொல்லியல் சான்றுகள் அகழ்வாராய்ச்சியின் மூலம் கிடைக்கப்பெறுகின்றன.

  இவற்றையெல்லாம் சேகரித்து ஆய்வுகளை மேற்கொண்டால், அக்கால மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்வதோடு, வரலாற்றுக் காலக் கணக்கீடு செய்வதற்கும் மிகவும் பயன்படும்.

  இலக்கியங்களிலும், புராணங்களிலும் வெளிப்படும் பெருமைகளைக் காட்டிலும் இத்தகைய அகழாய்வின் மூலமாக ஆதாரங்களோடு வெளியிடப்படும் வரலாற்று உண்மைகளையே அயல்நாட்டவர் ஏற்கின்றனர்.

  ஜோர்டான் - பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள நாடு. வளமும் வருமானமும் குறைந்த நாடு. அந்த நாட்டில் அகழாய்வுகளின் மூலம் ஏராளமான பழங்காலப் பொருள்கள் கிடைத்தன.

  வரலாற்று ஆர்வம் மிக்க சுற்றுலாப் பயணிகள் ஜோர்டன் நாட்டிற்கு தொடர்ந்து வந்து செல்கின்றனர். இதுவே அந்நாட்டின் பொருளாதார நிலையை பெரிய அளவுக்கு உயர்த்தியுள்ளது.

  தஞ்சைப் பெரியகோயில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், மாமல்லபுரம் போன்ற பகுதிகள் நம் தமிழ்நாட்டைத் தலை நிமிர வைத்துள்ளன. அத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்பே நாகரிகம் செழிக்க, பண்பாடு சிறக்க தமிழர்கள் வாழ்ந்துள்ளனர் என்ற வரலாற்று உண்மை அச்சிற்பங்களுக்குள் பொதிந்து கிடக்கிறது.

  நமக்கு வரலாறு இருக்கின்ற அளவுக்கு நாம் வரலாற்று உணர்வுடன் இருக்கின்றோமா என்ற கேள்வி எழுகிறது. வரலாற்றுப் பெருமையை எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் வாங்க முடியாது.

  மத்திய - மாநில அரசுகள் அகழாய்வுக்குப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். தொலைநோக்குப் பார்வை, வரலாற்றுச் சிந்தனை, ஆய்வுகளின் முக்கியத்துவம் குறித்த சரியான புரிதல் ஆகியவை நிதி ஒதுக்கீடு செய்பவர்களுக்குத் தேவை.

  வரலாற்றை விருப்பப்படி வளைக்க முற்படுவோர், அதனை வளர்க்க முயற்சிப்பதில்லை. தமிழ்நாட்டில் வரலாற்றுப் பாடங்களில் அதிலும் குறிப்பாகத் தொல்லியல் படிப்பில் முதுகலைப் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றவர்கள் ஏராளமாக உள்ளனர்.

  அவர்களில் பலர் வேலையில்லாமலும் இருக்கின்றனர். இத்துறையில் ஆர்வமும் அக்கறையும் உள்ள, வளர்ந்து வரும் வரலாற்று ஆய்வாளர்களுக்குத் தகுந்த முறையில் வழிகாட்டுவதற்கும் பயிற்சியளிப்பதற்கும் தகுதி மிக்க, பெரும் வரலாற்று அறிஞர்கள் பலர் இங்கு உள்ளனர். இதற்கென்று தனித்துறையும் அதற்கான அலுவலர்களும் இருக்கின்றனர்.

  இத்தனையிருந்தும் எத்தனையோ இடங்களில் ஆய்வுகளை இன்னும் தொடங்கவேயில்லையே, ஏன்?

  கேரள அரசு சார்ந்த நிறுவனமான கேரள வரலாற்று ஆய்வுக் கழகம், பிரிட்டிஷ் அரசு மியூசியத்திற்கு விண்ணப்பித்து கேரளத்தில் நடைபெறுகிற வரலாற்று ஆய்வுக்காக எழுபது லட்ச ரூபாய் நிதியுதவியைப் பெற்றுள்ளது.

  கலை, அறிவியல் கல்லூரிகள் பலவற்றில் வரலாற்றுத் துறையோ, வரலாற்றுப் பாடமோ கிடையாது. பாரதியார் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை இல்லை. வரலாற்றை ஏதோ காலாவதியாகி விட்ட பாடமாக நினைக்கின்றனர்.

  "கடந்த கால இந்தியாவைப் படிப்போம் - எதிர்கால இந்தியாவைப் படைப்போம்' என்ற முழக்கத்தை இளைஞர்கள், மாணவர்களின் நெஞ்சில் கல்வெட்டு போல் பதிய வைக்க வேண்டும்.

  தமிழ் மண்ணில் பொதிந்து கிடக்கிற வரலாற்றுச் செல்வங்கள் அனைத்தையும் வெளிக் கொண்டு வந்து அவற்றையெல்லாம் ஆவணங்களாக உருவாக்கினால் உலகமே தமிழகத்தைத் திரும்பிப் பார்க்கும்.

  எங்கிருந்து வந்தோம் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் எங்கே செல்ல வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள முடியாது.

  பூமிக்குக் கீழ் தங்கச் சுரங்கம் இருப்பதை அறியாமல் பிச்சைப் பாத்திரத்துடன் அமர்ந்திருக்கிறோம் நாம்.

   

  கட்டுரையாளர்: தலைவர், மக்கள் சிந்தனைப் பேரவை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai